புதுவையில் மரண தண்டனைக்கு எதிரான பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடந்தது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு கருத்துகளைக் கேட்டு தங்கள் பேராதரவை வழங்கினர். புதுவை மாநிலத்தின் 11 பகுதிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை பரப்புரை வெற்றிநடை போட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், பரப்புரைக் குழுத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பனுக்கு ஆடைகள் போர்த்தி பயணக் குழுவை வரவேற்றனர். 3 தமிழர் உயிர் காப்போம் என்ற அறிவிப்புப் பதாகை, ஒலி பெருக்கிக் கருவிகளுடன், ஒரு வாகனம் முன் செல்ல தொடர்ந்து 150 இரு சக்கர வாகன த்தில் தோழர்கள் அணி வகுக்க பேரணி போல் சென்ற பரப்புரைப் பயணம் புதுவையை ஈர்த்தது. முருகன், பேரறிவாளன், சாந்தனை விடுதலை செய் என்று அச்சிடப்பட்ட வெள்ளை பனியன்களை தோழர்கள் அணிந்து வந்தனர்.

புத்தன் கலைக் குழுவினர், முன் கூட்டியே நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்குச் சென்று பறை இசை ஒலித்து, தூக்குத் தண்டனைக்கு எதிரான பாடல்களை பாடுவர். பரப்புரைக் குழுவினர் பின் தொடர்ந்து வந்து திரண்டிருந்த மக்களிடம் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். கழக வெளியீடுகளான ‘மரண தண்டனையை ஒழிப்போம்’, ‘காந்தியார் கொலையில் பார்ப்பன பின்னணி’ என்ற நூல்களை கழகத் தோழர்கள் கூடி நிற்கும் மக்களிடமும், பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களிடமும் விற்பனைக்கு எடுத்துச் செல்வர். மற்றொரு பிரிவினர், மரண தண்டனைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். மற்றொரு பிரிவினர், உண்டியல் ஏந்தி மக்கள் தரும் நன்கொடைகளைப் பெற்று கொள் வார்கள். கொளுத்தும் வெய்யிலில் மனித உரிமைக்காக மூன்று தமிழர்களின் உயிர்காப்பிற்காக மரண தண்டனையையே வேண்டாம் என்பதற்கான நியாயங்களை, மக்களை சந்தித்து விளக்கிய இந்தக் காட்சிகள், உணர்ச்சிகர மானவையாகும். உலகிலேயே மரண தண்டனைக்கு எதிரான இப்படி ஒரு மக்கள் இயக்கம் நடந்திருக்க முடியாது என்றே கூறலாம். சிந்தனையாளர்கள் மனித உரிமையாளர்களின் கருத்துகளாகவே முடங்கி நின்ற மரண தண்டனைக்கு எதிரான கருத்தை மக்கள் கருத்தாக மாற்றும் முதல் முயற்சி தமிழகத்தில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

23.9.2011 காலை 10 மணிக்கு மதகடிப்பட்டு பகுதியில் பயணம் தொடங்கியது. புத்தன் கலைக் குழுவினர் பறை இசை பாடல்களோடு தொடங்கிய பயணத்தில், புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். 10.30 மணிக்கு திருபுவனை வந்து சேர்ந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர்.

பகல் 11.15 மணியளவில் பயணக்குழு கண்டமங்கலம் வந்தது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கொளத்தூர் மணி பேசினார். பாட்டாளி மக்கள் கட்சித் தோழர்கள், தலைவர், பொதுச்செயலாளருக்கு ஆடை போர்த்தி வரவேற்று ரூ.1000 நன்கொடை வழங்கினர்.

பகல் 12 மணியளவில் வில்லியனூர் வந்து சேர்ந்தது. லோகு அய்யப்பன், புதுவை மாநில ம.தி.மு.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நா.மணிமாறன், விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். புதுவையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இழிவுபடுத்திப் பேசியதற்கு நா. மணிமாறன் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரசாரை கடுமையாக எச்சரித்தார்.

பகல் ஒரு மணிக்கு பயணக் குழு கரிச்சலாம்பாக்கம் வந்து சேர்ந்தது. பட்டாசு வெடித்து பயணக்குழுவினருக்கு ஆடை போர்த்தி எழுச்சியான வரவேற்பு தரப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லோகு அய்யப்பன், கொளததூர் மணி பேசினர்.

1.50 மணிக்கு பயணக்குழு பாகூர் வந்தது. பறை இசையுடன் கருத்துப் பாடல்களை புத்தன் கலைக் குழுவினர் பாடினர். அரியாங்குப்பத்தில் தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மாலை 4.45 மணியளவில் அரியாங்குப்பத்திலிருந்து பயணக் குழு பிற்பகல் பரப்புரையைத் தொடர்ந்தது. அம்பேத்கர் சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பில், கைத்தறி ஆடைகளை பயணக் குழுவினருக்கு அணிவித்தனர். கொளத்தூர் மணி பேசினார்.

5.30 மணிக்கு முதலியார் பேட்டையிலும், 6.10 மணிக்கு ரெட்டியார்பாளையத்திலும் பரப்புரையை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. தட்டாஞ்சாவடி நாம் தமிழர் கட்சித் தோழர்கள் பயணக் குழுவினருக்கு தேனீர் வழங்கினர். இரவு 7 மணிக்கு முத்திரையர்பாளையத்தில் நடந்த நிகழ்வில் லோகு அய்யப்பன், கொளத்தூர் மணி உரையாற்றினர்.

இறுதியாக 7.40 மணிக்கு சாரம் பகுதியிலுள்ள ஜீவா சதுக்கத்துக்கு பயணக் குழு வந்து சேர்ந்தது. புத்தன் கலைக் குழுவினர் தங்கள் கலை நிகழ்ச்சிகளை முழுமையாக நடத்தினர். மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிரை வழங்கிய செங்கொடி பற்றிய வீரவணக்கப் பாடல்; ‘உயிர்’ எனும் நாடகத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ராஜீவ் கொலை விசாரணை ஆணையங்களையும் இந்திரா கொலை பற்றிய விசாரணை ஆணையத்தையும் காங்கிரசாரே முடக்கி, உண்மைகள் வெளியே வராமல் தடுத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற மேற்கொண்ட சூழ்ச்சி, சதி, துரோகங்களையும் விரிவாக விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு எதிரான வீதி நாடகங்களை கலைக் குழுவினர் நடத்தினர். இறுதியாக கொளத்தூர் மணி தூக்குத் தண்டனைக்கு எதிரான நியாயங்களை முன் வைத்தும், காங்கிரசாரை எச்சரித்தும் ஒரு மணி நேரம் பேசினர். தோழர் வீராசாமி நன்றியுரையுடன் உணர்வுகளை சூடேற்றிய நிகழ்வு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. சதுக்கத்திலேயே தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்தப் பயணம் புதுவையில் நினைவில் நிற்கும் பயணமாக அமைந்தது. “மூவர் தமிழர் உயிர்காப்பு இயக்க வரலாற்றில் இந்தப் பயணம் இடம் பெறும்; என்றென்றும் புதுவை கழக வரலாற்றில் நினைவு கூறப்படும்” என்று விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Pin It