agitation against iitசென்னை அய்.அய்.டி.களில் நடக்கும் ஜாதியப் பாகுபாடுகள் குறித்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட் டோர் அடங்கிய குழு விசாரணை நடத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தீண்டமை ஒழிப்பு முன்னணி சார்பில் அய்.அய்.டி. வளாகம் அருகே 5.7.2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பின்னர் அய்.அய்.டி. பதிவாளர் மற்றும் ‘டீன்’ ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

சென்னை அய்.அய்.டி. பார்ப்பன மனுவாதிகளின் கோட்டையாக செயல்பட்டு வருகிறது. பட்டியலின - பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பார்ப்பனிய மேலாதிக்கம் திணிக்கும் பாகுபாடுகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பாதியில் படிப்பை விட்டு விலகுகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள் கிறார்கள்.

அண்மையில் உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருந்த விபின் பி. வீட்டில், பேராசிரியர் பதவியிலிருந்து விலகியதோடு, ஜாதிப் பாகுபாடு நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பட்டியலின பிற்படுத்தப்பட்டோர் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தார்.

தொடர்ந்து நீடித்து வரும் இந்த பாகுபாடுகளுக்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சென்னையில் காலை 10.30 மணியளவில் அய்.அய்.டி. வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்டக் கழக உறுப்பினர்கள் இரா. உமாபதி, வேழவேந்தன், மயிலை சுகுமார், விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட 30 தோழர்கள் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக அதன் தலைவர் சாமுவேல் மற்றும் சாமிநாதன், எஸ்.எஃப்.அய். மாநில செயலாளர் சந்துரு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கழக சார்பில் விழுப்புரம் அய்யனார் கண்டன உரையாற்றினார்.

பின்னர் அய்.அய்.டி. வளாகத்தில் தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் சாமுவேல், சாமிநாதன் ஆகியோர் பதிவாளர் மற்றும் ‘டீன்’அய் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

Pin It