கடந்த 18.2.2007 அன்று ஈரோடு நகராட்சி திருமண அரங்கத்தில் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியார் ஆகஸ்டு 15 நூல் வெளியீட்டு விழாவில், தந்தை பெரியாரின் நூல்கள், பேச்சுக்களை ஆழ்ந்து ஆய்வு செய்து, “பெரியார்-சுயமரியாதை-சமதர்மம்”, “பெரியார் ஆகஸ்டு 15” போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மைய இயக்குநருமான எஸ்.வி.ஆர் என்று அழைக்கப்படும் எஸ்.வி. இராஜதுரை - தமது நூல் ஏற்புரையாற்றுகையில் பேசிய உணர்ச்சிகரமான பேச்சுக்களின் சில பகுதிகள்...

“பெரியார் திராவிடர் கழக தலைமைப் பொறுப்பை ஏற்று பெரியாரியலை மங்கவிடாமல், அதற்குப் புத்துயிர் கொடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி புது ரத்தம் பாய்ச்சி புத்துயிர் தந்து கொண்டிருக்கும் தோழர் கொளத்தூர் மணி அவர்களே... இயக்கத்தின் தத்துவவாதியாக, சித்தாந்தவாதியாக திகழும் விடுதலை இராசேந்திரன் அவர்களே... பெரியாரியலை சாதிய எதிர்ப்புச் சிந்தனையுடன் கலந்து சுரண்டலிலிருந்து விடுதலை பெறப் போராடி வரும் செந்தில் அவர்களே... ஆர்வத்துடன் கூடியுள்ள சகோதர, சகோதரிகளே, பெரியோர்களே...

என்னை நான் என்றுமே பெரியாரின் தொண்டனாகவே எண்ணிக் கொள்பவன். அதைவிட அவருடைய தொண்டரடிப் பொடி ஆழ்வாராக, ஒரு அடிவருடியாகவே கருதிக் கொண்டிருப்பவன்.

இளம் வயதிலேயே பெரியார், அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இயக்கத்தின் ஆதரவாளனாக நீண்டகாலமாக இருந்தவன். ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் மூலம் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பயிற்றுவிக்கப்பட்டவன். பின்பு, தி.மு.க. மீது கவர்ச்சி ஏற்பட்டு, பின்பு அதையும் விட்டு விட்டு பொது வுடைமைவாதியாக மாறியவன்.

மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக, அதுவும் உறுப்பினர் கார்டு பெற்றவனாக சிலகாலம் இருந்தவன். அது ஒரு சரியான புரட்சிகர கட்சி அல்ல என்று உணர்ந்து, பல்வேறு தோழர்களுடன் விலகி மார்க்சிய லெனினியக் கட்சி என்றும், நக்சலைட் கட்சி என்றும் அழைக்கப்படும் கட்சியை தமிழகத்தில் நிறுவியவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன்.

நீண்ட நெடிய எனது அரசியல் நடவடிக்கைகளில் நான் எல்லோராலும் இகழகப்பட்டிருக்கிறேன். அவதூறு செய்யப்பட்டுள்ளேன். மனித உரிமை இயக்கங்களில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் பணியாற்றி அதிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகியிருக்கிறேன்.

பல இடங்களில், பலவிதங்களில் எனக்கு மன விரக்தி ஏற்பட்டதுண்டு. ஆனாலும், எங்கிருந்து நான் மன உரத்தையும் ஊட்டததையும் பெற்றேன் என்றால், உலக ளாவிய மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையால் மட்டுமல்ல, நமது தலைவர்களிலே, இந்தியத் துணைக் கண்டத்தின் ஒப்பற்ற தலைவர்களிலே, உலகத் தலைவர்களிலே சிந்தனையாளர்களிலே ஒன்றாக வைக்கத் தகுந்த தந்தை பெரியாரின் பேச்சாலும், எழுத்தாலும் தான் என் மன உரத்தைப் பெற்றேன்.

உண்மையில் அவர், ஒரு புரட்சியாளர் என்பதா அல்லது அரசியல் தலைவர் என்பதா, ஆன்மீகவாதி என்பதா என்று பல சமயங்களில் எனக்குக் குழப்பம் ஏற்படுவது உண்டு.

அவரும் இயக்கத்தில் ஏராளமான ஏமாற்றங்களைக் கண்டவர். நீதிக்கட்சி உருவாக்கப்பட்டு, அது பதவிக்கு வந்ததும் பதவியை சுகித்து, அதுவே போதுமென்று தங்களது சூத்திரப் பட்டம் ஒழிக்க வேண்டியது பற்றிக் கவலைப்படாமல் தாசிமகனாக, வேசி மகனாக இருப்பதில் பெருமை கொண்ட பலரை அவரும் பார்த்திருக்கிறார், அதற்குப் பின்பும் பார்த்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர் 1944 குடிஅரசு இதழில் எழுதுகிறார் :

“நம் இயக்கத்தின் பலனாக பட்டம், பதவி சுகித்து நன்மை பெற்ற சூத்திரர்கள், மறைமுகமாகவேனும் பார்ப்பனர்களின் கட்டை விரலை சூப்புவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” - என்கிறார்.

அது அன்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது.

இந்த விரக்தியில் மேலும் பல சமயங்களில் பெரியார் கூறுவார்...

“எல்லோரும் போய் விடுங்கள். எனக்குக் கவலையில்லை. நான் ஒரு மொட்டை மரம். நான் ஒரு துறவி. தோளில் கிடக்கும் துண்டை உதறிப் போட்டுவிட்டு, நடுத்தெருவில் நின்று, கொள்கைகளை நான்கு பேருக்குக் கேட்கும்படி பேசிக் கொண்டு செத்து விடுவேன்” என்றும் எழுதியுள்ளார்.

எல்லோரும் போய் விட்டாலும் சரி, தனக்குச் சரி என்று பட்டதை, இந்த சமுதாயம் உய்வுற வழி இதுதான் என்று அவர் மனமாரத் தனது பகுத்தறிவு சிந்தனையில் ஏற்றுக் கெண்டதை, துணிச்சலோடு சொல்வதற்கு வேறுயார் இல்லாவிட்டாலும், நான் மாத்திரமே தயாராக இருக்கிறேன் என அறிவித்தவர் பெரியார் தான்!

யாரையும் திருப்திப்படுத்துவதற்காக இயக்கத்தை நடத்தாமல், ஆனால் அவரை திருப்திப்படுத்த பல பேரை உருவாக்கி யவராக தந்தை பெரியார் இருந்தார். அவரது பிறந்தநாள் செய்திகள் கூட கொள்கைப் பிரகடனமாகத் திகழ்ந்தன.

பார்ப்பனர் முதல் தன்னால் பட்டம், பதவி அடைந்த ஆதிதிராவிடர்கள் வரை தந்தை பெரியாரை தூற்றியுள்ளார்கள். பெரியார் மிகவும் சரியான மனிதராகத் திகழ்ந்தார் என்பதற்கு அது ஒன்றே சாட்சியாக இருக்கிறது.

யாரையும் திருப்திப்படுத்துவதற்காக ஒரு வார்த்தைக் கூடப் பேசாத தலைவராக பெரியார் இருந்துள்ளார்.

கம்யூனிஸ்டுகள் அவருக்குத் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால், கம்யூனிஸ்டுகள் பார்ப்பன, பனியா ஆட்சியை தூக்கி எடுத்து நிறுவுவதற்காகவே பயன்பட்டார்கள்.

இன்றைக்கு 1967-க்குப் பிறகு நக்சலைட் இயக்கங்கள் வந்தபிறகுதான், திருத்தங்கள், மாற்றங்கள் ஏற்பட்டு பெரியாரை என்ன என்று அவர்களால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

தோழர் மாவோ, லெனின் ஆகியோர் புரட்சிகர சித்தாந்தங்களையும், திருத்தல் வாதத்திற்கான விளக்கங்களையும் கொடுத்தது போல, தமக்கே உரிய மொழியில், நடையில் தந்தை பெரியார் விளக்கங்களை அளித்துள்ளார்.

கசப்பான உண்மைகளையும், பாடங்களையும் அறிந்து கொண்டு இந்த “பெரியார் ஆகஸ்டு 15” நூலை எழுதியுள்ளோம். சுதந்திரப் போராட்டங்களின் போதெல்லாம் காங்கிரசின் வலதுசாரி முகமாக இந்துமகாசபையும், இடதுசாரி முகமாக கம்யூனிஸ்டுகளும் பல சமயங்களில் இருந்துள்ளார்கள்.

நானும் தோழர் கீதாவும் மறுக்க முடியாத சான்றுகளுடன் பெரியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பிறகு, ‘பெரியார் ஆகஸ்டு 15’ நூல் வெளிவந்த பிறகு, கம்யூனிஸ்டுகள் பழைய பாணியில் பெரியாரை விமர்சனம் செய்வதில்லை.

பெரியார் இயக்கத்தின் தாக்கம், மண்டல் குழு அறிக்கையால் ஏற்பட்ட எழுச்சி இவைகளின் காரணமாக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஓட்டுகளுக்காக இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை கையில் எடுக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

புரட்சிகர கம்யூனிஸ்டுகள் என்று சொல்லப்படுபவர்கள் உளப்பூர்வமாக பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதிலும் இந்தியாவின் மிக முதன்மையான மிகப் பெரிய மார்க்சிய - லெனினிஸ்டு புரட்சிகரக்குழு என்றும், மாவோயிஸ்டு குழு என்றும் மக்கள் யுத்தக்குழு என்றும் அழைக்கப்படும் அமைப்பினர் உண்மையில் முதன் முறையாக சாதியப் புரட்சியையும், வர்க்கப் புரட்சியும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற சரியான நிலைப் பாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

நிச்சயமாக அவர்களின் அந்த முடிவுக்கு பெரியாரின் தாக்கம்தான் காரணமென்று நான் நினைக்கின்றேன்.

1980களில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் கருதி தோழர் ஆனை முத்து அவர்களை கலந்து கொள்ளச் செய்தோம். கொண்டப்பள்ளி சீதா ராமய்யா - மார்க்சிய லெனினிஸ்டு குழுவில் அப்போது புகழ் பெற்ற தலைவராக இருந்தார். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திராவிட சித்தாந்தங்களை தெரிந்து கொண்டதால், இனி நமது அமைப்பை “திராவிட கம்யூனிஸ்டு” கட்சி என்றுகூட வைத்துக் கொள்ளலாம் என்று ஆவலுடன் தெரிவித்தார்.

அவர்கள் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்ட வரம்புக்குட்பட்ட சில செய்திகளைக் கொண்டே பெரியார் உண்மையில் எவ்வளவு பெரிய பெரியார் என்று அறிந்து கொண்டார்கள்.

பெரியாரைப் பற்றிய படைப்புகள், எழுத்துகள், பெண்ணுரிமைக் கருத்துகள், பெரியார் இயக்கத்தில் இருந்த குத்தூசி குருசாமி போன்றோரின் ஆழமான சிந்தனைகளை வேறு மாநில பொதுவுடைமைவாதிகளும் படிக்க வாய்ப்பிருக்குமானால் நிச்சயம் அவர்களது இயக்கமும் வலுப்பெறும் என நினைக்கிறேன்.

(தொடரும்)

Pin It