இரயில்வே துறையில் இந்தித் திணிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ரயில்வே அலுவலகங்களில் வடநாட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். தமிழ்நாட்டு ஏடுகளில் ரயில்வே துறையின் ‘இந்தி’ விளம்பரங்கள் பக்கம் பக்கமாக வருகின்றன. தமிழ்நாட்டில் - ரயில்வே பணிகளில் தேர்வு எழுத, பல்லாயிரக்கணக்கில் வடமாநிலத்தார் வருகிறார்கள். இதை எதிர்த்து கழகம் போராட்டம் நடத்தியது. இப்போது ரயில்வேயில் பணிக்கு சேர இந்தியில் விண்ணப்பதாரர்கள் கையெழுத்திட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

இது பற்றி ‘நக்கீரன்’ ஏட்டில் (அக்.25) இளைய செல்வன் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

மத்திய அரசின் ரயில்வே துறையில் தமிழர்களை ஒழித்துக்கட்டுவதற்காக சத்தமில்லாமல் ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த ‘சதி’க்கு போடப்பட்டுள்ள பிள்ளையார் சுழி, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது, ஆங்கிலத்திலும் இந்தியிலும் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் இந்தியில் கையெழுத்துப் போடாத விண்ணப்பதாரர்களை நிராகரித்து விடுங்கள் என்றும் ஒரு ரகசிய உத்தரவை அண்மையில் பிறப்பித்திருக்கிறது இந்திய ரயில்வே வாரியம்.

குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் இதனை முழுமையாக அமல்படுத்துங்கள் என்றும் உத்திரவிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, உ.பி.யில் உள்ள அலகாபாத் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு இதனை அமல்படுத்தியிருக்கிறது. இந்த அமலாக்கத்தால் ஏகப்பட்ட தமிழக பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி இளைஞரான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது, “உ.பி. மாநிலத்தில் உள்ள ரயில்வேயில் ‘நாண்-டெக்னிக்கல் கிளரிக்கல் போஸ்ட்’டை நிரப்புவதற்காக கடந்த 2005-ல் அறிவிப்பு செய்திருந்தது. அலகாபாத் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு. இதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன்.

தேர்வு நெருங்கியும் ‘ஹால் டிக்கட்’ எனக்கு வராததால் குழம்பிப் போனேன். தவித்தும் போனேன். இந்த சூழலில் மார்ச் 27 தேதியிட்டு அலகாபாத் ஆர்.ஆர்.பி.யிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ‘இந்தியில் கையெழுத்திடாததால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது’ என்று ஒரு காரணம் குறிப்பிட்டிருந்தனர். இதைக் கண்டதும் நான் அதிர்ந்து விட்டேன். ரயில்வே துறை என்பது இந்திய பிரஜைகளுக்கு பொதுவானது. அதனால்தான் மாநில மொழிகளில் தேர்வு எழுதாமல் ரயில்வே தேர்வுகளை பொதுவாக ஆங்கிலத்தில் எழுத அனுமதித்தனர். தற்போது, இந்தி தெரிந்தால்தான் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்கிற ரீதியில் ஆர்.ஆர்.பி. நடந்து கொண்டிருப்பது, நமது உரிமையை பறிப்பதாகும். என்னைப்போல, எவ்வளவோ இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் - மவுனமாகி விட்டேன்” என்கிறார் மிகுந்த ஆதங்கத்துடன்.

இந்த விவகாரம் அறிந்து ஷாக்கான ‘தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன்’ (எஸ்.ஆர்.எம்.யூ) தலைவர்கள், இது குறித்து இந்திய ரயில்வே போர்டுக்கும் அலகாபாத் ஆர்.ஆர்.பி.க்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜா ஸ்ரீதரை சந்தித்து இது குறித்து கேட்டபோது, “இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள ரயில்வே பணிகளில் சேரலாம் என்பது பொது விதி.

இதனை மாநில மொழியை காட்டி தடுத்திட முடியாது. அதனால் தான் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்து தேர்வுகளை எழுத வைத்தனர். தற்போது அலகாபாத் ஆர்.ஆர்.பி. அறிவித்து அமல்படுத்தியுள்ள முடிவு மோசமானது. காரணம், இந்தியை படிக்காதவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தான். அதனால், இப்படிப்பட்ட உத்திரவால் தமிழர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும், வட மாநிலங்களில் ரயில்வே துறையில் இனி தமிழர்கள் சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘நாண் டெக்னிக்கல் போஸ்ட்டுங் கிறது மக்களோடு நேரடி தொடர்பு உள்ள பதவி. அதனால், வடமாநிலங்களில் பணியில் சேர விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் தானே?’ என்கிறார்கள். அப்படியானால், தமிழகத்தில் பணிபுரிய தேர்வு எழுதும் வடமாநிலத்தவர் தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் தானே. ஆனால், அப்படி எந்த உத்திரவும் இல்லை. மொத்தத்தில் வடகிழக்கு மாநில ரயில்வே துறையில் தமிழர்கள் சேர்வதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் தெரிகிறது. அலகாபாத் ஆர்.ஆர்.பி. போட்டுள்ள உத்திரவு. இது குறித்து என்ன செய்யலாம் என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் ராஜா ஸ்ரீதர்.

பெரியார் திராவிடர் கழகம்

ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதையும் தமிழகத்துக்கான திட்டங்கள் மறுக்கப்படுவதையும் தொடர்ச்சியாக திட்டங்கள் மறுக்கப்படுவதையும் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ‘பெரியார் திராவிடர் கழக’த்தினரையும் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இது குறித்து அதன் பொதுச்செயலாளர் ‘விடுதலை’ ராசேந்திரனிடம் கேட்டபோது,

“ரயில்வே துறையில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கிற முயற்சி இது. தமிழகத்தில் இந்தி அறிந்தவர்கள், படித்தவர்கள் இல்லை. பள்ளிக்கூடங்களில் இந்தி இல்லை. அப்படிப்பட்ட சூழலில், வடமாநில ரயில்வே போர்டுகள் ‘இந்தி’ கட்டாயம் என்பது தமிழர்களை ஒழித்துக்கட்ட துடிக்கும் நடவடிக்கை. இரு மொழித் திட்டம் அமுலாக்கத்தில் உள்ள இந்தியாவில் ‘இந்தி’ அவசியம் என்று ரயில்வே அதிகாரிகள் நடைமுறைப் படுத்துவது சட்ட விரோதம்.

மீண்டும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வுகளை தூண்டிவிடும்படியாக இருக்கிறது வடமாநில அதிகாரிகளின் போக்கு. தமிழகத்தில் உள்ள ரயில்வே இணை அமைச்சர் வேலுவும் மத்திய அரசும் தலையிட்டு இத்தகைய போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். இது குறித்து தமிழக ரயில்வே நிலையங்களில் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் ஆவேசமாக.

இது குறித்து கருத்தறிய இணையமைச்சர் வேலுவை தொடர்பு கொண்டபோது, விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் அவருக்கு, நாம் சொல்லித்தான் இந்த விவரம் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், “கையெழுத்துக்கு மொழி பிரச்சினை இல்லை. இந்தியில் கையெழுத்துப் போடவில்லை என்பதால் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது. இதை அமைச்சர் லாலுவே ஏற்க மாட்டார். நான் இது குறித்து விசாரிக்கிறேன்” என்றார்.