கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மோடி - அதானி ஆட்டத்திற்கு முடிவு நெருங்குகிறது!

 சூரிய சக்தி மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. லஞ்சம் கொடுத்தது இந்தியாவில், ஆனால் வழக்கு போடப்பட்டது அமெரிக்காவில் எதற்காக என்று பலருக்கும் சந்தேகம். அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டு பணத்தைதான் அதானி லஞ்சமாகக் கொடுத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. சூரிய மின் திட்டம் பற்றித் தவறான தகவல்கள் தந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானியும் அவரது கூட்டாளிகளும், 20 ஆண்டுகளில் 200 கோடி டாலர் (ரூ.16,888 கோடி ரூபாய்) மதிப்புள்ள சோலார் ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்(சுமார் ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்தனர் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதானி மீது வெளிநாட்டு லஞ்சம், முதலீட்டு மோசடி, பணப்பரிமாற்ற மோசடி சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்க சட்டப்படி, அமெரிக்காவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்தாலும் வழக்கு தொடர அனுமதிக்கிறது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் வழக்குத் தொடரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் தந்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை, அதானி ஏமாற்றியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மவுனம் காக்கும் மோடி!

அதானி மீது அமெரிக்காவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்ததற்கு 5 ஆண்டுகள், முதலீட்டுப் பத்திர மோசடி, பணப்பரிமாற்ற முறைகேடு, சதித்திட்டம் தீட்டுதல் போன்ற குற்றத்துக்காக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஒருவேளை அதானி அமெரிக்காவில் இருந்திருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார்.  ஆனால் அவர் இந்தியாவில் இருப்பதால் இன்னும் கைது நடக்கவில்லை. ஆனால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவருடைய உற்ற நண்பரான மோடியின் ஆட்சியில் அது நடக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியபோது, அதானி பிம்பத்தின் மீது விழுந்த கீறல்களைச் சரிசெய்யத்தான் மோடி அரசு முயன்றதே தவிர, முறைகேட்டை விசாரிக்க முற்படவில்லை.

அதானியின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொகுவா மொய்த்ரா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு தனியொரு அதானியை குறிவைப்பது அல்ல, இந்தியப் பொருளாதாரத்தைச்   சீர்குலைப்பது என்றெல்லாம் பாஜகவினர் முட்டுக்கொடுத்தனர். அதானியின் முந்த்ரா துறைமுகத்தின் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அவ்வப்போது வரும் செய்திகளும் இதுவரை பொருட்படுத்தப்படவில்லை. அதானி துறைமுகம், அதானி ரயில்வே, அதானி விமான நிலையங்கள் என அதானி வளம் கொழிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்தான் மோடி அரசு முனைப்புக் காட்டியது.

திசைதிருப்பும் சங்கிகள்!

அந்த வகையில் தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்களிலும் அதானியைக் காப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது மோடி ஆட்சி. இன்னும் ஒருபடி மேலே போய், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான் அதானியிடம் சோலார் மின்சாரம் வாங்குகின்றன. அப்படியானால் அவர்கள்தான் லஞ்சம் வாங்குகிறார்கள்” என்று குற்றச்சாட்டையே திசை திருப்பியுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் பெயரும் அடிபடுகிறது. அதானி மீதான முறைகேட்டை விட்டுவிட்டு, அதானி - மோடியின் கூட்டு மோசடிகளை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, அதானிக்கும் தி.மு.க. அரசுக்கும் தொடர்பு உள்ளது என பா.ம.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் கடந்த 3 ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சாரம் தொடர்பாக நேரடி ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும், தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசின் விதிமுறை. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காத பட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு உருவாக்குகிறது.  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தா விட்டால் கட்டாயக் கல்வி சட்டத்திற்கு நிதி தர மாட்டோம் என்பதைப் போன்ற அழுத்தங்கள் இதற்குள் ஒளிந்திருகின்றன.

இதனடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலம்தான் தமிழ்நாடு அரசு சோலார் மின் சக்தி கொள்முதலும் செய்கிறது. ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் எனத் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதானியுடன் நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின் வாரியங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று, மின்சாரத்தை விற்கும் இடைத்தரகராக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே  சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை விசாரணைக்கு உட்படுத்தாமல், மாநில மின் வாரியங்களை நேரடியாகக் குற்றம்சாட்டுவது அப்பட்டமான திசைதிருப்பல்.

நெருக்கடியில் அதானி!

முன்பு எழுந்த ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு என்பது தனியார் நிறுவனத்தின் தரப்பால் வைக்கப்பட்டது. அதனால் விசாரணை வளையத்திற்குள் சிக்காமலேயே அதானி தப்பிவிட்டார். ஆனால் இப்போது புகார் எழுந்திருப்பது அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று நிறுவனத்திடம் இருந்து என்பதால், விசாரணை வளையத்தில் இருந்து அதானி தப்புவது எளிதல்ல. அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்நாட்டு பங்குச் சந்தை ஒழுங்காற்று நிறுவனமும், நீதிமன்றங்களும் மிகக் கடுமையான புகாராகவே எடுத்துக்கொள்ளும். வழக்கு விசாரணை நெறிமுறைகளும் கடுமையானதாகவே இருக்கும். தீர்ப்பும் ஓரிரு ஆண்டுக்குள் வந்துவிடும். அதனால் அதானி குழுமத்தில் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள்.

இலஞ்சப் புகாரில் அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததில் இருந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்கள் 2.78 லட்சம் கோடி ரூபாயை இழந்தன. குறிப்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மட்டும் 81,868 கோடி ரூபாய் சரிவைக் கண்டிருக்கிறது. அதானி குழுமத்துடனான மின்சார ஒப்பந்தத்தை ஆந்திரப் பிரதேச அரசு ரத்து செய்துள்ளது. உள்கட்டமைப்பு சார்ந்து அதானி குழுமத்துடன் கென்ய அரசு மேற்கொண்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ ரத்து செய்துள்ளார். இலங்கை துறைமுகத் திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு கடன் வழங்கும் முடிவில் இருந்து அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் பின் வாங்கியுள்ளது.

பிரெஞ்சு நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜீஸ் மேற்கொண்டு அதானி குழுமத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்ள மாட்டோம் என அறிவித்துவிட்டது. இந்நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜியில் 20 விழுக்காடு பங்கையும், அதானி டோட்டல் கேஸில் 37 விழுக்காடு பங்கையும் கொண்டுள்ளது. வங்கதேசம் மற்றும் ஜப்பான் நிறுவனங்களும் அதானி குழுமத்துடனான முதலீடுகளை, உறவை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளன. சர்வதேச அளவில் நம்பகத்தன்மை அற்ற, மோசடி நிறுவனமாக முகத்திரை கிழிந்து நிற்கிறது அதானி குழுமம். மோடியே நினைத்தாலும், முயன்றாலும் இனி மோசடிப்பிம்பத்தை மறைப்பதோ, காப்பதோ இயலாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அதானி!

அதானி மீதான தனிப்பட்ட ஊழல்களை விசாரிப்பதுடன் நிறுத்தாமல், பாஜகவுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு, பாஜக அரசால் அதானி அடைந்திருக்கும் ஆதாயங்கள், அதானியால் பாஜக என்ற கட்சி அடைந்திருக்கும் ஆதாயங்கள் என்பதையும் சேர்த்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மூலம் மோடி - அதானி கூட்டு மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

ர.பிரகாசு