அம்மா கூலிவேலைக்கும்
அப்பா மரம்வெட்டவும்
போனபிறகு தாழ்வாரத்திண்ணையின்
கூரையில் வந்து அமரும்
சிட்டுக்குருவிதான் என்
சின்னஞ்சிறு தோழன்!

அவ்வப்போது பக்கத்திலிருக்கும்
நுணா மரத்துக்கும்
வீட்டு கூரைக்கும் இடையே
தன் சின்னஞ்சிறு இறகுகளால்
ஊஞ்சலாடும் என்னைப்போலவே!

உச்சிவெயிலில் கரைத்து வைத்த
கூழில் இருக்கும் ஒன்றிரண்டு
சோற்றுப்பருக்கைகளே இரையாகும்
என்னோடும் ஊஞ்சலாடும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவிக்கு!

வேலிக்காத்தான் மரத்தின்
சில்லுவண்டு சத்தங்கள்
எங்கள் உரையாடலை
வழிமறிக்கும்; சிலநேரம்
கீச்கீச் குரலால் எசப்பாட்டு
பாடும்!

சிலநேரம் பூட்டப்பட்ட கதவின்
இடுக்கின் வழியே
பறந்துசென்று பரண்மேல்
அமர்ந்து கண்ணாமூச்சி
விளையாடும்! கண்கள்
சுழலும்வேளையில்
கொடிக்கயிற்றில் வந்தமரும்!

எதிர்வீட்டு பஞ்சுமரத்தில்
படர்ந்திருந்த அவரைக்கொடியின்
காய்ந்த சருகுகளைக் கொஞ்ச
கொஞ்சமாய் கவ்வி வந்து
தெற்குசுவரின் மூலையில்
கூடுகட்டத் தொடங்கியது அந்த சிட்டுக்குருவி!

இப்போதெல்லாம் விடுமுறை
நாட்களில் மட்டுமல்ல
பள்ளி முடிந்த மாலைவேளையிலும்
எனக்கும் அதற்குமான நேசங்கள்
நாளுக்குநாள் கூடிக்கொண்டே
வந்தது!

வாசலில் வீட்டுப்பாடங்கள்
எழுதும் சிலநேரங்களில்
காதோரம் வந்து முத்தமிட்டு
செல்வதுமுண்டு தன்
இனிய இசையால்!

அந்திப்பொழுதுகளும்
விடுமுறைநாட்களும் மட்டுமல்ல
யாருமில்லா தருணங்களிலும்
சிட்டுக்குருவியே என்
நேசத்திற்குரிய நண்பனாகிப்போனது!

இதோ எங்கள் மண்குடிசை
சிமெண்ட் ஓடுகளால் வேயப்பட்ட
கல்வீடாய் மாறியது; கூரைகள்
பிரித்த அன்றொருநாளில்
பறந்தபோன என் நேசத்திற்குரிய
சிட்டுக்குருவி இன்னமும்
வீடு திரும்பவில்லை!

இப்போது புதிதாய் ஒரு சிட்டுக்குருவி
சோடியோடு வந்துசேர்ந்தது எங்கள்
வண்ணம் தீட்டிய சுவற்றில்;
என்னருமை மகள் கரித்துண்டால்
வரைந்த கிறுக்கல்களில்!
இனி எப்போதும் பறக்காது
இந்தச் சிட்டுக்குருவி!

இதோ நானும் அவளும்
இல்லாத நேரங்களில்
அந்தச் சிட்டுக்குருவியோடு
பேசிக்கொண்டிருக்கிறாள்;
பள்ளி முடிந்து வீடுதிரும்பிய மகள்!

- மண்டகொளத்தூர் நா.காமராசன்

Pin It