ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  22 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் மூன்று தமிழர்கள் பிரச்சினையில் தூக்குத் தண்டனை விதித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் இப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார். ஏற்கனவே தூக்குத் தண்டனையே வேண்டாம் என்ற கருத்தை அவர் வலி யுறுத்தியிருக்கிறார். இப்போது இந்த 3 தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனை வழங்கி, தாம் அளித்த தீர்ப்பையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெளிப் படையாகவே அறிவித்திருக்கிறார்.

கோட்டயத்தில் ‘இந்து’ நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டி, 25.2.2013 தேதியில் அந்த ஏட்டின் முதல் பக்கத்தில்  வெளியிடப்பட்டிருக்கிறது. அவர் இரண்டு முக்கிய கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

1)             இந்த மூவரும் 22 ஆண்டுகளாக சிறையில் உள் ளார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டிருக்குமானால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 433 (ஏ) பிரிவின் கீழ் 14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு தண்டனைக் குறைப்பு கோரியோ, தண்டனை களை தளர்த்தக் கோரியோ சலுகைகளைப் பெற் றிருக்க முடியும். ஆனால், 22 ஆண்டு சிறையில் இருந்துவிட்டனர். இதுவே ஒரு தண்டனை. இதற்குப் பிறகு அவர்களை தூக்கிலிடுவது, “இரட்டிப்பு தண்டனை” வழங்குவதே ஆகும். ஒரு குற்றத் துக்காக இரண்டு தண்டனைகளை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. அடிப்படை உரிமைகளில் ஒன்றான சட்டப்பிரிவு 21க்கு இது எதிரானது.

2)             2010 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு (நீதிபதி எஸ்.டி.சின்கா வழங்கியது), குற்றம் சாட்டப் பட்டவர்களின் நடத்தை, சுபாவம், சமூகப் பின்னணி போன்றவற்றையும் கவனத்தில் கொண்டே தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், இந்தத் தூக்குத் தண்டனையை வழங்கிய போது, “குற்றவாளிகளின்” நடத்தைகள், பண்புகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இதனால் தீர்ப்பில் ‘ஓட்டை’ விழுந்து (This was a flaw in the judgement).

3)             நீதிபதியாக நான் பதவியேற்றபோது எனது சொந்த விருப்பு வெறுப்புகள், நீதி வழங்கும் கடமையில் செல்வாக்கு செலுத்தக் கூடாது என்று நான் உறுதி ஏற்றேன். அந்த கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே நின்று மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இப்போது குற்றம்சாட்டப்பட்டவர் களின் பின்னணியை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பு அடிப்படையில் நான் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து. ஏற்கனவே நளினி தொடர்பாக நான் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கிலும், இந்தத் தீர்ப்பில் மறுபரிசீலனை தேவை என்ற கருத்தை நான் பதிவு செய்திருக்கிறேன் என்று நீதிபதி கே.டி.தாமஸ் கூறியுள்ளார்.

1999 மே 11 ஆம் தேதி நீதிபதிகள் தாமஸ், சயீத்ஷா, முகம்மது குவாத்ரி, டி.பி.வாத்வா ஆகிய மூவரடங்கிய அமர்வு மூவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. அப்போது நீதிபதி தாமஸ் மட்டும் தனியாக நளினிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று தீர்ப்பில் கூறி யிருந்தார். நளினிக்கு ராஜீவ் கொலை சதித் திட்டம் குறித்து முன் கூட்டியே தெரிந்திருக்கவில்லை. அத்துடன் தம்பதியர்களான நளினி-முருகன் இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கிவிட்டால், அவர்களின் குழந்தை அனாதையாகிவிடும் என்ற காரணங்களுக்காக நளினிக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.  அதனைத் தொடர்ந்து தி.மு.க. அமைச்சரவை, தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நளினிக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைத்து, மற்ற மூவரையும் தூக்கிலிடலாம் என்று முடிவு செய்தது.

தூக்குத் தண்டனையை ஏற்கவில்லை என்பதை கொள்கையாகக் கூறி வரும் தி.மு.க. ஆட்சி, அதே கொள்கை அடிப்படையில் இந்த 3 தமிழர்களுக்கும் அப்போதே ஆயுள் தண்டனையாக குறைத்திருக்க முடியும். ஆனால் குறைக்கவில்லை. மூவர் கருணை மனுக்களையும் நிராகரிக்க அமைச்சரவை முடிவு செய்தது. இப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், புலன் விசாரணை நடத்திய அதிகாரி கார்த்திகேயன் ஆகியோரே மூவர் தூக்குத் தண்டனைக்கும் எதிராக கருத்துக்களைக் கூறி விட்டனர்.

தூக்குத் தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்தே நீக்கப்பட வேண்டும்!

Pin It