ஜாதி வெறியைத் தூண்டிவிடும் தலைவர்கள் மீது நடவடிக்கை

இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை

சேலத்தில் கூடிய கழக செயற்குழு வற்புறுத்தல்


திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் 18.11.2012 காலை 11.30 மணி அளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த செயற்குழுவில் 60 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு, சாதி ஒழிப்பு உறுதி மொழிகளை இணையதளப் பிரிவு மாநில செயலாளர் அன்பு தனசேகரன் கூற தோழர்கள் வழி மொழிந்தனர். மாநில கழகப் பொருளாளர் இரத்தினசாமி மாநாட்டு ஏற்பாடுகள் அதற்கான செலவினங்களை விளக்கமாக எடுத்துரைத்தார். பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் வரவேற்று, செயற்குழுவின் நோக்கங்களை கூறினார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சாதி ஒழிப்புப் பிரச்சினையில் திராவிடர் விடுதலைக் கழகம் சரியான இலக்கு நோக்கிய செயல் திட்டங்களை முன்னெடுப்பதை சுட்டிக் காட்டினார். சாதி அமைப்புக்கும் சாதிவெறி சக்திகளுக்கும் எதிராகவும் திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுக்கும் செயல் திட்டம் வேகமாக முன்னேறக் கூடிய புறச் சூழல்கள் உருவாகியுள்ள நிலையில் கழக மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதை பொதுச் செயலாளர் விளக்கினார். லண்டனில் பிரித்தானிய தமிழ்ப் பேரவை நடத்திய மாநாட்டில் பங்கெடுத்து திரும்பியது குறித்தும் விளக்கிப் பேசினார். தொடர்ந்து மாநாட்டுத் தீர்மானங்களை கழகத் தலைவர் முன்மொழிந்தார். பலத்த கரவொலியுடன் தீர்மானங்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் செயற்குழு உறுப்பினர்களும் மாநில கழகப் பொறுப் பாளர்களும் மாநாட்டின் வெற்றிக்கு தங்கள் கருத்து களை முன் வைத்தனர். மாநாட்டுப் பேரணி, சீறணி அணி வகுப்பு, மாநாட்டு நிகழ்வுகள், மாநாட்டு விளக்க பரப்புரை, நிதி திரட்டல் குறித்து தோழர்கள் பல்வேறு ஆக்கபூர்வ கருத்துகளை முன் வைத்தனர்.

மதியம் 1.30 மணியளவில் அனைவருக்கும் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. 2.30 மணிக்கு மீண்டும் தொடர்ந்து செயற்குழு நடந்தது, 6 மணி வரை நீடித்தது.

கழக மாநாட்டின் நோக்கம் குறித்தும் மாநாட்டுக்காக திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கிப் பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கடந்த 7.11.2012 அன்று தருமபுரியை அடுத்த நாயக்கன் கொட்டாயை ஒட்டிய நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளின் மீது காட்டு மிராண்டித்தனான குரூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு சாதி மறுப்புத் திருமணத்தைக் (ஆதி திராவிட ஆண் - வன்னிய பெண்) காரணமாகக் காட்டியே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நத்தம் பகுதியிலுள்ள மணமகளின் வீடு மட்டும் தாக்கப்பட்டிருந்தால் இந்தக் காரணம் பொருந்தும். ஆனால், மணமகனின் ஊரான நத்தம் கிராமம் முழுவதும் தாக்கப்பட்டுள்ளதோடு, சற்றுத் தொலைவில் இருந்த அண்ணா நகர் குடியிருப்பும், மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கொண்டாம்பட்டிக் குடியிருப்பின் வீடுகளும்கூட தாக்கப்பட்டுள்ளன.

வீடுகளை பொருள்களைச் சேதப்படுத்தி, எரிப்பதற்கு முன்னால் ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த நகைகள், பணங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. பாத்திரங்கள், பொருட்கள், தானிய மூட்டைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், படுக்கை, மெத்தைகள், சோபா செட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும் எரிக்கப் பட்டுமுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வேன், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என அனைத்தும் எரியூட்டப்பட்டுள்ளன.

ஜாதி கடந்த திருமணத்தைக் காரணமாகக் காட்டி, கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந் துள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீதிருந்த பொறாமை யுடன் கூடிய வன்மமே இதில் வெளிப்பட்டுள்ளது.

சட்ட விரோத கட்டைப் பஞ்சாயத்துகள் நடைபெறுவதும், அதில் தான்தோன்றித்தனமாக தீர்ப்புகள் வழங்குவதும் அங்கு நடைமுறையில் இருந்து வந்துள்ளதையும் அறிய முடிகிறது.

ஆதிக்க ஜாதி வன்முறையாளர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் பதியப்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நகைகள், பணம், எரிவாயு சிலிண்டர்கள் எவையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

மேலும், இந்த தாக்குதல்களிலும் பீரோ உடைப்புகளிலும் புதிய வரலாறாக, ஆதிக்க ஜாதிப் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஆனால், பெண்களில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில்,

1.             ஜாதி மறுப்புத் திருமணத்தை செய்பவர்களை வெட்டவேண்டும் என்று மாமல்லபுரத்தில் ஏப்ரல் மாதத்திலும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் தருமபுரிக்கு அருகே உள்ள அரியகுளம் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்திலும் அதே வகையில் பேசி இந்த கொடூர தாக்குதலுக்கு முகாமையான காரணமாக இருந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு,

இதேபோல் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பேசிவரும் பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், நாட்டுக்கோட்டை செட்டியார் அமைப்பின் பழ கருப்பையா ஆகியோர் மீதும் குற்றச் செயலுக்கு தூண்டுகோலாய் இருந்தமைக்கான குற்றப் பிரிவுகளில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

2.             கூட்டுக் கொள்ளைக்கான சட்டப் பிரிவுகளிலும் தாக்குதலுக்குச் சென்றவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிய வேண்டும்.

3.             கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை உடனடி யாக மீட்க வேண்டும்.

4.             அமைதி நிலை திரும்பும் வரை அங்கு செயல்படும் காவல்துறை நடவடிக்கைகளுக்கான செலவினங் களை ஆதிக்க ஜாதி சங்கத்தாரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.

5.             உடைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சிதைந்தும், வலுவிழந்தும் போயுள்ள வீடுகளை அரசு முழுச் செலவில் முன்பிருந்த வண்ணம் மீண்டும் விரைவாக கட்டித் தரவேண்டும்.

6.             சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்கான பிரிவுகளிலும் வழக்குகள் பதியப்படவேண்டும்.

7.             அதுவரை பாதிக்கப்பட்டோருக்கு உணவளிப்ப தோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்க வேண்டும்.

8.             உடைக்கப்பட்ட கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, எரிக்கப்பட்ட வாகனங்கள், உடைகள் ஆகிய வற்றுக்கான முழுத் தொகையை உடனே உரியோருக்கு அரசு வழங்க வேண்டும். இவற்றுக்கான செலவினங்கள் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசு ஈடு செய்து கொள்ள வேண்டும்.

9.             இப்பகுதிகளைச் சென்றடைவதற்கு வேறு பல பாதைகள் இருந்தும், ஒரு பாதையில் மரம் வெட்டிப் போடப்பட்டதைக் காரணமாகக் காட்டி தங்கள் கடமையில் தவறிய அனைத்துத் துறை அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்படி வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.           எதிர்காலத்தில் இந்த வகை நிகழ்வுகள் நடக்காமல் இருக்க -

அ.          ஜாதிய மோதல் குறித்து கண்காணித்து செயல்பட தனிப்பிரிவு.

ஆ.          லதாசிங் வழக்கில் உயர்நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதுபோல் அரசு ஒவ் வொருவருக்குமுள்ள மண உரிமையை மதித்து ஜாதி கடந்த மண இணையருக்குப் பாதுகாப்பும், எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கைகளையும் எடுத்தல்.

இ.           இவ்வாறான கருத்துக்களைப் பரப்பும் பெரியாரிய, அம்பேத்கரிய, முற்போக்கு இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு தேவையற்ற குறுக்கீடுகளைக் காவல்துறை போன்ற அரசுத் துறைகள் செய்யாமல் அனுமதிப்பதோடு உதவுவதல்.

ஈ.            பள்ளி, கல்லூரிகளில் ஜாதி வேறு பாடுகளைக் களைவதன் அவசியத்தை விளக்கும் வகையில் பாடத் திட்டங்களை அமைத்தல்.

உ.           அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்களை அந்தப் பகுதி அரசுத் துறைகளில் குறிப்பாக, காவல்துறையில் எந்த நிலைப் பணிகளிலும் பணியமர்த்தாமல் பிற பிரிவினரை பணியமர்த்தல். அதே வேளை தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை அந்தந்தப் பகுதிகளிலேயே பணியமர்த்தி அந்தப் பிரிவு மக்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தல்.

- போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.

2.             நீண்டகாலமாக, குறிப்பாக இலங்கை விடுதலை  பெற்றதற்குப் பின்னரான அறுபது ஆண்டு களுக்கு மேலாக, சிங்களப் பேரினவாதிகளாலும் அதன் அரசாலும் தொடர்ச்சியான புறக் கணிப்புகள், உரிமை பறிப்புகள், கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர் சிங்களர் - தமிழர் ஆகிய இரு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்பதை உணர்ந்த ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் தனி ஈழம் தீர்வு என 1976 இல் முடிவெடுத்து அதற்காக அறவழியில் போராடி வந்தனர்.

அவ் அறவழிப் போராட்டங்கள் சிங்கள அரசால் ஆயுதங்கொண்டு கொடூரமாக அடக்கப்பட்டதைக் கண்ட இளைஞர்களால் ஆயுத விடுதலைப் போரும் நடத்தப்பட்டது.

ஆயுதந் தாங்கிப் போராடிய விடுதலை இயக்கங்கள் பலவும் திசைமாறியும், சிதைந்தும் போனாலும் மேதகு பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ச்சியாக, வீரியமாகப் போராடி வந்தது.

அதுவும் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதத்தை அழித்தல் என்ற முகமூடியோடு சிங்களப் பேரினவாத பாசிச அரசால் நிகழ்த்தப்பட்ட இறுதிப் போர், சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், ஐ.நா. அதிகாரிகள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு ‘சாட்சிகளற்ற போராக’ நடத்தப்பட்டது.

அவ்விறுதிப் போர் குறித்து ஐ.நா. வல்லுநர் குழு உட்பட ஆய்வு செய்த அனைவரும் அங்கு நிகழ்ந்த போர்க் குற்றங்கள் பற்றி பேசினரே அன்றி முற்றும் சிங்களரைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தால், முழுதும் தமிழர்கள் மட்டுமே (போருக்கே தொடர்பில்லாத அப்பாவி பொது மக்கள்) கொல்லப்பட்டமையைக் கருத்தில் கொண்டு அங்கு இன அழிப்பு (ழுநnடிஉனைந) நடந்ததைக் குறிப்பிடத் தவறி உள்ளன.

இந்தச் சூழலில்,

1.             ‘சார்பற்ற பன்னாட்டு விசாரணை’ (Independent International Investigation) நடத்தப்பட வேண்டும் என்றும்,

2.             இறுதிப் போரில் நிகழ்ந்தது இன அழிப்பே என்பதை வெளிப்படுத்துமாறும் அவற்றின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும்,

3.             இன அழிப்புக்கு ஆளான எல்லா தேசிய இனங்களிடமும் எல்லா நேரங்களிலும் ஐ.நா. முன் நின்று பொது வாக்கெடுப்பு நடத்தி யுள்ளைதப் போலவே உலகம் முழுதும் புலம் பெயர்ந்து வாழுகிற ஈழத் தமிழ் மக்களையும் உள்ளடக்கி ஈழத் தமிழ் மக்களையும் உள்ளடக்கி ஈழத் தமிழ் மக்களிடம் தங்கள் அரசியல் எதிர் காலத்தை முடிவு செய்து கொள்ள பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டுமென்றும், அதுவரையும்

அ.          இலங்கையில் தமிழரின் தாயகமான வடகிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற சிங்களப் படைகளை வெளியேற்றி சிவில் நிர்வாகத்தை உரிய துறைகளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டுமென்றும்,

ஆ.          போர் நிகழ்ந்தபோதும், அதன் பின்னரும் நிகழ்ந்துள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டுமெனவும்,

இ.           ஈழத் தமிழ் மக்கள் அவரவர் சொந்த இடங்களில் குடியமர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்,

ஈ.            அதற்கு தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி உலக நாடுகளிடம் இதற்கான ஆதரவைத் திரட்ட முன்வர வேண்டுமெனவும்,

உ.           அதற்கு அனைத்து வகை அரசியல், சமூக, பொதுநலஅமைப்புகளும் குரலெழுப்ப வேண்டுமெனவும்,

திராவிடர் விடுதலைக் கழக தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3.             கழகத்தில் புதிதாக இணைய வரும் தோழர் களுக்கு உறுப்பினராக ஏற்பதற்கு முன் நிபந்தனை யாக பல்லடம், கரூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுவரும் வகையிலான மூன்று கட்டப் பயிற்சி வகுப்புகளைப் போல அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

4.             திராவிடர் இயக்க நூற்றாண்டில் நமது கழகத்தால் 2012 ஏப்ரல் 14 அன்று பரமக்குடி ஜாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழியேற்று தொடங்கப் பட்ட ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவாக திருப்பூரில் 29.4.2012 அன்று நடந்த பயண நிறைவு விழாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று அரசுக்கும், அத் தீர்மானங்கள் பற்றிப் புரிந்து தமது வாழ்க்கையில் பின்பற்றவேண்டும் என்று மக்களுக்கும், கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நடைமுறைக்கும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தும் விதமாக கழகம் நடத்தவிருக்கிற மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தையொட்டி, பெரியார் நினைவுநாளில் ஈரோட்டில் எதிர்வரும் டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் நடத்தவிருக்கிற ‘மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டை’ சிறப்புடன் நடத்த அனைத்து தோழர்களும் நிதி திரட்டல், மாநாட்டுக்கு அணி திரட்டல், மாநாட்டின் ஒரு பகுதியாக எழுச்சி மிக்க கட்டுப்பாடு மிக்க ஊர்வலத்தை நடத்துதல் என அனைத்து வகைகளிலும் முனைப்புடன் செயலாற்றுவது என்றும் தீர்மானிக்கிறது.

5.             பார்ப்பனர்களைத் தவிர ஏனைய பார்ப்பன ரல்லாத சமூகத்தினர் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்துவதில் கூச்சமும், தயக்கமும் காட்டும் பெரியார் காலத்தின் சூழல் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வெளிப்படையாக ஜாதிப் பெருமை பேசிக் கொண்டு, தேர்தலுக்கான ஜாதிய அணி திரட்டலுக்கும், சமூக ஒற்றுமையைக் குலைப்பதற்கும் பயன்படுத்தும் ஆபத்தான நிலை உருவெடுத்து வருகிறது. பார்ப்பனர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களை சமூக நீதியால் பயன் பெற்று வளர்ந்த பார்ப்பனரல்லாத இடை நிலை ஜாதியத் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆபத்தான நவீன பார்ப்பனீயவாதிகளை சமூகக் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்க அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரளுமாறு திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

6.             புரட்சியாளர் அம்பேட்கர் அடிப்படை இலட் சியங்களான ஜாதி ஒழிப்பு - இந்துமத பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைகளை மிகச் சரியாக எடுத்துக்காட்டி, அம்பேத்கர்  கொள்கை களைச் சிதைப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தும் ஆனந்த் பட்வர்த்தன் படைப்பான ஜெய்பீம் காம்ரேட் ஆவணப் படத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்று, பாராட்டி மகிழ்கிறது. தமிழ்மொழி எழுத்து விளக்க உரையுடன் கூடிய இந்த ஆவணப்பட குறுந்தகடுகளை வாங்கி, மக்களிடம் பரப்புமாறு கழகத் தோழர்களையும் ஜாதி எதிர்ப்பாளர்களையும் கழகம் கேட்டுக் கொள்கிறது.

Pin It