‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (நவம்பர் 30) அதன் செய்தியாளர் எம். குணசேகரன் எழுதியுள்ள ஒரு செய்தி கட்டுரை தமிழகத்தில் நிலவும், தீண்டாமை சாதி அடக்குமுறைகளை சரியாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. காவல்துறை பாதுகாப்புடனும், நீதிமன்ற ஆணையுடனும், கோயிலுக்குள் தீண்டாமையை எதிர்த்து நுழையும் ‘தலித்’ மக்களே சாதி வெறி சக்திகளால் தாக்கப்பட்டு, சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டப்படாத மக்கள் - ஊருக்கு வெளியே ‘சேரி’யில் தான் தள்ளப்பட்டுள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நூறுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாவது என்னவோ உண்மைதான்.  

ஆனால், வழக்கில் தண்டிக்கப்படும் குற்றவாளிகள் எத்தனை பேர்? அது தேசிய சராசரியைவிடவும் குறைவாகவே உள்ளது. நகர்மயமாதல் எனும் நிகழ்வுகளால் சாதி மோதல்களின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என்பது உண்மை என்றாலும், தென் மாவட்டங்களில் விவசாயத்தைச் சார்ந்து வாழும் தலித் மக்களுக்கு தரப்படும் கூலி குறைவு என்பதால், ஆதிக்க சாதியைச் சார்ந்து நிற்கவேண்டிய அவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறைகள் தொடரவே செய்கின்றன. இடைத்தட்டு சாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகள், தலித் மக்களின் ஓட்டுகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டினாலும், அரசியலில் அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ, சாதி தீண்டாமை பிரச்சினைகளை முன்னெடுக்கவோ முன்வருவதில்லை. இந்த உண்மைகளை படம் பிடித்துள்ள அக்கட்டுரை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் கைவிடப்படுவதையும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தண்டிக்கப்படுவதையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது. 

கோயில் நுழைவு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், கிராம கோயில் விழாக்களில், தலித் மக்கள் பங்கேற்பின் போதும், சாதித் தலைவர்கள் பிறந்த நாள் விழாக்களின் போதும் தென் மாவட்டங்களில் கலவரங்கள் தலைதூக்குவதாக, காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிக்கான பிரிவின், தலைமை அதிகாரி (அய்.ஜி.) தெரிவித்துள்ளார். சுரண்டல் மற்றும் தலித் பெண்கள் மீதான வன்முறைகள் பெருமளவில் நிகழ்கின்றன. இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலியில் தனி நீதிமன்றங்கள் இருந்தும், 25000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 40 சதவீத வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்படுவதை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  

ஓரளவு விழிப்புணர்வு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், தீண்டாமைக் குற்றங்களுக்கான வழக்கில் தண்டிக்கப்படும் வீதம் தமிழகத்தில் மிகவும் குறைவு என்பது - வழக்கில் நிர்வாகம் காட்டும் அலட்சியத்தையே பிரதிபலிக்கிறது; இது சமூக அவமானமாகும். 

பெரியார் திராவிடர் கழகம் இரட்டைக் குவளைகளை உடைக்கும் போராட்டத்தில் களமிறங்கியபோது, காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அந்தப் போராட்டத்தை முன் வைத்து, தீவிர நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ‘முழுப் பூசணிக்காயை’ சோற்றில் மறைத்து, தீண்டாமையே இல்லை என்றே நாடகமாடினார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் கட்டுரை இப்போது, உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. 

மீண்டும் பெரியார் திராவிடர் கழகம் இந்த அடிப்படையான சமூகப் பிரச்சினைக்காக களமிறங்கியுள்ள சூழலில், இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சாதி-தீண்டாமை என்ற பிரச்சினையே நாட்டில் இல்லாதது போல கபடநாடகமாடி, சாதிக்கு தீனிபோடும் ஓட்டு வங்கி அரசியலை நியாயப்படுத்தி, பார்ப்பனீயத்தை வலிமைப்படுத்தி வருவது மிகுந்த வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தமிழின உணர்வை முன் வைக்கும் அமைப்புகளும், தமிழன் என்ற அடையாளத்தை சிதைத்து பெரும்பான்மைத் தமிழர்களை சாதி தீண்டாமைக்குள்ளாக்கியுள்ள அவலத்தை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It