ஆங்கிலேயர்கள் ஆண்டபோது.. ஜி. எஸ். டி என்றெல்லாம் இந்த அளவு வரிகள் இல்லை..
சுங்கச் சாவடிகளில் வழிப்பறிக் கொள்ளைகள் இல்லை..
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றதாக இந்திய அரசு உருவாக்கப்பட்ட 77 ஆண்டுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வலிய இணைக்கப்பட்டதால் அடைந்து வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமில்லை.
தமிழ்நாட்டுக் கல்வி உரிமையைப் பறிகொடுத்துவிட்டோம். தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டிற்கு இல்லை. நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பு, நரிமனம் கன்னெய் (பெட்ரோல்) உள்ளிட்ட அனைத்துக் கனிம வளங்களையும் இந்திய அரசு கொள்ளையடித்துக் கொண்டு போகிறது. அதற்கு மதிப்புத் தொகை (இராயல்ட) கூட தமிழ்நாட்டுக்குக் கொடுப்பதில்லை.
ஜி. எஸ். டி என்கிற பெயரில் ஆண்டுக்கு 5 இலக்கத்து 76-ஆயிரம் இலக்கம் கோடிப் பணத்தை இந்திய அரசு கொள்ளையடிக்கிறது. சுங்கச்சாவடி வழிப்பறியில் மட்டும் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ஒரு இலக்கத்து 28 ஆயிரம் இலக்கம் கோடி வருவாய் குவிகிறது..
மொத்தம் ஆண்டுக்கு 32 இலக்கம் கோடி வருவாயில் 21 விழுக்காட்டுத் தொகையை மட்டும்தான் மாநில அரசுகளுக்கு இந்திய அரசு திருப்பித் தருகின்றது. மற்ற 79 விழுக்காட்டுத் தொகையைத் தன் அதிகாரத்திற்காகக் குவித்து வைத்துக் கொள்கிறது இந்திய அரசு.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட இந்திய அரசைக் கேள்வி கேட்கிற மாநிலங்களுக்கு ஒதுக்கீட்டுத் தொகை எதுவும் இல்லை.
இந்தியாவிடம் அடிமைப்படுவதற்கு முன்பு இந்திய அரசின் கையாளாய்ச் செயல்பட்டுவரும் தனியார் கல்விக் கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லை. கல்விக்குக் கட்டணங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகள் இல்லை மருத்துவம் என்கிற பெயரில் கொள்ளையடிப்புகள் இல்லை.
கல்வியையும், மருத்துவத்தையும் நேரடியாக இந்திய அரசு தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு சென்றதால் ஏற்பட்ட கொடுமைகளால் எளிய மக்கள் மீள வழியின்றி அழிகிறோம்..
இந்திய அரசு என்று ஓர் அரசை அவர்கள் உருவாக்குவதற்கு முன்பு எதற்காகவும் இந்தியாவிடம் கையேந்திக்கொண்டு தமிழ்நாடு இருக்கவில்லை. தமிழ்நாட்டுப் பிள்ளைகள் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பெறுவதற்கு மட்டுமின்றி எதற்குமே இந்திய அரசிடம் தொங்கிக்கொண்டு கிடந்தது கிடையாது..
முத்துக்குளித்த, பவழப்பாறைகளில் பவழம் எடுத்த, கடல் கடந்து வணிகம் செய்த பழம் தமிழ் இனத்தினர் மீன்பிடிப்பதற்குக் கூட தொலைதூரம் செல்லக்கூடாது என்று இந்திய அரசால் தடுக்கப்படுகின்றனர்... இலங்கை அரசு சுட்டுத் தள்ளுகிறது..... கேட்க நாதி இல்லை..
தமிழ்நாட்டு வேளாண் தொழிலுக்கு இந்திய அரசு எண்ணற்ற தடைகள் போடுகிறது.. வரிகள் பிடுங்குகிறது.. தமிழ்நாட்டின் நெல்லுக்கும் கரும்புக்கும் இந்திய அரசுதான் விலைகளை உறுதிப்படுத்துமாம்..
எத்தனைக் கெடுபிடிகள்..
நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இருவரும் ஊதி ஊதித் தின்போம் என்ற கணக்கில் எவ்வளவு வஞ்சகம்..
எதற்காக வரிகள் கட்ட வேண்டும்?
எங்களோடு வயலுக்கு வந்தாயா? நீர் பாய்ச்சினாயா? நீ என்ன மாமனா மச்சானா? -எனப் பாளையக்காரர்களாக இருந்தவர்கள் ஆங்கிலேயனைப் பார்த்து கேட்டதையும் வரி கட்ட மறுத்துப் போராடியதால் தூக்கிலிடப்பட்டதையும் வரலாற்றில் படிக்கிறோம்... பாராட்டுகிறோம்..
ஆனால், ஆங்கிலேயன் பறித்த வரிகளைவிட அதிகமாகப் பிடுங்குகிறதே இந்திய அரசு..! எதற்காக வரிகள் கட்ட வேண்டும் என்று நாம் ஏன் கேட்காமல் இருக்கிறோம்..
ஆங்கிலேயன் அயலவன் வரிகள் எனவே அவர்கள் பிடுங்கக் கூடாது என்றால் இந்திய அரசை ஆளுகிற அம்பானி, அதானி, நரேந்திர மோடி, அமித் ஜாக்கள் அயலவர்கள் இல்லையா அவர்கள் வரிகள் பிடுங்கலாமா?
எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்..!
இந்தியாவுக்கு 78 ஆவது விடுதலை நாள் என்கிறார்களே.. நம் கேள்விகளுக்கு விடைகள் எப்போது.. நம் அடிமைத்தனங்களுக்கு விடுதலை எப்போது..
அவர்கள் பிடுங்கும் வரிகளை அடிமைகளாக இருந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விடுதலை நாளின் பொருளா? எதற்கு விடுதலை நாள்?..
கேள்வி கேட்கவாவது பழகுவதுதான் எப்போது?..
கேள்வி கேட்கத் தொடங்குவோம் அவை கனைகளாக மாறட்டும்...
- பொழிலன்