மூலம்: சதுரானன் மிஸ்ரா

தமிழில் : ஆர்.பார்த்தசாரதி 

நம் நாட்டு அனைத்திந்திய அரசியலில் இருபெரும் கட்சிகளாக இருந்துவரும் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நாள்தோறும் வலிமையிழந்து நெருக்கடியை - வெற்றிடத்தை நோக்கிச் செல்வது காணலாம். மதச் சார்பற்ற காங்கிரஸ் கட்சி போராடிப் பெற்ற சட்ட உரிமை களையும், பிற உரிமைகளையும் மக்கள் அனுபவிக்கச் செய்ய எந்தப் போராட்டமும் நடத்த முன்வரவில்லை. அதிகார வர்க்கம் முற்றிலும் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு ஊழல் மயமாகிவிட்டது. பொது மக்களுக்காகச் செலவிடப்படும் பணம் முழுவதுமாக அவர்களைச் சென்றடையவில்லை. ராஜீவ் காந்தியிருந்த காலத்தில் செலவு செய்யப்பட்ட ஒரு ரூபாயில் 16 பைசா மட்டுமே சேர வேண்டியவரைச் சென்றடைவதாகக் குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையாலாகாதவர் களாகித் திணறித் தடுமாறினர். ஏனெனில் அரசியல் உணர்வுபூர்வமாக மக்களைத் திரட்டக்கூடிய இயக்கம் ஏதும் இல்லை என்பதே. இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கப் பல்வேறு இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள். நிர்வாகத்தில் ஜனநாயக முறைப்படி இயங்கவேண்டும் செயல்பட வேண்டும் என்பதில் நாட்டமின்றி மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதில் மட்டுமே நாட்டம் பெருகுகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைமைக்குக் கடந்த காலத்தில் மக்களைத் திரட்டியது போல் இப்பொழுதும் திரட்ட முடியும் என்னும் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. பிரதமராக உள்ள மன்மோகன்சிங் அவர்கள் நேரடியாக மக்களவைத் தேர்தலில் நின்று மக்கள் வாக்குகள் பெற்று அதிகாரத்துக்கு வருவது முடியாது என்பதை உணர்ந் துள்ளார். திரிபுரா தொடங்கி குஜராத் வரை அஸ்ஸாம், தில்லி, அரியானா என்னும் மூன்று மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. கிழக்குக் கடற்கரையை நோக்கும்போது வங்காளம் முதல் தமிழ்நாடு வரை காங்கிரஸ் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் நிலையோ இதனைவிட மோசமானது. இச்சீரழிவை நோக்குங்கால் அவ்வமைப்பு “இராஷ்டிரிய சுயம் சங்க”த்தின் கட்டுப்பாட்டில் முற்றிலும் வந்துவிட்டதைக் காணமுடியும். ஆனால் ஓர் உண்மை தெளிவு. இராமர் கோயில் கட்டுவதற்கோ அல்லது இதுபோன்ற வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இந்தக் கட்சிக்குத் திராணி இல்லை.

பிராந்தியக் கட்சிகளான லல்லுபிரசாத் முலாயம்சிங் மாயாவதி நடத்தும் கட்சிகளும் நாள் செல்லச் செல்ல வலிமை குன்றி வருகின்றன என்பதை உணர முடியும்.

இப்பின்புலத்தில் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே மாற்றாக இருக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ள முடியும். அதேபோது அவையும் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். சரியான ஏற்றதொரு கருத்தியலை உருவாக்கப் பல காலம் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்து நின்று வலிமை குன்றி வந்துள்ளன. மக்கள் இடதுசாரித் தலைவர்களைப் பரிதாபத்தோடு நோக்கு கிறார்கள். இருப்பினும் மார்க்சிய லெனினிய மாவோயிசக் கட்சி தவிர பிற இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் அவர்களுக்கெனத் தனித்தனியே திட்டங்கள் வைத்திருந் தாலும் விலைவாசி உயர்வை எதிர்த்து ஒன்றுபட்டு எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இலட்சோப இலட்சக் கணக்காக மக்களைத் திரட்டுவதற்கும் கட்சி அணிகளை உற்சாகப்படுத்தி இயக்கத்தை நடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கவும் அவர்களால் முடிகிறது. எனவே அடுத்து என்ன? என்னும் கேள்வி எழுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் தலைவர்களும் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் எல்லா இடதுசாரிக் கட்சிகளும் ஏன் ஒரு கட்சியாக இணையக் கூடாது? என்னும் வினா எழுகிறது. இதற்கு விடையை இடதுசாரிக் கட்சிகள்தான் தர வேண்டும் இறுதி செய்ய வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகள் பழமை வாய்ந்தவை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது எண்பதுக்கு மேலாகிறது. இன்றும் அது தத்தித் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது. இக்கட்சி வளர்வதற்கு தனிவழிமுறைகள் உள்ளன. அவை பற்றிக் கூறவில்லை. முன்னெச்சரிக்கையாகச் சில பரிந்துரைகளைத் தர விரும்புகிறேன். நம்முடைய அணிகளும் மக்களும் துடிப்புடன் இருப்பதனால் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் போராட்டங்கள் ஒப்புக்கு நடை பெறுவனவாக, அதாவது “நான் அடிக்கிறபடி அடிக்கிறேன். நீ அழுகிறபடி அழு” என்று உப்புச் சப்பில்லாமல் இருத்த லாகாது. எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் அறப் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து நல்ல திட்டங்களை மக்களுக்குப் பெற்றுத் தர வல்லவையாக, பலமாக இருக்க வேண்டும்.

இந்திய நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாம் இத்தகைய அவல நிலையில் உழலும்போது அரசாங்கப் புள்ளி விவரப்படி மாவோயிஸ்டுகள் இந்தியாவில் இருநூறு மாவட்டங்களில் வளர்ந்து பரவ எப்படி முடிந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்திய அரசு இவர்கள் வளர்ந்து பரவுவதற்குக் காரணம் காட்டிக் குற்றம் சொன்னாலும் பல விவசாயச் சீர்திருத்தங்களை வெற்றி கரமாக நடைபெற்றுச் சாதனைகள் பல புரிந்த மேற்கு வங்கத்தில் இவர்கள் வளரக் காரணம் என்ன? விவசாயிகள் பட்டினியால் செத்து வரும்போது இதற்கு எதிராக வலிமை யான எதிர்ப்பியக்கத்தை நம்மால் ஏன் கட்டியமைக்க முடியவில்லை. இடதுசாரித் தலைவர்கள் கூட்டம் போடு கிறார்கள் தீர்மானம் போடுகிறார்கள். ஆனால் மாவோ யிஸ்டுகள் இவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்த இவர்களால் தக்க நடவடிக்கைகள் எடுக்க முடியாது போனது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்வரை நம் செல்வாக்கின் கீழ் இருந்த நிலப்பகுதி மக்களும் நம்மைவிட்டு அவர்கள் செல்வாக்கின் கீழ்ச் சென்றது ஏன்? என்பதை ஆழ்ந்து ஆராய வேண்டும். காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இங்கும் அங்குமாக சில இடங்கள் பெறக்கூடும் என்பதற்ககாக எப்பொழுதுமே சாதியம் பேசும் கட்சி களுடன் நாம் கூட்டு சேரக்கூடாது, நமது தனித்தன்மை பாதிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல் அக்கட்சிகளின் திட்டங்களும் இடதுசாரிக் கட்சியின் திட்டங்களும் தனித்தனி, வெவ்வேறானவை என்று உணரப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே இடதுசாரிக் கட்சிகள் தம் திட்டங்களில் நாட்டின் உட்பொருளாதார வளர்ச்சியை இலக்கை அடைய முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று எழுதியுள்ளேன். இது மக்களுடைய ஏழ்மையை நீக்குவதற்கு முக்கிய தேவை என்பதனை இடதுசாரிக் கட்சிகள் உணர வேண்டும். இவ்வளர்ச்சியின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களைத் திரட்டி நம் செல்வாக்கு இல்லாத நிலப்பகுதியையும் சென்றடையும் முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது சாதியம் பேசும் நபர்களையும் கட்சிகளையும் முற்றாக நிராகரிக்க வேண்டும். வெற்றிக்கான பல பரிந்துரைகளை அவர்கள் தரலாம், உதவி செய்யலாம். ஆனால் மயங்கிவிடக் கூடாது.

நான் மேலே சொன்ன பரிந்துரைக்கு நடைமுறைப் படுத்துவதற்காக மாறுபட்டு எல்லாக் கட்சிகளும் சாதியக் கட்சிகள் என்று முத்திரை குத்திவிட வேண்டும் என்று நான் சொல்வதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது. பல்வேறு பிராந்தியக் கட்சிகள் சில மக்கள் பகுதிகளில் கோரிக் கைகளை முன்வைத்துப் போராடுகின்றன. சில தனிநாடு கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றன என்றாலும் பொதுவாக அவற்றின் நடைமுறையைப் பார்க்கும்போது எல்லாக் காலத்திலும் இதற்கான போராட்டங்களில் மட்டுமே அவை ஈடுபடுபவையல்ல. வேறுபல கோரிக்கை களுக்காகவும் போராடுகிறார்கள். அவற்றை நாம் திருத்தவும் முடியும். ஜார்கண்ட் போராட்டத்தைப் பற்றி ஆராயும்போது இது புலனாகும். இவ்வுண்மை தெளிவாகத் தெரியும்.

ஒரு மாவட்டம் அல்லது மாவட்ட அளவுக்கு விரிந்து பரந்த இனக்குழு வாழும் பகுதியில் இந்திய அரசியல் சட்டம் ஆறாவது பிரிவின் கீழ்க் கொண்டு வரப்பட வேண்டும். கொள்ளை கொள்ளையாகக் கடன் வழங்கி ஏதுமறியாத ஏழை எளிய இனக்குழு மக்களை அடிமைகளாக்கும் அநீதியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற மாவட்ட உரிமைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது சுரண்டும் வர்க்கங்களுக்கு ஒரு தடையாகவிருந்து அவர்களைக் காப்பாற்றப் பேருதவியாக இருக்கும். ஆங்காங்கு வாழும் இனக்குழு மக்களின் உரிமைகள் யாவை எனக் கண்டறிந்து அவற்றை இழந்து வாடும் மக்களுக்குக் கிடைக்க இது உறுதி செய்யும்.

சாதிப் பிரச்சினை மிக ஆழமானது - தீவிரமானது. ஒரு சாதி தன் நலனைப் பாதுகாப்பதற்காகப் பிற சாதி களைவிட முக்கியத்துவம் பெறச் சட்டப் பேரவையிலும் பாராளுமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் (இடம்) பெறப் பல்வேறு வழிகளை மேற்கொள்ளும். அவரவர் கட்சியிலிருந்து தலைவர்கள் புதிதாகத் தோன்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பலாம். ஆனால் இடதுசாரிகள் அவர்களுடைய நியாயமான பொருளாதார உரிமை களைப் பெற்றுத்தர முன்வந்தால் சாதிய நோக்கு குறுகி விடும். இதற்குமுன் நாம் மண்டல் குழு பரிந்துரைகளை ஆதரித்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு பற்றி கர்பூரி தாக்கூர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும். அதனால் நாம் நம் நிலத்தையே இழந்து போனோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சாதிக் கட்சித் தலைவர்கள் கிளர்ச்சி செய்ததனால் நாம் வலிமை இழந்து போனோம். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

நாம் பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. தம் திட்டத்திலும் செயல்முறையிலும் இடதுசாரிகள் மாற்றங்களும் திருத்தங்களும் செய்து இந்திய நாட்டில் மாற்று அணியாக எழுச்சி பெற உண்மையான அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும்.

நன்றி : மெயின்ஸ்ட்ரீம்

Pin It