கடந்த 24 ஆம் தேதி சென்னை ஏடுகளில் வந்துள்ள முக்கிய செய்தியை குறிப்பிட வேண்டும். புது வண்ணாரப்பேட்டையில் உள்ள சவுந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘பேய்’ நடமாட்டம் இருப்பதாக ஒரு செய்தி பரவியது.

மாணவிகள் அமரும் இருக்கையில், கழிவறையிலும் ரத்தக்கறை இருந்ததாகவும், ஒரு மாணவி மயங்கி விழுந்து விட்டதாகவும், பல மாணவிகளுக்கு ‘பேய்’ பிடித்து விட்டதாகவும் செய்திகள் பரவின. பெற்றோர்கள், விரைந்து பள்ளிக்கு ஓடி மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். பள்ளிக்கும் அவசரமாக விடுமுறை விடப்பட்டது.

காவல்துறை இணை ஆணையாளர் ரவி, மாவட்ட கல்வி அதிகாரி அவுரப் நிஷா ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறை இணை ஆணையர் இரவி மாணவிகளைக் கூட்டி வைத்துப் பேசினார்.

“பேய் பிடித்துள்ளதாக சொல்வது வெறும் புரளி. அதை யாரும் நம்ப வேண்டாம். குழந்தைகளை பயமுறுத்துவதற்காக பெற்றோர்கள் பேய்க்கதை சொல்வது வழக்கம். அதுபோல இந்தப் பேய் பீதியை சில சமூக விரோதிகள் பரப்பி விட்டுள்ளனர். அந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - என்று அந்த காவல்துறை அதிகாரி பேசியுள்ளார்.

பேய்ப் புரளியைக் கிளப்பி விட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது. ஆக பேய், பிசாசு என்று கூறி மக்களை அச்சுறுத்தும் சக்திகள் ‘சமூக விரோதிகள்’ என்பதை காவல்துறையே கூறியிருக்கிறது. இதைத்தான் பெரியார் தொண்டர்களும் காலம் காலமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பேய் - பிசாசு - பில்லி சூன்யம் என்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவோர் சமூக விரோதிகள். இது சட்டப்படி குற்றம் என்று அரசு ஒரு சட்டம் போடக் கூடாதா என்று கேட்கிறார்கள்.

“நியாயமான கோரிக்கைதான்; ஆனால் சென்னையில் சில காவல் நிலையங்களே வாஸ்து முறைப்படி மாற்றியமைக்கப்படுகிறது. வேப்பேரியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு காவல் நிலையத்தில் “வாஸ்து மீன்” வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி மூடத்தனத்தை பரப்பும் ‘சமூக விரோத’ நடவடிக்கைகளில் காவல்துறையே ஈடுபடும் போது, இப்படி ஒரு சட்டம் வந்தால் காவல்துறை எப்படி அமுல்படுத்தும்? அந்த சட்டத்தின் கீழ் பல காவல்துறையினரையே தண்டிக்க வேண்டி வருமே” என்று சுட்டிக் காட்டுகிறார்,

ஒரு தோழர். நியாயமான கேள்வி தானய்யா!

Pin It