நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகளை கடந்து விட்டோம். காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டம் பல திருத்தங்களை பாராளுமன்றத்தின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் சாசனத்தின் அடிப்படை குறிப்பாக வரையறுத்துக் கூறும் அடிப்படை உரிமைகள் இன்றைக்கு வரை மாறவில்லை. அது மாறுதலுக்குரியது அல்ல என்று விமசிக்கப்படுகிறது.

Jeyandrar நடைமுறையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை கோட்பாடு பின்பற்றப்படுகிறதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாகும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது ஆதிக்க சமுதாயத்தின் அடித்தளமாகும். முடியாட்சி மறைந்து குடியாட்சி முறை உலகம் முழுக்க நடைமுறைக்கு வந்தது சமத்துவத்தை நோக்கிய போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டமாகும். எழுத்தில் உருவாக்கப்பட்டதை நடைமுறையில் கொண்டு வருவது சமத்துவத்தை நிலைநாட்டும் தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும், நீதிமன்றத்தினுள்ளும் உரத்த குரல் எழுப்பப்பட்டாலும், வசதி படைத்தவர்க்கே சட்டம் வளைந்து நிற்பதும், வசதி அற்ற ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

நீதிமன்றத்தின் முன் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் அபராதம் செலுத்தக் கூடிய வசதி இருந்தால் சிறைச்சாலைக்குள் செல்லாமல் உடனே அவன் வெளியே வர முடியும். வசதியற்றவன் அபராதம் கட்ட முடியாமல் சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கிற போது சிறைக்கு வெளியே உள்ளே அவனது குடும்பம் ஆதரவற்று வாழ்வுரிமை மறுக்கப்படுகிற போது “சட்டத்தின் முன் சமம்” என்பது உண்மையில் உள்ளதா என்பது கேள்விக்குறி ஆகும்.

சம உரிமை, சம வாய்ப்பு என்பது அனைவருக்கும் உண்டு. அதிலும் காலங்காலமாக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு என்ற நிலைமைக்கு கைதாக்கிவிடவே இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிற உரிமைகளையும் அரசியல் சாசனம் வழிவகுத்து கொடுத்திருக்கிறது.

இந்தியா போன்ற பல சமயம், கலாச்சாரம், இனம், மொழி என பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தலித்துகள், பழங்குடிமக்கள், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோருடைய முன்னேற்றம் வாழ்வுரிமை என்பது இன்றைக்கும் கேள்விக் குறியாகவே உள்ளது. தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என பறை சாற்றினாலும், மேலவளவு பஞ்சாயத்தில் போட்டியிட்டு வென்ற தலித் முருகேசனும் அவரை சார்ந்த ஆறு பேர்களும் பட்ட பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் முறையான தீர்ப்பை தரவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது எனத் தீர்ப்பளித்தது அமர்வு நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக அரசு மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை இல்லை. பாப்பாரபட்டி, கீரிப்பட்டி, கொட்டாச்சயேந்தம் மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தனித் தொகுதியில் தலித்துகள் நிற்க முடியாத கொடுமை அரசியலமைப்பையே கேலிக்குரியதாக்குகிறது.

நாட்டின் முதல் குடிமகனாக ஒரு தலித் வரமுடியும். ஆனால் சின்னஞ்சிறு கிராமத்தில் தலித் ஒருவர் தனித் தொகுதியில் போட்டியிட முடியவில்லை என்பதை நீதிமன்றம் தட்டிக் கேட்கவில்லை.

மைசூர் தடா வழக்கில் வீரப்பனுக்கு உதவியோர் மற்றும் கூட்டாளிகள் என்ற பெயரில் அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டில் தண்டனையை தானாகவே மரண தண்டனையாக மாற்றியுள்ளது. 42 தலித்துகளை உயிரோடு கொழுத்திய கோபாலகிருஷ்ண நாயுடு இறுதியாக விடுதலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க வசதி படைத்த, ஆதிக்கம் செலுத்துகிற மேல் தட்டு மக்கள் இன்றைக்கும் அவர்கள் செய்த கொடூரமான ஏற்றத்திற்கு கூட கடுமையாக தண்டிக்கப்படாத நிலைதான் தொடர்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே குற்றமுறு சதி இல்லையென தீர்ப்பளித்தது. மறுபக்கம் பொடாவில் கூட்டங்களின் பேசியதற்கும், கட்டுரைகள் எழுதியதற்கும், கருத்து பயிற்சி கூட்டங்களில் நடத்தியதிற்கும் பிணை மறுத்திட்ட நிலையும் உள்ளது.

கோவை 1998 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், அப்துல் நாசர் மதானி குற்றச்சாட்டிற்கு சாட்சியமே இல்லாத போதும் உச்சநீதிமன்றம் பிணை கூட வழங்க மறுக்கிறது. சிறைவாசிக்கும் மனித உரிமை உண்டு என்ற உண்மையை நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை மேற்படி வழக்கில் விசாரணை கைதிகள் 8 ஆண்டுகளாக இடைநிலை பிணைகூட கிடைக்காமல், விசாரணை முடிக்கப்பட்டும் சாட்சியமும் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார்கள். மதானிக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகிறது. 48வது எதிரியாக அப்பாஸ், சிறையில் அடிப்படை வசதியின்மையால் ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு ஆளானான். அவருக்கு பிணை மறுக்கப்படுகிறது. சங்கராச்சாரியாருக்கு 3 முறை சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. சாட்சியமே இல்லாத சர்தார் போன்றோர்க்கும் பிணையில்லை. கலவர வழக்கிலோ சாட்சியம் அளிக்கப்பட்டுள்ள 35 பேர் எட்டாண்டு காலத்திற்கு மேலாகவும் பிணை மறுக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபக்கத்தில் பிணையிலே விட முடியாத போதை மருந்து கடத்தல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பி.ஜே.பியின் மறைந்த தலைவர் மகாஜன் மகன் இராகுல் மகாஜனுக்கு ஒரே வாரத்தில் டெல்லி நீதிமன்றம் பிணை வழங்குகின்றது.

சட்டத்தின் ஆட்சி என்பது பெரும்பான்மை மக்களின் குரலை நிறைவேற்றக்கூடிய ஒன்றாக சிறுபான்மையினரின் கருத்துக்களை மதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க சக்திகளுக்கும், வசதி படைத்தோர்க்கும் நீதிமன்றம் துணை போகும் போது அங்கு ஜனநாயகம் ஒளி மங்கி சிறுபான்மை சர்வாதிகாரம் ஆட்சி செலுத்தும். சமத்துவத்திற்கும் சமநீதிக்கும் அங்கு வேலையில்லை.

சமநீதி சம உரிமைக்காகப் போராடும் மக்கள் மன்றத்தின் முன் இந்த உண்மையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டியதும், சமநீதி போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டியது மனித உரிமை போராளிகளின் கடமையாகும்.

(கட்டுரையாளர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியின் வழக்குரைஞர்)
Pin It