“பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா” அமைப்பின் “The common sense “ மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள் !

the commonsense logo காதலர் தினம் பிப் 14, எப்போதும் போல் இந்த ஆண்டும் இளைஞர்கள் நடுவில் வரவேற்பை பெற்றது. வழக்கம் போல மதங்களின் பெயரால், நாடகக் காதல் என்றும், லவ் ஜிகாத் என்றும் அடிப்படைவாதிகள் பிரச்சனைகளை கிளப்பினாலும், அதனை எதிர்கொண்டு மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது. இப்போது தமிழ் நாட்டில் ஆர்எஸ்எஸ் மறைமுகமாக, கொல்லைப்புறம் வழியாக ஆள்கின்ற காரணத்தினால் சில இடங்களில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கிடவில்லை. காதல் என்பது இயற்கையான உணர்வு, அதை மதம், ஜாதி இவற்றைக் கொண்டு தடை செய்திட முடியாது.அதுமட்டுமல்லாமல் ஜாதியை ஒழிப்பதற்கு காதலுக்கு ஒரு பெறும் பங்குள்ளது என்று பகுத்தறிவாளர்களும், முற்போக்காளர்களும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜாதி மறுத்த காதல் மணங்களே ஜாதி அமைப்பை உடைக்கும், மற்றும் குருதி கலப்பிற்கு அத்தகைய வல்லமை உள்ளது என்கிறார், தந்தை பெரியார் அவர்களும் சாதி மறுத்த காதல் திருமணங்கள் சாதிய கட்டமைப்பை உடைக்கவல்லது என்று அதனை பெரிதும் வரவேற்கிறார். அதே வேளையில் அன்பு, ஆசை, நட்பு, பாசம் போன்ற ஒன்றாகக் காதலைக் கருத வேண்டுமே தவிர காதலுக்கு பூசப்படும் புனித பிம்பத்தை என்றும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தெளிவினை, எதையும் பகுத்தறியும் உணர்வினையும், பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் The Common sense இதழாளர்களுக்கு வழங்கிடவே முயற்சி செய்கின்றது.

ஜனவரி 14, தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியான முதல் ‘thecommonsense’ இதழுக்கு பேர் ஆதரவிளித்த அனைத்து தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் குழுவினரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த மாத இதழுக்காகவும் நம்மை வாழ்த்தியும் அட்டைப்படம் வழங்கிய ஓவியர் மருது அவர்களுக்கு நன்றி. பெரியார் விருது பெற்ற அனைத்து ஆளுமைகளுக்கும் இதழின் சார்பாகவும், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா சார்பாகவும் நல்வாழ்த்துகள்.

சங்கரமட விஜயேந்திரன் ஒரு பொது நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பொது எழுந்து நிற்காமல் அவமதித்ததை கண்டித்து கடந்த ஜனவரி 27, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - லண்டன் குழு சார்பாக இந்தியா தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, பிப்ரவரி 04, அன்று நியூ ஜெர்சி மாகாணத்தில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா சார்பில் கண்டனக்கூட்டம் நடைபெற்றது.

பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தன்னாட்சியுடனும் தொடர்ந்து செயற்பட, தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். தங்கள் படைப்புகள், கருத்துகள், விமர்சனங்கள், விளம்பரங்களை ‘இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.’ மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்துகொண்டு மேலும் ஊக்குவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்க தந்தை! வாழ்க அண்ணல்!

வளர்க பகுத்தறிவு! செழிக்க மனிதநேயம்!

ஆசிரியர் குழு.

Pin It