அரசு என்பது நாம் நினைப்பதுபோல் அனைவருக்குமானது அல்ல. நமக்காக வேலை செய்யும் அரசும் இல்லை. ஆகவே நாம் இந்த அரசுகளைக் கண்மூடித்தனமாக நம்பத் தேவையில்லை. பிறகு, தேர்தல் முறையில் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து அவர்களை அந்தப் பதவிக்கு, அதிகாரத்திற்கு நாம்தானே அனுப்புகிறோம். அவர்கள் நமக்கான அரசாக, நமக்காக வேலை செய்யும் அரசாகத்தானே இருக்க முடியும் என, ‘’சிறுபிள்ளைத்தனமாக’’ கேட்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் நமக்காகச் செயல்பட மாட்டார்கள். அங்கே அவர்களுக்கு மேலே எஜமானர்கள் உள்ளார்கள். அவர்கள் சொல்படிதான் கேட்பார்கள்,

இங்கே முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் உள்ள நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களால்தான்  அரசு, அரசாங்கம் என இந்த இரண்டையும் தீர்மானிக்கும் நிலை உள்ளது. இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால், கொள்ளைக்கூட்டங்களால்  எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் நாம் இது நமக்கான அரசு என்று நினைத்தால், தவறு நம்முடையதுதான். பிறகு நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தது? அதெல்லாம் ஒரு நடைமுறை (நம்மை) பொதுமக்களை ஏமாற்ற. ஆனால் அதை மாற்றவேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.          

பொதுவாக, அரசியல் பார்வையற்ற, ஈடுபாடற்ற பொதுமக்கள் மட்டுமல்ல, வர்க்கப் பார்வையற்ற அரசியல் நோக்கர்களேகூட அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானதென்றும், ஜனநாயகப் பூர்வமானதென்றும் நம்புகிறார்கள். இது அறியாமை மட்டுமல்ல பெரும் தவறும்கூட. காரணம், நாம் இவ்வாறே நம்பிக் கொண்டிருந்தால் நமது அறியாமையை நாம் இன்னும் உணராமல் இருந்தால் அவர்களால் விளையும் பெரும் ஆபத்திலிருந்து நம்மால் தப்ப முடியாது.

நமது நாட்டில் என்று தனியார்மயம், தாராளமயம், உலகமயம், என மறுகாலனியக் கொள்கைகள் புகுத்தப்பட்டதோ அன்றே அதனோடு சேர்த்து, அரசின் கொள்கைகளும், செயல்திட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அது, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு எந்திரம், ஒரு வன்முறைக் கருவி என்ற அதன் பாத்திரம். மேலும், மேலும் அதன் கைகள் கொடூரத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கே சொல்லப்படுகின்ற போலி ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு சில சிவில், ஜனநாயக உரிமைகள்கூட வெட்டிச் சுருக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன, வந்திருக்கின்றன.

அதன் விளைவுகளை இன்று நாம் நேரடியாகக் காண்கின்றோம் குறிப்பாக ஊர்வலங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இடங்கள், மக்கள் கூடாத ஒதுக்குப்புறமான இடங்களாக வரையறுக்கப்படுகின்றன. பத்து மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது, சுவரொட்டிகள் ஒட்டத் தடை, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது – என இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. இதற்கேற்பச் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. படிப்படியாக ஒரு போலீசு அரசாக, பாசிசத்தன்மை கொண்டதாக அரசு மாற்றப்பட்டு வருகின்றது.

நாம் சாப்பிடும் அனைத்துவிதமான உணவுப்பொருட்களிலும், உணவு உற்பத்தி முறையிலும் உடலுக்குக் கெடுதல் தரக்கூடிய நஞ்சு நிறைந்துள்ளது. இவைகளைத் தெரிந்தே, அரசு அனைத்து உணவுப் பொருட்களையும் விற்பனைக்கு அனுமதித்து மக்களை நோயாளிகளாக்கும் வேலையை அரசே செய்ததோடு மட்டுமல்லாமல், மருத்துவத்தை மக்களுக்கு எட்டாக்கனியாக்கி அதை தனியார் வசம் ஒப்படைத்து மக்கள் நோயிலிருந்து விடுபட முடியாமல் சாகவேண்டும், அல்லது தங்களிடம் எதாவது சொத்து என்று இருந்தால் அதையிழந்து, அல்லது தங்களின் உயிரைக் காப்பாற்ற கடன் வங்கி வைத்தியம் பார்த்து கடன்காரர்களாக மாறி  நடுத்தெருவுக்கு வந்துவிட வேண்டும்.

அரசு கல்வியை அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தர வேண்டும் ஆனால் இங்கே நிலை என்ன? பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள்  தனியாரின் கைகளில், அரசியல் வாதிகளின் கைகளில் உள்ளது. இதில் பொதுமக்கள்  தங்கள் பிள்ளைகள் 12-ஆம் வகுப்புவரை படிக்க இதுநாள்வரை தாங்கள் சம்பாதித்ததை, தினம்தினம் சம்பாதிப்பதைச் செலவு செய்யவேண்டும், அதன் பிறகு உயர்கல்விக்கு அரசே வங்கியில் கடன் கொடுக்கும், கல்லூரி நடத்தும் அரசியல் வாதிகளுக்கு வியாபாரம் நடக்க வேண்டுமல்லவா? அதனால், பிறகு கல்வியை முழுமையாக முடித்தார்களோ இல்லையோ? ஆனால் கல்லூரியை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் ஒவ்வொரு மாணவர்களும் கடன்காரர்களாகவும், உளவியல் நெருக்கடியுடனும் வெளியே வரும் இவர்கள், எதாவது ஒருவேளைக்கு சென்றுவிட வேண்டிய நெருக்கடி மற்றும் அந்த வேலை கடினமாக, சம்பளம் குறைவாக, கொடுமைகள் நிறைந்ததாக இருந்தாலும், அந்த நிறுவனங்கள் சொல்படி ஆடும் பொம்மைபோல் ஆகிவிடுகிறார்கள். காரணம் இளம் வயதிலேயே தான் படித்த கல்விக்காக வாங்கிய கடன் சுமை.

வேலை கடினமாக உள்ளது, சம்பளம் குறைவாக உள்ளது. ஆகவே  இதைவிட வேறு நல்ல நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்கிறேன், என இளைஞர்கள்,  வேலைக்குச் செல்வதிலிருந்து நின்றால், அல்லது வேலைக்குச் செல்ல சில நாட்கள் எடுத்துக்கொண்டால் கூட, நமது பெற்றோர்களே அந்தப் பிள்ளைகளை, நீ படிக்க வாங்கிய கடன் அப்படியே தலைக்குமேல் உள்ளது, நீ என்னடான்னா வேலைக்குப் போகாம ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிற என்று பேச ஆரம்பித்து ஒருவழி செய்துவிடுவார்கள். இவ்வாறுதான் நடக்க வேண்டுமென்பது அதிகாரவர்க்கமும், அரசும் திட்டமிட்டுச் செயல்படுகிறது. பிறகு, இது போன்ற இளைய சமுதாயத்தினரின் மனநிலையும் செயல்பாடும் அரசை நோக்கி கேள்வி எழுப்புமா? எழுப்பாது, எழுப்பக்கூடாது என்பதுதான் அரசின், அதிகாரவர்க்கத்தினரின் திட்டம். ஒருவேளை இந்தக் கண்டத்திலிருந்து தப்பி, அல்லது தாண்டி வந்தவர்களை சும்மா விட்டுவிடுமா? மக்கள் நல அரசுகள்.

இருக்கவே இருக்கிறது அடுத்த அஸ்திரம். ‘’சாராயக்கடை’’. மக்களுக்கு அத்தியாவசியமான ‘’மதுவை அளிப்பதில்’’ எந்தச்சூழ்நிலையிலும், எக்காரணத்தைக் கொண்டும் இந்தச் சேவையை நிறுத்த மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு இந்தச் சேவையை செய்துவரும் அரசுகள், தொடர்ந்து இப்பணியை பலநெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றன, நமது மக்கள் நல அரசுகள். காரணம். நமது நாட்டு மக்கள் மீது அவ்வளவு அக்கறை. குடிக்கு அடிமையாகி பைத்தியம் போல் தன் சுயம் இழந்து சுற்றித்திரிய வேண்டுமல்லவா அதனால்தான். ஆண்டான் அடிமை முறையை நடைமுறைப்படுத்த ஒரு சிறுக்கூட்டம் பெரும்பான்மை மக்களை முட்டாள்கள் என நினைத்துச் செயல்படுகிறது. அதற்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால், பேசினால், எழுதினால் வன்முறை செய்து அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி பணிய வைக்கிறது. அடங்கிப்போக வைக்கிறது, பணியாவிட்டால் கொலையும் செய்கிறது. இதுதான் இவர்களின் உண்மை முகம். இவர்களைத்தான் நாம், நமக்கான அரசுகள் என்று நம்பிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருக்கின்றோம்.

நிலத்திற்கும் மக்களுக்கும் இடையில் உள்ளத் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பதுதான் கொள்ளைக் கூட்டத்தார்களின் திட்டம். அதை, இந்த அடியாட்கள் செவ்வனே செய்து முடிப்பார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக கருநாடகாவின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் அங்கே உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதன் விளைவாக நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்த நீரால் அந்த அணை இரண்டுமுறை அதன் முழுக்கொள்ளளவை அடைந்தும், லட்சக்கணக்கான கனஅடி நீர் திறந்துவிட்டு ஒருமாத காலத்திற்குப் பிறகும் நீர் இன்னும் கடைமடைப் பகுதிக்குச் சென்றடையவில்லையென்றால். இதெல்லாம் இயற்கையானது இல்லை. திட்டமிட்டே செய்யப்படுகிற சதி. காரணம் நீர் சென்றால்தான்  விவசாயம் செய்யத் தொடங்கிவிடுவார்களே, பிறகு எப்படி அந்த பகுதியிலிருந்து அந்த மக்களை விரட்டுவது, பிறகு அந்தப் பகுதியில், நிலத்திற்கடியில் உள்ள வளங்களை கொள்ளை அடிப்பது, ஆக அதைத் தடுப்பதற்கான வேலைதான் இதெல்லாம். கடல், ஆறு, மலை, நிலம் என அனைத்தும் கொள்ளைக்கூட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதே பெரும்பான்மையான மக்கள் தாங்கள் வாழ்ந்த சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள்.  

இங்கே நிலம், மற்றும் சொத்து என்பது அதிகாரத்தின் குறியீடு. ஆகவே அதைப் பறிப்பதுதான் அதிகாரவர்க்கத்தின் முதல் வேலை (அரிப்பு) எல்லாம். காரணம், மக்கள் அனைவரும் எதிர்த்து நின்று கேள்வி கேட்கத் துணிவில்லாத அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதுதான் அதிகார வர்க்கத்தினரின் எண்ணம். அதைப் பெரும்பான்மை மக்களின் கையில் இருக்க அனுமதிப்பார்களா? ஆகவே, அரசு என்கின்ற தங்களின் கைக்கூலிகளின் மூலம் அதைப் பறித்துக்கொள்கிறார்கள். மக்கள் எப்போது வாழ்வாதாரத்திற்காக தங்களின் வாழ்விடத்தை விட்டு, நகரத்தை நோக்கி நகர்ந்தார்களோ அது அந்தந்தத் தனிப்பட்ட நபர்களுக்கு வாழ்வில் ஏற்றம் பெற்றிருக்கலாம் ஆனால் அதுதான் கொள்ளைக் கூட்டத்தார்களின் திட்டமும் அவர்களின் அந்தத் திட்டத்தின் வெற்றிக்கான தொடக்கமும் அப்போதுதான் தொடங்கலாயிற்று.

வறுமையின் காரணமாகவும், கலாச்சார நுகர்வின், மோகத்தின் விளைவாகவும், அதற்கான பணம் சம்பாதிக்க வேண்டியும் நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடிக்கப்படும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் பெரும் பட்டாளமாகத் திரண்டு நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள்.

ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகளோ கொள்ளை இலாபம் அடைகிறார்கள். அதேவேளையில் தங்களுக்காக உழைக்கும் மக்களுக்கு எதாவது செய்வார்களா? செய்தார்களா? என்றால், எதுவும் இல்லை. ஆகா இது அவர்களின் குணம் அப்படித்தான் இருக்கும். ஆனால் உழைக்கும் மக்களாகிய நாம் இப்படியே இருக்கப் போகின்றோமா? இல்லை! இழந்த நமது மண்ணை, உரிமையை மீட்டெடுக்கப் போகின்றோமா? ஆம் என்றால் எப்படி? அமைதியாகவா? உரக்க குரல் எழுப்பி, போராட வீதிக்கு வராவிட்டால் இங்கே எதுவும் நடக்காது. ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறை இருக்கும், அதற்கெல்லாம் அஞ்சினால் நமக்கென ஒன்றும் மிஞ்சாது. உண்மை என்னவென்று அறிவோம். உரக்கக்குரல் கொடுப்போம். உரிமையைப்பெற உயிர் உள்ளவரை போராடுவோம். வெற்றி பெறுவோம். உழைக்கும் மக்களே ஒன்றுசேர். இந்த உலகம் அனை(த்திற்கும்)வருக்கும் சொந்தமானது. அதிகார வர்க்கத்தினருக்கு மட்டும் உரியதல்ல.                  

Pin It