2011ம் ஆண்டுக்கான விருப்பங்களின் பட்டியல் என்று ஒருவருக்கு இருக்குமாயின், எனது பட்டியலின் முதல் விருப்பமாக இருப்பது அரசாங்கம் தனது முன்னுரிமைகளில் முதலாவதாக இந்தியாவில் சத்துணவுப் பற்றாக்குறையில் இருக்கும் குழந்தைகள் பிரச்சனையைக் கையாள்வதாக இருக்கவேண்டும் என்பதே. 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் சிலரும் உலகில் மிகமிக ஏழைகள் பலரும் இந்த நாட்டில் வசிக்கிறார்கள், உயரளவுப் பொருளாதார வளர்ச்சி விகிதமும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வும் வேறுபாடுகளும் இந்த நாட்டில் இருக்கின்றன. நமது நகரங்களில் கட்டுப்பாடற்ற நுகர்வும் நமது கிராமங்களிலும் வனங்களிலும் வாழும் மக்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமலும் இருக்கின்றனர். இந்தத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் வேறுபாடுகள் ஒவ்வொருவருக்கும் தெரிந்தே இருக்கின்றன. 

இன்றைய இந்தியாவின் நிலைமையைப் பற்றிய மிக மோசமான் அறிக்கையாக இருப்பது என்னவென்றால், நமது குழந்தைகளில் 46 விழுக்காட்டினர் அவர்களுக்குப் போதுமான அளவுக்கு உணவு கிடைக்காததனாலேயே வளர்ச்சி குன்றி இருக்கின்றனர் என்பது தான். இதையும், உலகில் மிகுந்த ஏழை நாடுகளின் பட்டியலிலிருந்து மத்தியதர வருவாய் நாடுகளின் பட்டியலுக்கு முன்னேறியுள்ளோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதையும் எப்படி நாம் ஏற்றுக்கொள்ளமுடியும்? 

இந்தியாவில் குழந்தைகள் சத்துணவுப் பற்றாக்குறை பற்றிய புள்ளிவிவரங்களை மீண்டும் நோக்கினேன். அது நடுக்கும் பனிச் சாரலாக, மோசமானதாக, அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 

இந்தியாவில் நமது அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ளதை விடக் கூடுதலான் குழந்தைகள் சத்துணவுப் பற்றாக்குறையில் இருக்கின்றனர். அந்நாடு பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒரு குப்பைக் கூடையைப் போன்ற ஒன்றாக கருதப்பட்டது. காங்கோ, லெசோதோ, தான்சானியா, ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் கூட நம்மைவிடச் சிறந்த இடத்தில் இருக்கின்றன. 

அடிப்படைப் பிரச்சனை  

இந்த ஒரு பிரச்சனை பற்றி ஏன் இவ்வளவு அக்கறையுடன் இருக்கவேண்டும்? ஏனென்றால், இந்த நாட்டில் ஏறத்தாழ ஒவ்வொரு இரண்டு குழந்தைகளிலும் ஓன்று இரவில் வெறும் வயிற்றுடன் தூங்கப் போகிறது என்ற உண்மையே அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது என்பதால் தான். சத்துப் பற்றாக்குறை குழந்தை மரணங்களின் முதன்மையான காரணமாக இருக்கிறது. இந்த ஒரு பிரச்சனை தீர்க்கப்பட்டால் இந்தியாவில் குழந்தை மரணங்களில் பாதி தடுக்கப்பட்டுவிட முடியும். சத்து பற்றாக்குறை குழந்தைகளின் தொற்றுநோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதால், குழந்தைகள் இறந்து போகின்றனர். அதன் விளைவாக, வயிற்றுப்போக்கு, சுவாசத் தொற்று போன்ற எளிதில் சிகிச்சையளித்துக் காப்பாற்றக் கூடிய நோய்களுக்குக் கூடப் பலியாகக் கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். 

மிகுதியான விழுக்காடு குழந்தைகள் சத்துப் பற்றாக்குறையில் இருக்கிறார்கள் என்பது கூட கவலையளிப்பதாக இல்லை, மாறாக அந்த விகிதம் குறைவதே ஏறத்தாழ நின்றுபோய் விட்டது என்பது தான் மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது.1998-99 மற்றும் 2005-06 ஆகிய ஆண்டுகளுக்கிடையில், அந்த விகிதம் ஒரே ஒரு விழுக்காடு தான் குறைந்தது. இந்த விகிதத்தில், 2015 ஆண்டுக்குள் குழந்தைகளின் சத்துப் பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பது என்பது புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக இருப்பது சாத்தியமற்றதாகவே இருக்கும்.

பொறாமைப்படத்தக்க பொருளாதார வளர்ச்சியுள்ள ஒரு நாட்டில் ஏன் இப்படி நடக்கிறது? தலை வருவாய் அதிகரிக்கும்போது சத்துப் பற்றாக்குறை தானாகக் குறையும் என்று கூறுவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்று வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஏ.கே.சிவ்குமார் சுட்டிக் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, 37 புற-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் 28ல் தலை வருவாய் இந்தியாவைவிடக் குறைவாக இருக்கிறது, இருப்பினும் சத்துப்பற்றாகுறை விகிதம் அங்கு குறைவாகத்தானிருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவில் மணிப்பூரில் தலை வருவாய் 1997-98 ல் ரூ.8114 /- மட்டுமே, ஆனாலும் அங்கு சத்துப் பற்றாக்குறை விகிதம் 28 ஆக இருக்கிறது. அதற்கு மாறாக, குஜராத்தில் தலை வருவாய் ரூ.16251/- இருக்கிறது. அங்கு குழந்தைகள் சத்துப் பற்றாக்குறை விகிதம் 45 விழுக்காடாகும். 

      சிக்கிம், மத்தியப்பிரதேசம் ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களில் டாக்டர்.சிவ குமார் தரும் மாறுபட்ட புள்ளிவிவரங்களும் கூட சத்துப் பற்றாக்குறை குறித்த இன்னொரு முக்கியமான் கோணத்தை எடுத்துக்காட்டுகின்றன. அது பாலின வேறுபாடு குறித்ததாகும். 

சிக்கிமில் 13 விழுக்காடு குழந்தைகள் பிறக்கும்போதே எடை குறைவாகப் பிறக்கின்றன, மத்தியப் பிரதேசத்தில் அது 24 விழுக்காடாக இருக்கிறது. சிக்கிமில் திருமணமான பெண்களின் 11 விழுக்காட்டினர் உடல் திரள் அட்டவணைப்படி(BMI) 18.5 அளவில் தான் இருக்கின்றனர்.(இதுமிகக் குறைவானதாகக் கருதப்படுகிறது) மத்தியப்பிரதேசத்தில் இது 38 விழுக்காடாக இருக்கிறது. 0-6 வயதில் ஆண்-பெண் விகிதம் சிக்கிமில் 986 ஆகவும் ம.பி.யில் 929 ஆகவும் இருக்கிறது. சிக்கிமில் பெண்களின் திருமண வயது 22, ம.பி.யில் அது 19. சிக்கிமில் பெண்களின் படிப்பறிவு விகிதம் 62 விழுக்காடாகவும் ம.பி.யில் 50 ஆகவும் இருக்கிறது. சிக்கிமில் 6-17 வயதுகளில் இருக்கும் பெண்களில் 89 விழுக்காட்டினர் பள்ளிகளில் படிக்கின்றனர், ம.பி.யில் அது 71 விழுக்காடு தான். 

முக்கியமான தொடர்பு  

வேறு சொற்களில் சொல்வதானால், சிக்கிமில் பெண்கள் காலம் தாழ்த்தித் திருமணம் செய்து கொள்கின்றனர். கூடுதலாக படிப்பறிவு பெற்றவர்களாகவும் நல்ல உடல் நலத்துடனும் இருக்கின்றனர். அதன் விளைவாக, குறைவான குழந்தைகளே எடை குறைவாகப் பிறக்கின்றனர்.

பெண்களின் நிலைமைகளுக்கும்-கல்வி மற்றும் உடல்நலம் காத்தல் ஆகியவற்றுக்கு உள்ள வாய்ப்புக்கும் – குழந்தைகளிடம் சத்துப் பற்றாகுறை இருப்பதற்கும் இடையில் உள்ள தொடர்பு தெளிவாக இருக்கிறது. தாங்களே சத்துப் பற்றாக்குறைபாட்டிலும் ரத்த சோகையிலும் இருக்கும் இந்தியப் பெண்கள் (இந்தியாவில் 56 விழுக்காடுப் பெண்கள் எதோ ஒரு வகை ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.) இளம் வயதிலேயே கருத்தரிப்பதால் அவர்கள் குறைந்த எடையுள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள் அந்தக் குழந்தைகள் பின்னர் ஒருபோதும் தேறுவதில்லை. 

தேசிய குடும்ப நல ஆய்வு -3 {2005-06) பெண்களின் ரத்த சோகை பற்றிய அண்மைக் காலப் புள்ளிவிவரத்தை தந்துள்ளது. அதுவும் பெண்களில் 56 விழுக்காட்டினர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஆண்களில் 24 விழுக்காடு தான் அந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தியாகும். ரத்த சோகையில் கூடப் பாலின் வேறுபாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் 15-19 வயதுகளில் இருக்கும் பெண்களில் 47 விழுக்காடு ரத்தசோகையுடன் இருக்கிறார்கள். அதற்குமேலும் இந்தியாவில் தாய்மைப் பேற்றில் உள்ள 56 விழுக்காடு பெண்கள் ரத்த சோகையுடன் தான் இருக்கிறார்கள். 

இவை வெறும் எண்களின் தொகுப்புக்களாகத் தெரியலாம். ஆனால் அடுத்த முறை நீங்கள் இருக்கும் கிராமத்தில் அல்லது நகரத்துச் சேரியில் குழந்தைகள் இறப்பதைப் பற்றித் தெரிய வரும்போது இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வீர்கள். சென்ற மாதம், வெகு வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு பெரு நகரத்தில் வாழ்வது ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புக்களைத் தரும் என்று எண்ணிக்கொள்ள முடியாது என்னும் மிகப்பெரிய குரூரமான உண்மை ஒருநாள் வெளிப்பட்டதை மக்கள் அறிந்துகொண்டார்கள். கொவந்தியில் சிவாஜி நகர் சேரியிலிருந்து சாஹில் சலீம் என்ற 9 கிலோ எடை மட்டுமே இருந்த 15 மாதக குழந்தை “சளி, காய்ச்சலால்” இறந்துபோனது நகரத்திலும் கிராமத்திலும் பட்டினி எவ்விதம் மக்களைப் பீடித்திருக்கிறது என்ற கசப்பான உண்மையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. உண்மையில், கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் குழந்தைகள் சத்துப் பற்றாக்குறை பிரச்சனை மேலானதாக இருக்கிறது, இருந்தாலும் 32 விழுக்காடு அதாவது மூன்றில் ஒரு குழந்தை என்ற விகிதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். 

நாம் எண்ணிப்பார்க்க விரும்புவது இந்த இந்தியாவைப் பற்றி அல்ல. இருப்பினும் இந்த இந்தியாவில் தான் பெண்களில் பாதிப்பேர் ரத்த சோகையிலும் குழந்தைகளில் பாதிப்பேர் சத்துப் பற்றாகுறையிலும் உயிர்வாழும் வாய்ப்புக்கள் மங்கி வருகின்றன என்று எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இதை மாற்றுவதற்கு நாம் என்ன செய்கிறோம்? அரசாங்கம் இதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், இந்தப் பிரச்சனையைக் கையாள்வதற்கு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டம் போன்ற திட்டங்களை எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால் நமக்கு அதற்கு மேலும் தேவை.

ஊடகங்கள் புலிகளைப் பாதுகாக்க இயக்கம் நடத்தி கொண்டிருக்கின்றன. ஒரு துணிச்சல் மிக்க இயக்கம் தான். ஆனால் இந்தியாவில் உள்ள குழந்தைகளும் கூட அழிந்து வருகிறார்கள். அவர்களுக்கும் கூட ஊடகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசியல்வாதிகள், பெருங்குழும நிறுவனங்கள் மற்றும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த வறுமை மற்றும் ஏழ்மையின் வளையத்தை உடைப்பதற்கு செயலூக்கமிக்க இயக்கத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. 

 நன்றி: கல்பனா சர்மா  (தி இந்து நாளிதழ், 09.01.2011)

- வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It