வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதத்திற்கு எதிராக ஆகமத்தை அடிப் படையாகக் கொண்ட சைவ மதம் உருவானது. சாதி, வருண வித்தி யாசத்தை மறுத்த புத்த, சமண மதங்களை வீழ்த்தவேண்டும் என்று வந்தபோது வைதீகத்தோடு சைவம் சமரசம் செய்து கொண் டது. வேதத்தை ஒப்புக்கொண்ட சைவம், வைதீகத்திற்குள் கரைந்து விட்டது. ராஜராஜ சோழன் காலத் தில் சமஸ்கிருதம் கோவிலுக்குள் நுழைந்து அனைத்தும் சமஸ்கிருத மயமானது.

தமிழகத்திற்குள் கிறிஸ்துவம் பரவியது. சாதியை மறுத்து அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இதற்கெதிராக பல இயக்கங்கள் உருவாகின. தமிழை வளர்க்க ஆறுமுக நாவலர் சைவவித்யா சாலைகளை நிறுவினார். வைதீக வயப்பட்ட சைவத்தை கற்பித்தார். இதிலிருந்து வள்ளலார் மாறு பட்டு மணிவாசகர், திருமூலர், தாயுமானவரைப் பின்பற்றி ‘சமரச சன்மார்க்க’ நெறியை உருவாக் கினார்.

முரண்பட்ட வைதீக மரபையும் தமிழ் மரபையும் ஒன்றென இணைத்த திருமூலர், வைதீகத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கேலி செய்தார். கோவில், சமயமரபுகளை உருவாக்கிய அவரே, கோவிலுக்குச் செல்வதைக் கண்டித்தார். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம், கள்ளப்புலனைந்தும் காடாமணி விளக்கு என்று புறக்கோயில்களை விடுத்து அகக்கோயிலைப் போற்றினார். அமைப்பு முறைப்பட்ட சைவ சமய மரபை உருவாக்கிய திருமூலர்தான், தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் சமய மரபிற்கு உட்பட முடியாது என்கிற சித்தர் மரபையும் உருவாக்கினார்.

கோவில் உண்டியலில் பணம் போடுவதைவிட, நடமாடும் கோவிலான பசித்தவன் வயிற்றுக்கு சோறுபோடு என்பதை,“படமாடும் கோயில் பரமர்க்கு ஒன்றீயின் நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா; நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்றீயின் படமாடும் கோயில் பரமர்க்கு அங்கதாமே” என்று பாடினார். கடவுள் வேதங்களில் இல்லை மனிதனுக்குள் இருக்கிறான். பிராமணர்களின் பூணூல், குடுமியை அறுத்தெறி. சாமியார் வேடமிட்டு நெறி தவறுகிறவர்களை அரசன் தண்டிக்க வேண்டும் என்றார். வைதீகத்திற்கு எதிராக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து இல்லாதவனுக்கு கொடு என்றார் திருமூலர். இதனைப் பற்றிக் கொண்டார் வள்ளலார்.வேதாந்த, சித்தாந்த சமரசத்தை உருவாக்கியவர் தாயுமானவர். தாயுமானவரின் மறுபிறவி வள்ளலார் என்பார்கள்.

வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என ஆறு அந்தங்களை சமரசப் படுத்தினார் வள்ளலார். இவ்வாறாக மணிவாசகர், திருமூலர், தாயுமானவர் போன்றோரின் மரபிலிருந்து வாழையடி வாழையாக வள்ளலார் வருகிறார். இந்த சைவ மரபுதான் வள்ளலாருக்குள் கலக விதைகளைத் தூவியது. சென்னையி லிருந்தவரை வள்ளலார் சைவ மரபில் அதீதப் பற்று கொண்டிருந்தார். கருங்குழி சென்ற வள்ளலார் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு தினசரி சென்று வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளால் பிடிமானம் இழந்து வடலூரில் ‘உத்தரஞான சிதம்பரம்’ என்ற சத்தியஞான சபையை உருவாக்கினார். ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்கிறார்.

சைவம், வைணவத்தை நம்பாதீர்கள். அது உண்மையை சொல்லாது. ஒருகாலத்தில் நானும் சைவத்தை நம்பினேன். எனக்கிருந்த நம்பிக்கைக்கு அளவு சொல்ல முடியாது. ஏன் நம்பியிருந்தேன் என்றால் அப்போது எனக்கு அறிவு கொஞ்சம் தான் இருந்தது என்றார்.வைதீக மரபின் முதன்மையான (பிரஸ்தான) மூன்று உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. இவை அனைத்துமே கொல்வதைத் தர்மமாக கூறியது; சூது சொல்லித் தந்தது. இதற்கு மாறாக, வள்ளலார் கொல்லாதே. உணவு ஊட்டுவதும், உயிர்காப்பதும்தான் கடமைஎன்கிறார். வைதீகத்தை ஏந்தி வரும் சமஸ்கிருதம் போன்ற அனைத்து வாகனங்களின் கடையாணிகளையும் பிடுங்கி எறிந்தார். பகவத்கீதைக்கு மாற்றாக திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முன்வைத்தார்.

பெரியார் காலத்துக்கு முன்பாகவே நேரடியாக திட்டி, பூணூலை அறுங்கள் என்று பேசிய திருமூலரை பார்ப்பனர்கள் ஆதரித் தார்கள். உயிரும், உள்ளமும் நோகும் வகையில் ஒற்றை கடுஞ்சொல் கூட பயன்படுத்தாத வள்ளலாரை ஒரு பார்ப்பபனர் கூட ஆதரிக்க வில்லை. ஏன்? மத அமைப்பு, நிறுவன முறையை திருமூலர் ஆதரித்தார். வள்ளலார் பார்ப்பனர் களைத் திட்டாமல் அதன் அமைப்பு முறையை மறுதலித்தார். வைதீகத்தின் கருதுகோள் களைப் பிடுங்கிப் போட்டார். பார்ப்பனர்கள் நிறுவிய கருதுகோள்கள் அனைத்தையும் மறுதலித்தார்.

வள்ளலார் மறுதலித்த அனைத்தையும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் மறுதலித்தது. ஆக திராவிடர்களின் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், சுயமரியாதைஇயக்கம் என்பது வள்ளலார் காலத்திலிருந்து தொடங்கு கிறது. இது நெடிய பாரம்பரியத்தி லிருந்து வந்தது. இன்றைக்கு கேட்கத்தக்க பகுத்தறிவு கேள்விகளை அன்றே எழுப்பியவர் வள்ளலார். காது, மூக்கில் எதற்கு பொத்தல் போட்டு அணி கலன் அணிய வேண்டும்? பொத்தல் போடுவது அவசியம் என்றால் 9 ஓட்டைகளை வைத்த கடவுள் காதிலொன்றும், மூக்கிலொன்றும் போட்டிருக்கமாட்டானா? தலையில், கன்னத் தில் முளைக்கும் முடி ஏன் நெற்றியில் முளைப்ப தில்லை? என்று மக்களிடம் கேட்டவர் வள்ள லார். “கேட்டறியாத கேள்விகளை கேட்கும்படி ஆண்டவர் செய்ததுஇத்தருணமே” என்றார்.

ஆனால், வைதீகம் கேள்வி கேட்காதே நம்பிக்கைகொள் என்கிறது. வைதீக மரபிற்கு நேர் எதிராக வள்ளலார் இருந்தார். வைதீகத்திற்கு எதிராக தோன்றிய தமிழ் சமயம் (எ) சைவ சமயம், ஆகம மரபு மக்களுக்கு என்ன செய்தது? வேதத்திற்கு பதிலாக ஆகமத்தை படிக்கச் சொன்னது. அது மட்டமானது எனது சமயம் உயர்வானது என்று வெறிபிடித்து பேசுகிறது. எனவே, வேதமும், ஆகமும் வேண்டாம். நிறுவனப்பட்ட சமயம் எதுவும் தேவையில்லை. பொதுநெறிக்கு வா என்றார் வள்ளலார். உலகில் எல்லோரும் சமம். உலகை பொதுவில் நடத்துகிற நிலை வர வேண்டும் என்றார்.மேல்வருணம், தோல்வருணம் கண்டாரில்லை. நான் பேசுவது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. அறிவு, உயிர் ஒளியாக கருதப்படுகிறது. இறைவனும் ஒளிதான். இறைவன் ஜோதி வடிவில் உள்ளான்.

இறைவனுக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. தங்கம், பித்தளை, வெள்ளி தவிர்த்து தகர விளக்கு தீபம் போதும் என்றார் வள்ளலார். சாதி, சமய,சாஸ்திர குப்பைகளை எருவாக்கிப் போடு என்கிறார் அவர்.சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பை உருவாக்கு கிறார். அதில் உறுப்பினராக சேர ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் கடைப் பிடிக்க கூறுகிறார். ஜீவ ஒழுக்கம் என்றால் ஆண், பெண், சாதி, மத, சமய, ஆசிரம, சூத்திர, கோத்திர, குல, சாஸ்திர, சம்பந்த,தேச, மார்க்க வேறுபாடு கூடாது. ஆன்ம ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் தலைவன் ஆண்டவன் அருட்பெரும்ஜோதி. ஜீவன் களுக்குள் வேற்றுமை பார்க்கக் கூடாது. இவை இரண்டையும் கடைப்பிடித்தால் சங்க உறுப்பினராகலாம் என்றார். இப்படியாக சங்கம், சாலை (சோறு போடும் இடம்), சபை (கூடுகிற இடம்) என்றஅமைப்புகளை உருவாக்கினார். வள்ளலாரின் சாராம்சம் என்ன? கடவுள் ஒன்று. அவர் ஜோதி வடிவில் உள்ளார்.

சிறுதெய்வ வழிபாடு, உயிர்ப் பலி, புலால் உண்ணல், சாதி, சமய வேறுபாடு கூடாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் எனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை கொள்ள வேண்டும், ஜீவ காருண்யம் வேண்டும், சாத்திரம், புராணங்கள் கூடாது, இறந்தவர்களை புதைக்க வேண்டும், காது மூக்கு குத்தி அணிகலன் அணியக்கூடாது, கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க கூடாது. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. மரணமில்லா பெருவாழ்வுக்கான வித்தையை கைப்பற்று வோம் என்றார்.

வேதம் என்பது நிலையாமை பேசுவது அதற்கெதிராக சாகாமல் இருக்கலாம் என்று மறுதலித்து பேசி வைதீகத்தை சில்லுசில்லாக உடைத்தெறிந்தவர் வள்ளலார்.

(கட்டுரையாளர் பேராசிரியர்)

Pin It