ஆச்சாரியார் சர்க்கார் எதையும் சட்டப்படித்தான் செய்கிறார்கள்! சும்மா சொல்லக்கூடாது! சட்டத்தை மீறுவதற்குத் துணிந்த வீரர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பதைக் கண்டு கொண்டால், இங்கே ஆட்சி புரிவதற்கு ஆச்சாரியாரா வேண்டும்? ‘விடுதலை’ ஆஃபீஸ் ‘வாட்ச்மேன்’ கூட முதலமைச்சரா யிருக்க முடியும்!

kuthoosi gurusamy 300எதற்கு வேண்டுமானாலும் 144! போலீஸ் தடையுத்தரவு! சென்னையில் இருப்பது போலவே மதுரையிலும் உத்தரவு பிறப்பித்தாகி விட்டது!

மக்கள் வாய்களையும் கை - கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, ஆட்சி புரிவதென்றால் கபோதிகூட ஆட்சி நடத்தி விடலாம்! அதுவும் கோழைகள் மலிந்த ஒரு நாட்டை ஆள்வது ரொம்ப ரொம்பச் சுளுவான வேலை! வங்காளம்! பம்பாய்! கிழக்கு பஞ்சாப்! இவைகளைப் போலவா சென்னை ராஜ்யம்? காந்தியாரின் அஹிம்சையில் ஊறிப் போன அடக்கமான ராஜ்யமல்லவா?

ஒவ்வொரு தமிழன் தலையிலும் ஒரு புளிய முளையை அடிக்க வேண்டுமென்று ஆச்சாரியார் உத்தரவு போட்டுப் பார்க்கட்டுமே! ஒருவர்கூட அதை எதிர்க்க மாட்டார்கள். பல பேர் தாங்களாகவே முளை சீவிக் கொண்டிருப்பார்கள்!

சட்டசபை ரோடு பக்கம் (வாலாஜா ரோடு) போகிறவர்களெல்லாம் மார்பினால் ஊர்ந்து தான் செல்ல வேண்டும் என்று பஞ்சாபில் டயர் உத்தரவிட்டது போல்) உத்தரவு பிறப்பிக்கட்டுமே! எல்லாத் தமிழர்களும் ஊர்ந்துதான் போவார்கள். ஆச்சாரியார் கோபம் நமக்கு எதற்கு, என்று! அவ்வளவு நல்ல பிள்ளைகளாகி விட்டார்கள், வீரத் தமிழர்கள்!

நேற்று “சுதேசமித்திரன்” பத்திரிகையில் அருமையான ஒரு படத்தைப் பார்த்தேன்! ஆச்சாரியார் தலையில் கூட இல்லாத கதர்க் குல்லாய், முதலாளி முத்தய்யா செட்டியார் தலை மீது ஏறிக் கொண்டிருக்கிறது!

உஸ்மான் சாகிபு கூட இதே காட்சியில் தோன்றினாலும் ஆச்சரியப் படமாட்டேன்! தென்னாடு அவ்வளவு முன்னேறி விட்டது!

இனி எடுத்துக் கொண்ட சங்கதிக்கு வருகிறேன். அதாவது 27 நிபுணர்கள் விஷயம்!

பத்திரிகைகளில் ஆட்சேபகரமான சங்கதிகளை வெளியிட்டால் அதைப் பற்றி செஷன்ஸ் நீதிபதி முன்பு வழக்குத் தொடர்ந்து, ஜூரர்கள் முன்பு விசாரிக்க வேண்டுமென்று பத்திரிகைக்காரர் கோரினால் சர்க்கார் அதன்படி 5 ஜூரர்களை நியமிப்பார்களாம்.

இந்த 5 பேர்கள் எந்தப் பட்டியலிலிருந்து பொறுக்கப்படுவார்கள், தெரியுமா? 27 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலை ஆச்சாரியார் சர்க்கார் வெளியிட்டிருக்கிறார்கள்! அந்தப் பட்டியலிலிருந்துதான்!

இந்த 27 பேரில் 9 பேர் (மூன்றுக்கு ஒன்று) ஆச்சாரியாரின் இனத்தைச் சேர்ந்தவர்கள்! மீதிப் பேரில் முக்காலே மூன்று வீசம் பேர் ஆச்சாரியார் தயவுக்குக் காத்துக் கிடக்கின்றவர்கள்!

இந்தப் பட்டியலில் திராவிடர் கழகத் தலைவர்களோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோ அல்லது இக்கட்சிகளின் ஆசிரியர்களோ அல்லது இவைகளின் எழுத்தாளர்களோ, ஒருவர்கூட இல்லை! ஏன் தெரியுமா? இவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகத்தானே இந்தப் பட்டியலே தயார் செய்யப்பட்டிருக்கிறது?

உதாரணமாக, ‘விடுதலை’யில் வரும் செய்தி அல்லது கருத்துக்காக ஆச்சாரியார் 5,000 ரூபாய் செக்யூரிட்டி கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்!

இதற்கு வழக்குத் தொடர்ந்து ஜூரர்கள் நியமிக்கப்பட்டால் சர்க்கார் கீழ்க்கண்ட 5 ஜூரர்களையும் நியமிப்பார்கள்:-

  1. “கல்கி”-கிருஷ்ணமூர்த்தி அய்யர்
  2. “சுதேசத்திரன்” -சி. ஆர். சீனுவாசய்யங்கார்
  3. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” -மானேஜர்-ஏ. ராமசாமி அய்யர்
  4. “ஆனந்தவிகடன்” -எஸ். எஸ். வாசன் அய்யங்கார்
  5. “முஸ்லிம்” ஆசிரியர் முகமது இப்ரஹிம்

ஒரு நாஸ்திகப் பத்திரிகையின் வழக்குக்காக மேற்கண்ட ஜூரர்களை நியமித்தால், அவர்கள் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும்?

5,000 ரூபாய் செக்யூரிட்டி போதாது; 10,000 ரூபாய் கேட்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள்!

ஏதோ இரண்டொரு ஜூரர்கள் இந்த 27 பேரில் இன உணர்ச்சி கொண்டவர்கள் இருந்தாலும்கூட, அவர்கள் மேற்கண்ட இரண்டு கட்சிப் பத்திரிகைகள் சம்மந்தப்படும் போது நியமிக்கப்படவும் மாட்டார்கள்; அப்படி நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்குத் துணிவு இருக்காது; ஒருக்கால் எதிர் பாராத விதமாகத் துணிவு ஏற்பட்டு விட்டாலும் 5 பேரில் ஒருவர்தானே! திராவிடர் கழகம் - கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து இனி இரண்டொருவரை நியமித்தாலும் இதே சங்கதிதானே!

சரி! “கஷ்டகாலம்” நெருங்கி விட்டது! தொல்லை வேளை வந்து கொண்டிருக்கிறது! யாரை நோக்கி? - என்றா கேட்கிறீர்கள்? பொறுத்திருந்து பாருங்கள்!

ஆனால் என்ன வந்தால் தானென்ன? பொதுமக்கள் வீரமெல்லாம் கை தட்டுவதில் ஈடுபட்டிருக்கும்போது யாருக்கு எந்தக் கேடு வந்தாலும் மூச்சுப் பேச்சு இருக்காது!

ஆச்சாரியாரின் பச்சையப்பன் மைதானத்துக் கூட்டத்துக்குக் கூட ஒரு லட்சம் பேர் போயிருந்தார்கள் என்றால், தமிழ் நாட்டில் எதற்குத்தான் கூட்டம் வராது? பல்பொடி விற்கின்ற இடத்தில் கூடத்தான் (அவன் ஒரு நல்ல பேச்சாளியாயிருந்தால்) பத்தாயிரம் பேர் கூடி விடுகிறார்கள்!

தமிழ் நாடு ஒரு கச்சேரி மண்டபம் அதுவும் காரியத்துக்கு உதவாத கச்சேரி மண்டபம்!

- குத்தூசி குருசாமி (15-07-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It