தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்த போது - 'இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதி' என்று ராமகோபாலன், இல. கணேசன்கள் அறிக்கை விட்டார்கள். இப்போது குட்டு உடைந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்தது ரவி பாண்டியன் என்ற இந்து முண்ணனிக்காரர். காவல்துறை, ரவி பாண்டியனையும், அவருக்கு உடந்தையாக இருந்த கே.டி.சி.குமார், நாராயணன் சர்மா, வேல்முருகன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்துள்ளது. 'இந்துக்களை உசுப்பிவிடவே இப்படிச் செய்தேன்' என்று கூறியிருக்கிறார், கைது செய்யப்பட்டுள்ள ரவி பாண்டியன்.
இதேபோல் 2002 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை எனும் கிராமத்தில் 2002, பிப்.14 அன்று இரவு சவுடேசுவரி அம்மன் கோயில் கதவிலும், அரச மரத்தடி மற்றும் பேருந்து நிறுத்த விநாயகன் சிலைகளுக்கும் செருப்பு மாலைகள் போடப்பட்டன. ஊர்க்காவல் தெய்வம் என்று நம்பப்படும் முனியப்பன் சிலையும் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் காரணம் என்று இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் புவனேசுவரன், நல்லசாமி சுப்பிரமணி ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து, காவல்துறையிடமும் புகார் தந்தனர்.
காவல்துறை - கழகத்தைச் சார்ந்த பழனிச்சாமி, அண்ணாத்துரை, சந்திரன், தன்ராசு, ரவி, கனகராசு ஆகிய தோழர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. இது திட்டமிட்ட சதி என்று கழகப் பொறுப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினர். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியானது.
இந்து முன்னணியைச் சார்ந்த செல்வகுமார், மஞ்சு நாதன் என்ற இருவரும் தான் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் என்பது, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பழி போடவே இது அரங்கேற்றப்பட்டது என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களும், குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அன்று 'சதுமுகை'; இன்று 'தென்காசி'.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பது பா.ஜ.க., இந்து முன்னணி கும்பல்கள் தான். இவர்களே, நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்குகிறது என்று கூச்சல் போடுகிறார்கள். தப்பி ஓடும் திருடன் - திருடன், திருடன் என்று கூறிக் கொண்டே ஓடும் கதை தான்.
"முகம் தெரியா உறவுகளுக்கு நன்றி" கனடா தமிழர்களின் உணர்ச்சி
கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் சி.டி.ஆர். வானொலியின் "வணக்கம் டொரண்டோ" நிகழ்ச்சியில் கடந்த 6 ஆம் நாளன்று புதுடில்லிப் போராட்டம் தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் நேர்காணல் ஒலிபரப்பானது. அதனைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கும் மேலாக பல நேயர்கள் தங்களது கருத்துகளை அந்த வானொலியூடாக பகிர்ந்து கொண்டனர். அவற்றின் தொகுப்பு:
தவராசா: பெரியார் தி.க.வினது போராட்டத்தில் சிறு குழந்தைகள் கூட தலையிலே காயக் கட்டுகளைப் போட்டுக் கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியதுபோல் கனடாவில் நாங்களும் செயல்பட்டிருந்தால் இந்த அரசாங்கத்தினது கவனத்தையும் ஈர்த்திருப்போம்.
கிருட்டிணன்: இந்தியாவில் இப்படியாக நடத்தியிருப்பது எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பகுதியில் பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதால் இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழக முதல்வர் பயப்பட வேண்டியதில்லை. எங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என்ற எண்ணம் தமிழக முதல்வரிடத்திலே இருக்கும். அந்த உணர்வை பெரியார் தி.க.வினரின் போராட்டம் திறந்து விட்டிருக்கும்.
தங்களது சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்துகொண்டு தமிழ்நாட்டிலிருந்தும் கருநாடகத்திலிருந்தும், மும்பையிலிருந்தும் பரவலாகச் சென்றிருக்கின்றனர். புதுடில்லியிலும்கூட மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரை சந்திக்க முயற்சித்துள்ள அந்த முகம் தெரியாத உறவுகளுக்கு எங்கள் நன்றிகள். எண்ணிக்கை 500 ஆக இருந்தாலும் காத்திரமான செய்தியை இந்தப் போராட்டம் சொல்லியிருக்கிறது.
வரதன்: மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரியார் தி.க.வினர் அரசியல் கட்சி நடத்தவில்லை. புதுடில்லியில் அவர்கள் செய்ததைப் போல் கனடாவில் நாங்களும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சாரங்கன் : புதுடில்லியில் பெரியார் தி.க. வினர் செய்தது நல்ல விசயம். நாடாளுமன்றம் நடக்கும்போது செய்திருந்தால் இன்னும் காத்திரமாக இருந்திருக்கும். தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை இப்போது முன் வைக்காமல் சீறிலங்காவுக்கு உதவக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பது மிகச் சரியான அணுகுமுறை.
கங்காதரன் : பெரியார் தி.க.வினரைப் போல் ஒவ்வொரு தமிழரும் காரியங்களைச் செய்ய வேண்டும்.
நித்தி: புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது நல்ல செயல்பாடு. ஆனால் பார்ப்பன ஊடகங்கள் இத்தகையப் போராட்டத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்துவிடும்.
சேவியர் : பெரியார் தி.க.வினரைப்போல் 3 இலட்சம் பேர் வசிக்கும் கனடாவில் ஒரு 300 தமிழர்கள் ஒன்று திரண்டு ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது.