நூலில் நுழைவதற்கு முன்பாக...

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வந்த போராட்டங்கள் திருமங்கலம் தேர்தலையொட்டி சற்றே தேங்கியிருந்த தருணத்தில் பொங்கல் திருநாள்களின்போது தோழர். தொல். திருமா தொடங்கிய காலவரையற்ற பட்டினிப் போராட்டம், தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒட்டு மொத்தத் தமிழகத்தையுமே இப்போராட்டத்தை நோக்கி கவனத்தை ஈர்க்கச் செய்தது.

thirumavalavanஎனினும், எந்த கோரிக்கைகளுக்காக இந்தப் போராட்டம் தொடங்கப் பெற்றதோ, அந்தக் கோரிக்கை நிறைவேறாமலேயே அது தொடங்கப்பெற்ற நான்காம் நாளிலேயே போராட்டம் முடித்துக் கொள்ளப்பட வேண்டியதாயிற்று. இது ஏன்? எதனால் இப்படி ஆனது? என்பதே பரவலாக பொதுமக்கள் மத்தியில், உணர்வாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி.

இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். இவையனைத்தையும் ஆராய்வது என்பது மிகுந்த சிக்கல்களும் சங்கடங்களும் நிறைந்த ஆகப்பெரும் பணி. எனவே அதற்குள் இறங்குவது நமக்கு நோக்கமல்ல. அது நமக்குச் சாத்தியமும் அல்ல. என்றாலும் சாதாரண பொது மக்கள் மத்தியில் இது குறித்து எழும் கேள்விகளை இது சார்ந்த அவர்களது உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் எழுந்ததே இக்குறு நூல்

இந்த வகையில் தோழர் திருமா, தான் இப்படிப் பட்டினிப் போராட்டம் அமர இருப்பது பற்றி தோழமைக் கட்சிகளுடன் கலந்தாலோசித்தாரா? இதுபற்றி அவர்களது கருத்து என்னவாக இருந்தது? இப்படிக் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் உட்கார்ந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அந்நிலையில் தோழமைக் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் முன் கூட்டியே முறையாகத் திட்டமிடப்பட்டதா?

இப்படி இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் இப்படி நான்காம் நாளே, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே, முழுமையாய் நிறைவேற்றாப்படாவிட்டாலும் பரவாயில்லை அதன் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு சிறு அசைவு கூட இல்லாமலேயே போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காதே. தமிழகம் வேறு மாதிரி தன் கொந்தளிப்பை வெளிப்படுத்தி இருக்குமே? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

இக்கேள்விகள் நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனை சார்ந்து ஆழ்ந்த கவனத்திற்குரியவை மிகுந்த அக்கறைக்குரியவை. நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது குறித்து கவலையோடு சிந்திக்க வைப்பவை.

இவற்றையெல்லாம் கடந்து திருமாவின் பட்டினிப் போர் நிகழ்த்திய தாக்கம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தின் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி நம் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதும், அது சார்ந்து மனம் திறந்து விவாதித்துக் கொள்வதும், இப்போராட்டம் முன் வைத்த கோரிக்கைகளை வென்றெடுக்கம் நோக்கில் பயனளிப்பதாயிருக்கும் என்கிற அடிப்படையிலேயே இந்நூல் உங்களோடு உரையாட விழைகிறது.

தோழர் தொல். திருமாவின் பட்டினிப் போராட்டம் - நோக்கும் விளைவும்

“தமிழீழத்தில் நடத்தும் போரை நிறுத்து -அமைதிப் பேச்சை உடனே தொடங்கு” என்னும் இரு கோரிக்கைகளோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர். தொல். திருமா வளவன் சென்னை அடுத்த மறைமலை நகரில் 15-01-2009 வியாழன் திருவள்ளுவர் நாளன்று தொடங்கி 18-01-2009 ஞாயிறு முடிய, நான்கு நாட்கள் நடத்தி முடித்த பட்டினிப் போராட்டம் தமிழகத்தில் தமிழீழத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் மத்தியிலும் ஜனநாயகச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் நடைபெறும் இனவெறிப் போரை உடனே நிறுத்து என தமிழகத்தின் பல்வேறு பிரிவு மக்களும் அரசியல் கட்சிகளும் பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய பின்பும், தமிழக சட்டமன்றமே ஒருமனதாக இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னும், அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன்பின் தமிழக முதல்வரே நேரடியாக தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து போரை நிறுத்தச் சொல்லி கோரிய பின்பும் தில்லி எதற்கும் அசைந்து கொடுக்காமல் தான் பாட்டுக்குத் தன் நிலையில் உறுதியாக நின்று, இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் படைப் பயிற்சிகள் தந்து, சிங்கள ராணுவம் போரைத் தொடர, ஆதரவு தந்து வந்த நிலையில், இதுபற்றி தமிழகமே பொருமி குமுறிக் கொண்டிருந்த சூழலில் தொல் திருமா நடத்திய இப்போராட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்கது, மகத்தானது, மனமுவந்து பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.

எனில், முன் வைக்கப்பட்ட இரு கோரிக்கைகள் சார்ந்து இப்போராட்டம் அதை எந்த அளவு முன்னகர்த்திச் சென்றுள்ளது, அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்று பார்த்தால், கோரிக்கைகள் உடனே வெற்றி பெறமுடியா விட்டாலும் பரவாயில்லை, யாரும் ஆறுதல் அடைகிற அளவுக்குக் கூட எந்த முன் நகர்வும் இல்லாமல் போராட்டம் முடிவுற்றதே என்பதுதான் நினைப்பதற்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

எந்த ஒரு நிகழ்விலும் செயல்பாட்டிலும் அது நடந்து முடிந்தபிறகு, அதன் சாதக, பாதகங்களை, விளைவுகள், எதிர் விளைவுகளை, பயன் பயனின்மைகளை ஆய்வு செய்து லாப நட்டக் கணக்கு பார்ப்பது நடந்து முடிந்த நிகழ்வை மதிப்பீடு செய்வதற்கு மட்டுமல்ல, இனி நடத்தப்போகும் நிகழ்வுகளுக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்பது பொது நோக்கு. அந்த வகையில் இந்த நான்கு நாள்கள் பட்டினிப் போராட்டம் தொடங்கும்போது முன்வைத்த கோரிக்கையில், அப்போராட்டத்தை முடிக்கும்போதும் எந்த மாற்றமுமில்லை. அது அப்படியே தான் இருந்தது, அதாவது எந்த கோரிக்கைக்காக பட்டினிப் போராட்டம் தொடரப் பெற்றதோ, அது சார்ந்து கிஞ்சித்தும் எந்த அசைவும் பட்டினிப் போராட்டத்தை முடிக்கும் போதும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே, இதற்குக் காரணம் என்ன என்று ஆராயும் நோக்கில், நடந்து முடிந்த போராட்டம் குறித்து உணர்ச்சிமயமான எண்ணங்களுக்கு இடம் தராமல் அதை அறிவுபூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி நடந்தேறிய நிகழ்வுகளை மதிப்பீடு செய்வதும், அதிலிருந்து படிப்பினைகள் பெறுவதும், அடுத்தடுத்த கட்ட போராட்டங்களுக்கு பயன் அளிப்பதாக இருக்குமென்று தோன்றுகிறது.

எந்த ஒரு போராட்டத்திலும், அப்போராட்டத்திற்கு நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதைப் பாகுபடுத்தி பகைவர்களை முன்னிறுத்தி அவர்களை அடையாளம் காட்டுவதும், நண்பர்களை அரவணைத்து உடன் நிறுத்திக் கொள்வதும் ஓர் அடிப்படைத் தேவையாகும்.

இந்த அடிப்படையில் இச்சிக்கலை நோக்க ஈழ மக்களுக்கு எதிரிகள் யார்? நண்பர்கள்யார்? என்று நோக்க ஈழமக்களின் முதல் எதிரி சிங்கள ராணுவம், சிங்கள அரசு. இரண்டாவது எதிரி இந்திய அரசு, இந்திய ஆட்சியாளர்கள், மூன்றாவது எதிரி தமிழக அரசு, தமிழக ஆட்சியாளர்கள். இதில் முதல் இரண்டு எதிரிகளை எல்லோரும் ஒப்புக் கொள்வர். ஆனால் மூன்றாவது எதிரி என்பதில் மட்டும் சிலருக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம். அப்படி உள்ளவர்கள் இப்படி சிந்தித்துப் பார்க்கட்டும்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ஈழ விடுதலைக்கு ஆதரவான கட்சிகள், எதிரான கட்சிகள் என்று ஒரு பட்டியல் போடுவோம். இப்படிப் போட்டால் ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க. இ.க.க முதலான பல கட்சிகள் ஆதரவுப் பட்டியலில் வரும். காங்கிரஸ் அ.தி.மு.க., இ.க.க.மா., ஆகியன எதிர்ப்புப் பட்டியலில் வரும். இவர்களும் கூட ஈழ மக்கள் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பார்கள். அது வேறு செய்தி. ஆனால், ஈழ விடுதலை ஆதரவு, போராளிகள் ஆதரவு என்கிற நிலையில் களத்தில் இறங்கி போராடுகிற கட்சிகள் என்கிற வகையில், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இ.க.க முதலானவையும், ஈழ விடுதலை எதிர்ப்பு, போராளிகள் எதிர்ப்பு என்கிற நிலையில் அ.தி.மு.க., இ.க.க.மா., காங்கிரஸ் ஆகியனவும் இருந்து வருகின்றன. இது பலரும் அறிந்த உண்மை. சரி, அப்படியானால், இதில் தி.மு.க. எந்தப் பட்டியலில் வரும்?

இதற்கு எந்தக் குழப்படிக்கும் இடம் வைக்காமல் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நேரடியாகவே இரண்டு கேள்விகளைக் கேட்போம்.

1. நீங்கள் ஈழ விடுதலைப் போரை ஆதரிக்கிறீர்களா? ஆம் / இல்லை.
2. நீங்கள் போராளிகளை ஆதரிக்கிறீர்களா? அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோருவீர்களா? ஆம் / இல்லை

அல்லது கேள்வியை மாற்றிப் போடுவோம்.

1. நீங்கள் ஈழ விடுதலைப் போரை எதிர்க்கிறீர்களா? ஆம் / இல்லை
2. நீங்கள் போராளிகளை எதிர்க்கிறீர்களா? போராளிகள் அமைப்பின்மீதான தடை நீட்டிக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? ஆம் / இல்லை

இந்த நான்கு கேள்விகளில் ஏதாவது ஒரு கேள்விக்காவது தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லுவாரா? சொல்ல மாட்டார். மாறாக நேரத்துக்கு ஒரு விதமாக பசப்பு வார்த்தைகளை உதிர்த்து பிரச்சனையை சொதப்புவார் அல்லது திசை திருப்புவார். காரணம் அவரால் சொல்ல முடியாது என்பது அல்ல, சொல்ல தன்னலம் இடம் கொடுக்காது என்பதே உண்மை.

அதாவது, சந்தர்ப்பவாத நாற்காலி அரசியல் தன் குடும்ப மற்றும் கட்சியின் ஆதிக்க நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற காரியவாதம் இதற்கு எந்தப் பதிலையும் நேரடியாகச் சொல்ல வைக்காது. எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடும் உத்தி, ஒரு புறம் தமிழினத் தலைவர் பட்டத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலும், மறுபுறம் தில்லி ஆதிக்க நலன்களுக்கு சேவகம் செய்யும் நடவடிக்கைகளிலும், என இந்த இரட்டை நிலையைப் பாதுகாத்துக் கொள்ள இரட்டை வேடம் போட்டுத் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறவர், வஞ்சித்து வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.அதாவது தமிழகம் எப்போதெல்லாம் இப்பிரச்சினையில் கொந்தளித்து எழுகிறதோ, அப்போதெல்லாம் அதைத் தணித்துத் திசை திருப்புகிற அல்லது அந்தத் தணலை நீர்த்துப் போகச் செய்கிற காரியத்தைச் செய்து வருபவர் இவர்.

எந்தப் போராட்டக் களத்திலும், தன்னை நேரடியாக எதிரி என்று அறிவித்துக் கொண்டு வருபவர்களை நம்பி விடலாம். ஏனென்றால், அவர்கள் நேர்மையாகத் தங்களை எதிரி என்று நேரடியாக அடையாளம் காட்டிக் கொண்டு வருபவர்கள். நேரடி யுத்தத்திற்குத் தயாராக நிற்பவர்கள். ஆனால் இப்படி நேரடியாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல், எதிரி என்று அறிவித்துக் கொள்ளாமல், நண்பனைப் போல நடித்து, கூட இருந்தே குழி பறிப்பவர்கள் எதிராகச் செயல் படுபவர்கள்தான் மிக மிக ஆபத்தானவர்கள். அப்படிப்பட்ட ஆபத்தை விளைவித்து வருபவர்தான் கருணாநிதி.

இப்படி உடன் இருந்துகொண்டே தில்லி உறவை, காங்கிரஸ் உறவைப் பாதுகாத்து அவற்றிடம் நற்பேறு பெற்று, அவ்வுறவின்மூலம் அடைந்து வரும் பலன்களை இழக்க விரும்பாமல், ஈழ விடுதலைக்கும், ஈழப் போராளிகளுக்கும் எதிராகச் செயல்படும் இவரை அடையாளம் காட்டாமலேயே நடந்து முடிந்தது இப்பட்டினிப் போராட்டம்.

அதாவது ஈழப் போராட்டத்திற்கு மூன்று எதிர்ச் சக்திகள் என்றால் அந்த மூன்று எதிர்ச் சக்திகளையும் முன்னிறுத்திப் போராடாமல் இரண்டுஎதிர்ச் சக்திகளை மட்டுமே முன்னிறுத்தி மூன்றாவது எதிர்ச் சக்தியை இடுப்பில் ஏற்றி வைத்துக் கொண்டு நடைபெற்றது இப்போராட்டம்.அதாவது தி.மு.க. நேரடி யாக போராட்டத்தில் உடன் இல்லையே தவிர, தி.மு.க.வின் பினாமிகள் போராட்டத்தில் உடன் இருந்தார்கள்.

இப்படி எதிர்ச் சக்தியை இடுப்பில் ஏற்றிக் கொண்டு போராடினால் என்ன நடக்கும்? இடுப்பில் இருக்கும் எதிர்ச் சக்தியே நம் போராட்டத்திற்குபெரும் தடையாகி விடும். நாம் எதிரிகளைத் தாக்க முனையும்போது இடுப்பில் இருக்கும் எதிர்ச் சக்தியே நம்மைத் தடுக்கும். நேரடியாகத் தடுக்காவிட்டாலும் மறைமுகமாகக் கிள்ளும், முடக்கும், காலை வாரும், குழி பறிக்கும். அப்படித் தான் இப்போராட்டத்திற்கும் குழி பறித்தது தி.மு.க.

ஈழச் சிக்கலில் தொடர்ந்து தி.மு.க.வின் நிலையை ஊன்றி நோக்க இது புரியும். ஏற்ற இறக்கங்களோடு கூடிய கடந்த கால நடவடிக்கைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து தற்போதைய மன்மோகன் சிங் ஆட்சிக்கு தி.மு.க. ஆதரவு அளித்து வரும் நாளிலிருந்து மட்டும் இச்சிக்கலில் தி.மு.க.வின் நிலையை நோக்குவோம். நடுவில் தி.மு.க. நடத்திய பதவி விலகல், நிதி திரட்டல் நாடகங்களை எல்லாம் விடுத்து, கடைசி கடைசியாகக் கடந்த ஆண்டு திசம்பர் 4ஆம் நாள் தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமரையே நேரில் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, அவர் பிரணாப் முகர்ஜியை அனுப்புவதாக வாக்களித்த நாளிலிருந்து மட்டும் நோக்குவோம்.

thirumavalavan1சந்தித்து விட்டு வந்து ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம், நான்கு வாரம் என ஒரு மாதம் ஓடியது. நாற்பது நாள் கடந்து பொங்கலும் வந்தது. இந்த 40 நாளும் தில்லி தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லைஇப்படி தில்லி எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறதே ஏன் என்று இவர் கேட்டாரா? பிரணாப் முகர்ஜியை எப்போது அனுப்புவதாக உத்தேசம், ஏன் இப்படி காலதாமதம் செய்கிறீர்கள், உடனே அனுப்புங்கள் என்று வலியுறுத்தினாரா....?

போகட்டும், போர் நிறுத்தம் செய்வதில் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறையிருந்தால் பிரணாப் முகர்ஜி நேரில் போய்த்தான் அதை நிறைவேற்ற வேண்டுமா, ஒரு தொலைபேசி உரையாடல் மூலமே அதை நிறைவேற்ற முடியாதா? இதெல்லாம் ஈழ மக்கள் பால் ஈரம் உள்ள இரக்க சிந்தனையாளர்கள், சாதாரண பாமர மக்கள் மத்தியில் எழும் கேள்விகள். ஆனால், இந்தக் கேள்விகள் எதுவும் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் அரசியல் ஞானி கருணாநிதிக்கு எழவில்லையே... ஏன்? உண்மையிலேயே அவருக்கு இந்தக் கேள்விகள் எழவில்லையா அல்லது எதற்கு வம்பு, குடும்ப நலன், ஆட்சி நலனுக்கு இடையூறு என்று இக்கேள்விகள் எழாமல் பார்த்துக் கொண்டாரா?

அதாவது ஈழச் சிக்கலைப் பொறுத்தவரை அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது, தவிர்க்க முடியாமல் அச்சிக்கல் தன்மேல் விழுந்து பிராண்டு மானால், அப்போதைக்கு அந்தப் பிராண்டலிலிருந்து விடுபட ஏதாவது சில செயல்பாடுகளை மேற்கொண்டு, அதைத் திசைத் திருப்பி அதிலிருந்து கழன்று கொள்வது என்பதுமே கருணாநிதியின் உத்தியாக இருந்து வருகிறது. அப்படித் தான் விட்டது சனி என்று ஈழச் சிக்கலைப் புறம் தள்ளி தமிழர் திருநாள், தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கவனத்தைத் திருப்பி, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுத் துண்டு முதலான புத்தாடைகள் உடுத்தி, மகிழ்ச்சியில் திளைத்து தன் குடும்பத்தினர்க்கும் கட்சிக் காரர்கள் அனுதாபிகளுக்கும் பெருமிதத்தோடு ஆசி வழங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில்தான் இந்த மகிழ்ச்சியில் இடி விழ தொல். திருமாவளவன் பட்டினிப் போராட்ட அறிவிப்பு வந்தது. அதுவும் முதலில் திருமா 14-01-09 புதன் பொங்கல் நாளிலிருந்தே இப்போராட்டத்தைத் தொடங்க உத்தேசித் திருந்ததாகவும், தை முதல் நாள் பொங்கல் நன்னாளில் தமிழகமே விழாக் கோல மனோநிலையில் இருக்கும் என்பதால் இன்று வேண்டாம், நாளை முதல் வைத்துக் கொள்ளலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னதால், அதன் அடிப்படையில் மறுநாள் 15-01-09 முதல் இப்போராட்டத்தைத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆக 15-01-09 அன்று போராட்டம் தொடங்குகிறது. மறுநாள் 16ஆம் தேதி முதல்வரின் அறிக்கை வருகிறது. அதாவது விட்டது சனி என்று நினைத்த பிரச்சினை மீண்டும் மேலே விழுந்து பிடுங்க ஆரம்பிக்கிறதே என்று நினைத்த முதல்வர் கருணாநிதி, அதிலிருந்து விடுபட, தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள, வழக்கமாகத் தான் கடைப்பிடிக்கும் உத்தியில் விடுத்த வழக்கமான ஓர் அறிக்கை இது.

நியாயமாய் இவர் என்ன செய்திருக்க வேண்டும். உண்மையிலேயே ஈழச்சிக்கலில் இவருக்கு அக்கறை இருப்பதானால் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விட்டிருக்க வேண்டும்.தோழமைக் கட்சித் தலைவர்களில் ஈழ விடுதலை ஆதரவுக் கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களது கூட்டத்தை உடனடியாகக் கூட்டி திருமாவின் போராட்டத்தை ஆதரித்து அனைத்து அமைப்பும் போராட ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தான் ஆட்சியில் இருப்பதால் தான் கலந்து கொள்ள இயலாது என்று அவர் கருதுவதானால் மற்ற அமைப்புகளைப் போராட வைத்து தில்லிக்கு நிர்ப்பந்தம் கொடுத்திருக்க வேண்டும். கடந்த செப்டம்பரிலிருந்து இன்றுவரை தமிழக மக்கள் நான்கு மாதத்திற்கு மேல் பொறுமை காத்து விட்டார்கள். இனியும் அவர்களை சாந்தப் படுத்த முடியாது, முயன்றால் கொந்தளிப்புகள்தான் எழும். ஆகவே உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியை வலியுறுத்தி இருக்க வேண்டும்.இப்படிச் செய்திருந்தால் தில்லி ஓரளவாவது அசைந்து கொடுத்திருக்கும்

ஆனால் இப்படி எதுவுமே செய்யவில்லையே இவர். மாறாக போராட்டத்தைத் தனிமைப்படுத்தித் தணிக்க அதை திசை திருப்பும் நோக்கத்தில்தானே அறிக்கை விட்டார். இது நட்புச் சக்தியின் அறிக்கையா எதிரிச் சக்தியின் அறிக்கையா இரண்டும் இல்லை. துரோகத்தனத்தின் அறிக்கை. இன உரிமை சார்ந்த பிரச்சனையில் தமிழகம் வீறு கொண்டு எழும்போதெல்லாம் அதைத் தணியச் செய்ய முயற்சிக்கிற சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த அறிக்கை. 16-01-09 அன்று கொடுக்கப்பட்டு, 17-01-09 அன்று தினகரன் நாளேட்டில் வெளிவந்த அந்த அறிக்கை விவரம் அப்படியே கீழே :

ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போர் செல்வா தலைமையில் நடைபெற்று பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன் மொழிந்ததும், பூவாளூர் பொன்னம்பலனார் வழி மொழிந்து நிறைவேற்றப்பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப் போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந்திருப்பதையும் அப்படி நடக்கும்போது, வசதி வாய்ப்புகளுக்கேற்ப இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அல்லது எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாடுபட்டிருக்கிறேன். இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் உலகெங்கும் இருக்கிற தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

1983இல் இந்தப் போராட்டத்தின் புரட்சிகரமான திருப்பமாகவும் தியாகத்தின் சோகச் சின்னமாகவும் அமைந்தது வெளிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். என்னை சென்னை வந்து சந்தித்து இலங்கைப் பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்த செல்வா 1977இல் மறைந்த பிறகு, அவருடைய நெருங்கிய நண்பரும் சில ஆண்டுகளுக்கு முன்பு 1989இல் கொல்லப்பட்ட தமிழ்ப் பெரியவருமான அமிர்தலிங்கம் மற்றும் அவர் துணைவியார் மங்கையர்க்கரசி ஆகியோர் இலங்கைப் பிரச்சினைகளை விளக்கி, அந்நாட்டில் தமிழ் மக்கள் அமைதியோடு வாழ்ந்திட இந்தியா உதவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் தூய தூதர்களாக இங்கு வந்து பெரும் பணியாற்றியபோது பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் அந்தப் பணிக்கு நானும் துணையாக இருந்து தொண்டாற்றினேன்.

இலங்கையில் தொடர்ந்து தமிழர்களுக்கு சிங்கள அரசும், சிங்களவர்களும் கொடுத்த தொல்லை, புரிந்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல என்ற நிலை ஏற்பட, ஏற்பட இலங்கைத் தமிழ் மக்களிடையே இப்படி உயிரோடு மெல்ல மெல்லச் சாவதைவிட ஒரேயடியாகச் சாகலாம் போரில் என்று முடிவெடுத்திடும் நிலை உருவாயிற்று. அதன் விளைவாக, இளைஞர்கள் விடுதலை இயக்கங்கள் சிலவற்றைத் தோற்றுவித்தார்கள். எல்.டி.டி.ஈ. என்றும் டெலோ என்றும், இ.பி.ஆர்.எல்.எப். என்றும் ஈராஸ் என்றும் டி.யு.எல்.எப். என்றும் பிளாட் என்றும் இ.என்.டி.எல்.எப். என்றும் இன்னும் பல பெயர்களில் தோன்றிய அந்த இயக்கங்கள் ; ஆயுதம் ஏந்தி சிங்களப் படைகளையும், சிங்களக் குண்டர்களையும் எதிர்க்கும் போராட்டங்கள் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது நடைபெற்று இரு தரப்பிலும் உயிர்ப் பலிகளுடன் முடிவுற்றுக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்ற போதும், நமது ஆட்சி நடைபெற்றபோதும், அந்த இயக்கங்களையும் இயக்கங்களின் தலைவர்களையும் அறிந்தவர்களில் நானும் ஒருவன். நானும் பேராசிரியரும், கி. வீரமணியும், பழ. நெடுமாறனும் அய்யணன் அம்பலமும் இணைந்து நடத்திய மதுரை டெசோ மாநாடு 4-5-1986இல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கு அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பாய், என்.டி. ராமராவ், எச்.என். பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியன் சுவாமி, உன்னிகிருஷ்ணன் மற்றும் பலர் வந்திருந்து கருத்து தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைக்கு முடிவு காணவும் தமிழ் மக்கள் உரிமைகளுடன் வாழவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் அந்த மாநாட்டில் போராளிகள் சார்பாக கலந்து கொண்ட பல குழுக்களின் தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்பதை வாஜ்பாய் போன்றோர் உணர்ந்து வருந்தி அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். நானும் அவர்களைத் தனியாக அமர வைத்துப் பேசி தங்களுக்குள் சகோதர யுத்தம் தவிர்ப்போம், ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று கையடித்து உறுதிமொழி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். உறுதிமொழி வழங்கப்பட்டதும் உண்மை. அதையெடுத்து டெலோ இயக்கத் தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டதும் உண்மை.

சமருக்கஞ்சா சிங்கங்கள், சகலகலா வல்லவர்கள், சதிகளைச் சாய்ப்பவர்கள் என்றாலும், சகோதர யுத்தத்தைக் கைவிட ஒப்பாத காரணத்தால் ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் கொலையுண்ட கொடுமை நடந்து மாபெரும் சக்தியாகப் பெருகியிருக்க வேண்டிய விடுதலைப் படை, பலவீனமுற்றது என்பதை நடுநிலையாளர்கள் மறுத்திட இயலாது. அவர்களின் சகோதர யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்று வெளிப்படையாகவே நான் வேண்டுகோள், அறிக்கை வெளியிட்டும் வீணாயிற்று அந்த முயற்சிகள்.

நானும் பேராசிரியரும் இலங்கைப் பிரச்சினைக்காகவே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம். என் பிறந்த நாள் விழாவில் 3-6-1986இல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்டியல் மூலம் நன்கொடையாகக் குவிந்த இரண்டு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் ரூபாயை எல்.டி.டி.ஈ. தவிர மற்ற அமைப்புகள் என் வேண்டுகோளையேற்று நேரில் வந்து பெற்றுக் கொண்டார்கள்.

அதற்குப் பின்னர் இலங்கையில் அமைதிப்படை, நடவடிக்கை, தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் இளம் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மிகக் கொடுமையான நிகழ்ச்சி இத்தனைக்கும் பிறகு ; இன்னமும் இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உத்திரவாதம் அளிக்கும் நிலைமை உருவாகவில்லை.

தமிழகத்தில் நமது கழகமும், மற்ற கட்சிகள் சிலவும், 14-10-2008இல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். 24-10-2008இல் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தினோம். டெல்லிக்கே சென்று 4-12-2008இல் பிரதமரிடம் அனைத்துக் கட்சியினரும் முறையிட்டோம். வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைவில் அனுப்பப்படுவார் என்று பிரதமர் கூறினார். பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அது நமக்கு ஏமாற்றமேயாகும்.

இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டாக்டர் ராமதாசு, கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் என்னை 12-1-2009இல் சந்தித்து உடனடியாக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். நான் உடனே டெல்லியில் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதி அளித்தேன். நான் அவ்வாறு சொன்னதையேற்றுக் கொண்டு மூவரும் சென்றார்கள்.

இந்த மூவர் குழுவினர் என்னைச் சந்தித்து விவாதித்தபோது நான் அவர்களிடம் எடுத்துச் சொல்லியவாறு உடனடியாக டெல்லியுடன் தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவை பிரதமரைச் சந்தித்து பேசுமாறு கூறி, அவரும் அவ்வாறு பேசி அதை அக்கறையோடு கவனிப்பதாக பிரதமரும் தெரிவித்து அதைத் தொடர்ந்து மாநிலங்கள் அவைக் கழக உறுப்பினரும் என் மகளுமான கனிமொழி, சோனியா காந்தியிடமும் மத்திய அமைச்சர் வயலார் ரவியிடமும் நிலைமைகளை விளக்கிக் கூறி என்னுடைய கருத்துக்களையும் எடுத்துரைத்த நிலையில் இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது. ஆனால் திருமாவளவன் மட்டும் தன்னிச்சையாக யாரிடமும் அறிவிக்காமல் தானே ஒரு முடிவெடுத்து இந்தப் பிரச்சினையை வலியுறுத்தி ஒரு உண்ணா நோன்பை துவங்கியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கோ விட்டுவிடுகிறேன். இதனிடையே மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும், நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன். உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிற ஓர் அறிக்கை இது. நெருக்கடியான இந்த நேரத்தில் உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யாமல், என்ன செய்ய இருக்கிறார் என்பதைச் சொல்லாமல், 50 ஆண்டுகளாக இவர் ஈழத்திற்காகச் செய்ததை எல்லாம் சொல்லி பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சியாக இப்படி ஓர் அறிக்கை விட்டார்.

இந்த அறிக்கையின் நோக்கம் என்ன? திருமா தன்னிச்சையாக முடி வெடுத்துவிட்டார். எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று காட்டிக் கொள்வது திருமாவைத் தனிமைப்படுத்துவது திருமாவின் போராட்டத்தின்பால் மக்களது கவனம் செல்லாமல் அதைத் திசைத் திருப்பி மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ள முயல்வது இதுதானே.

இந்தப் பழைய வரலாறு பற்றியெல்லாம் இப்போது யார் கேட்டது, சகோதர யுத்தம் எல்லாம் ‘ரா’ உளவு அமைப்பு மூட்டிவிட்டது என்பது இவருக்குத் தெரியாதா? அதையெல்லாம் இப்போது குறிப்பிடுவதன் தேவை நோக்கம் என்ன, எதையாவது சொல்லி பழியைக் கழித்துக் கொள்ளவா. பொறுமை, பொறுமை என்று இவ்வளவு காலம் பொறுத்திருந்தோமே, 14-10-08 சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பிறகும் 3 மாதம் பொறுத்திருந்தோமே, போதாதா... இன்னும் பொறுத்திருக்க வேண்டுமா?

அதாவது பேசிப் பேசியே போதையூட்டி ஓர் இனத்தைக் காயடித்த, வார்த்தைகளையே நச்சரவமாக்கிப் படரவிட்டு, ஓர் இனத்தின் விழிப்பைக் கொன்ற மழுங்கடித்த தலைவர் உலகத்தில் வேறு எங்காவது, யாராவது உண்டா என்றால், அது தமிழகத்தின் கருணாநிதியைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவு தமிழக மக்கள் தங்கள் வெறுப்பை உமிழ வைக்கிற ஓர் அறிக்கை இது.

இப்படிப்பட்ட இந்த மூன்றாம் எதிரியை அடையாளம் காட்டாமலே நடந்து முடிந்தது போராட்டம். ஆனால் மேடையின் எதிரே அமர்ந்திருந்த பார்வை யாளர்கள் பலருக்கும் இந்த மூன்றாம் எதிரி யாரென்பது தெரியும். இதனால்தான் கோரிக்கையை, போராட்டத்தை ஆதரித்துப் பேச வந்தவர்களில் உணர்ச்சி வயப்பட்ட சிலர் நேரடியாகவே அந்த உண்மையை மேடையில் போட்டும் உடைத்தார்கள்ஆனாலும், அந்த உண்மை அமைப்பு ரீதியில் பலருக்கும் உணர்த்தப்படாமலேயே போராட்டம் முடிவுற்றது. இதற்குக் காரணம் இந்த மூன்றாவது எதிரியை மடியில் கட்டிக் கொண்டு போராடியதுதான். ஆக, மூன்றாவது எதிரி யார் என அடையாளம் காட்டப்படாமலே, போராட்டம் முடிவுற்றது. இது போராட்டத்துக்கு முதல் பின்னடைவு.

அடுத்தது, தோழமைக் கட்சிகள்.

திருமா எந்தெந்த தோழமைக் கட்சித் தலைவர்களைக் கலந்து கொண்டு இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியாது. முதலில் ஈழ ஆதரவுக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட முயற்சித்ததாகவும், வை.கோவும் இதற்கு இசைவு தெரிவித்ததாகவும், ஆனால் பா.ம.க.வும், வி.சி.க.வும் தி.மு.க.வையும் இணைத்துக் கொண்டுதான் போராட வேண்டும் என்று வலியுறுத்தியதால், வை.கோ. இதற்கு உடன்படி மறுத்து ஒதுங்கிக் கொண்டதாகவும், இப்படி இந்த முயற்சி முறிந்த நிலையிலேயே திருமா இந்த முடிவை எடுத்ததாகவும் ஒரு செய்தி நிலவுகிறது. இதையொட்டி வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்ள முடியாத வேறு சில செய்திகளும் நிலவுகின்றன. இது எப்படியோ, ஆனால், இந்த நெருக்கடியான தருணத்தில், திருமா எடுத்த முடிவு நல்ல முடிவு. தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் முடிவு. இன்னும் கொஞ்சம் முன்னேற் பாடுகளோடும் கூடுதல் திட்டமிடுதல்களோடும் இருந்து தோழமைக் கட்சி களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருந்திருக்குமானால் இந்தப் போராட்டம் வேறு திசை எடுத்திருக்கும். தமிழகத்திலும் மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும். தில்லி அரசுக்கும் ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

இந்த நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் தான் இந்தப் போராட்டம் தொடங்கிய நாளன்று நிகழ்த்திய ஆதரவு உரையில், நான் நான்கு செய்திகளைக் குறிப்பிட்டேன்.

1. ஈழ விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு அமைப்புகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மிகமிக முக்கியமான பாத்திரம் உண்டு. 2007ஆம் ஆண்டு இறுதியில் சுப. தமிழ்ச்செல்வன் மறைவின்போது அதற்கு இரங்கல் தெரிவிக்கக் கூட உரிமை மறுக்கப்பட்டு, ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவியபோது அதை எதிர்த்து, கருத்துரிமைக்கு ஆதரவாக, “ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டிப்பதும், இன வெறிக்குப் பலியான ஈழத் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதும் இந்திய நாட்டிற்கு எதிரான குற்றமா? தேசத் துரோகமா” எனக் கேட்டு, 2008 ஆம் ஆண்டு சனவரி 25, மொழிப்போர் ஈகியர் நாளன்று சென்னை அமைந்தகரையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

2. ஈழ மக்களுக்கு ஆதரவாக சிறுத்தைகள் கட்சி இதுவரை இப்படி எத்தனையோ போராட்டங்கள் நடத்தியிருந்தாலும் இப்போது தொடங்கி யிருக்கும் இந்தப் போராட்டம் ஒரு திருப்புமுனைப் போராட்டம். ஈழத்திலே விடுதலைப் புலிகள் இறுதிப்போரை நடத்தி வருவது போல, இது தமிழகத்தில் சிறுத்தைகள் தொடங்கியிருக்கும் இறுதிப்போர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்து நடத்தும் போர். தில்லி அரசே, தமிழக மக்களாகிய நாங்கள் உன்னோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயா அல்லது தனியே போய்விடுங்கள் என்று சொல்கிறாயா என்று கேட்கிற இறுதிப்போர். அப்படிப்பட்டப் போரின் ஒரு தொடக்கம் இது.

3. தமிழ்நாட்டில் தமிழ் ஈழ ஆதரவுக் கட்சிகள் பல இருந்தும், அக்கட்சிகள் தனித்தனி மேடைகளில் தனித்தனிப் போராட்டங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறதேயன்றி, அவையனைத்தும் ஒரே மேடையில் ஒருமித்து ஒலிக்கவில்லையே என்கிற குறை தமிழக மக்களுக்கு உண்டு. அக்குறையைப் போக்கும் வகையில் அனைத்துத் தலைவர்களையும் ஒன்று படுத்தி இந்த ஒரே மேடையை கவனிக்க வைக்கிற இதை நோக்கி ஈர்க்க வைக்கிற ஒரு போராட்டம் இது.

4. அதோடு மட்டுமல்ல, நாடுகளின் வரலாறுகள் அந்தந்த நாட்டின் தலைவர்கள் எத்தனை சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வாழ்ந்தார்கள் எத்தனை பேருக்கு அமைச்சர் பொறுப்புகளைப் பெற்றுத் தந்தார்கள் என்கிற நோக்கில் எழுதப்படுவதில்லை மாறாக ஒரு இனம் பாதிக்கப் படும்போது அந்த இனத்திற்காக என்ன செய்தார்கள் எப்படிப் போராடினார்கள் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டின் தற்போதைய வரலாற்று அவலத்தை நினைக்கும் போதெல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு நெல்சன் மண்டேலா போல், கியூபாவுக்கு ஒரு பிடல் காஸ்ட்ரோ, செகுவேரா போல தமிழ்நாட்டிற்கு ஒரு தலைவர் இல்லையே என்கிற ஆதங்கம் பல நேரங்களில் ஏற்படுவதுண்டு. அந்த ஆதங்கத்தைப் போக்கும் வகையில் தற்போது திருமா அப்படிப்பட்ட போராட்டப் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளார் என்றே தெரிகிறது. இந்தப் பாதைக்கு மனமுவந்த பாராட்டுகள், வாழ்த்துகள் இந்தப் பாதையில் இவர் உறுதியோடு நின்றால் தமிழகமே இவர் பின்னால் உறுதியோடு நிற்கும் அணி திரளும் என்பதாகக் கருத்து தெரிவித்திருந்தேன்.


அதாவது ஈழ விடுதலைப் போராட்டம் கடும் நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், பிரணாப் முகர்ஜியை அனுப்புகிறேன் என பிரதமர் வாக்குறுதி தந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் எந்த அசைவும் இல்லாமல் தில்லி அசட்டையாய்க் கிடக்க, தமிழக ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருக்க, அன்றாடம் ஈழத்திலிருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலையை ஏற்படுத்த, திருமாவாவது இதில் அக்கறையோடு இப்படிப்பட்டதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரே என்கிற ஆர்வத்திலும் நம்பிக்கையிலும் வெளிப்படுத்திய கருத்துகள் அவை.

தோழமைக் கட்சிகள், ஈழ விடுதலை ஆதரவு அமைப்புகள் இதற்கு உரிய முறையில் ஒத்துழைப்புத் தந்து, இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இதன் திசை வழியே வேறு மாதிரியாகச் சென்றிருக்கும். ஒன்றும் வேண்டாம், யாரும் இந்த மேடையில் வந்து திருமாவோடு சேர்ந்து போராட வேண்டும், அவரோடு சேர்ந்து உண்ணா நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. தமிழகத் தலைவர்கள் எல்லாம் அவரவர்களும் தனித்தனியாக அவரவர்களுக்கு வசதியான இடத்தில் ஒரு மேடை போட்டு தில்லி அரசு போரை நிறுத்தும் வரை நாங்கள் யாரும் ஓயமாட்டோம், நாங்களும் இதேபோல பட்டினிப் போராட்டம் மேற்கொள்ளுவோம் என்று ஒரு முடிவெடுத்து, ஆங்காங்கே போராடத் தொடங்கியிருந்தால் போதும். அந்தந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் தமிழ் உணர்வு அமைப்புகளும் ஆங்காங்கே களத்தில் இறங்கியிருந்தால் போதும். தமிழகமே கொந்தளித்திருக்கும், தில்லி கொஞ்சமாவது அசைந்து கொடுத்திருக்கும்.

ஆனால் என்ன நடந்தது? எல்லா கட்சித் தலைவர்களும் வந்தார்கள், திருமாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இக்கோரிக்கை வெல்ல தாங்கள் என்ன செய்யப் போகிறோம், தங்கள் பங்கு என்ன என்பதைச் சொல்லாமல், திருமா இப்பட்டினிப் போராட்டம் கிடந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது, உயிரோடு விளையாடக் கூடாது, போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானோரின் வருகையைப் பார்த்தால் ஏதோ கல்யாணம், காது குத்தல், மஞ்சள் நீர் போன்ற நல் நிகழ்வுகளுக்கு வந்து ‘மொய்’ எழுதிவிட்டுப் போவதுபோல் வந்து சால்வை போர்த்திவிட்டுப் போனார்களே ஒழிய, அதாவது நாளை ஒரு காலத்தில் இப்படி ஒன்று நடந்ததே, வந்து பார்த்தாயா என்று ஒரு கேள்வி வந்துவிடக்கூடாதே என்பதற்காக வந்து பார்த்துவிட்டுப் போனது போல் தெரிந்ததே தவிர, யாருக்கும் பிரச்சினையின்பால் உரிய அக்கறை இருந்ததாக அதற்காகப் போராட அணியமாக இருப்பதாகத் தோன்றவில்லை.

tha_pandianஇப்படிச் சொல்வதன்மூலம் மனிதாபிமான அடிப்படையில் வந்து போனவர்களையும் கொச்சைப்படுத்துவதாக நினைத்து விடக்கூடாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வேலைத்திட்டம் இருக்கலாம். திடீரென்று அவர்கள் அதை மாற்றிக் கொள்ள முடியாது. அதற்குட்பட்டே அவர்கள் செயல்பட முடியும் இப்படி இருக்க இந்த நிலையிலும் வந்து பார்த்துவிட்டுப் போனார்களே என்பதற்காக பெருமைப்படுவதை, பாராட்டுவதை விட்டு, இப்படி குறை சொல்லலாமா என்றும் சிலர் நினைக்கலாம். நியாயம். எல்லாம் சரி, எல்லாவற்றையுமே ஏற்றுக்கொள்வோம். ஆனால், ஈழச்சிக்கல் தொடர்பாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெற்ற வெவ்வேறு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதாவது, அவ்வப்போது ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவ்வப்போது ஒரு போராட்டம் நடத்தி பிறகு, அதை அம்போ என்று விட்டுவிடுவது சரியாகாது. எனவே “ஈழ மக்கள் பாதுகாப்பு அமைப்பு”, “தமிழீழ ஆதரவு அமைப்பு” என்று ஏதாவது ஒரு பெயரில், பலரும் ஒப்புக் கொள்கிற குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அமைப்பை உருவாக்கி இப்பிரச்சனைக்கென்று நிலையாக செயல்படவேண்டும் என்று வலியுறுத்துவோம்.

ஆனால் அதை யாரும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. அதில் அக்கறை காட்டுவதுமில்லை. எல்லோரும் ஈழம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் யாரும் இப்படி ஓர் அமைப்பை உருவாக்குவது பற்றிப் பேசினால் இதில் ஆர்வம் காட்டமாட்டேன் என்கிறார்களே ஏன் என்று யோசிக்கும் போதுதான் ஒரு செய்தி புரிகிறது. இப்படி ஓர் அமைப்பை உருவாக்கினால் அதன் கீழ் தொடர்ந்து இயங்கவேண்டும். செயல்பட வேண்டும் அப்படி ஒரு கடப்பாடு, நிர்ப்பந்தம் அமைப்பு வழி ஏற்பட்டுவிடும். அது கூட்டணி அரசியலுக்கு இடையூறாக இருக்கும். ஆகவே இப்படி நிலையான ஓர் அமைப்பை ஏற்படுத்தாமல் அதைத் தவிர்த்து, அப்போதைக்கப்போது தேவைக்கேற்ப, நிலைமைக்கேற்ப அந்தந்த நேரத்திற்குரிய கட்சிகளோடு சேர்ந்து ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் ஈழத்திற்கும் போராடியது மாதிரி இருக்கும். கூட்டணி வடிவிலும் பாதிப்பு வராமல் இருக்கும் என்று இருந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.

சரி, போனது எல்லாம் போகட்டும். இப்போது திருமா உண்ணா நிலைப் போராட்டம் இருக்கிறார். இப்போதாவது தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இதை ஆதரித்து அறிக்கைவிட்டு, அவரவர் அமைப்பு சார்பிலும், ஆங்காங்கே பல போராட்டங்கள் நடத்தி தில்லி அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தலாம் இல்லையா. ஏன் செய்யவில்லை? இதனால் தனிப்பட்ட ஒருவருக்கு செல்வாக்கு ஏற்பட்டுவிடும், புகழ் கூடிவிடும் என்று கருதுவது காரணமாயிருக்குமா, அல்லது கூட்டணிக் கட்சிகள் கோபித்துக் கொள்ளும் என்பது காரணமாயிருக்குமா, இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும் இல்லையா? எல்லாரும் ஈழ விடுதலைக்கு ஆதரவாய் இருக்கிறார்கள். தனித்தனியே போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இப்படி ஒருவர் சற்று தீவிரமாய் களமிறங்கும்போது அதை ஆதரிக்க அனைவரும் ஒன்றுபட்டு களமிறங்க மறுக்கிறார்கள். அதை முடித்துக் கொள்ளக் கோருகிறார்கள் என்றால் இதை எப்படித்தான் புரிந்து கொள்வது?

இந்தச் சிக்கலில் இப்போராட்டத்தை யொட்டி ஏதும் பாய்ச்சலான முன்னேற்றம் ஏற்படாதா என சிறிய அமைப்புகள் முதலில் எதிர்பார்த்தன. ஆனால் வலுமிக்க பெரிய அமைப்புகள் ஏதும் உடன்நின்று ஒத்துழைப்புத் தராமல் ஏறக்குறைய எல்லோரும் கைவிட்ட நிலையிலேயே, சிறிய அமைப்புகளும் இப்பட்டினிப் போராட்டத்தை திருமா மேலும் நீட்டிப்பது சரிவராது எனக் கைவிடக் கோரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயின.

இப்படித் தோழமைக் கட்சிகள், அமைப்புகள் ஒத்துழைப்புத் தராத, கைகழுவிவிட்ட இக்காரணம் பற்றியே போராட்டம் எந்த நிலையில் தொடங்கப் பெற்றதோ, அந்த நிலையிலேயே பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லா மலேயே முடிய வேண்டியதாயிற்று. இது போராட்டத்திற்கு இரண்டாவது பின்னடைவு.

இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெறுகிறது. அண்டை நாட்டில் உள்ள மக்கள், அரசியல் கட்சிகள் அதற்கு ஆதரவு தரவில்லை. ஆகவே, அந்த விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்கு ஆளானது என்றால் அதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஈழச் சிக்கலில் தமிழ்நாட்டு நிலைமை அப்படியில்லை. தமிழக மக்கள் எழுபத்தைத்து எண்பது விழுக்காட்டிற்கும் மேல் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றே அவ்வப்போது ஊடகங்கள் நடத்திய பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலும் ஒரு சில தவிர அனைத்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவே இருக்கின்றன. இருந்தும் ஈழ விடுதலைக்கு தமிழகத்தால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. தில்லி அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக மக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள், சட்ட மன்றத் தீர்மானங்கள், முதலமைச்சர் சந்திப்பு ஆகிய இவ்வளவுக்குப் பிறகும் தில்லி அரசு கிஞ்சித்தும் அசைந்து கொடுக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?

இதற்கு இலங்கையுடனான இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை அணுகு முறை ஒரு முக்கிய, அடிப்படைக் காரணம் என்றாலும், அதைத் தகர்த்து, அதற்கு அப்பால் தில்லியை அசைந்து கொடுக்க வைத்து அதைச் செயல்பட வைக்க முடியாததற்கு என்ன காரணம்? காரணம், தமிழகம் குறித்து தில்லிக்கு அச்சமின்மை. தமிழக மக்களோ தமிழக கட்சிகளோ தங்களுக்கு எதிராகத் திரும்ப மாட்டார்கள் என்கிற நம்பிக்கை, ஆணவம். இதற்கு காரணம் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையின்மை. மற்ற மாநிலங்களிலெல்லாம் அந்த மக்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்று வேறுபாடு இல்லாமல் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். போராடு கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அவலம், தமிழன் தலையே போனாலும் கவலையில்லை. நாங்கள் ஒன்றுபட மாட்டோம், எங்களுக்குக் கூட்டணி உறவுதான் முக்கியம். நாற்காலி அரயசில்தான் முக்கியம் என்று இதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது தில்லிக்கு நன்றாகத் தெரிந்திருப்பதனால்தான் தில்லி எது பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. ஆட்சியாளர்கள் தமிழகத்தின் போராட்டங்கள் எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல், எதற்கும் அசைந்து கொடுக்காமல், அலட்சியமாக மெத்தனமாக இருக்கிறார்கள். தில்லி தற்போது என்ன நம்பிக்கையில் இருக்கிறது. தமிழகத்தில் நமக்கு எதிராக எதுவும் நடந்துவிடாது. அப்படி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்கிற வேலையை கருணாநிதி திறம்படச் செய்வார் என்று இருக்கிறது. கருணாநிதியும் தன் அரச விசுவாசத்துக்கு செவ்வனே, சாதுர்யமாக இந்தச் சேவையைச்செய்து வருகிறார். இதைத்தாண்டி இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் தமிழகம் எப்படி உருப்பட முடியும். சொல்லுங்கள். உலக வரலாற்றின் எந்த மூலையிலாவது இப்படிப்பட்ட அவலம், கொடுமை நேர்ந்துள்ளதா...?

சரி, கருணாநிதிதான் இப்படி என்றால், மற்ற தலைவர்களாவது நாம் எல்லோரும் கூடித்தானே தீர்மானம் நிறைவேற்றினோம், கட்சி சார்பில் நேரில் போய் வேண்டுகோள் விடுத்தோம், தில்லி இப்படி எதற்கும் அசைந்து கொடுக்காமல் மௌனமாய் இருக்கிறதே என்று இவர்களுக்காவது கோபம், ஆவேசம், துடிப்பு, வேகம் வருகிறதா.. என்றால் அதுவும் இல்லை.கருணாநிதி ஒருபுறம் ஆறுதல் அளிக்கிறது திருப்தி தருகிறது இன்னும் சில காலம் பொறுத்திருப்போம் என்று அறிக்கைவிட்டால் இவர்கள் “ஏமாற்றமளிக்கிறது. கவலையளிக்கிறது. அவமானமாயிருக்கிறது, வெட்கித் தலைகுனிந்து நிற்கிறோம்” என்றெல்லாம் கூறுகிறார்கள். அறிக்கை விடுகிறார்களே தவிர, எல்லாம் சரி காரியத்தில் என்ன, இதற்கு மாற்றாக இதைக் களைய நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யாராவது சொல்கிறார்களா, இருக்கிற அவல நிலையை வார்த்தைகளால் வருணித்துச் சொல்லத்தான் அரசியல் கட்சிகளா...? அதிலிருந்து மீள வழி காட்ட வேண்டாமா...?

வி.சி.க.வின் திருமா ஈழச் சிக்கலில் உணர்வோடும் துடிப்போடும் தான் இருக்கிறார். அந்தத் துடிப்பில் தான் இந்தப் போராட்டத்தையும் மேற்கொண்டிருக்கிறார். என்றாலும் அவர் தி.மு.க.வின் பிடியிலிருந்து வெளிவரத் தயங்குகிறார். ‘பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது’ என்று ஆன்மிக நம்பிக்கையாளர்கள் சொல்வார்களே, அதுபோல இவர் ‘எதிரியை மடியில் கட்டிக் கொண்டு போராட்டப் பார்க்கிறார்’. நடக்கிற கதையா இது.

வி.சி.க. இப்படி என்றால் அடுத்தது பா.ம.க. பா.ம.க. - இது தி.மு.க.வோடு உறவை முறித்துக் கொண்டாலும் காங்கிரசோடு உறவைத் துண்டித்துக் கொள்ள விரும்பாத, அவ்வுறவை நீட்டிக்க விரும்புகிற கட்சி. இதனால் ஈழச்சிக்கலில் பா.ம.க. காங்கிரசை கடுமையாக எதுவும் விமர்சிக்காமல் பதமாகவே பேசி வருகிறது. என்றாலும் கட்சி முன்னோடிகளில் சிலர் சொல்லுகிறார்கள். மருத்துவர் இதில் வேகமாகத்தான் இருக்கிறார். ஆனாலும் தான் மட்டும் வேகம் காட்டி, தான் மட்டும் இதில் பலியாகி விடக்கூடாது. அதாவது தில்லி உறவை முறித்துக் கொண்டு, அமைச்சர் பதவியை இழந்து விடக்கூடாது. முதலில் தி.மு.க. தில்லி உறவை முறித்து அவர்கள் பதவி இழக்கட்டும். அதன்பின் அவர்களோடு சேர்ந்து நாமும் பதவி இழப்போம் என்கிற உத்தியில் இருக்கிறார். இதனால்தான் தி.மு.க.வை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்த மருத்துவர் இராமதாசு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் தி.மு.க.வையும் அம்பலப்படுத்த முடியும். காங்கிரஸ் உறவையும் நீட்டித்துக் கொள்ள முடியும் என்று பார்க்கிறார் என்கிறார்கள்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வை.கோ.வைப் பொறுத்தமட்டில் தமிழீழ விடுதலைக்காக உறுதியாகக் குரல் கொடுத்து வருபவர். என்றாலும் நடப்பு நாற்காலி அரசியலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் ஜெ.வுன் கூட்டணியில் நீடிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர். ஜெ. நிர்ப்பந்தம், தேவை காரணமாக ஈழத் தமிழர் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாகச் சொன்னாலும், தொடர்ந்து புலிகள் அமைப்புக்கு எதிராக பேசி வருபவர் அதை எதிர்த்து வருபவர். இந்தக் கூட்டணியில் நீடிக்கும்வரை வை.கோ. சுதந்திரமாகச் செயல்பட முடியாது. ஈழ விடுதலையை முழுமையாய் ஆதரிக்க முடியாது. அதற்காக உறுதியாகக் குரல் கொடுக்க முடியாது.

ஆக இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருக்க, இக்கட்சிகளின், தமிழீழ ஆதரவு அமைப்புகளின் ஒத்துழைப்பு அற்ற நிலையே உண்ணாநிலைப் போராட்டத்தை, கோரிக்கைகள் சார்ந்த எந்த முன்னேற்றமும் இல்லாமலேயே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. இப்படித் தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆதரவுப் போராட்டங்கள் அற்ற நிலையே தில்லியையும் இதுபற்றி பொருட்படுத்திக் கொள்ளாமல் தன் பாட்டுக்கு தன் நிலையில் உதாசீனமாய் இருக்கவும் வைத்தது.

இது புரிந்தோ, புரியாமலோ பட்டினிப் போராட்டத்தின்போது உணர்ச்சி வயப்பட்ட சிலர் மேடையிலே பேசும்போது, இப்போராட்டம் கடைநிலை சமூகத்தைச் சேர்ந்தவர் நடத்துகிற போராட்டம் என்பதால்தான் தில்லி அசைந்து கொடுக்காமல் இருக்கிறது என்று பேசினார்கள். பேசியவர்களுக்கே அது உண்மையல்ல என்று தெரிந்திருப்பதானாலும் விளக்கத்திற்காக ஒன்று. தில்லி அரசு ஈழச்சிக்கலுக்கு ஆதரவாக இல்லாமல் எதிராக, இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருப்பதற்குக் காரணம் இந்திய அரசின், ஆளும் வர்க்கங்களின் ஆட்சியாளர்களின் ஆதிக்க நலன். அதற்கு இசைவான அயலுறவுக் கொள்கை, அது சார்ந்து இலங்கையுடனான அணுகுமுறை, இதுதான் முக்கிய காரணமேயன்றி, வேறு காரணமில்லை.

எனவே இந்தச் சிக்கல் சார்ந்து ஒரு பார்ப்பனரே பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருந்தாலும் தில்லி அரசின் நிலை இதுவாகவேதான் இருந் திருக்குமேயல்லாது வேறுவிதமாக இருந்திருக்காது. ஆகவே இந்தச் சிக்கலில் தில்லி அரசின் மெத்தனத்திற்கும் உதாசீனத்திற்கும் காரணம் ஆதிக்கக் கொள்கைதானே அன்றி சாதியல்ல.இந்த ஆதிக்கத்தை எதிர்க்கும் முறியடிக்கும் அளவுக்கு நம்மிடையே ஒற்றுமையில்லை, ஒன்றுபட்டு நம் எதிர்ப்பை, ஆவேசத்தைக் காட்ட வாய்க்கவில்லை, முடியவில்லை என்பதுதான் பிரச்சினையே தவிர வேறு எதுவுமில்லை. எனவே இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே தற்போது நம் முன் உள்ள கேள்வி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பட்டினியால் வாடும் ஈழ மக்களுக்கு தமிழக மக்கள் மனமுவந்து அளித்த ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அவர்களுக்கு முறைப்படி அனுப்பி வைக்க இந்திய, தமிழக அரசுகள் முயற்சி மேற்கொள்ளாத நிலையில் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உணர்வாளர்கள் படகுப் பயணப் போராட்டம் நடத்த முயன்றபோது தமிழக அரசு அதைத் தடை செய்ய அதைக் கண்டித்து, திரு.பழ. நெடுமாறன் அவர்கள் 12-09-07 முதல் 15-09-07 முடிய சென்னை கோயம் பேட்டில் மேற்கொண்ட காலவரையற்ற பட்டினிப் போராட்டம் இதே போலவே நான்கு நாட்கள் நீடித்து முடிவுற்றது.

அங்கும் இதேபோல முன்வைத்த கோரிக்கையின்பால் தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசும் அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்பு சார்ந்தவர்களும், உணர்வாளர்களும் வந்து பார்த்தார்கள். சால்வை போர்த்தினார்கள். பாராட்டினார்கள். உண்ணாநிலையை முடித்துக் கொள்ள வற்புறுத்தினார்கள்.

அப்போதே உணர்வாளர்கள் பலரும் பேசிக்கொண்டது, வந்து பார்க்கும் தலைவர்கள் எல்லாம் இங்கு வந்து ஆதரவு தரும் அதே வேளை, அவரவர் கட்சி, அமைப்பு சார்ந்தவர்களை இதற்காக களம் இறங்கிப் போராட வைத்தால் தமிழகம் முழுக்க ஒரு கொந்தளிப்பு உருவாகும். ஆட்சியாளர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற்படும். கோரிக்கைக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்பதுதான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடங்கும் போது முன்வைத்த கோரிக்கை இரண்டு மூன்று நாட்கள் ஆனதும் எப்படியாவது உண்ணாநிலையை முடித்து அவர் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்று ஆனது. அன்றை யிலிருந்து இன்று வரை அந்தக் கோரிக்கை அப்படியே கிடக்கிறது. உணவுப் பொருளும் மருந்துப் பொருளும் மக்கிப் பாழானதுதான் மிச்சம். பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இப்படி ஒரு அனுபவம் நம் கண்முன் இருக்க, கிட்டத்தட்ட இதே போலத்தான் திருமாவின் போராட்டமும் முடிவுற்றது. பட்டினிப் போராட்டம் தொடங்கிய போது முன்வைத்த கோரிக்கைகள் இரண்டு, போர் நிறுத்தம் செய், அமைதிப் பேச்சைத் தொடங்கு. ஆனால் மூன்று நாளானதும் கோரிக்கை பின்னுக்குப் போனது. சோதனை வேண்டாம், திருமாவின் உயிரைக் காப் பாற்றினால் போதும் என்று ஆனது. அதற்காக எப்படியாவது உண்ணா நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

இங்கேயும் வந்து பார்த்த தலைவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு நில்லாவிட்டாலும் தனித்தனியாகவேனும் இக்கோரிக்கைக்கு ஆங்காங்கே போராடியிருந்தால் தமிழகத்தில் ஒரு மாபெரும் எழுச்சி ஏற்பட்டு ஆட்சியாளர்களுக்கு ஒரு நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கும். போர் நிறுத்தம் நோக்கி ஒரு சிறு முன்னேற்றமாவது ஏற்பட்டிருக்கும். ஆனால் எதுவுமில்லை. சரி, ஆதரவுப் போராட்டம் நடத்தவில்லை. போகட்டும். திருமாவின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். தில்லி அரசே கோரிக்கைகளை நிறைவேற்று, இல்லாவிட்டால் நாங்களும் களத்தில் இறங்குவோம் என்று அந்தந்தக் கட்சி அமைப்புத் தலைவர்களும் ஓர் ஆதரவு அறிக்கையாவது பத்திரிகைகளுக்குத் தந்தார்களா. எதுவுமே இல்லை ஏன்? இதை எப்படிப் புரிந்து கொள்வது. ஆக எந்த முன்னேற்றமும் இல்லாமலேயே இந்தப் போராட்டமும் முடிவுற்றது.

இந்த அனுபவங்களைக் கொண்டு நோக்க ஒன்று புரிகிறது. ஈழச் சிக்கல் பற்றி, ஈழ மக்கள் பற்றி ஒவ்வொரு கட்சியும் அமைப்பும் எவ்வளவுதான் முழங்கினாலும், தனித்தனியே பல போராட்டங்களை நடத்தினாலும் யாரும் ஒருவர் போராட்டத்துக்கு ஒருவர் உறுதுணையாய் நிற்பதில்லை. சும்மா சம்பிரதாயத்துக்கு மரியாதை நிமித்தம் போய் ஆதரித்துப் பேசிவிட்டு வருவ தோடு சரி. மற்றபடி ஒருவர் போராட்டத்தை மற்றொருவர் ஆதரித்துஅறிக்கை விடுவதுமில்லை களம் இறங்குவதுமில்லை. ஒன்று பட்டு ஒரே களத்தில் அனைவரும் திரண்டு போராட முன் வருவதில்லை. அவ்வப்போது ஒரு அணி சேர்க்கை, அவ்வப்போது ஒரு போராட்டம் என 1983 தொடங்கி இன்றுவரை இருபத்தைந்து வருடமாக இப்படியேதான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? எல்லாவற்றுக்கும் காரணம் கூட்டணி அரசியல். இக்கூட்டணி அரசியலில் அவ்வப்போது மாறும் அணி சேர்க்கை. இந்த அணி சேர்க்கை சார்ந்து அவ்வப்போது மாறும் உறவுகள். இதற்கு ஏற்ப, ஏற்ற இறக்கங்களோடு, அந்தந்த சூழ்நிலைகளின் வரம்புக்கு உட்பட்டு நிகழும் ஈழ ஆதரவு வெளிப்பாடுகள். இதுதானே இந்தப் பின்னடைவுக்குக் காரணம். இதைத் தாண்டி வேறு ஏதாவது உண்டா. இருந்தால் யாரும் சொல்லட்டும்.

இப்படிப்பட்ட தமிழக அரசியல் சூழல் பின்னணியில் தமிழ் ஈழ விடுதலைக்கு தமிழீழ மக்களுக்கு ஆதரவாக நாம் உண்மையிலேயே ஏதாவது செய்தாவ வேண்டுமென்றால், தோழர். தொல். திருமாவுக்கு முன்னுள்ள பாதைகள் இரண்டு.

1) தமிழீழ விடுதலைக்கு எதிரி சிங்கள அரசு, தில்லி அரசு ஆகியவற்றுடன் தமிழக கருணாநிதி அரசும் என்பதை தொல் திருமா மனம் திறந்து ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த ஒப்புதலின் அடிப்படையில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத பிற கட்சிகளின் அதாவது ம.தி.மு.க., பா.ம.க., இ.க.க., ஆகிய கட்சி களின் ஒற்றுமைக்கு கூட்டு நடவடிக்கைக்கு முயலவேண்டும். இதில் பா.ம.க வும் வி.சி.க வும் ஏற்கெனவே ஓரணியில் இருக்கிறார்கள். இ.க.க வும் உடன் வருகிறது சேர்க்க வேண்டியது ம.தி.மு.க தான்

இப்பட்டினிப் போராட்டத்திற்கு முன் அப்படி ஒரு முயற்சி நடத்து, அது வடிவமெடுக்கும் முயற்சியில் தி.மு.க.வையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பா.ம.க.வும் சிறுத்தைகளும் வலியுறுத்தியதால்தான் வை.கோ. இதில் சேர மறுத்துவிட்டார் என்று ஒரு பேச்சு இருக்கிறது. ஆகவே, திருமா இந்த மாதிரி முயற்சிகளைக் கைவிட்டு அ.தி.மு.க. ஈழ விடுதலைக்கு ஈழ மக்களுக்கு எதிரி என்பது எந்த அளவு உண்மையோ, அந்த அளவு தி.மு.க.வும் ஈழ விடுதலைக்கு, ஈழ மக்களுக்கு துரோகி என்பதை உணர்ந்து, ஒப்புக் கொண்டு, அவர் அ.தி.மு.க. அணியிலிருந்து எப்படி விலகி வந்தாரோ, அதேபோல தி.மு.க. அணியிலிருந்தும் விலகி வந்து, இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக, ஒரு அணியை உருவாக்க வேண்டும்.

இந்த அணியில் முக்கிய பெருந்திரள் கட்சியாக உள்ள ம.தி.மு.க., பா.ம.க., சிறுத்தைகள் ஆகியவற்றுடன் தமிழீழ ஆதரவு நிலையில் உள்ள பிற கட்சிகளும் அமைப்புகளும் இதில் சேரும் அல்லது துணை நிற்கும். தேர்தலுக்கு அப்பாற் பட்ட வெறும் ஈழ விடுதலை ஆதரவுக் கூட்டணியாக மட்டும் இதைச் சொல்ல வில்லை. தேர்தலுக்கும் இதே கூட்டணியை நீட்டிக்கலாம். அதாவது, தேர்தல் அரசியல், தேர்தல் கூட்டணிக்கு உட்பட்டே ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க. இ.க.க, இந்நான்கு கட்சிகளுடன் பிற தமிழீழ ஆதரவு அமைப்புகளும் ஒன்றுபட்டு அமைக்கும் இந்தக் கூட்டணி, ஈழ விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும். அதேவேளை, தேர்தலில் நிற்கும். இத்துடன் இணைந்துள்ள அமைப்புகள் தங்கள் கோட்பாட்டு நிலை காரணமாக தேர்தலில் நிற்கலாம், நிற்காமல் போகலாம். ஆதரவு அளிக்கலாம். அளிக்காமல் போகலாம். வாக்களிக்கலாம். அளிக்காமல் இருக்கலாம். எப்படி வேண்டு மானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஈழ விடுதலை ஆதரவில் உறுதியோடு நிற்கவேண்டும்.

இப்படி ஒரு அணி அமைந்தால் அது ஈழ விடுதலை ஆதரவு அணியாக மட்டும் இருக்காது. காலப் போக்கில் தமிழக உரிமைக் காப்பு அணியாகவும் அது மாறும். அதாவது தேர்தல் அரசியலில் நின்றே, தமிழீழ விடுதலை ஆதரவு, தமிழக உரிமை ஆதரவுக்கு குரலை எழுப்பி அதற்காக ஒன்றாகக் களம் காணமுடியும். இதன் வரம்புக்குட்பட்டு அதில் வெற்றியும் பெறமுடியும். அதில் பெறப்படும் அனுபவங்களை வைத்து இதிலிருந்தே நாளைத் தமிழ்த் தேச எழுச்சிக்கான அமைப்பும் முகிழ்த்தெழும்.

அதாவது நடப்பு அரசியலின் எல்லா சுகங்கள் செல்வாக்கு எல்லாவற்றுடன், தேர்தல் அரசியலின் வரம்புக்குட்பட்டு நிலவும் பாதை. இது கை கூடுவதிலோ, இதை உருவாக்குவதிலோ சிக்கல் ஒன்றும் இருக்காது. இருக்கும் ஒரே சிக்கல் தி.மு.க.வுடனான உறவுதான் என்பதால் அதை விட்டு விலகி வெளியே வந்தால், ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. அணியை விட்டு வெளியே வந்துவிடும். இந்த புது கூட்டணி கனியும் என்று நம்பலாம். இது ஒரு பாதை.

சரி, இப்படி ஒரு கூட்டணி அமைய வாய்ப்பில்லை. ஏதோ சிக்கல்களால் இது சாத்தியப்படாமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது திருமா என்ன செய்யலாம்? யாரையும் எதிர்பார்த்துக் கொண்டிராமல், தமிழீழ விடுதலை ஆதரவு சக்திகளையும், அமைப்புகளையும் தானே முன்னின்று ஒன்றுதிரட்டி, அந்தந்த கட்சிகளும் அமைப்புகளும் அதே பெயரில் அவரவர் செயல் திட்டம் சார்ந்து இயங்கட்டும். ஆனால் நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் திரண்டு ‘ஈழ மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ ‘தமிழக உரிமைக் காப்பு பேரமைப்பு’ என்று ஏதாவது ஒரு பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இயங்குவோம் என்று முடிவு செய்யலாம். தமிழக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற, அதற்காகப் போராடுகிற வகையில், ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை, உருவாக்கி அதனடிப்படையில் இதை செயல்படுத்தலாம்.

இதில் பா.ம.க இப்போதே உடன் நிற்கிறது ம.தி.மு.க.வும் நிச்சயம் உறுதுணையாக வரும். இதுவும் தேர்தல் அணியாகவும் இருக்கலாம். அல்லாமலும் போகலாம். ஆனால் எப்படியானாலும் தேர்தல் குறித்து முந்தைய அணிக்கான அதே நிபந்தனைகள்தான் இதற்கும்.

இப்படி ஒரு அணியை உருவாக்கினால் இது தொடக்கத்தில் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் ஊடகங்கள் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் தமிழக மக்கள் தொகையில் 75 - 80 விழுக் காட்டிற்கும் மேற்பட்டவர்கள் ஈழ விடுதலைக்கு ஆதரவான மன நிலையில் இருப்பதும், தமிழகம் உரிமைகள் மறுக்கப்பட்டு தில்லியாலும், அண்டை மாநிலங்களாலும் வஞ்சிக்கப்பட்ட புற நிலையும், இந்த அணி வளர்ச்சியுறவும், எழுச்சி பெறவுமான வாய்ப்புகளை வழங்கும். அதன்பின் தமிழகத்தில் இந்த அணியே தனிப் பெரும் சக்தியாக, இதுவே தமிழக உரிமைகளுக்கும், அதன் பாது காப்பிற்கும் தமிழக வரலாற்றில் தடம் பதிக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக விளங்கும்.

இன்றைய தமிழக சூழல், தமிழக மக்களின் உணர்வுகளை முழுமையாகப் பிரதிபலிக்கும், அவர்களது உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் தலைவர்களைக் கொண்டதாக இல்லை. ஒவ்வொரு தலைவரும் அவரவர் கூட்டணி, அரசி யலுக்கு ஏற்ப நிலைபாடுகளை எடுத்து செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர, முன்வைக்கும் பிரச்சினைகள் சார்ந்த கோரிக்கைகளை முனைப்போடு முன்னெடுத்துச் செல்பவர்களாக, அதற்காகத் தொடர்ந்து போராடுபவர்களாக இல்லை. மாறாக, நாங்களும் இதில் இருக்கிறோம் என கணக்கெடுப்புக்கு பெயர் கொடுப்பவர்கள் போல் இருக்கிறார்களே தவிர, யாரும் முனைப்போடு இல்லை. இதில் தனிப்பட முறையில் யாரையும் போய் குறை சொல்லவும் முடியாது. சுற்றிலும் சந்தர்ப்பவாத கூட்டணி நாற்காலி அரசியல் நிலவ இதில் தான் மட்டும் போய் தனியே சிக்கலில் மாட்டுவானேன் என்கிற தன்னலம். பாதுகாப்பு உணர்ச்சி இது எல்லோருக்கும் இருக்கிறது.

இதனால் தமிழக அரசியல் சூழல் தமிழக உரிமைகளுக்காக உறுதியோடு போராடுகிற தலைவர்கள் அற்ற வெற்றிடமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றிடத்தை நிரப்புவது யார் என்பதுதான் கேள்வி. இது ஒன்றும் யாரும் அறியாத உண்மை அல்ல. எல்லோரும் அறிந்த உண்மை இது. இருந்தும் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் பிரச்சினை. அந்தப் பணியைத் தோழர் திருமா செய்யலாம். செய்யவேண்டும். இதற்கான முழுத் தகுதியும் ஆற்றலும் திருமாவுக்கு இருக்கிறது. திருமா துடிப்பும் எழுச்சியும் வேகமும் மிக்க இளைஞராக இருக்கிறார். வலுவான போர்க்குண மிக்க இளஞ் சிறுத்தைகள் அவரோடு இருக்கிறார்கள். அவருக்கு ஆதரவாகக் கை கொடுக்கவும் வழிகாட்டவும் தோழமைக் கட்சிகள் அமைப்புகளின் அனுவம் மிக்க மூத்த தலைவர்கள் இருககிறாக்hகள். எனவே, இந்த முயற்சியில் அவர் தாராளமாய் நம்பிக்கையோடு இறங்கலாம்.

எல்லாம் சுலபமாய்க் சொல்லி விட்டீர்கள். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பதை உணர்ந்தீர்களா என்று சிலர் கேட்கலாம். நியாயம், நம்முடைய பட்டறிவுக்கு எட்டியவரை நாம் இதில் சிக்கல்களாக உணர்வது.

1. எதிர்க்கட்சிகள், தோழமைக் கட்சிகள் என்கிற பாகுபாடு இன்றி எல்லா கட்சிகளையும் உடைக்கவும், தனக்கு ஆள் சேர்க்கவும் அல்லது மாற்றுக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவாளர்களையும் விசுவாசிகளையும் உருவாக்கி வைத்துக் கொள்ளவும்,இதையே சாணக்கிய தந்திரம் என்பதாகப் போற்றிச் செயல்படுத்தி வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, வி.சி.க.விலும் தனக்கு ஆதரவாளர்களை விசுவாசிகளை வைத்துள்ளார். இந்நிலையில் திருமா தி.மு.மஅணியை விட்டு வெளியே வந்தால் இவர்கள் அதை ஏற்பார்களா, திருமாவோடு உடன் வருவார்களா, அப்படி வராவிட்டால் கட்சியில் பின்னடைவு ஏற்படாதா என்பது ஒன்று.

2. அடுத்தது எல்லாக் கட்சியிலும் உள்ளது போலவே வி.சி.க.விலும் அடிமட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து, தாதா அரசியல், ஆங்காங்கே உள்ள அமைப்பு பலம், செல்வாக்கிற்கேற்ப கட்டாய வசூல், அதிரடி நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடும் சக்திகள் இருக்கின்றனவே. திருமா இந்த சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து விடுபட்டு, போராட்ட அரசியலை மேற்கொண்டால் இச்சக்திகள் இருக்கிற செல்வாக்கை இழந்து பறி கொடுத்து திருமாவுடன் நிற்குமா.உடன் வருமா. இதற்கு வாய்ப்பான மாற்று அமைப்புகளை நோக்கிச் சென்று விடமாட்டார்களா, கட்சி கரைந்துவிடாதா என்பது மற்றொன்று.

நியாயம். தொடக்கத்தில் இது மாதிரி சில இழப்புகள் ஏற்படலாம். என்றாலும் இப்படிப்பட்ட சக்திகளால் ஏற்படும் இழப்பை புதிதாக வந்து சேரும் உணர்வுள்ள சக்திகள் ஈடு செய்யும். தமிழகத்தில் உணர்வுள்ள தமிழர்கள் எண்ணற்றோர், தங்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க உரிய தலைவர்கள் இல்லை என்றோ, இருக்கும் தலைவர்கள் அவ்வடிவத்தைக் கொடுக்கவில்லை என்றோ ஏக்கத்திலும், நிராசையிலும், விரக்தியிலும் இருக்கின்றனர். இப்படி ஓர் அமைப்பு கூட்டுத் தலைமை உருவாகிறது என்றால், எல்லோரும் இந்த அணியில் வந்து சேர்வார்கள். இதோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள். இந்த அணியின் வளர்ச்சிக்கு உதவுவார்கள். இப்படிப்பட்ட ஓர் அணியே தமிழ் நாட்டுக்குத் தேவையான பயனுள்ள அணியாகவும் அமையும்.

இப்படிப்பட்ட அணியைதொடக்கத்தில் சற்று முனைந்து உருவாக்கி விட்டால் பின் தொடர்ச்சியான அரசியல் வகுப்புகள், பயிற்சி முகாம்கள் மூலம் விழிப்புள்ள செயல்திறன் மிக்க ஒரு போராட்ட அணியை முன்னோடி அணியை உருவாக்கி விடலாம். இதன் உருவாக்கத்திலேயே கட்சிக்குள் இருக்கும் தன்னல வாத சக்திகள் தானாய் விலகிவிடும். அல்லது காலப்போக்கில் களையெடுக்கப் பட்டு, அமைப்பு கொள்கை உறுதி வாய்ந்த, செயல்திறன் மிக்க போராட்ட அமைப்பாக மாறிவிடும். அப்படி ஓர் ஆற்றல் மிக்க அமைப்பாக வி.சி.க. உள்ளிட்ட தோழமை அமைப்புகள் மாறவேண்டும் என்பதே.வலுவான கூட்டமைப்பு ஒன்று உருவாக வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் எதிர் பார்ப்பு.

இறுதியாக ஒன்று. இது பலமுறை சொன்னதுதான் என்றாலும், மீண்டும் ஒருமுறை சொல்லத் தோன்றுகிறது. நாடுகளின் வரலாறு என்பது அந்நாட்டில் எவ்வப்போது தேர்தல் நடந்தது, யார் யாருடன் யார் கூட்டணி சேர்ந்தார்கள். யார் யார் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு எழுதப்படுவதில்லை. மாறாக ஒரு இனம், சமூகம் ஒடுக்கப்பட்டபோது அது தன் உரிமைக்காக எப்படிப் போராடியது, சக மனிதன், சக இனம் பாதிக்கப்பட்டபோது அதற்காக என்ன செய்தது என்பதை வைத்துத்தான் வரலாறு எழுதப்படுகிறது, நினைவு கூரப்படுகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையன் ஆட்சிக் காலத்திலும்தான் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் அவையெல்லாம் வெறும் தகவல் பதிவு கள்தானே தவிர வரலாறாவதில்லை. வரலாறாய் நிற்பது வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் சாத்வீக மறுப்பு, தண்டி யாத்திரை, வேலூர் படைவீரர் பேரெழுச்சி, நெல்லைக் கிளர்ச்சி போன்றவைதான். வரலாற்று நாயகர்களாய் நிற்பவர்களும் எந்தத் தேர்தலிலும் நிற்காத காந்தி, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், வ.உ.சி., சிவா, வாஞ்சிநாதன், திருப்பூர்க் குமரன் போன்ற தியாகிகள்தான். தற்போது ஈழத்தில் வரலாறாய் பேசப்படுவதும் உரிமைக்குப் போராடுகிற புலிகள் அமைப்பும் களப் போராளிககும் அமைப்பின் தலைவர் பிரபாகரனும்தான்.

ஆகவே தோழர். தொல். திருமா இது குறித்து சிந்திக்கவேண்டும். எழுச்சி மாநாடுகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும்போது கோரிக்கை என்ன அதன் இலக்குநோக்கிய நகர்வுகள் என்ன என்பதுதான் முக்கியமே தவிர, நிகழ்ச்சிக்கு எத்தனை ஸ்கார்பியோ வந்தது, டாடா சுமோ, குவாலிஸ், இன்னோவா வந்தது யார் யார் என்னென்ன உடுத்தி அல்லது நகை அணிந்து வந்தார்கள்என்பது முக்கியமாவதில்லை. இவை அப்போதைக்கு பெருமையாகப் பேசப்படுவதானாலும் வரலாற்றில் நினைக்கப்படுவதில்லை. பதியப்படுவதில்லை.

அதேபோலவேதான், அரசியலிலும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆதிக்கமும் அதிகாரமும் அப்போதைக்கப்போது குதூகலமும் கொண் டாட்டமும், பெருமிதமும் கொள்ளும் கோலாகல ஆர்ப்பாட்ட, வசதிகள் மிக்க தன்னலவாத சுகவாச அரசியல். இன்னொன்று தியாகமும், அர்ப்பணிப்பும், தொண்டுள்ளமும் கொண்டு உரிமைகளுக்காகப் போராடுகிற அதற் காகஇன்னல்களையும்இடுக்கண்களையும்தயங்காதுஎதிர்கொள்கிற வரலாற்றில் நிiலை பெறுகிற வரலாற்றை உருவாக்ககிற போராட்ட அரசியல்.

திருமாவும் வி.சி.க.வும் வரலாறு படைக்கும் இந்தப் போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈழத்தில் புலிகளும் பிரபாகரனும் வரலாறு படைப்பதுபோல் தமிழகத்தில் சிறுத்தைகளும் திருமாவும் வரலாறு படைக்கவேண்டும் அதற்கான ஒரு கூட்டiமைப்பை உருவாக்கவேண்டும் என்பதே காலத்தின் தேவை.

தமிழகத் தலைவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தொடர்ந்து பல இயக்கங்கள் நடத்தி வரும், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. அமைப்புகளின் மரியாதைக்குரிய தலைவர்கள் திருவாளர்கள் ச. இராமதாசு, வை.கோ., திருமாவளவன் மற்றும் அண்மையில் இப் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ள இ.க.க. தலைவர் தா. பாண்டியன் ஆகியோர்க்கு,

உங்கள் அனைவருக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மனித நேய, மனித உரிமைக் கண் கொண்டு நோக்கும் ஒரு சாதாரண தமிழனின் பணிவான வேண்டுகோள். நீங்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்பவர்கள் என்பதும், அம்மக்கள்பால் பரிவும், நேசமும் கொண்டவர்கள் என்பதும் எப்பாடு பட்டேனும் அம்மக்கள் துயர் துடைக்க நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை யுடையவர்கள் என்பதும் எவரும் மறுக்க முடியாத ஓர் உண்மை. இச்சிக்கலின் தீர்வுக்காக அன்றாடம் நீங்கள் விடுக்கும் அறிக்கைகள், மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நடத்தும் போராட்டங்களே, இதை உணர்த்தும்.

ஆனால், இவ்வளவு முயற்சிகளும், இச்சிக்கலின் தீர்வுக்கு குறிப்பிட்ட எந்த விளைவையும் உருவாக்காமல் எந்த முன்னேற்றத்தையும் எட்டாமல், தில்லி அரசும் கிஞ்சித்தும் மசியாமல் போராட்டங்கள் பாட்டுக்கு இது ஒருபுறம் நடக்க, தில்லி அரசின் நடவடிக்கைகள் பாட்டுக்கு அதுஎப்போதும் போல் தொடர, இன்னமும் போர் நிறுத்தம் ஏற்படாமல் அன்றாடம்அப்பாவிமக்கள் கொல்லப்பட்டுவருகிறார்கள் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்த நிலைமைக்குக் காரணம், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவில் உங்களுக்குள் ஒருமித்த கருத்து இருந்தாலும், அது ஒருமித்து வலுவாக ஒலிக்க முடியாமல், கூட்டணி அரசியல் சார்ந்து தனித்தனியாக ஒலிப்பதுதான் என்பதே தமிழக மக்களுடைய தாழ்மையான கருத்து. தமிழக ஆட்சி பீடத்தில் மாறி மாறி அமரும் வாய்ப்புள்ள கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். இதில் ஈழப் போராளிகள் என்றாலே எட்டிக் காயாய் கசப்பை உமிழ்பவர் அ.தி.மு.க. தலைவர் செல்வி செய லலிதா. ஈழம் மலர்ந்தால் மகிழ்வேன், ஆனால் அதற்காக துரும்பையும் அசைக்க மாட்டேன் ஏனென்றால் இதில் தில்லி அரசின் நிலைபாடுதான் என் நிலைபாடு எனக் கூறி, ஒருபுறம் தமிழீழ உணர்வாளர்களை சாந்தப் படுத்தும் வகையிலும், மறுபுறம் தில்லி சேவகத்திலும் அது மனம் கோணாத வகையிலும் இரட்டை வேடம் போட்டு தன் குடும்ப நலன் காக்க தமிழக மக்களை ஏமாற்றி, வஞ்சித்து தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து வருபவர் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி.

இப்படிப்பட்ட இரு கட்சி களோடு, நீங்கள் கூட்டு சேர்ந்து இருப்பதே, ஈழச் சிக்கல் சார்ந்து, தமிழக மக்களின் குரல் ஒருமித்து ஒலிப்பதற்குத் தடையாக இருக்கிறது என்பதே தமிழக மக்களுடைய மதிப்பீடு. இன்றுள்ள அரசியல் சூழலில் அவரவரும் தங்கள் கட்சியைக் காத்துக் கொள்ளவும், கட்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறவும் ஆட்சியில் பங்கு கொள்ளவும், இந்தக் கூட்டணி சாகச மெல்லாம் தேவைப் படுகிறது என்பதும்,எல்லோரும்இப்படிப்பட்ட அரசியலில் இருக்க ஒருவர் மட்டும் புனிதவானாக ஒன்றும் செய்து விட முடியாது என்பதாலேயே இப்படி நீங்கள் எல்லாப் பிரச்சினைகளிலுமே நெளிவு சுளிவாக நடந்து கொள்கிறீர்கள் என்பதும் தமிழக மக்களுக்குப் புரியாததல்ல.

என்றாலும் நிலமை இப்படியே நீடித்தால், தமிழீழச் சிக்கலின் தீர்வுக்கு மட்டுமல்ல, தமிழகச் சிக்கல்களின் தீர்வுக்கும் காட்டாக, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு கண்ணகி கோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களின் தீர்வுக்கும் என்னதான் வழி என்பதுதான் தமிழக மக்களின் மிகப் பெரும் கேள்வியாக கவலையாக இருக்கிறது.

நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள். இந்தியப் பிரதமர் நினைத்தால் ஈழப் போரை நிறுத்தக் கோரி ஒரு நாளில் அறிவிக்க முடியாதா. தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்தால் இந்திய அரசுக்கு அப்படி ஒரு நிர்ப்பந்தத்தைத் தர முடியாதா.

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகத்தின் வற்புறுத்தலை ஏற்று தன் அமெரிக்க பயணத்தைத் தள்ளி வைத்து இரண்டே நாளில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறார் அன்றைய வாஜ்பேய். ஆனால் இன்று தமிழன் பிரச்சினைக்கு அப்படி ஒரு வலியுறத்தல் இல்லை. இன்றைய பிரதமர் எதற்கும் செவி சாய்ப்பது மில்லை. தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை களின்பால் இப்படிப்பட்ட அலட்சியம், கோரிக்கைகளை உதாசீனம் செய்கிற ஆணவம் தில்லி ஆட்சியாளர்களுக்கு எங்கிருந்து வரும்?

தமிழக அரசியல் கட்சிகள் எந்த நாளிலும் தங்களுக்கு எதிராகத் திரும்பாது, அக் கட்சிகளுக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடு இருந்தாலும், அவை தங்களுக்குள் என்னதான் மோதிக் கொண்டாலும், அக்கட்சிகள் ஏதாவதொரு வகையில் மாற்றி மாற்றி தங் களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் என்கிற நம்பிக்கையில்தானே அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். கடந்த கால நடைமுறையும் அதுதானே. இதுதானே ஈழச் சிக்கலின் தீர்வுக்கான முன்னேற்றத் துக்கும் தடையாக இருக்கிறது.

எனவே இந்த நிலையில் தமிழக மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான். முதலாவதாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்று பட்டு ஒரு கூட்டமைப்பை அல்லது பேரமைப்பை உருவாக்க வேண்டும். அது “ஈழ மக்கள் பாதுகாப்புக் கூட் டமைப்பு” அல்லது “ஈழ மக்கள் பாதுகாப்புப் பேரமைப்பு” என்கிற அல்லது இது போன்ற ஏதாவதொரு பெயரில் இயங்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட் டத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஆதரித்து வருவதுடன், இந்த நோக்கத்திற்காக எந்த அமைப்பு குரல் கொடுத்தாலும் அத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்டு நேரில் சென்று ஆதரவு அளித்து வருகிற, 1990இல் தொடங்கி கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக “தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு” என்கிற அமைப்பை இந்த நோக்கில் செயல்படுத்தி வருகிற திரு. பழ. நெடுமாறன் அவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.

இப்படி நீங்கள் ஐவரும் ஒன்று பட்டு ஒரணியில் நின்றால் ஈழச் சிக்கலுக்கு மட்டுமல்ல, தமிழகச் சிக்கல்களுக்கும் பல தீர்வுகள் கிட்டும். ஆனால் இப்படி நீங்கள் ஒன்றுபடத் தடையாயிருப்பது எது என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி.

ஈழ விடுதலையை ஆதரிப்பது தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராகப் போய்விடுமோ என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஊடகங்களின் சமீப கால கருத்துக் கணிப்பெல்லாம் மக்கள் இதற்கு ஆதரவாகவே உள்ளனர் என்பதைத் தான் மெய்ப்பிக்கின்றன. ஆகவே இது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்க முடியாது. அடுத்தது கூட்டணி : கூட்டணி என்பது இரண்டு வகையில் அமையும். ஒன்று அவரவர் தங்கள் கொள்கை கோட்பாடுகளைக் கைவிடாமல், தொகுதிப் பங்கீடுகளுக்காக மட்டுமே கூட்டு சேர்வது, இன்னொன்று தொகுதி பேரம் சுமுகமாய் அமைய வேண்டுமே என்பதற்காகவே கொள்கை கோட்பாடு களை கைவிடுவது அல்லது பின்னுக்குத் தள்ளுவது.

இதில் இரண்டாவது வகை நிலைப்பாட்டிற்கு, நீங்கள் யாரும் உங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டீர்கள், முதல் வகைக் கூட்டணியின் அடிப்படைக் கொள்கை வழியில் உறுதியாக நிற்பீர்கள் என்றே தமிழக மக்கள் திடமான நம்புகிறார்கள்.

ஆகவே, நீங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் ஈழ விடுதலைப் போரில் உறுதியாக நிற்போம், எந்தக் கூட்டணி உறவுக்காகவும் நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம், சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என உறதியாக நிற்பீர்கள் என்பதிலும் எந்தத் தடையும் இல்லை.

ஆக, மக்கள் ஆதரவும் பிரச்சினை யில்லை. கூட்டணி உறவும் பிரச்சினை யில்லை என்றால் அப்புறம் வேறு என்னதான் பிரச்சினை.

உங்களை ஒன்று படுத்துவது யார், உங்களுக்குள் உறவுப் பாலமாக இருப்பது யார் என்பது ஒரு கேள்வியாக எழலாம். இதற்கு யாருமே தேவை யில்லை. உங்கள் அனைவரையும் ஒன்றுபடக் கோருவது ஈழச் சிக்கல், தமிழகச் சிக்கல், தமிழக மக்கள். ஆகவே தமிழகத் தலைவர்களாக உள்ள நீங்கள், தமிழக மக்கள் கோரிக்கையை ஏற்று ஒன்றுபட வேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுகோள்.அப்படி உறவுப்பாலமாக ஒருவர் வேண்டுமேன்றால் எல்லாரிலும் மூத்த நீண்ட காலமாக ஈழ விடுதலை ஆதரவு நோக்கில் செயல்பட்டு வருகிற திரு பழ நெடுமாறன் அவர்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்பார்.

சரி, அப்படி ஒரு கூட்டமைப்பு உருவானால், அதற்கு யார் தலைமை ஏற்பது, யார் வழி நடத்துவது என்று சிலர் கேட்கலாம். இந்தக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை, இதைத் தனித்த கட்சி அமைப்பு போல் நோக்க வேண்டிய தில்லை. இதில் எல்லோருமே தலைவர்கள்தான்.எல்லோருமே வழி நடத்து பவர்கள்தாம். அந்த வகையில் இந்த அமைப்புக்கு ஒரு தலைமைக் குழுவை கூட்டுத் தலைiமையை உருவாக்கி எந்தப் பிரச்சினையிலும் கூடிக் கலந்து விவாதித்து கூட்டு முடிவெடுத்து, அதை நிறைவேற்றலாம். ஒருங்கிணைப்பது என்று கூட யாரும் வேண்டியதில்லை. இந்த தலைமைக் குழுவில் எவர் விரும்பினாலும் மற்றவர்களைத் தொடர்பு கொண்டு கூட்டத்தைக் கூட்டவும், முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ள வகையில் ஏற்பாடு செய்யலாம்.

இப்படி சமத்துவ அடிப்படை யிலும், சனநாயக அடிப்படையிலும் ஒன்று பட்டு நீங்கள் அனைவரும் ஒரு நிலைத்த கூட்டமைப்பை உருவாக்கி னால்தான், ஈழச் சிக்கலுக்கு ஒரு தீர்வு கிட்டும். அதோடு மட்டுமல்ல, தமிழகம் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்கும் இதுவே தீர்வாக அமையும் என தமிழக மக்கள் நம்புகிறார்கள்.

ஆகவே நீங்கள் அனைவரும் அன்பு கூர்ந்து உங்கள் மனச் சாட்சியைத் தொட்டு ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள். நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம். தமிழர் நலனில் அக்கறையுள்ள ஒரு கட்சியாக இருக்கிறோம். இருந்தும் தமிழக மக்களின் உரிமைகளை, தமிழீழ மக்களின் உரிமைகளை மீட்க முடியாமல் இருக்கிறோமே, இந்தத் துயர நிலையை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து, நம் வாழ்நாளில் நாம் எதையும் செய்யாது இருக்கிறோமே இது நியாயமா என்று யோசித்துப் பாருங்கள். இ.ப்படி இருந்தால் வரலாறு ஒரு போதும் நம்மை மன்னிக்காது என்பதை இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் வாழ்ந்ததற்கான கட்சி நடத்தியதற்கான அர்த்தமும் இருக்ககாது என்பதைஅன்பு கூர்ந்து நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஒரு கருத்தை நாம் தொடாந்து வலியுறுத்தி வருகிறோம்.ஒரு அரசியல் தலைவர் தன் வாழ் நாளில் தன் கட்சிக் காரர்களுக்கு எத்தனை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பபெற்றறுத் தந்தார். எத்தனை பேரை அமைச்சர்களாக்கினார் என்பது பற்றியெல்லாம் வரலாறு கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அதைப் பொருட்படுத்திக் கொள்வதுமில்லை. மாறாக அவர் தன் வாழ்நாளில் தான் பிறந்த மண்ணுக்கு தான் பேசும் மொழிக்கு தான் வாழும் சமூகத்திற்கு என்ன செய்தார் என்பதை வைத்தே மதிப்பிடுகிறது என்பது தாங்கள் அறியாததல்ல. ஆகவே, காலத்திற்குக் காலம் தோன்றி மறையும் சாதாரண சராசரித் தலைவர்களில் ஒருவராய் அல்லாமல் வரலாற்றில் போற்றப்படும் வல்லமை மிக்கத் தலைவர்களாய் நீங்கள் விளங்க வேண்டும். காலத்தின் கட்டளையை ஏற்று தமிழீழ தமிழக நிலைமைகளை உணர்ந்து இதன் விடியலுக்காக நீங்கள் வரலாறு படைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களாகிய எங்களின் அன்பு வேண்டுகோள்.

எங்கள் வேண்டுகோளில் ஏதும் பிழையிருந்தால் குறையிருந்தால் தமிழீழ விடியலுக்காகவும், தமிழக நலனக்காகவும் அன்பு கூர்ந்து அவற்றைப பொருத்தருளுமாறு மெத்தப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

குறிப்பு : மேலே இடம் பெற்றுள்ள வேண்டுகோள் மண்மொழி 25ஆம் இதழுக்காக அதாவது கடந்த ஆண்டு திசம்பர் வாக்கில் எழுதியது. ஒளியச்சு முடித்து, இதழில் இடமில்லாத நெருக்கடி ஒரு பக்கம், ஒரே இதழிலேயே இரண்டு வேண்டு கோள் கடிதங்களா என்கிற கேள்வி ஒரு பக்கம் ஆகியன, சரி இதை அடுத்த இதழில் போட்டுக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்தது.

ஆனால் அடுத்த இதழ் பணிகள் வழக்கம் போல் கால தாமதமாக அதற்குள் நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று விட்டன. அவற்றுள் முக்கியமான ஒன்று பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்”.இந்நிலையில் இவ்வமைப்பு குறித்து நம் எதிர்பார்ப்பு என்ன அது சார்ந்து நிறைவேறியது என்ன என்பது பற்றிய மதிப்பீடாக கருத்து தெரிவிக்கிறது கீழே இடம் பெற்றுள்ள கட்டுரை.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களின் கவனத்திற்கு...

நாமும் இதுவரை என்னென்னவோ போராட்டங்கள் நடத்திப் பார்த்து விட்டோம் எதற்கும் தில்லி அரசு மசியவில்லை. மசியாததற்குக் காரணம் இப் போராட்டங்களினால் அதற்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படவில்லை என்பதோடு மட்டுமல்ல அப்படி ஏற்படாமல் தில்லி அரசு பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையும் நடப்பும்தான்.

இந்நிலையில் நாம் ஒன்று செய்யலாம். நாமனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஐந்து லட்சம் மக்களை அணி திரட்டி, சென்னை அண்ணாசாலை சந்திப்பிலோ, கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலோ, அல்லது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் பகுதியிலோ ஒன்று கூடி தில்லி அரசே எங்கள் கோரிக்கைக்கு ஒரு பதில் சொல்லாதவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதவரை இந்த இடத்தை விட்டுநாங்கள் யாரும் அசையமாட்டோம் என்று இரண்டு நாளோ மூன்று நாளோ தேவைப்பட்டால் ஒரு வாரமோ, பத்து நாளோ எத்தனை நாளானாலும் சரி இங்கேயே இப்படியேதான் இருப்போம் என்று ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தால், பிரச்சினை உடனே ஒரு முடிவுக்கு வரலாம்.

இப்படி முற்றுகையிட்டால் அரசு சும்மாயிருக்குமா, அடக்குமுறைகளை ஏவாதா என்று சிலர் நினைக்கலாம்.நியாயம் ஏவட்டும்.திரண்டிருக்கும் மக்கள்மீது காவல்துறை தடியடி நடத்தட்டும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி குதிரைப் படையை ஏவி கலைக்க முயலட்டும். துப்பாக்கிச் சூடே நடத்தட்டும். இப்படி நடந்தால் தமிழகத்தின் மற்ற பகுதிகள் சம்மாயிருக்காது அது ஆங்காங்கே போராட்ட களத்தில் இறங்கும் ஆங்காங்கே சாலை மறியல் தொடர் வண்டி மறியல் என இறங்க தமிழகமே அசைவற்ற முடங்கும் நிலை ஏற்படும்.இப்படி ஏதாவது நடந்தால்தான் தில்லி அசையும்.ஆட்சியாளர்கள் அசைவார்கள்

இதையெல்லாம் தமிழக அரசு ஆளும் தி.மு.க இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முயல்கிறது என்று கொளவோம். அப்படி முயன்றால் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் அதன் நயவஞ்சக முக மூடி களையப்படும்.மக்கள் சக்தியும் அதற்கு எதிராகக் கிளம்பும். ஏற்கெனவே தி.மு.க விலிருந்து ஈழச்சிக்கலில் கருணாநிதியின் நிலை தாங்காமல் பலர் வெளியேறியிருக்கிறார்கள் இது மேலும் பெருக தி.மு.க வின் வாக்கு வங்கி மேலும் கரையும்

இப்படித் தேய நேர்ந்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கான எதிர்வினை வெளிப்படும். மக்கள் எதிரிகளுக்கும் போலிகளுக்கும் பம்மாத்துக் காரர்களுக்கும் தக்க பாடம் புகட்டுவார்கள். ஆக எந்த வகையில் பார்த்தாலும் இது இ.த.பா.இ க்கு சாதகமான நிலைதான். ஆகவே இப்படிப்படட ஒரு போராட்டம் குறித்து இ.த.பா.இ சிந்திக்க வேண்டும் தலைவர்கள் இதுகுறித்து சிந்திப்பார்களா?

- இராசேந்திர சோழன்

Pin It