பகவத் கீதையை தேசிய நுலாக்க முயற்சிக்கிறது மோடி அரசு. இவர்கள் போற்றும் விவேகானந்தரே, பகவத்கீதை மீதான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். அக்கருத்துகளின் தொகுப்பு இது.

கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. வியாசரால் நூல் எழுதப்பட்ட காலத்திலேயே கீதையும் அதனுடன் இருந்ததா அல்லது பிற்காலத்திலேயே கீதையும் அதனுடன் இருந்ததா அல்லது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டும். கிருஷ்ணன் எனும் பெயரால் வரலாற்றில் யாரேனும் இருந்தாரா? குருச்சேத்திரப் போர் உண்மையில் நடந்ததா? அர்ச்சுனனும் அவனைப் போன்ற பிறரும் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவரா என்பதையெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

வேத வியாசர் என்ற பெயரில் பற்பல காலகட்டங்களில் பலர் வாழ்ந்துள்ளனர். இவருள் கீதையை எழுதியவர் யார்? வியாசர் என்பது ஒரு பட்டம்தான். தனிப்பட்ட யாருடைய பெயரும் அல்ல. புராணங்களை இயற்றுகின்ற எவரையும் வியாசர் எனும் பெயரால் அழைப்பது அக்காலத்திய மரபு.

ஆதிசங்கரர் பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதுவதற்கு முன்னர் கீதை எனும் நூலைப் பொது மக்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. போதாயனர் எனும் பெரும் புலவர் வேதாந்த சூத்திரங்களுக்கு உரையெழுதினார் என்று கூறுவர். இவரே கீதைக்கும் உரை எழுதியவர் என்றும் கூறப்படுகிறது.

விவேகானந்தர் இந்திய நாடெங்கணும் சுற்றுப் பயணம் செய்த காலத்தில் ஓரிடத்திலாவது போதாயனபாஷ்யம் எனும் உரை நூலைக் காண இயலவில்லை. இப்படி மிகப் பழமையான போதாயனர் கீதைக்கும் உரையெழுதினார் என்று கூறுவதும், அதன் மூலம் கீதையின் தொன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்ட முயல்வதும் பயனற்ற வீண் வேலையாகும்.

கிருஷ்ணன் எனும் நபர் இருந்திருப்பாரா என்பதும் அய்யத்துக்கிடமானதாகவே உள்ளது. சாந்தோக்ய உபநிடத்தில் ஓரிடத்தில் கிருஷ்ணனைப் பற்றிய குறிப்பு உள்ளது. கிருஷ்ணன் தேவகியின் மகன் என்றும், யோகியரிடமிருந்து ஆன்மிக அறிவினைப் பெற்றார் என்றும் அக்குறிப்பு கூறுகின்றது. பாரத காவியம் கிருஷ்ணனைத் துவாரகையின் அரசன் என்று கூறுகிறது.

கோபியருள் அவன் லீலைகள் செய்ததை விஷ்ணு புராணம் பேசுகிறது. பாகவத புராணம் கிருஷ்ணன் செய்த ரச லீலைகள் பற்றி விவரமாகக் கூறுகிறது. பழங்காலத்தில் நடந்த மன்மத உற்சவமே கண்ணன் மீது திணிக்கப்பட்டதாகக் கருதலாம்.

வரலாற்றுச் சிந்தனை பண்டைக் காலத்தே மிகவும் குறைவாக இருந்தது. ஆன்மிகக் கருத்துகளும், தெய்வீகச் செயல்களாகக் கருதப்படுவனவும், அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாரம்பரியமாகவும், செவி வழிச் செய்தியாகவும் அவை காலங்காலமாக நிலை பெற்றுவிட்டன. பண்டைக் காலத்திய மக்களுக்குப் பூகோள அறிவு கிடையாது. பாற்கடல், தயிர்க்கடல், இனிப்புக் கடல் என்று பற்பல கடல்கள் கற்பனையாகவே இருந்தன. ஒருவன் நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தான் என்றும் கூறுவர்.

வேதங்களோ மனிதன் பல நூறாண்டு வாழ்கிறான் என்றே சொல்லுகின்றன. இத்தகைய ஒரு புராணிகக் கற்பனைச் சூழலில் யார் சொல்வதை ஏற்பது? கிருஷ்ணனைப் பற்றியும் ஒரு தெளிவான முடிவை மேற்கொள்வது என்பது முற்றிலும் இயலாத காரியமாகும்.

ஒருவனைப் புகழ்வதாயின், மனித சக்திக்கு மேம்பட்ட இயல்புகள் அவனிடம் இருப்பதாகக் கூறுவது இயல்பாக இருந்தது. கிருஷ்ணனைப் பொறுத்தவரை இதுதான் நடந்துள்ளது. பிரம்ம ஞானத்தைப் பெரிதும் அரசர்களே போதித்தனர் என்பதால், கிருஷ்ணன் ஒரு அரசனாக இருந்திருக்கலாம்.

மகாபாரதம் முழுவதும் காணுகின்ற உண்மைகளையே கீதையிலும் காண்கிறோம். எனவே அக்காலகட்டத்தில் யாரோ ஒரு பெரிய மனிதர், அன்றைய சமுதாயத்திற்குத் தேவை என்று தனக்குத் தோன்றியவற்றை ஒரு நூலாக எழுதி பாரதத்துக்குள் சேர்த்திருக்கலாம்.

குருச்சேத்திரப் போர் நடந்தது என்று கூறுதற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை. அத்தோடு போர்க் களத்தில் இரு தரப்புப் படைகளும் தம்முள் மோதிப் போர் செய்ய வேண்டிய தருணத்தில், ஞானம், பக்தி, யோகம் பற்றி ஒரு விரிவான விவாதம் எப்படி நடைபெற்றிருக்க முடியும்? கூச்சலும் குழப்பமும் நிறைந்த போர்க் களத்தில், பார்த்தனும் அவனது சாரதியும் பேசிக் கொண்ட ஒவ்வொன்றையும் எவரேனும் குறிப்பு எடுத்தனரா? எனவேதான் குருச்சேத்திரப் போர் ஒரு உருவகக் கதை என்று சிலர் கருதுகிறார்கள்.

அர்ச்சுனனும், ஏனையோரும் வரலாற்று மாந்தரா என்பது பற்றி அய்யப்பட இடம் இருக்கிறது. சதபதப் பிரமாணம் என்பது மிகவும் தொன்மையான நூல். அஸ்வமேத யாகம் செய்த பல பேருடைய பெயர்கள் அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அர்ச்சுனனும், அவனைச் சார்ந்தோரும் அக்குறிப்பில் காணப்படவில்லை. ஆனால், மகாபாரத்தில் தருமன், அர்ச்சுனன் ஆகியோர் அசுவமேத யாகம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

‘கீதையின் மறுபக்கம்’ நூலிலிருந்து

Pin It