‘இந்துக்கள் பாதிக்கப்படும்போது அதற்காக குரல் கொடுக்க எவருமில்லை’ என்று ராமகோபாலன்களும், இல.கணேசன்களும், ஜெயலலிதாக்களும், அவ்வப்போது கவலைப்படுகிறார்கள். ஆத்திரம் பொங்க ஆவேசமாக அறிக்கைகளை விடுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ‘இந்துக்கள்’ மூடநம்பிக்கைகளில் மூழ்கி, வாழ்க்கையை வீணாக்கிடக் கூடாது என்று, பெரியார் தொண்டர்கள் அவர்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்ப முயன்றால், “இவர்கள், இந்துக்களின் விரோதிகள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்! “தீ மிதிப்பதும், அலகு குத்துவதும் கடவுள் சக்தியல்ல; அதை நம்பி ஏமாற வேண்டாம்” என்றால், எச். ராஜா, “டேய், பெரியார் யாருன்னு எனக்கு தெரியாதாடா?” என்று பேட்டை ரவுடியாக மாறி, பூணூலை உருவுகிறான்!

‘தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் கல்வி உரிமைக்கு யார் எதிரி? வேலை வாய்ப்புகளை வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமைக்கு யார் எதிரி?” என்று நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, “இந்துக்களைப் பற்றி நீ பேசாதே; நீ இந்து விரோதி; பெரியாரின் சீடன்” என்று பாய்ந்து குதறுகிறார்கள்.

“ஏனப்பா, இவ்வளவு ஆத்திரம்? ‘இந்து’ மதத்துக்கு நீதான், அங்கிகாரம் பெற்றவனா? அந்த அதிகாரத்தை உனக்கு யாரப்பா தந்தது?” என்று கேட்டால், “அது பகவான் தந்ததாக்கும்; நாங்கள் பகவானால், ‘பிராமணனாக’ படைக்கப்பட்டு, பூமியில் பிறந்தவர்கள்; சாஸ்திர சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் உரிமைகளையும், கடமைகளையும் பகவான் எங்களுக்கே அருளியிருக்கிறார்.

நாங்கள் பிரம்மத்தை உணர்ந்தவர்கள்; அதனாலே நாங்கள் பிராமணர்கள்; பகவானாலேயே எங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தை எவரும் கேள்விக் கேட்கப்படாது; இந்துக்களைக் காப்பாற்றும் பகவானின் தூதுவர்களாக, நாங்கள் பூமியில் பிறந்து காயத்ரி ஓதி, பூணூல் தரித்து நிற்கிறோம்” என்று நெத்தியடியாக பதில் தருகிறார்கள்.

பார்ப்பனர்கள் இப்படிக் கூறினால், “சூத்திரர்”களின் இந்து முன்னணியும், இந்து மக்கள் கட்சியும், “இந்துக்களுக்கு ஒரு ஆபத்து என்றால், எங்களால் தாங்க முடியாது. இந்துக்களின் விரோதிகளை நடமாடவிட மாட்டோம்; இந்துக்களின் விரோதி பெரியார் சிலைகளை இடித்து தரைமட்டமாக்குவோம்; எங்கே இந்துக்களின் எதிரி? இதோ, ஆயுதங்களோடு கிளம்புகிறோம்?” என்று தொடை தட்டி தோள் தட்டி நிற்கிறார்கள்.

இந்துக்களைக் காப்பாற்ற படை திரட்டி நிற்கும் (சொறி, சிரங்கு படை அல்ல) இந்து முன்னணிகள் ஆகட்டும், ‘பகவானால்’ பூலோகத்துக்கு அனுப்பப்பட்ட ‘பிராமண உத்தமர்கள்’ (சங்கரராமன் கொலை வழக்கு புகழ் காஞ்சி சங்கரன் உட்பட) ஆகட்டும்! இவர்கள் ‘இந்து’க்கள் மீது கொண்டுள்ள ‘அடங்காத பாசம்’ நம்மைப் புல்லரிக்கச் செய்து விடுவதால், நாமும், அவ்வப்போது உணர்ச்சி வயப்பட்டு வாயடைத்துப் போய் நிற்கிறோம்.

இந்துக்களின் விரோதிகளாக நாம் ஏன் குற்றக் கூண்டில் நிற்க வேண்டும்? இந்துக்களின் உண்மையான பகைவர்களை அவர்களிடமே எடுத்துக் கூறிவிட்டால் என்ன? நாமும் “இந்துக்களின் ஆதரவாளர்கள்” என்ற நற்சான்றிதழைப் பெற்று விடலாமே என்று நமக்குத் தோன்றவே (பகவான் கனவில் வந்து கூறாவிட்டாலும்கூட) - இதை எழுத முன் வந்தோம்!

ஆமாம்! இந்துக்களின் “பகைவர்களை” நாமும் கண்டிக்கத் தயாராகி விட்டோம். எம்மோடு, இந்துக்களின் ‘புனித’ காவலர்களும் ‘அடியாள்’ காவலர்களும் சேர்ந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்பதே நமது பேரவா. எதற்காக நமக்குள் வீண் பிரச்சினை; நாம் ஒன்றுபட்டு இந்துப் பகைவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம்; சரி, பகைவர் எங்கே என்று தானே கேட்கிறீர்கள்? இதோ பத்திரிகைகளிலே வந்திருக்கிறது, பாருங்கள்!

“இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற நைனாதேவி துர்கா கோயில் உள்ளது. துர்காதேவியை தரிசிக்க, 25,000 இந்துக்கள், மலை உச்சிக்குப் போனார்கள். மலைப் பகுதியில் நிலச் சரிவு ஏற்பட்டு விட்டது என்றும், பாறாங்கற்கள் உருண்டு விழுவதாகவும், திடீரென வதந்தி பரவிவிட்டது. பக்தர்கள் முண்டியடித்து ஓடி, மலையிலிருந்து உருண்டு 150 பேர் பலியாகிவிட்டனர். 100 பேர் படுகாயமடைந்து விட்டனர்” - இதுதான் செய்தி. (4.8.08)

தன்னை நம்பி வந்த இந்துக்களை இப்படி அக்கிரமமாக உயிர் பலி வாங்கிய துர்காதேவியை சும்மா விடலாமா? எத்தனை இந்து குடும்பங்கள் கண்ணீர் விடுகின்றன. எத்தனை இந்து உயிர்கள் பிணங்களாகிவிட்டன. அய்யோ, இது என்ன கொடுமை! இந்து முன்னணிகளே! சங்பரிவாரங்களே! சுப்ரமணி, ஜெயலலிதா, இல.கணேசன், துக்ளக் சோ வகையறாக்களே! நீங்கள் பூணூலை உருவிக் கொண்டு கடப்பாறையைத் தூக்குங்கள்; நாங்கள் வெறும் முதுகோடு கடப்பாறையைத் தூக்குகிறோம்.

வாருங்கள் சேர்ந்து போய் இப்படி இந்துக்களை நம்ப வைத்து பிணமாக்கும் எல்லா இந்து விரோத கடவுளுக்கும் இதுதான் பாடம் என்பதை புரிய வைப்போம்! நம்பி வந்த இந்து மக்களை பிணமாக்கிய மலைஉச்சிக் கடவுளை இடித்து நொறுக்குவோம்!

இந்துக்களின் நண்பன் என்பதைக் காட்டிக் கொள்ள அரிய வாய்ப்பு; நல் வாய்ப்பு; இந்துக்களின் நம்பிக்கை வாக்குகளைக் குவிக்கும் நல்ல தருணம்; இந்து விரோதியை ஒழித்துக்கட்ட இதோ, அருமையான சந்தர்ப்பம்; நழுவவிடாதீர்!

Pin It