உலகம்மன்

தமிழ்நாட்டின் சமூக வலாற்றினையும், பண்பாட்டு வரலாற்றினையும் கண்டுணருவதற்குத் துணை நிற்கும் சான்றுகளின் குறிப்பிடத்தகுந்தது தாய்த் தெய்வ வழிபாடாகும். தமிழ்நாட்டில் வணங்கப் பெறும் தாய்த் தெய்வங்களில் மாரியம்மன், காளியம்மன், பொன்னியம்மன், இசக்கியம்மன், பத்திரகாளியம்மன் போன்றவை போலக் குறிப்பிடத்தகுந்த ஒரு தெய்வம் ‘உலகம்மன்’ ஆகும். நெல்லை மாவட்டத்தில் பெண் மக்கள் பெயர் வழக்குகளில் உலகம்மாள் என்றும் ஆண் மக்கள் பெயர் வழக்குகளில் உலகநாதன் என்றும் இப்பெயர் காணப்படுகிறது. தமிழகத்தில் வடபகுதியில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் லோகநாயகி, லோகம்மாள் என்ற பெயர் வழக்குகள் காணப்படுகின்றன. பொதுவாக இப்பெயர் வழக்கு பார்ப்பனர் அல்லாதோர்க்கிடையில்தான் காணப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சில பகுதிகளில் ‘பட்டத்தரசியம்மன்’ என்ற பெயரில் ஒரு தெய்வம் காணப்படுகின்றது.

 உலகத் தலைமையினைக் கொண்டாடும் இந்தப் பெயர் வழக்கில் பெண் பெயராக ‘உலகநாயகி’ இருப்பது போல ஆண் பெயராக ‘உலகநாயகன்’ என்பது காணப் பெறவில்லை. ‘உலகநாதன்’ என்ற பெயரே காணப்படுகிறது. பொதுவாகக் கல்வெட்டுக்களில் அரசன் ‘எல்லா நிலத்தையும் வெற்றி கொண்டான்’ என்பதைக் குறிக்க சில தொடர்கள் காணப்படுகின்றன. ‘‘திருமாள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக் கொள’’ என்பது முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தியாகும். அவனுக்குப் பின்வந்த சோழ அரசர்களின் மெய்க்கீர்த்திகள் அனைத்துமே ‘பூமடந்தை’ ‘நிலமடந்தை’ ஆகிய சொற்களால் அரசன் நிலம் என்னும் பெண்ணின் மீது முற்றுரிமை செலுத்தினான் என்று தவறாமல் குறிப்பிடுகின்றன. சோழ அரசர்களின் மனைவியர்களின் பெயர்கள் ‘அவனி முழுதுடையாள்’ ‘புவன முழுதுடையாள்’ ‘உலக முழுதுடையாள்’ ‘தரணி முழுதுடையாள் மூவுலகுடையாள்’ ‘திரிபுவனமாதேவி’ என்றே குறிக்கப்பெறுகின்றன. நிலத்தின் மீதான முழுதுடைமை யினைப் பெயரளவிலேனும் அரசியர் உரிமை கொண்டாடினர் அல்லது அரசர்கள் தங்கள் மனைவியர் பெயரின்மூலம் நிலத்தின் மீதான தங்கள் முழு அதிகாரத்தை பறைசாற்றிக் கொண்டனர் என்பதே இதன் பொருளாகும்.

அரசர்கள் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படை ஆலயங்கள் எழுப்பும் வழக்கத்தைச் சோழ அரசர்கள் தொடங்கி வைத்தனர். முதலாம் ஆதித்தனின் பள்ளிப்படைகோயில் ஆதித்தேசுவரம் என்றும் அரிஞ்செய சோழனின் பள்ளிபடை கோயில் அரிஞ்சிகை ஈசுவரம் என்றும் வழங்கப்பட்டன. முடிசூடி ஆண்ட எல்லா அரசர்களுக்குமே பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றை அடையாளம் காண இயலவில்லை. அரசர்களைப் போலவே அரசியர்க்கும் சிறு அளவிலேனும் பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப் பெற்றிருக்க வேண்டும். ஆண்களின் பள்ளிப்படை (சமாதி)யின் மீது சிவலிங்கத் திருமேனி நாட்டுவதுபோல பெண்களின் பள்ளிப்படை (சமாதி)யின் மீது சிவலிங்கத் திருமேனி நாட்டுவது வழக்கிலில்லை. எனவே அவை ஆகம ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்டு சிவன் கோயிலாகும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. இவ்விடத்தில் குறிக்கத் தகுந்த மற்றுமொரு செய்தி. கைம்பெண்ணாக இறந்த பெண்களை தெய்வமாகத் திருநிலைப்படுத்தும் மரபு நமது குடும்பங்களிலும் இன்று வரை இல்லை. எனவே அரசன் மனைவியாக இருந்தாலும் மங்கலப்பெண்ணாக இருந்தால் மட்டுமே பள்ளிப்படைகள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் அம்மை நோயினால் இறந்திருந்தால் அவர்கள் மாரியம்மனாக திருநிலைப் படுத்தப்படுவது மரபாகும். இதற்கு அரசன் வீட்டுப் பெண்களும் விலக்கில்லை. சோழப் பெருந்தேவி ஒருவரின் பள்ளிப்படை கோயிலாக சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்க வேண்டும் என பண்பாட்டு ஆய்வாளர்கள் மதிப்பிடுவர்.

பெருஞ்சாலை, ஊர்தி, பாலங்கள் என்றவாறு போக்குவரத்து வசதியற்ற அக்காலங்களில் அரசர்களோ, அரசியரோ பிற ஊர்களில் இறந்து இருந்தால் அங்கிருந்து தலைநகருக்கோ, அரண்மனைக்கோ கொண்டு வரவாய்ப்பில்லை. நெடுந்தொலைவு சென்று நடந்த போர்களில் அரசன் இறந்திருந்தாலோ இதே நிலைதான். எனவே தான் சோழர் காலக் கல்வெட்டுக்கள் ‘தொண்டைமான் ஆற்றூர்த் துஞ்சிய தேவர்’ ‘காஞ்சிபுரத்து பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ என்று அரசர்கள் இறந்த இடங்களைக் குறிப்பிடுகின்றன. அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள சுந்தரபாண்டியம் என்னும் ஊரிலுள்ள கோயில் சோழன் தலை கொண்ட கோவீரபாண்டியனின் அண்ணன் சுந்தரபாடியனின் பள்ளிப்படைக்கோயில் என்று கல்வெட்டு அறிஞர் வேதாசலம் கண்டுபிடித்துள்ளார். எனவே இதன் காலம் கி.பி.பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் வள்ளியூரிலும் தாழையூத்து அருகில் ஒன்றுமாக இரண்டு பெண் தெய்வக் கோயில்கள் ‘மூணாங்கொண்ட அம்மன்’ என்ற பெயரில் விளங்குன்றன. வள்ளியூரில் இத்தெய்வப் பெயரினை ‘மூன்றுயுகங்கொண்ட அம்மன்’ என்றும் வழங்குகின்றனர். இப்பெயர் வழக்கு ‘மூன்றுலகம் கொண்ட’ என்பதன் திரிபாடு. மூன்றுலகம் கொண்ட என்பது மூவுலகுடையாள் ‘திரிபுவனமுடையாள்’ என்ற பெயர்களின் மாற்று வடிவமாகும். எனவே அரசமாதேவியரின் பள்ளிப்படைக் கோயில்கள் தமிழகத் தாய் தெய்வ வழிபாட்டில் ஒரு பங்கினைப் பெற்றுள்ளன எனலாம். ‘பட்டத்தரசி அம்மன்’ என்ற பெயர் வழக்கினையும் அவ்வாறே கொள்ள வேண்டும்.

Pin It