‘இலங்கையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு (தான்) தமிழர்கள் குடியேறினார்கள்’ என்று மய்ய அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், குன்றக்குடி மகளிர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசியதாக ‘நக்கீரன்’ இதழில் (ஜூன், 16-18, 2010)குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஈழத்தின் (இலங்கை) தொல்குடியினர் வேறு வேறு பெயர்களில் வழங்கப்பட்ட தமிழர்கள்தான்; சிங்களர்கள்தான் அங்கு சென்று குடியேறியவர்கள் என்பதே உண்மையான வரலாறு. ‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள்’ என்று கூறுவதன் மூலம், ஈழத் தமிழர்களின் தொன்மையை மறைக்க ப.சி. தன் பங்குக்கு முயற்சிக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.
 
தமிழர்களின் தொன்மை வரலாற்றின்படி, ஆப்பிரிக்காவின் தென்முனையிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான மிக நீண்ட நிலப்பரப்பு எங்கும் கடலால் பிரிக்கப்படாமல் இருந்தது. இதுவே,பழைய குமரிக்கண்டம் என்றும் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட இயற்கையின் மாற்றங்கள் மற்றும் சீற்றங்களால், மிக நீண்ட, ஆனால் ஒரே நிலப்பரப்பாக வசித்தத் தொன்மைத் தமிழர்களின் இடையில் கடல் புகுந்து பிரித்தது.
 
அதாவது, இன்றைய வட இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான நிலப்பரப்பு தாழ்ந்து கடல்புகுந்து, தனித்தனி நிலப்பரப்புகளாக மாறின. இவ்வாறு பிளவுபட்டதால், தமிழர்கள் தீவுக்குள் இருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, இப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் முன்னோர்கள், தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர் களின் முன்னோர்களைப் போலவே சமகால அளவு தொன்மை வாய்ந்தவர்கள். ப.சி. கூறுவதைப்போல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் அல்ல.
 
‘ஈழத் தமிழர்கள்’ என்று பிற்பாடு அழைக்கப்பட்ட இத்தமிழர்கள், இன்று இலங்கை என்றழைக்கப்படுகின்ற தீவின் பூர்வகுடிகள் ஆவர். ‘குடியேறிய தமிழர்கள்’ என்பவர்கள் இவர்களில் இருந்து வேறுபட்ட இரண்டு வகைப்பட்டவர்கள். பிரிட்டிஷ் அரசு இந்தியா,இலங்கை என்ற இரண்டையும் ஆண்டுவந்த காலத்தில்,இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டனர். அப்போது, மதுரைக்குத் தெற்குப் பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டது. அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மிகக் குறைந்த கூலிக்கு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள், இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள். இது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி நிகழ்வுகளாகும்.
 
மற்றொரு வகையினர் தமிழ்நாட்டிலிருந்து வணிகத்திற்காக கொழும்புக்குச் சென்ற நாட்டுக்கோட்டை செட்டியார்களும்,திருநெல்வேலி சைவப் பிள்ளை களும் . இவர்கள் கொழும்புத் தமிழர்கள். சில நூறு ஆண்டுகளுக்குள் அங்குச் சென்று குடியேறிய கொழும்புத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரை மனதில் வைத்து ஈழத் தமிழர்களை யும், குடியேறியவர்கள் என்று கூறுவது உள்றை அமைசச்ரின் அறியாமையையே காட்டுகிறது.
 
இன்னும் மிகச் சரியாகக் கூறுவதென்றால், சிங்களர்கள் என்பவர்களும் அங்குச் சென்று குடியேறியவர்கள்தான். ஒரிசா (அன்றைய கலிங்கம்), மேற்கு வங்கம், பீகார் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது வங்கநாடு என்று முன்னர் அழைக்கப்பட்டது. சுமார்2500 ஆண்டுகளுக்கு முன் அதன் ஒரு பகுதியை ஆண்ட மன்னனின் மகன் (இளவரசன்) விஜயன். மிகவும் ஒழுங்கீனமான நடத்தையையுடைய விஜயன், அப் பகுதி மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தான். மக்களின் எதிர்ப்பை சமாளிக் கும் பொருட்டு மன்னன் தனது மகனை 750 பேருடன் ஒரு பெரிய படகில் ஏற்றி அனுப்பி வைத்தான். அப்படகு சுக்கான், பாய்மரம் இல்லாதது. எனவே, காற்றின் திசை நோக்கிச் சென்று இலங்கையின் வடபகுதியை அடைந்தது. அப்போது, அங்கே தொன்மைத் தமிழர்கள் வேறு பெயரில் வாழ்ந்தனர். அவர்கள்தான் விஜயன் குழுவை வரவேற்றனர். சிங்களர்களின் வரலாற்று நூலாகக் கருதப்படுகின்ற மகாவம்சத்தில் இந்நிகழ்வு உள்ளது. அதுமட்டுமன்று, இந்நிகழ்வை உறுதி செய் வது போல், 1982 இல்இலங்கை அரசு வெளியிட்ட தபால் தலையிலும், விஜயனை தமிழ்ப் பெண்ணான குய்வெணி வரவேற்பதுபோல் இடம் பெற்றது.  எனவே, சிங்களர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் (வணிகர்கள்) ஆகிய மூவரும்தான் குடியேறியவர்கள். இன்றைய ஈழத் தமிழர்கள் என்பவர்களே இலங்கையின் தொல்குடியினர். ‘ப.சி.’க்கள் வரலாறுகளைத் திரிக்க வேண்டாம்!

- ஜஸ்டின் ராஜ்

Pin It