தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இராஜபக்சேவின் ராணுவத்துக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளித்து வருகிறது. குன்னூர் வெலிங்டனில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமுக்கு பயிற்சி பெற சிங்கள ராணுவம் 22 ஆம் தேதி வர இருக்கும் சேதி, 21 ஆம் தேதி கிடைத்தவுடன் கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் 22 ஆம் தேதி சிங்கள ராணுவத்தை திருப்பி அனுப்பக் கோரி முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. நாம் தமிழர், விடுதலை சிறுத்தை கட்சியினரும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து ராணுவப் பயிற்சியகம் செல்லும் வழிகளை மறித்து, போலீசார், ஆயுதப் படையினர் குவிக்கப்பட்டனர். ராணுவ பயிற்சியகத்துக்கு செல்லும் வழிகள் அனைத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார், கெடுபிடிகளை மீறி கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அதே பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். குன்னூர்-ஊட்டி சாலையிலுள்ள ‘பிளாக் பிரிட்ஜ்‘ பகுதியில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். கழகத் தோழர்கள் 125 பேர் கைதானார்கள்.

‘தமிழக மீனவர்களை கொன்று குவிக்க சிங்கள ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சியா?’ என்ற முழக்கத்தை முன் வைத்து, மறியல் போராட்டம் நடந்தது. போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து சிங்கள ராணுவத்தினர் 25 பேரும் பயிற்சிகளை நிறுத்திக் கொண்டு சத்திய மங்கலம், தாளவாடி வழியாக, மைசூருக்குப் புறப்பட்டனர். இப்போது இந்தியப் பார்ப்பன ஆட்சி, மைசூரில் சிங்களர் களுக்கு பயிற்சி அளிக்கிறது.

கழகப் போராட்டத்தில் ஈரோடு இரத்தினசாமி, கோவை கழகப் பொறுப்பாளர்கள் கோபால், கலங்கல் வேலு, இராமசாமி, சண்முகசுந்தரம், நாகராசு, இரஞ்சித், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், திருப்பூர் கழகப் பொறுப்பாளர்கள் முகில்ராசு, அகிலன், ஈரோடு சதீஷ், திருச்செங்கோடு வைரவன், அன்னூர் தோழர்கள் ஈசுவரன், ஜோதிராம், மேட்டுப் பாளையம் சந்திரசேகர் உள்ளிட்ட கழகத்தினர் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.எஸ். படைத்த நகைச்சுவை விருந்து

சிங்கள ராணுவப் பயிற்சிக்கு எதிராக பேராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை கைது செய்து, குன்னூர் காவல் துறையினர் அருகே உள்ள விநாயகர் கோயில் மண்டபத்தில் வைத்தனர். உடனே அப்பகுதி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கடவுள் மறுப் பாளர்களை கோயில் மண்டபத்தில் வைக்கக் கூடாது என்றும், உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் மண்டபத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் இந்தப் போராட்டம் கழகத்தினருக்கு நகைச்சுவை விருந்தாக இருந்தது.

எங்களை வெளியேற்றக் கோரி விநாயகனிடம் கோரிக்கை வைக்காமல், காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறார்களே; விநாயகன் சக்தி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்று தோழர்கள் கேட்டனர். ஆர்.எஸ்.எஸ். போராட் டத்தால் கழகத் தோழர்கள் 8 மணிக்கே முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இதுவே ஆர்.எஸ்.எஸ். போராட்டத்துக்கு கிடைத்த ‘பயன்’.

சென்னையில் சுவரெழுத்து சுப்பையா நூல் அறிமுகக் கூட்டம்


‘சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள் நூல்’ அறிமுகக் கூட்டம் 5.8.2011 மாலை 5 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் செ.தெய்வ நாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இனமான நடிகர் சத்தியராசு நூல் அறிமுக உரையாற்றுகிறார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கு.இராம கிருட்டிணன், இயக்குநர் மணிவண்ணன், ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர்கள் செ.துரைசாமி, இளங்கோவன், குமாரதேவன் உரையாற்றுகிறார்கள். தலைமை: விடுதலை இராசேந்திரன்.

Pin It