அடியே செல்வி எங்க டி இவ்வளவு வேகமா போற... ஒரு பொம்பளையா ஒழுங்கா தலைய வாராம..! சரியா சடையப் பின்னாம ஏன் டி... இப்படி சுடுதண்ணிய காலுல கொட்டிகின மாதிரி ஓடுற... பொறுமையா தா போடி’’ என்று ருக்கு ஆயா கத்த அடியே கெழவி உன் மவன் படுத்துற பாட்டுக்கு சேர்மேல கால் போட்டு ஒய்யாரமா உட்காந்து சோறா திங்க முடியும். செல்வாக்கா இருந்த என்ன கட்டுன பொடவையோட வா காலம் பூரா வச்சி கஞ்சி ஊத்தரனு சொல்லி கல்யாணத்த செஞ்சான் இப்போ என்னடானா குடியும் குடித்தனமா இருக்கான் உன் மவன் இந்த இலச்சணத்துல நா எப்படி கிழவி பொறுமையா இருக்க முடியும்..! உனக்கும் இல்ல சேர்த்து பொங்கிப் போட வேண்டி இருக்கு ஜன்னல் ஓரமா வெத்தலையும் பாக்கும் வச்சி இருக்கேன் எடுத்து போட்டுன்னு என் புள்ளைய பத்திரமா பாத்துக்கோ... நா டிப்பர் லாரிக்கு போறேன் வர சாயங்காலம் ஆகும் புள்ள எழுந்து அம்மா எங்கனு கேட்டா எதையும் மறைக்காம உண்மையச் சொல்லு அப்போதாவது குடும்ப கஷ்டம் புள்ளைக்கு புரியும் புருசனுக்கு தா புரியல புள்ளைக்காச்சி புரியட்டும்’’ என்றபடி டிப்பர் லாரியில் ஏறினாள் செல்வி...

‘‘என்ன செல்வி என்ன சாப்பாடு செஞ்சடி’’னு செல்வியின் தோழி மஞ்சு கேட்க... அவளுக்கு என்ன வாய்க்கு ருசியா செஞ்சி இருப்பான்னு லாரி டிரைவர் கேலிசெய்ய, அன்பரசு மாதிரி நானும் லாரி டிரைவர் ஆ இருந்தா வாய்க்கு ருசியாத்தா செஞ்சி இருப்பேன் இப்போ எதோ வயித்துப் பசிய போக்க வீட்டுல இருந்தத வச்சி செஞ்சி இருக்கேன்னு உண்மைய எதார்த்தமா பதிவு செய்ய உரையாடல்தொடர்ந்தது... இவர்களின் உரையாடல் ஒருகட்டத்தில் உள்ளத்தின் வலியாக வெளிப்பட்டன. இதனை உள்வாங்கிக்கொண்டே டிரைவர் வண்டியைச் செலுத்த வண்டி செங்கல் சூளையை அடைந்தது...

இவர்கள் ஆடி கூடி விடியற்காலை ஏழு மணிக்கே கிளம்பினாலும் செங்கல் சூளையை அடையும்போது மணி பத்து. சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியது... இவர்களும் தங்களின் உணவுப் பைகளை நிழலைத் தேடி மரத்தில் மாட்டி வைத்துவிட்டு செங்கல்களைத் தூக்க ஆரம்பிக்கிறார்கள்... பணி களைப்புத் தெரியாமல் இருக்க  ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊர்க் கதை பேசத் துவங்கினார்கள்... பக்கத்துவீட்டுக் கதையில் துவங்கிப் படிப்படியாக பிரதமர் மோடி வரை பாய்ந்தது அந்த உரையாடல்... மோடியைப் பற்றி பேசும்போது மட்டும் அவர்களின் முகத்தில் கோபத்தைக் காண முடிந்தது.அந்த காலகட்டத்தில் தான் கருப்புப் பணம் ஒழிப்பு என்று மக்களை அலைய விட்ட காலம் அது. அந்த காரணத்தால் மக்களின் கோபங்களை அவர்களின் உரையாடலில் காண முடிந்தது... இப்படியாக மோடியைப் பற்றி செல்வியும் மஞ்சுவும் மாறி மாறித் திட்டிக்கொண்டு இருக்கும்போது... ‘‘என்ன மா அங்க பேச்சு சத்தம் மட்டும் தான் இருக்கு செயல் ஒன்னும் காணும்’’னு முதலாளி கத்த... செல்வியும் மஞ்சுவும் காதுக்குள் குசு குசு வென்று ‘‘அடியே நம்ம முதலாளியும் அந்த மோடியோட கட்சியாம்’’னு சொல்ல டிரைவர் அன்பரசுக்கு இது கேட்க.. எடு செங்கல்ல னு டிரைவர் சத்தமா சொல்ல முதலாளி காதுக்கு செய்தி போக முதலாளி இவர்களிடம் சண்டைக்குப் போக ஒரே பிரச்சனைல முடிய அங்க இருந்த ஒருத்தர் அட விடுங்கப்பா நீங்க தினக்கூலி வேலைய செஞ்சிட்டு கூலிய வாங்கிட்டு போங்கனு பஞ்சாயத்து செய்யறதுக்குள்ள மஞ்சுவும் செல்வியும் செங்கல்களை லாரியில் ஏற்றி முடித்தார்கள்!

டிரைவர் அன்பரசு பொறுமையாக வண்டிய ஸ்டார்ட் பண்ண செல்வியும் மஞ்சுவும் சாப்பாட்டுப் பைய ஓடிப் போய் மரத்துல இருந்து தூக்கி வந்து செங்கல்மேல ஏறி உட்கார லாரி புறப்பட்டது... உச்சி வெயில் மண்டைய பொளக்க ரெண்டு பேரும் சொகுசு பஸ்ல போறமாதிரி சாலை ஓரம் உள்ள இயற்கைஅழகை ரசித்தப்படி வந்தார்கள். எதிர்பாராதவிதமாக நடு வழியில் லாரி பஞ்சர் ஆக டிரைவர் அன்பரசு என்ன பண்ணறதுன்னு புரியாம முதலாளிக்கு போன் செய்ய, முதலாளி காட்டு கத்துகத்த... வேண்டா வெறுப்பா போன கட் பண்ணிட்டு டயர கழட்டி பஞ்சர் போட வேற வண்டி புடுச்சி கொண்டு போக... செல்வியும் மஞ்சுவும் மரத்து அடில கொண்டு வந்த சாப்பாட்ட வேக வேகமாச் சாப்பிட்டு அன்பரசுக்காகக் காத்திருந்தனர். நேரமோ மதியம் இரண்டுகடந்து இருந்தது.

அன்பரசோ ஊர்முழுவதும் சுற்றி ஒருவழியா பஞ்சர் கடைய கண்டுபிடிச்சி பஞ்சர் போட்டு டயர கொண்டு வர செல்வி ‘‘அன்பரசு அண்ணா சாப்டிகளா’’னு எதார்த்தமா கேட்க முதலாளி மீது இருந்த கோபத்தை செல்வி மீது காட்ட செல்வி முகமோ சுருங்கிப் போனது... எப்படியோ எல்லாத்தையும் சரி பண்ணி வண்டிய எடுக்க மணி மூணு ஆனது.

செங்கல்களை இறக்க வேண்டிய இடத்தை அடையும்போது நாலு மணி இருக்கும். பொழுது சாஞ்சி போச்சி வேகமா இறக்குங்கள்னு செங்கல் வாங்கனவரும் டிரைவரும் மாறி மாறி சொல்ல... வந்து செஞ்சி பாருங்க டா அங்க நின்னுனு சொல்லறதுக்கு என்ன வலிக்கவாபோதுன்னு மனசுக்குள்ள முணுமுணுத்துக் ெகாண்டே செங்கல்லை வேக வேகமாக இறக்க... முக்கால் வாசி முடியும் போது செல்வி கால் மீது ஒரு கல் உடஞ்சி உளுந்துபோச்சி ‘‘அய்யோ அம்மா’’னு செல்வி கத்த என்ன டி ஆச்சின்னு மஞ்சு கத்தசெல்வி காலில் ரத்தம் வடிய மஞ்சு சற்றும் யோசிக்காமல் புடவையைக் கிழித்து அவள் காலில் வடியும் இரத்தத்தை நிறுத்த கட்டு போட்டாள். செல்வியோ ‘‘நமக்கு இது என்ன புதுசா’’ என்று சொல்லியபடி அருகில் இருந்த மண்ணை சலித்து ரத்தம் வடியும் இடத்தில் போட்டுக்கொண்டு பணியைத் தொடர்ந்தாள்.

ஒரு வழியாக மாலை  ஐந்து மணிக்கு முடித்தார்கள். முதலாளி அன்றைக்கான கூலியைக் கொடுக்க, மன மகிழ்ச்சியே இல்லாமல் பெற்றுக்கொண்டனர். கூலியை உயர்த்தி கேட்க முடியாமல்... அடிபட்டக் காலோடு நொண்டிக்கொண்டேஇல்லத்தைஅடைந்தாள் செல்வி. மணி ஆறு இருக்கும்... தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு கடைக்கு போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு பிள்ளைக்கும்தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டு சமையல் செய்து விட்டு தன்னுடைய புருஷன் வருவான் வருவான் என்று உடல் வலியோடு காத்திருந்தாள் செல்வி. மணி ஒன்பது கடந்தும் செல்வியின் புருஷன் வரவில்லை பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்து உறங்கவைத்துவிட்டு மீண்டும் சாப்பிடாமல் காத்திருந்தாள் செல்வி... இரவு பத்து மணி. செல்வியின் கணவர் போதையில் தள்ளாடியபடி வர செல்வி தன் வலிகளைப் பகிர இருவருக்கும் சண்டை முட்டிக்கொண்டது.... இருவரும் ஓய்ந்து தூங்கும்போது மணி பனிரெண்டு.

அரைத்தூக்கத்தோடு நாலு மணிக்கே கண்விழித்து சாப்பாடு செய்து விட்டு வழக்கம்போல் ஏழு மணிக்கே அடுத்தநாள் கூலியைப் பெறுவதற்காக ஓடினாள் செல்வி.                                        

Pin It