“மனித உரிமைகளை மதித்திடாத சிறப்பு முகாம்களை இழுத்து மூடு” என்ற முழக்கத்துடன் ஈழத் தமிழின ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் 28.9.2009 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கு அருகே எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். ‘நாம் தமிழர் இயக்க’ நிறுவனர், இயக்குநர் சீமான் முன்னிலை வகித்தார்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தமிழக அரசு சிறப்பு முகாம்கள் என்ற பெயரில், ஈழத் தமிழர்களை சிறைப் பிடித்து வைத்துள்ளது. ஈழத் துக்கு பெட்ரோல், டீசல் போன்ற பொருள்களை கடத்திச் சென்றார்கள் என்ற சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் விடுதலைப் போராளிகள் என்று சந்தேகிப்பவர்களை இந்த ‘சிறை முகாமில்’ தமிழக அரசு அடைத்து வைத்துள்ளது. இந்த சிறை முகாம்களில் 80 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டவர்களும் உண்டு. இவர்கள் மீதான குற்றத்துக்கு அதிக பட்ச தண்டனையே 2 அல்லது 3 ஆண்டுகள்தான் என்ற நிலையில் வழக்கு விசாரணையின்றி 10 ஆண்டுகளுக்கு மேலாக பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு முடிந்து விடுதலையானவர்களையும் விடுவிக்காமல், முகாமிலேயே அடைத்து வைத்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைக்கவே தமிழக அரசின் காவல்துறையின் உளவுப் பிரிவு மறுத்து வருகிறது. தமிழக அரசும் இதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இப்போது - இந்த முகாமில் உள்ள 47 ஈழத் தமிழர்கள் தங்களை சிறை முகாமிலிருந்து விடுவித்து, பிற முகாம்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கேட்பாரற்றுக் கிடக்கும் இந்தத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஆதரித்து இந்த போராட்டத்தை கழகத்தினர் அவசரமாக ஏற்பாடு செய்தனர். 300க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று - சிறை முகாம்களா? சிறப்பு முகாம்களா? தமிழக அரசே சிறப்பு முகாம்களை இழுத்து மூடு என்ற உணர்ச்சி முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முள்வேலிக் கம்பிக்குள் முடக்கப்பட்டுக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களை தங்கள் வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கை அரசை சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் தமிழகத்தில் சிறப்பு முகாம் எனும் சிறை முகாமில் 15 ஆண்டுகளாக எந்த உரிமையுமின்றி சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, தமிழகத்தில் நாம் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது என்று ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் வாழும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை தமிழ்நாட்டின் குடிமக்களாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்படி 15 ஆண்டுகளாக விசாரணையின்றி தமிழர்களை முகாமுக்குள் சிறைபடுத்துவது என்ன நியாயம் என்ற கேள்வியை, ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் எழுப்பினர்.
சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்குக்கூட அவர்கள் மீதான உரிமை மீறல்களை கண்காணிக்க விதிகள், சட்டங்கள் இருக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் அப்படி எந்த ஒரு கண்காணிப்பு விதிமுறைகளும் கிடையாது. இந்த முகாம்களில் அடைபட்டுள்ளவர்களை அவர்கள் குடும்பத்தினர்கூட - சந்திப்பது, அவ்வளவு எளிதல்ல. ஆட்சி நிர்வாகத் தின் பல துறையிடமிருந்து உரிய அனுமதி பெற்று தடைகளைக் கடந்து சந்திக்க வேண்டியிருக்கிறது.
கடந்த 7 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தும் 47 தமிழர்களை எந்த அதிகாரியும் சந்தித்துப் பேசக்கூட முன் வரவில்லை. சிறைகளில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாலே அதிகாரிகள் ஓடி வந்துவிடுவார்கள். இந்த நிலையில் முகாமிலிருந்து ஒருவரை விடுவிக்க வேண்டுமானால், அவர்கள் ஏதேனும் வெளிநாடு ஒன்றுக்கு செல்லக்கூடிய ‘விசா’வும், விமானப் பயணத்துக்கான டிக்கட்டும் கொண்டு வந்தால் விடுவிக்க முடியும் தான் என்று உளவுத் துறை நிபந்தனை விதிக்கிறது. பார்ப்பன ஜெயலலிதா ஆட்சியில்கூட பலர் இத்தகைய முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில்தான் நிலைமை மோசமாக உள்ளது என்று உரையாற்றிய பலரும் சுட்டிக்காட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில் மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்), ஆறுமுகம் (தமிழ் தேச பொதுவுடைமை கட்சி), டி.எஸ்.எஸ். மணி (மனித உரிமையாளர்), தியாகு (தமிழ்தேசிய விடுதலை இயக்கம்), இரா. பத்மநாபன் (தமிழ் தேசிய இயக்கம்), சுதா காந்தி (சட்டக்கல்லூரி மாணவி), கி.த. பச்சையப்பன், அய்யநாதன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டம் முடிந்த சில மணிநேரத்தில் உண்ணாவிரதம் இருந்த தோழர்களை அதிகாரிகள் சந்தித்து போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராடி வரும் ஈழத்தமிழர்கள் மறுத்து விட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு தோழர் கொளத்தூர் மணி பதில்
இந்திய குடிமக்களா? தமிழ் ஈழ குடிமக்களா?
தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து பற்றி - கருத்து கூற வேண்டியது - அந்த ஈழத் தமிழர்கள் தான். ஆனாலும் இங்கே அகதிகளாக அடைக்கலம் புகுந்த தமிழர்கள், மீண்டும் தமிழ் ஈழத்தின் குடிமக்களாக திரும்ப வேண்டும் என்று விரும்பி வந்தவர்களே தவிர, இந்தியாவின் குடிமக்களாக வேண்டும் என்று வந்தவர்கள் அல்ல. இந்தியாவின் குடிமக்களாக இருப்பதைவிட விடுதலை பெற்ற ஈழத்தின் குடிமக்களாக இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.