அன்று - மயிலை மாங்கொல்லையில் அக்டோபர் முதல் வாரத்தில் கலைஞர் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு எதிராக சிங்களத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். அதே மயிலை மாங்கொல்லையில் இப்போது ப. சிதம்பரம் தி.மு.க.வின் கோரிக்கைக்கு ராஜபக்சே சார்பில் பதில் தந்துள்ளார்.

அன்று - கலைஞர் பேச்சை ஆதரித்து மனித சங்கிலி நடத்தியது தி.மு.க. இன்று - ப.சிதம்பரம் பேச்சை ஆதரித்து மனித சங்கிலக்கு அழைப்பு விடுகிறது தி.மு.க. இதைத்தான் ப. சிதம்பரமும் தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு இந்தியாவின் கொள்கை தெரிகிறது. இலங்கையில் ஆயுதங்களைப் போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால்தான் முடியும் என்று மூன்று கட்சிகளுக்கும் தெரிந்திருப்பதால் தமிழகம் அமைதியாக உள்ளது” என்று பேசியிருக்கிறார். அன்று தி.மு.கவின் குரல் தனித்து ஒலித்தது. இன்று - தி.மு.க.வின் குரல் அ.தி.மு.க., காங்கிரசோடும் இணைந்து கொண்டது. இதைத்தான் பார்ப்பன ‘இந்து’ ஏடும் தனது தலையங்கத்தில் படம் பிடித்துக் காட்டி மகிழ்ந்து வரவேற்றது. ப.சி.யும் உறுதிப்படுத்திவிட்டார்.

வழக்கறிஞர்கள் போராட்டம் - நீதிமன்றத்துக்குள் சு.சாமி மீது முட்டை வீச்சு

தில்லை நடராசர் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களுக்காக தன்னையும் வழக்கில் இணைத்துக் கொள்ள பிப். 17 அன்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு பார்ப்பன சுப்ரமணியசாமி வந்தபோது, நீதிபதிகள் முன்பே, அவர் வழக்கறிஞர்களால் உதைக்கப்பட்டார். சுப்ரமணியசாமி மீது முட்டைகள் வீசப்பட்டன.

‘முட்டை வீச்சு’ சம்பவத் தால் பதறிப்போன சுப்ரமணிய சாமி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

Pin It