கீற்றில் தேட...

viduthalai rajendran 334தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட' நீட் விலக்கு' மசோதாவை, திருப்பி அனுப்பிய, ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னை: 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை இராசேந்திரன்: ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்’ என்று கூறுகிறார். தமிழ்நாடு அரசு ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் பரிந்துரையில் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் எந்த அடிப்படையில் மறுத்திருக்கிறார்? அந்தப் பரிந்துரையை அவர் படித்தாரா? இவர் ஏற்கெனவே உளவுத் துறையில் பணியாற்றி இருக்கிறார். அப்படி உளவுத் துறையை வைத்து தமிழ்நாடு முழுவதும் மக்களின் கருத்தை கேட்டிருப்பார் போலிருக்கிறது!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்துப் பேசியதோடு தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒரு போதும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. காரணம் தமிழ்நாடு மாநில உரிமை - மொழிப் பற்று - சமூக நீதி சிந்தனைகளால் பக்குவப்பட்டுள்ள மாநிலம் என்று பேசியிருக்கிறார். அதற்கு அடுத்த நாளே ஆளுநர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டை ஆட்சி செய்வோம் என்று காட்டுவதுபோல் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

ஏற்கெனவே தமிழக அமைச்சரவை இராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்ட ஏழு பேருக்கு தண்டனைக் குறைப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர். ஆனால் ஒப்புதல் தர வேண்டிய ஆளுநர் ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் நீட் தேர்வு பரிந்துரைக்கு ஒப்புதல் தர வேண்டியவர் குடியரசுத் தலைவர். ஆனால் ஆளுநர் தானாகவே முடிவு செய்து நிராகரிக்கிறார். எனவே ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு எப்படி ஆளுநர் களைப் பயன்படுத்தி மைதானத்தில் பந்துகளை உருட்டி விளையாடுவதை போல ஆளுநர்களை வைத்து தனது சதுரங்க விளையாட்டை விளையாடு கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

தமிழக முதல்வர் கூறியிருக்கிறார், ஆளுநர் கூறிய படி மீண்டும் திருத்தங்களைச் செய்து சட்ட மன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப் போகிறோம் என்று கூறியுள்ளார். அப்போது ஆளுநர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது தான் இப்போது எழுந்திருக்கிற கேள்வி. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணா கூறியதை சுட்டிக்காட்டி யிருக்கிறார், “ஆட்டுக்குத் தாடி தேவையில்லை, நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை” எனவே தமிழ்நாட்டு ஆளுநரின் இந்த நடவடிக்கை காரணமாக கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தை விட ஆளுநர் மாளிகை அதிகாரமிக்கது என்று மக்களாட்சிக்கு எதிரான கருத்தை நாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கிற ஆட்சி சமூக நீதிக்கான ஆட்சி, தமிழ்நாடு சமூக நீதி மண், தமிழ்நாடு பெரியார் மண் என்பதை நிரூபிக்கிற வகையில் இந்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடரும்” என்று உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்த் தேச மக்கள் முன்னணியைச் சார்ந்த செந்தில் உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் மயிலை சுகுமார் உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

சேலம்: சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, 05.02.2022 அன்று மதியம் 2.30 மணியளவில், தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் கோரியும் பதவி விலகக் கோரியும் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் சி.கோவிந்தராஜ் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் ஆகியோர் முன்னிலையிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மதிமுக மத்திய மாவட்ட செய லாளர் ஆனந்தராஜ், தமிழ்தேச மக்கள் முன்னணி யைச் சார்ந்த சீனிவாசன், புரட்சிகர இளைஞர் முன்னனியைச் சார்ந்த வின்சென்ட், திராவிடர் பண்பாட்டு நடுவம் பொறுப்பாளர் கி. முல்லை வேந்தன், நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மு. சாமிநாதன், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் திருப்பூர் சந்தோஷ் உள்ளிட் டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

பின்னர் இரயில் நிலையத்தை முற்றுகையிட தோழர்கள் தடுப்புகளைத் தள்ளி உள்ளே செல்ல முற்பட்டனர். காவல்துறை தோழர்களைத் தடுத்து கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப் பட்டனர். மாலை 6.00 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். மண்டபத்திற்குள் அனைத்து இயக்க தோழர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

கோவை: கோவை மாவட்ட கழகத் தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் ஆளுரைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் 05.02.2022 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இரவு 7 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில், கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், நிர்மல்குமார், வெங்கட், நேருதாசு, மாதவன் சங்கர், கிருஷ்ணன், புரட்சி தமிழன், விஷ்ணு, ஆனந்த், சபரி, சிவா, கணேசன், முத்து, சரஸ்வதி, சங்கீதா, அய்யப்பன், மாரியப்பன், சிவராஜ், மனோரஞ்சிதம், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதானார்கள். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

அந்த மண்டபத்திலேயே சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த டிட்டோ ஸ்டுடியோ சிவராஜ் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கழகம் சார்பாக 05.02.2022 அன்று காலை 10 மணியளவில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில், மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலு குபேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், திவிக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் மகாலிங்கம், தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, அமைப்பாளர் செந்தில்குமார், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு. மகேஷ், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் செந்தில், தமிழக மக்கள் முன்னணி விஷ்ணு, திவிக தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் சோலை. மாரியப்பன், திராவிடர் விடுதலைக் கழகம் சிதம்பரம் ஆசியஜோதி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சேக் அலாவுதீன், தமுமுக மாவட்ட பொறுப்பாளர் பாசித், பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் சபீக் அகமது, விசிக, எஸ்.டி.பி.அய், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பொழுது ஆர்க்கெஸ்ட்ரா நடத்தி கொண்டு இருக்கும் ராஜமாணிக்கம் என்ற தோழர், போராட்டத்தை வாழ்த்தி அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்தார்.

பேராசிரியர் ஜெயராமன்: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பேராசிரியர் ஜெயராமன், ‘அகண்ட இந்துராஷ்டிரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு ஒன்றிய பார்ப்பனிய ஆட்சி மனு தர்மத்தை மீண்டும் சட்டமாக்கத் துடிக்கிறது. இடஒதுக்கீட்டால் படித்து முன்னேறி வரும் ‘சூத்திர’, ‘பஞ்சம’ மக்களைத் தடுத்து மீண்டும் வர்ணாஸ்ரமக் கட்டமைப்புக்குள் கொண்டு போகத் திட்டமிட்டே ‘நீட்’ தேர்வு முறையைத் திணிக்கிறது; சமூகத்தை மீண்டும் புதைக் குழியில் போடுவதே இவர்களின் நோக்கம் என்றார். ‘நீட்’ வந்த பிறகு தமிழ் வழியில் படிப்போர், மருத்துவக் கல்லூரியில் நுழைவது 8 மடங்கு அளவு குறைந்து விட்டது.

2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் திணிக்கப் பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தடுத்து நிறுத்தினார். 2017இல் ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது ஒன்றிய ஆட்சி மிரட்டலுக்கு அடிபணிந்து ‘நீட்’டை அனுமதித்தார். இந்த ஆளுநர் மாற்றப்பட்டு வேறு ஆளுநர் வந்தாலும் இந்த அமைப்பு இருக்கும் வரை இது தான் நடக்கும். எனவே இந்த அமைப்பிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்றார், பேராசிரியர் ஜெயராமன்.