1989ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வடமாநிலங்களில் கடும்  கொந்தளிப்பை உருவாக்கியது. (இது குறித்து விரிவான கட்டுரை, கடந்த வாரம் வெளி வந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டுள்ளது.)

தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் காவிரி நீர் உரிமை, நியுட்ரினோ, ‘ஸ்டெர்லைட்’ போராட்டங்களால் இப்பிரச்சினை தமிழகத்தில் இன்னும் தீவிரப்படவில்லை.

2016ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பட்டியலினப் பிரிவினர் தொடர்பாக 7.7 சதவீத வழக்குகளிலும், 11.1 சதவீதம் பழங்குடியினர் தொடர்பான வழக்குகளிலும் தண்டிக்கப்பட் டுள்ளனர். தென் மாநிலங்களிலே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டினாலும், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையாக நடத்தப்படுவது இல்லை என்பதே உண்மை.

பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் போன்ற ஜாதி சங்கங்கள் இந்தச் சட்டத்தையே நீக்கிட வேண்டும் என்று பேசி வருகின்றன. இதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சி, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தலித் சமூகத்தை தனிமைப்படுத்த முயன்றது. இந்த முயற்சிகளில் அக்கூட்டமைப்பு கடும் பின்னடைவையே சந்தித்தது.

2016ஆம் ஆண்டில்  மட்டும் தமிழ்நாட்டில் பட்டியல் இனப் பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டவை - 1291.

இந்தச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நீதிமன்ற விசாரணையிலிருந்து வரும் மொத்த வழக்குகள் - 5054.

காவல்துறையின் விசாரணையில் உள்ள வழக்குகள் - 1905.

இதில் 97 வழக்குகளின் நம்பகத் தன்மை உறுதியாகி யுள்ளது. ஆனால் முறையான சாட்சியங்கள் கிடைக்க வில்லை. தவறாக பதியப்பட்ட வழக்குகள் - 172 என கண்டறியப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட வில்லை.

உ.பி.யில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட  70 சதவீத வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே உ.பி. இதில் முதலிடம் பெற்றிருக்கிறது.

தேசிய சராசரியாக இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட சதவீதம் 20.8 ஆக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும்  தேசிய சராசரிக்குக் குறைவாக 11.1 சதவீத வழக்குகளிலேயே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

‘குற்றங்களுக்கான தேசிய ஆவணப் பதிவு’ நிறுவனம்  தரும் புள்ளி விவரங்களின்படி இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தமிழகத்தில் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒரு தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் தரும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த தலித் மீது வேறு சட்டப் பிரிவுகளில் பொய் வழக்குகளைத் தொடர்ந்து மிரட்டுகிறார்கள். வழக்குகளைச் சந்திக்கும் வலிமையற்ற நிலையில் தலித் மக்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Pin It