சாம்பல் பூத்த அந்தக் காடு... தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்..... கனவுகளும் அலைந்து கொண்டே திரியும் அந்தக் காடு... சிமிட்டாத காட்சியாக இரைந்து கிடந்தது.... முன்பு கூறியதை போலவும்...

boy 277அலை பாய்ந்து கொண்டே இருந்த கண்களோடு எட்டு வயது நடக்கின்ற அந்த இரண்டு சிறுவர்களும்... காட்டின் ஒரு மூலையில்... இருந்த புதருக்குள்.. குத்த வைத்து ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடி.. இரட்டை தீர்க்கமென வெறித்துக் கொண்டிருந்தார்கள்..... அவர்களின் உடல் முழுக்க சாம்பல் பூத்த நிறம்... உதிரவுமில்லை....அவர்கள்  உணரவுமில்லை...அவர்கள் கழுகின் மெழுகைப் போல மாற்றி வார்த்த மனிதர்களாக அமர்ந்திருந்தார்கள்.... அது கண்களின் களவுக்குள்..... பூத்துக் கொண்டே இருக்கும் சாம்பல் காடுகளின் சாமப் பசியைப் போல... நிறைந்து வழிந்து கொண்டிருந்தது...

அவர்கள் குனிந்து அமர்ந்திருந்த பொழுது முழுக்க எதிரே இருந்த காட்டுக்கு செல்லும் வழி....... நீண்டு கிடந்ததை.... இன்னும் இன்னும் கூராக்கி கண்களாலே செதுக்கினார்கள்.....சற்று நேரத்தில் அது நடந்தது.... அந்த வேட்டையின் வியாக்யானம்.. வழியாய் நிகழ்ந்தது... பாதங்களில் சில.. சேர்ந்து சேர்ந்து.....பூக்கள் நசுக்கப்பட்ட துயரம் மிகுந்த வலியோடு..... நடுங்கிக் கொண்டும்.. தள்ளாடிக் கொண்டும்... தவித்துக் கொண்டும்.. சுமை தாங்கும்.. நரம்புகளின் இறுக்க புணர்வுகளோடு அந்த பாதையில் அவர்களின் கண்களை நிறைத்து உதிர்த்து சென்றன...அந்த இரு சிறுவர்களின் கண்கள்.... சிமிட்டவும்... மறக்காமல்...நிலை குத்தி நின்றிருந்தன...சாம்பலின் நிறம்..... அசைவற்று அதே நிறத்துள் தன்னை இன்னும் இன்னும் அப்பிக் கொண்டே மறக்காமல் கிடந்தது அந்த சாமக் காடு... அசைவற்ற புள்ளிக்குள் அவர்களின் நான்கு கண்களும் இரண்டு இதயங்களாகி துடித்துக் கொண்டிருந்தன...

சற்று நேரத்தில்.....முன்பு சென்ற பாதங்கள்.. தனி தனியாக இரண்டு மூன்று ஜோடி சேர்ந்து... வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட ஒரு வகை தளர்வான சோக நடையோடு திரும்பிக் கொண்டிருந்தன....அவர்கள்... கண்கள் பார்க்கவும் மறந்து போனது போல.. விழி குத்தி நின்ற பாதையில் பின், வர இனி ஒரு பாதமும் இல்லை என்று ஊர்ஜிதமானது..... படக்கென்று எழுந்து இருவரும் ஓடினார்கள்......

ஓடி..........................னார்............................கள்.........

சாம்பல் பூத்த காட்டுக்குள் மரங்களின் கிரீச்சிடும் ஒலியாக அவர்களின் ஓட்டம் ஒரு பசித்த இரவுப் பிணியின் பெருங்குரலாக தெரிந்தது... அவர்கள்... ஓடி சென்று மூச்சிரைக்க நின்ற இடத்தில்.. சற்று முன் புதைத்து விட்டு போன... பிணத்தின் மேடு.. மண்ணாகி..... பெரும்பாடு பட்டு.. குவிந்து இறுகி படுத்திருந்தது... தலைமேட்டில் மண் சட்டி அவர்களை 'வா....வா.....' என்பது போல பார்க்க பார்க்க படக்கென்று இடுப்பில் சுத்தி இருந்த துண்டை இருவருமே ஒரு சேர அனிச்சை செயல் போல.... எடுத்து விரித்தார்கள்.....பிறகு அந்த கலசத்தில் இருந்த அரிசியை ஆளுக்கு கொஞ்சமாய் சமமாக பிரித்து கொட்டினார்கள் ... பின் துண்டை இறுக்கி முடிச்சிட்டு தோளில் போட்டபடி அதே வேகத்தில் காட்டை விட்டு வெளியேறி ஓடினார்கள்...அவர்கள் அப்படித்தான் என்பது போல.  மிகச் சிறிய தத்துவம் அங்கே இல்லாமல் போனதாக கடைசி காகம் கரைய மறுத்து முறைத்துப் போனது...

இது தொடர்ந்தது.......தொடர்ந்தது...........தொடர்ந்து கொண்டேயிருந்தது.........

என்றெல்லாம் பிணம் வருகிறதோ.. அன்றெல்லாம்... பெரும் காக்கைகளாகி அவர்கள் இரை கொத்திப் போனார்கள்...பசி வந்த நாளில் எல்லாம் பிணம் தேடினார்கள்... சிறை உடைக்கும் சாம்பல் காட்டில் நிலவே இல்லாத கற்பனையை அவர்கள் செய்து கொண்டார்கள்... அது ஒற்றை சாட்சி என்பது அவர்களின் தூரத்துக் கணக்கு......நண்பன் வராத நாளில்... அவனுக்கும் சேர்த்து... அதே போல இரு துண்டில் எடுத்துப் போனான் ஒருவன்.. மற்றவனும் அப்படியே செய்தான்.. அது அவர்களின் கூட்டுப் பிராத்தனை... ஊனாகிய பிரச்சினை.. உயிராகிய பிரச்சினை.. உண்ண உண்ண இல்லாமல் போகும் மாயப் பள்ளத்தாக்கு வயிற்றின் பிரச்சினை....

அன்றும் ஒருவன் அதே புதரில்.. அமர்ந்திருந்தான்.... இடது பக்கம் திரும்பி காட்டுக்கு அப்பால் அல்லது ஆகாயத்துக்கு அப்பால் அவன் பார்வை வெறுமனே ஒருமுறை போய் வந்தது....... பாதைகளில் தடுமாறிய கால்கள் பூக்களை நசுக்கி பூமியை பிளந்தபடி புரண்டு கொக்கரிக்கும் மரணத்தின் கால்களுக்கு இடையில் எறும்புகளின் கனவைப் போல வந்து... எப்போதும் போல.... சற்று நேரத்தில்... எதுவும் கடந்து போகும் என்பது போல, போன பின்.... ஓடிய அவன்......அந்த பிணத்தின் தலை மேட்டில் இருந்த கலசத்தை நடுங்கிக் கொண்டே எடுத்தான்.... கலசத்தை கூர்ந்து கவனித்தான்.. அவன் கண்களின் நீர் அந்தக் கலசத்துக்குள் ஒரு கடவுளின் கண்ணீரைப் போல சொட்டியது. 

பின், நடுங்கிய உடம்பை நடங்கவே விட்டு விட்டு, ஒரு நிலைக்குள் வராத மனதோடு...அவனுக்கும், இனி எப்போதுமே வராத அவன் நண்பனுக்கும் எப்பவும் போல தனி தனி துண்டில் அரிசியைக் கொட்டிக் கட்டினான்.....

கட்டி முடித்த பின் முகம் பொத்தி அழத் தொடங்கினான்.... பின், எப்போதும் சிட்டாக பறக்கும் அவனின் கால்கள்.. தள்ளாடி தள்ளாடி... வீட்டை நோக்கி நடை போட்டது......முதன் முறையாக அரிசியின் கனத்தை உணர்ந்திருந்தான்.  முதலில் அவன் இல்லாத அவன் வீட்டுக்கு போய் இதைக் கொடுத்து விட்டு........ பின் தன் வீட்டுக்கு போக வேண்டும் என்றது அவனின் பசியின் கனம்.

அங்கே... பிணமாய் குறுகியிருந்த மண் மேடு அந்த இரு சிறுவர்களில் ஒருவனுடையது என்று இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும்...!

சாமக் காடுகள் ஒளித்து வைத்திருக்கும் நிறங்களில்.....இது வறுமையின் நிறம்...

- கவிஜி