(எதிர்வரும் அக்டோபர் மாதம் குற்றாலத்தில் தமிழ் இலக்கிய உலகின் புகழ்பெற்ற கவிதைப்பட்டறை நடக்க இருக்கிறது என்ற செய்தியை அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். அக்டோபர் 1998ல் நடந்த இப்பதிவுகள் ஏழுவருடம் கழித்து இப்போது நடக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சம். இந்தக் கருத்தரங்கில்தான் எவ்வளவோ நவீன விசயங்கள் அறிமுகமாயின. விமர்சகத் திலகங்களின் புகழ்பெற்ற அடிதடிகளும், சிலம்பாட்டங்களும் நடந்தேறினாலும், சிந்தனைக்கு விருந்தும் இங்கேதான் திகட்டத் திகட்டக் கிடைக்கும். அந்தப்பட்டறையில் நடந்த நிகழ்வுகளை வைத்து அப்போது எழுதிய parady இது. அதை இப்போது வெளியிடும் தருணம் வாய்த்த காலத்துக்கு நன்றி)

திட்டத்தின் கடைசி அமர்வில் டி.கண்ணன் யதார்த்த தளத்துக்கும் பின்நவீனத்துவ தளத்துக்கும் இடையே உள்ள கலைநுட்பத்தை ஒரு தேவதைக் கதையை முன்வைத்து எடுத்துரைத்தார்.

ஒரு ராஜகுமாரியை மந்திரவாதி தூக்கிவந்து ஒருமாடிவீட்டில் சிறை வைக்கிறான். அவளை மீட்கவரும் ராஜகுமாரன் கீழேயிருந்து மேலேயுள்ள மாடிக்கு ஏற வழியற்று திகைத்து நிற்கிறான். ராஜகுமாரி மேலேயிருந்து தனது கூந்தலை அவிழ்த்து விடுகிறாள். கூந்தல் மாடியிலிருந்து கீழே பூமியைத் தொட்டுத் தொங்குகிறது. ராஜகுமாரன் கூந்தலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு மேலே ஏறிவந்து ராஜகுமாரியை மீட்கிறான்.

இக்கதையிலுள்ள, யதார்த்த தளத்திலிருந்து பின்நவீனத்துவ தளத்துக்கு ஏறும் நுட்பமான அம்சத்தை அவர் விவரித்த போக்கு அருமையாக இருந்தது.

கருத்தரங்கு முடிந்து அருவிக்குக் குளிக்கப் போனோம். கீழேயுள்ள பிரதான அருவியைத் தவிர்த்து, மேலேயுள்ள தேனருவிக்குப் போவதென முடிவு செய்து புறப்பட்டபோது, கவிஞர் விக்ரமாதித்தனும் வருவதாகப் புறப்பட்டார்.

“அண்ணாச்சி உங்களாலே வரமுடியாது. ஏனெனில் மெயின் அருவி என்பது யதார்த்த தளம். தேனருவி என்பது பின்நவீனத்துவ தளம். நீங்களோ யதார்த்தவாதி. உங்களாலே அங்கே வரமுடியாது. அதனாலே இங்கேயே இருங்க...” என்றோம்.

கருத்தரங்கு தந்த குஷியில் தானும் ஒரு பின்நவீனத்துவவாதி ஆகியே தீருவது எனப் புறப்பட்டார் விக்ரமாதித்தன். பேசிக்கொண்டே கீழேயுள்ள மெயின் அருவிக்குப் போய்ச் சேர்ந்தோம். பொழிந்து கொண்டிருந்த அருவியின் நீர் வீழ்ச்சியைக் கை காட்டி “ம்.. ஏறுங்கள்..” என்றோம். முந்தாநாள் இரவில் எம்.யுவனிடம் மாட்டிக் கொண்டு முழித்தவர் போல முழித்தார் விக்ரம்.

சரேலெனப் பொழிந்து கொண்டிருந்த அருவியின் நீர் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு நாங்கள் ஒவ்வொருவராய் ஏறத் தொடங்கினோம். திகைத்துத் தடுமாறிய விக்ரமாதித்தன் செய்வதறியாது கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவராய், மெதுவாகத் தட்டுத் தடுமாறி அருவியின் நீர் விழுதுகளைப் பற்றியபடி தொத்தி ஏறத் தொடங்கினார். அப்போது அருவிக்குள் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த யதார்த்த வேதாளமானது பேச ஆரம்பித்தது.

“அகோ வாரும் பிள்ளாய் விக்ரமாதித்தக் கவிராஜனே, உமக்கோ பின்நவீனத்துவவாதி ஆகவேண்டும். எமக்கோ சில கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும். ஒருசில நிகழ்வுகளைச் சொல்லி முடிவில் ஒருகேள்வி கேட்பேன். நீர் விடை கொடுக்க வேண்டும். விடை கொடாதிருந்தால், உனது எழுதுகோல் எழுதும்போது பாதியிலேயே முறிந்துபோகச் சாபமிடுவேன்..” என்று சொல்ல, விக்ரமாதித்தனும் சரியெனத் தலையசைக்க, யதார்த்த வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

திரிபு வாதத்தின் கதை

முதல்நாள் அமர்வில், ‘உலகக் கவிதைகள்’ குறித்து மனுஷ்யபுத்திரன் வாசித்த கட்டுரையின் பார்வையும் உழைப்பும் விரிவான மொழி தளத்திற்குள் நுழைந்து முக்கியமான கட்டுரையாக அரங்கத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அடுத்து யவனிகாஸ்ரீராம் துவக்கி வைத்த ‘மொழியின் போதாமை’ குறித்த விவாதத்தை சுழற்றினார் ஜெயமோகன். மேலும் அதுகுறித்து, லாங், பரோல் போன்ற நுட்பமான மொழியியலுக்குள் நுழைந்து விவரித்தார் பிரேம்.

அடுத்து முத்துக்குமார், ஜெயமோகனின் பேச்சிலிருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டினார். அதற்கு, “இந்தத் தமிழ்ச் சூழலில் நான் பேசுபவைகளைத் திரித்துத் திரித்து வேறுவேறு அர்த்தம் காண்பித்து திரிபுவாதம் செய்கிறார்கள்” என்றார் ஜெயமோகன்.

முத்துக்குமார் விஸ்தாரமாக விளக்கவே, ஜெயமோகனிடமிருந்து மறுபடியும் மேற்கண்ட வார்த்தைகள் அவரது நாவல் சைஸில் வந்து விழுந்து கொண்டேயிருந்தன.

“அப்படியெனில் நீங்கள் கட்டுரை எழுதிக் கொண்டு வந்திருக்கவேண்டும். நீங்கள் பேசும்போது ஒரு விசயம் பேசுகிறீர்கள், விளக்கம் கேட்டால், நான் அப்படிப் பேசவில்லை நீங்களாகத் திரிக்கிறீர்கள் என்கிறீர்கள். இது சரியான வாதமல்ல” என்றார் முத்துக்குமார்.

அடுத்து, நீட்சே ‘பெண்டுலம்’ என்கிற படிமத்தைப் பயன்படுத்தியது பற்றி ஜெயமோகன் பேச, ‘அவர் எந்த இடத்தில் பயன்படுத்தி யிருக்கிறார்’ என்று முத்துக்குமார் கேட்க, விவாதம் சூடுபிடித்தது. பெண்டுலம் குறித்த விரிவான பார்வையை முத்துக்குமார் எடுத்து வைக்கவே, “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..” என்று சட்டென மறுத்தார் ஜெயமோகன். “வேறு எந்த அர்த்தத்தில்..” என்று விளக்கம் கேட்டபோது, “உங்களுக்கு என்ன வேண்டும்? ஜெயமோகனை மடக்க வேண்டுமா..?” இப்படி ஜெயமோகன் திருப்பிக் கேட்டதும் அரங்கமே அதிர்ந்து விட்டது அதிர்ந்து.

“நீங்கள் அப்படிப் பேசியது அகங்காரமானது” என்றார் முருகேசபாண்டியன். “இவ்வளவு அகந்தை வேண்டியதில்லை, இங்குள்ள அனைவருமே பெரிய ஆளுகதான்” என்றார் டி.கண்ணன்.

எனில், உண்மையில் திரிபுவாதி யார்? யாருக்கு நவீன தமிழ் இலக்கிய உலகம் கட்டுப்பட்டிருக்கிறது? இதற்கான விடையை அறிந்திருந்தும் நீ சொல்லாது போனால் உனது எழுதுகோலும், நீ சொல்லச் சொல்ல எழுதுபவரின் எழுதுகோலும், எழுதும்போது பாதியிலேயே முறிந்துபோகக் கடவது என்றது யதார்த்த வேதாளம்.

“ஜெயமோகன் நிகழ்த்திய உரையாகப்பட்டது, நவீன இலக்கியத்தை மேலெடுத்துச் செல்வதற்கான பாதையாக விவாதத்தில் மாறும்போது அதற்கான பாதைகளை, ‘தான்’ ஐ முன்னிறுத்தி அடைத்து விட்டதால் அந்நிகழ்வே வெற்று வாதங்களுக்கான தளமாக மாறிப்போனது. பிரேம், அந்த ஆழமான விசயங்களைத் தெளிவாக்கியவர். ஆனால், முத்துக்குமாரோ அதில் உள்ள முக்கியமான தவறுகளைச் சுட்டிக்காட்டியும், திரிபுவாதம் என்றால் என்ன என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தவும் செய்ததால், அவருக்கே நவீன தமிழ் இலக்கிய உலகம் கட்டுப்பட்டிருக்கிறது.” என்று விக்ரமாதித்தன் சொல்லவே, யதார்த்த வேதாளம் பதிலேதும் பேசாது சட்டெனத் தன் கைப்பிடியை நழுவவிட, நீர்விழுதுகள் அறுந்து கீழேபோய் விழுந்தார் விக்ரமாதித்தன்.

புதுவகை எழுத்தின் கதை

தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் அருவியின் நீர்விழுதுகளைப் பிடித்துத் தொத்தி மறுபடியும் ஏறத் துவங்க, எதிர்ப்பட்டது ய. வேதாளத்தின் குரல்: யதார்த்த தளத்தின் பல்வேறு பரிமாணங்களை தன் கவிதையில் தொட்டுக் காட்டிய யதார்த்தகுலத் திலகமே,

அடுத்தநாள் சிறுகதை அமர்வில், கௌதம சித்தார்த்தன் தனது புதுவகை எழுத்து பற்றியும், அது காலவெளியில் இயங்கும் நுட்பத்தையும் முன்வைத்து கட்டுரை வாசித்தார். லட்சுமி மணிவண்ணன் எதிர்வினையாற்றினார். அடுத்து வந்த பிரேம், ‘பின்நவீனத்துவக் கதை சொல்லல்’ குறித்து விரிந்த தளத்தில் முற்றிலும் புதிய பார்வையுடனான கட்டுரை வாசித்தார். காத்திரமான வெகுவாகப் பேசப்பட வேண்டிய கட்டுரையாக அதுமாறியது. பார்வையாளர் விவாதத்தை வழக்கம்போல ஜெயமோகனே ஆக்கிரமித்தார். முந்தியநாளும் இதேபோல ரமேஷ்பிரேதனின் நவீன கவிதைக் கோட்பாடுகள் குறித்த கட்டுரையின் விவாதத்தில் கோட்பாட்டு ரீதியாக உட் புகுந்த ஜெயமோகன் பேசிக்கொண்டேயிருந்தார். நிற்க.

பின்நவீனத்துவக் கதையாடல் என்பது என்ன? கௌதமசித்தார்த்தன் சொல்லும் புதுவகை எழுத்து என்பது என்ன? இவை நவீனத்துவ எழுத்திலிருந்து எந்த இடத்தில் வேறுபடுகின்றன? இதற்கான சரியான விடையைச் சொல்லாவிடில், உன் கவிதைகளை என் சாபத்துக்கு டிமிக்கி கொடுத்து நேரடியாக கம்ப்யூட்டரிலேயே எழுதும்போது “கிரிட்டிக்வைரஸ்” உட்புகுந்து அழிக்கக் கடவது என்றது.

“வரலாறு, கதைசொல்லும் நுட்பம், கலாச்சாரக் கூறுகள், மெய்மைத்தேடல், நவீன மனித வாழ்வியலின் புதிர், அதன்மேல் கவியும் காலவெளி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதுதான் பின்நவீனத்துவ எழுத்து என்பது என் சிற்றறிவு.

இரண்டாயிர வருடத் தமிழ்மரபு, அதன் தொன்மங்கள், மறைக்கப்பட்ட வரலாற்றின் பசிய மடிப்புகள், ஒடுக்கப்பட்ட மனித வாழ்வியலின் கேள்விகள், காலவெளியில் சுழலும் கதை சொல்லும் குரல் போன்ற கூட்டிசைவில், இந்த மண்ணோடு அடையாளம் காணும் தமிழின் வேர்களிலிருந்து புதுமலர்ச்சியுடன் பிறக்கிறது புதுவகை எழுத்து” என்று சொல்லவே, ய.வேதாளம் மௌனமாகத் தலையைச் சிலும்பி தன் கைப்பிடியை உதற, நீர்க்கயிறு அறுந்து கீழேபோய் விழுந்தார் விக்ரமாதித்தன்.

விடைதெரியாக் கதை

தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மறுபடியும் அருவியின் நீர் விழுதுகளைப் பிடித்துத் தொத்தி ஏறத் துவங்க, எதிரொலித்தது ய. வேதாளம்:

தான் உருவாக்கிய கவிதைகளுக்குள்ளேயே - ஊர்களுக்குள்ளேயே - வசமாக மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தட்டாமாலை சுற்றிக் கொண்டிருக்கும் விக்கிரமாதித்தனே,

கேள், பிற்பகல் நாவல் அமர்வில் குமாரசெல்வா, வேணுகோபால் நாவல் அனுபவங்களைப் பேசினர். குமாரசெல்வாவின் பேச்சுமொழியும் அவரது படைப்பு தளத்திற்கான அனுபவமும் புதிதாக இருந்தன. அடுத்து வாசித்த க.பஞ்சாங்கத்தின் கட்டுரை புதிய எழுத்துக்கள் குறித்து விரிவாய் இருந்தது. நகுலனது படைப்புகள் குறித்து ஏன் பேசப்படவில்லை என்ற கேள்விக்கு ‘அவசரத்தில் எழுதப்பட்டதால் நேர்ந்த முக்கியமான விடுபடல்’ என்று வருந்தினார்.

அதன்பின் வந்த சாருநிவேதிதா தன் படைப்பு அனுபவங்களையும், நான்லீனியர் என்கிற தளத்திற்கு தான் வந்த விதம், தனது புறச்சூழல் குறித்தும் பேசினார். தமிழ் இலக்கிய தளத்தில் நடைபெறும் சில செயல்பாடுகளைச் சுட்டினார். 15 வருடகால உழைப்பைக் கேலி செய்யும் விதமாக பிரம்மராஜன், ரமேஷ்பிரேம், நாகார்ச்சுனன் பற்றி ஜெயமோகன் உதிர்த்துள்ள கிண்டலை விளக்கினார்.

“நான் ஜெயமோகனை விமர்சனம் செய்வதானால் கூட இருபது பக்கத்தில் கட்டுரை எழுதித்தான் விமர்சனம் செய்கிறேன். ஆனால், அவர் 167 பக்கத்தில் ஒரு புத்தகம் போடுகிறார். அதில் என் பெயரைக்கூட குறிப்பிடாமல் ‘பெர்முடா தமிழ்ப் பையன்’ என்கிறார். இதுபோன்ற அழித்தொழிப்புகள் தமிழில் மட்டும்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன” என்றார்.

அவருக்குப் பதில் சொல்லும் விதமாக, இலக்கிய ரீதியாக யாரெல்லாம் தீவிர செயல்பாட்டுடன் இயங்குகிறார்களோ அவர்கள் மீதுதான் என்னால் கவனங் கொள்ள முடியும் என்று வாதித்தார் ஜெயமோகன்.

‘சாருநிவேதிதாவின் நான்லீனியர் செயல்பாடுகள் இலக்கியமில்லையா? இதில் யாருடைய கூற்று சரி? ஜெயமோகனின் வாதம் சரியானதுதானா? நவீன தமிழ் இலக்கியத்தின் நிலை என்ன? இதற்கு சரியான பதில் சொல்லாவிடில் உனது படைப்பின் ஊற்றுக்கண் அடைபட்டு தூர்ந்து போகக் கடவது என்றது.

விக்ரமாதித்தன் தான்கற்ற அத்தனை பாண்டித்தியங்களையும் முன்வைத்து யோசித்தும் இதற்கு சரியான விடை புலப்படாது போகவே, ஒன்றும் தோன்றாது முழிக்க, லகலகலகலக வென நகைத்து ய. வேதாளம் மேலும் சொல்லுவதாவது...

Pin It