இதழின் குரல்

காலவெள்ளத்தில் நமது தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்ட கவிஞர் தமிழ்ஒளியின் ( 1924---1965 ) நினைவைப் போற்றும் வகையில் புதுமலர் இதழ், கவிஞரின் சிறப்பிதழாகத் தற்பொழுது மலர்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகச் சிந்தித்து, செயலாற்றி வந்த ஓர் அற்புதக் கவிஞனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மதிப்பு, அங்கீகாரம் அவரது வாழ்நாளிலும், அதற்குப் பிறகும் கிடைக்காமல் போனது வரலாற்றுச் சோகம்.

இருப்பினும், கவிஞர் தமிழ்ஒளியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவரைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி, அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்புறக் கொண்டாடி வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கவிஞர்கள் சங்கம் மிகுந்த பாராட்டிற்கு உரியது.

கவிதை, சிறுகதை, குறுநாவல், காவியம், ஓரங்க நாடகம், மேடை நாடகம், இலக்கிய ஆய்வு, சிறுவர் பாடல்கள், உருவகக் கதைகள், குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள், விமர்சனக் கட்டுரைகள் என இலக்கியத்தின் அனைத்துக் கூறுகளிலும் தனது படைப்பு முத்திரையைப் பதித்துச் சென்ற மாபெரும் இலக்கிய ஆசான் தமிழ்ஒளி அவர்கள்.

பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரது கவிதைகளால் கவரப்பட்ட தமிழ் ஒளி, அவர்களது வழித்தோன்றலாக விளங்கினார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் நேரடியாகப் பழகி, அவரது கவிதைச் சிறப்பை விதந்தோதியவர். "உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என்/ உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான்! -வெறும்/ துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை அவன்/ தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்!" என அவரைப் பற்றிய கவிதையில் தனது திசைவழியைப் பறை சாற்றியவன்.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து, போதிய வருவாய் இல்லாத வாழ்க்கையில் வருந்தி, பிறரைச் சார்ந்தே வாழ வேண்டிய சித்திரவதைக்கு உள்ளாகி மறைந்த தமிழ் ஒளியின் வாழ்வு, ஒரு துன்பியல் காவியமாகும். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் "தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்" எனச் சக மாணவர்களால் இழிவு படுத்தப்பட்டு, அதன் விளைவாக ஏற்பட்ட மன உளைச்சலில் கல்வியையும் துறக்க நேர்ந்தது.

தமிழ்ஒளி எழுத்தையே நம்பி வாழ முயன்றார். அந்த நம்பிக்கை, எவ்வளவு கொடூரமாக அவரைப் பழிவாங்கியது என்பது சமகால வரலாறு. "தமிழ்நாட்டில் எழுத்தை நம்பி வாழ்வது, தற்கொலைக்கு இணையானது" எனும் புதுமைப்பித்தனின் கூற்றுக்குத் தமிழ்ஒளியின் வாழ்வே மிகச்சிறந்த சான்று. இதே போன்றுதான் எழுத்தாளர் பிரபஞ் சனும் குறிப்பிட்டார். மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் இருந்திருந்தால், இன்னும் சில நல்ல படைப்புக்களைத் தன்னால் படைத்திருக்க முடியும் என்ற பிரபஞ்சனின் கூற்று நம்மை இன்றளவும் வாட்டுகிறது.

திரைப்படத்திற்குச் சென்ற ஒருசில தமிழ்ப் படைப்பாளிகளைத் தவிரப் பொருளாதார வகையில் தமிழ் எழுத்தாளர்கள் நிலை இன்னும் சொல்லிக் கொள்ளும் வகையில் முன்னேற்றம் அடையவில்லை என்பதுதான் மெய்நடப்பாக உள்ளது.

" இருவேறு உலகத்து இயற்கை திருவேறு / தெள்ளியராதலும் வேறு" என வள்ளுவர் காலத்திலிருந்து, அறிவுக்கும் செல்வத்திற்கும் இடையிலான இந்த ஒவ்வாமை, இன்றும் தொடர்கிறது. எனவேதான் எழுத்தை முழு நேரமாக வரித்துக் கொள்ளாமல், பகுதி நேர வேலையாக வைத்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான வழிமுறையை எழுத்து உலகில் இன்று பலரும் மேற்கொண்டுள்ளனர்.

நிரந்தர வேலை இல்லாத கவிஞர் தமிழ் ஒளிக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது மிகவும் கொடுமையானதாகும். எவ்வளவு ஏழ்மை நிலையில் உழன்றாலும், வறுமை வாட்டினாலும், பொதுவுடைமை எனும் அவரது உயிர்க் கொள்கையினின்றும் அவர் சற்றும் பிறழ்ந்திடவில்லை; சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதே அவரது வாழ்வு நமக்குத் தரும் செய்தியாகும்.

பொதுவுடைமை, சமூகநீதி, தமிழியம், சாதி ஒழிப்பு, தேசிய இனங்களின் இறையாண்மை, வல்லரசிய எதிர்ப்பு என இன்று பேசு பொருளாக இருக்கும் கருத்தாக்கங்களை அவர் பல்லாண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு சிந்தித்துச் செயல்பட்டுள்ளார் என்பது அவர் மீதான நமது மதிப்பை மென்மேலும் உயர்த்துகிறது.

இத்தகைய மாபெரும் படைப்பாளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கவிஞர் தமிழ் ஒளி அவர்களுக்குத் தஞ் சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மார்பளவு சிலை அமைக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தி, அதனால் கிடைக்கப் பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்திக் கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் வெளியாகியுள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு போற்றத் தக்கது.

இதற்கிடையில் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அது நல்ல பரிந்துரைதான்.

அதைக் காட்டிலும், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாகத் தமிழ்ஒளியின் படைப்புகளைச் சிறந்த முறையில் அச்சிட்டு, மிக மலிவான விலைக்குத் தமிழக அரசே மக்களிடம் கொண்டு செல்வது மேலும் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.

இத்தருணத்தில் கவிஞர் தமிழ்ஒளி அவர்களோடு பழகி, வாழ்நாள் முழுவதும் அவருக்கு உறுதுணையாக இருந்து, தனது புகழ் புத்தகாலயம் மூலம் அவரது படைப்புக்களை அச்சிட்டு, கவிஞரின் புகழ் பரப்பிய பெருமதிப்பிற்குரிய செ.து. சஞ்சீவி ( 17/10/1929 -20/05/2023) அவர்களுக்குத் தமிழ் கூர் நல்லுலகு பெரிதும் கடமைப் பட்டுள்ளது.

சஞ்சீவி அவர்கள் இல்லை என்றால், இன்று தமிழ்ஒளி காணாமல் போயிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்த சஞ்சீவி அவர்கள், பெரியாரின் கொள்கைகளாலும், பொதுவுடைமைத் தத்துவத்தாலும் ஈர்க்கப்பட்டவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் மூலம் பெரிதும் கவரப்பட்டவர். அவர் வழி கவிஞர் தமிழ்ஒளி அறிமுகமாகி, தமிழ்ஒளியின் புகழ் பரப்புவதையே தன் வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொண்டவர். தமிழ் ஒளி அவர்கள் மறைந்த பொழுது அவரது கவிதைகள் முழுத் தொகுப்பாக வெளியாகி இருக்கவில்லை. சஞ்சீவி அவர்கள்தான் "தமிழ்ஒளி கவிதைகள்" என முதல் தொகுப்பையும், அவரது கவிதைகளின் இரண்டாவது தொகுப்பையும் அச்சிட்டு வெளி­யிட்டார். கவிஞரின் படைப்புகளை ஏறக்குறைய 13 தொகுப்புகளாக வெளிக் கொண்டு வந்தார்.

புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் ஆகியவற்றின் உறுதுணையோடு கவிஞரின் பிறந்தநாள் / நினைவு நாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ் ஒளி அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வழி வகுத்தார். அது இன்றுவரை ஆண்டுதோறும் தொடர்வது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

"தமிழ் ஒளி கவிதையும் வாழ்வும்",

"தமிழறிஞர் பார்வையில் தமிழ்ஒளி" ( தொகுப்பு நூல்)

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் "தமிழ்ஒளி" பற்றிய நூல் (சாகித்திய அகாதமி)

"தமிழ்ஒளி காவியங்கள்" -ஓர் அறிமுகம்,

"தமிழ்ஒளி நினைவாகச் சில பதிவுகள்" --

ஆகிய நூல்களை எழுதி, தமிழ் ஒளியின் முழுமையான பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் நான் அவரைத் தேடிச் சென்று அவரது இல்லத்தில் சந்தித்த பொழுது, கவிஞர் தமிழ்ஒளி பற்றியே அவரது பேச்சு மையங்கொண்டிருந்தது. அவரிடமிருந்து விடைபெறும்பொழுது, தமிழ்ஒளியின் சில நூல்களைப் பரிசாக அளித்து வழி அனுப்பினார். இதுதான் பெரியவர் சஞ்சீவி அவர்களின் பாணி.

தமிழ்ஒளி படைப்புக்களின் பல்வேறு கூறுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் சில கட்டுரைகள், தமிழ்ஒளி குறித்த இச்சிறப்பிதழில் வெளியாகி உள்ளன. இவை போதாது. இன்னும், இன்னும் நுணுக்கமாகக் கவிஞர் தமிழ் ஒளியைப் பயின்று, தமிழ்ஒளியைக் கொண்டாட வேண்டியது தமிழ் மக்களின் வரலாற்றுக் கடமையாகும்.

- கண.குறிஞ்சி