சென்ற 2016இல் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்குப் பிறகு தமிழ் இந்துவில் சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு இதுதான், “இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால் வஹ்ஹாபிசத்திற்கு என்ன பெயர்?” இந்தக் கட்டுரை முஸ்லிம், முற்போக்கு, இந்துத்துவ வட்டா ரங்கள் அனைத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப் பியது. அதாவது மதச்சார்பற்ற, இடதுசாரி முகாம் கள் இந்துத்துவம் என்ற இந்து அடிப்படைவாதத் திற்கு இணையாக வஹ்ஹாபிசம் என்ற முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் எதிர்க்க வேண்டும். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்கள் தான். அதனால் முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வோர் இந்துத்துவத்தை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்காமல் இஸ்லாமிய அடிப் படைவாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்பது தான் அந்தக் கட்டுரையின் சாரம்.

மேம்போக்காக பார்ப்பதற்கு இது சரியான பார்வையாகத் தோன்றலாம். இத்தகைய பார்வை தான் இப்போது வெகுவாக பரவிக்கொண்டும் வருகிறது. சமூக ஊடகங்களில் இயங்கும் முற்போக் காளர்கள் பலர் இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதை நாம் பரவலாக காண்கிறோம். இந்தப் பார்வை எந்தளவு சரி? முஸ்லிம் அமைப்புகள் எல்லாமே அடிப்படைவாத அமைப்புகள், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் எல்லாமே வகுப்புவாத அமைப்புகள், முஸ்லிம் வகுப்புவாத அமைப்புகள் எல்லாமே இந்துத் துவத்துக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் என்ற ஒரு பொதுப்புத்தி இன்று சர்வ சாதாரணமாக ஏற்பை பெற்றுள்ளது. சில முற்போக்காளர்கள் தங்களது அரசியல் சரித்தன்மையை நிரூபித்துக் கொள்ளும் அவசரத்தில் இத்தகைய நிலையை எடுக்கிறார்கள். மிதவாத முஸ்லிம்கள் ((Moderate Muslims) என்று அறியப்படுவோரில் சிலரும் தாம் சார்ந்த சமூகத்தின் பக்கச் சார்பு இல்லாமல் நியாயமாக பேசக்கூடியவர்கள் என்ற அடை யாளத்தை பேணிக்கொள்ளும் வகையில் இவ்வாறு செயல்படுகிறார்கள்.

முதலில் இந்துத்துவத்தை அடிப்படைவாதம் என அழைப்பது சரியா என்று பார்ப்போம். தொண் ணூறுகளில் தமிழ்நாட்டிலிருந்து உருவான ஒரே ‘தேசிய இயக்குனரான’ மணிரத்னம் இந்தப் பேசு பொருள் குறித்து ‘பம்பாய்’ என்ற ஒரு படம் எடுத்தார். அது பேசிய அடிப்படையானவாதம் இதுதான். இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு பெரும் ஆபத்து இந்து மற்றும் முஸ்லிம் மதவாதி களால்தான் என்பதுதான் அந்தப் படம் பேசிய சாராம்சமான கருத்து. அந்தப் படம் பல தரப் பினரின் பாராட்டைப் பெற்ற படம். தமிழ் நாட்டில் கூட ஒரு பாராளுமன்ற கம்யூனிஸ்டு கட்சி ஒன்றின் கலை, இலக்கிய பிரிவின் விருதைப் பெற்றது.

முதலில் இத்தகைய கருத்து இந்துத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஏற்கெனவே ஒடுக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை இந்துத்துவத்துக்கு ஒத்த மதவாதமாக ஒப்பிட்டு இன்னொரு வகையில் முஸ்லிம் ஒடுக்குமுறைக்கு வலுவூட்டுவதாகவும் அமைகிறது. இந்துத்துவம் போதிக்கும் இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படை யானது என்றால் இது கொஞ்சம் நுண்மையாகச் செயல்படும் இஸ்லாமிய வெறுப்பு (Islamo phobia) ஆகும். தலித் அடையாள அரசியல் செய்யும் அமைப்புகளையும் கட்சிகளையும் ஆதிக்க சாதி, உயர்சாதி அரசியலோடு சமப்படுத்தி அவற்றை சாதியக் கட்சிகள் என்று அழைப்பது எவ்வளவு ஆபத்தான அரசியலோ அவ்வளவு ஆபத்தானது இத்தகைய பார்வை. இதன்மூலம் முஸ்லிம்கள் மேலும் தனிமைப்படுவதும் இந்து மதவாதத்தை வளர அனுமதிப்பதும் தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

இந்துத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு அதை வளரவிட அனுமதிப்பது என்றால் என்ன? இந்தியாவில் இந்துத்துவத்தை வேறு எந்த மதத் தைச் சேர்ந்த மதவெறியுடனும் ஒப்பிட்டு இந்து அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய் பவர்களை வெறும் ‘வகுப்புவாதிகளாக’ச் சித்த ரிப்பது. அதிகபட்சமாக ‘இந்துமதவெறியும் மற்ற மதவெறி போல்தான் என்றாலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து மதவெறியால் அதிக பாதிப்பு இருக்கிறது’ என்று சொல்வார்கள். இது குறித்து ஆந்திர மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் தோழர் பாலகோபால் இவ்வாறு கூறுவார். “ஆர்எஸ்எஸ் வெகுஜன அமைப்புகள் இயங்குவது தமது வர்க்க சமரச சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்வதற்கல்ல. தாம் விரும்புகிற ‘தேசிய ஐக்கிய’த்திற்கு பிரதான எதிரிகளாக கருதப்படுகிற முஸ்லிம்களை, கம்யூ னிஸ்டுகளை அடக்குவதற்கே. ஆர்எஸ்எஸ் வெறும் மதவாத நிறுவனம் என திரித்தல்வாதிகள் பிரச்சாரம் செய்வதால் அதன் முஸ்லிம் எதிர்ப்பு பிரபலமடைந்தது. அது முன்வைப்பது நிலப் பிரபுத்துவ இந்துத்துவம் அல்ல, ஃபாசிஸ்டு இந்து தேசியம் என அங்கீகரித்தால், அது பிற மதத்தவர் களான முஸ்லிம்களுக்கு எந்தளவு எதிரியோ, சர்வதேசியவாதிகள், அதைவிட முக்கியமாக வர்க்க போராட்ட சித்தாந்தத்தை ஏற்ற கம்யூனிஸ்டு களுக்கும் அதே அளவு எதிரியென புரிந்துவிடும்” என்கிறார். இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தி னால் நிதியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு ஆட்சியில் அமரவைக்கப்பட்ட இந்துத்துவம் வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரியாக இருக்க முடியுமா? மாறாக அது தொழிலாளிகள், விவசாயிகள், சிறு, குறு வணிகர்கள், பழங்குடிகள், தேசிய இனங்கள் என எல்லாவற்றுக்கும் எதிராகத் தானே இருக்க முடியும். பிறகு அதை எப்படி வெறும் மத அடிப்படைவாதம் என சுருக்க முடியும். மாறாக அதை இந்து ஃபாசிஸம் என அழைப்பதே தகும்.

இந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறு பாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு? அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே! ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத் தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக் கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏபிவிபியையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்ஐஓவையும் (ஷிமிளி) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்எஃப்ஐ போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் ஷிமிளி போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாக செயல்படுவது கல்வி வளாகங் களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்பு களோடு இணைந்து செயல்படுவதற்கான முன் நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்பு களை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப் பாட்டை எடுக்கிறார்கள்.

ஆனால் இதற்கு மாறாக தெலங்கானாவில் சிபிஎம் அண்மையில் அமைத்துள்ள Bahujan Left Front இல் Majlis Bachao Tehreek என்ற முஸ்லீம் அமைப்பு உறுப்பு அமைப்பாக இருக்கிறது. இப்புதிய போக்கின் வளர்ச்சி கட்டம் எவ்வாறு போகிறது என்பதை இனி காணவேண்டும்.

வேறு எந்த சமூகத்தையும் விட முஸ்லிம் சமூகம் தான் இந்தியாவின் மதச்சார்பின்மையை தனது மத, கலாச்சார, அரசியல் மற்றும் பௌதீக இருப் புக்கே அவசியமாகக் கருதுகிறது. முஸ்லிம் அடையாள அரசியல் பாஜகவுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் உரிமைகளை வலியுறுத்தியும் மட்டுமே இந்தியாவில் அரசியல் செய்ய முடியும். அத்தகைய மக்கட்பிரிவினரின் அரசியலை, அதை முன்னெடுக்கும் சில தலைவர்கள் பேசும் மதமொழியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மதவாத ஃபாசிஸத்துடன் சமப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதையெல்லாம் அங்கீகரித்த பிறகே முஸ்லிம் அடையாள அரசியலில் உள்ள குறைபாடுகளை பேச முடியும்.

Pin It