பிரிட்டிஷாருக்கு வர வரப் பைத்தியம் முற்றிக் கொண்டேயிருக்கிறது என்றே நினைக்கிறேன்!

kuthoosi gurusamy 300பஸ்களிலும், ரயில் வண்டிகளிலும் பிரயாணிகள் எதாவது பொருள்களை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டால் எல்லாப் பொருள்களும் உடனே குறித்த இடத்தில் தவறாமல் கொண்டு வந்து சேர்க்கப்படுமாம்! அங்கு சென்று உரியவர்கள் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாமாம்! ஒரு தடவை கோவை ஜி. டி. நாயுடு அவர்கள் வேண்டுமென்றே தமது விலையுயர்ந்த “ஃபோட்டோ காமிராவை” பஸ்ஸில் வைத்துவிட்டுப் போய் விட்டாராம், காணாமற்போன சாமான்கள் பெறுகின்ற இடத்திற்குப் போய்ப் பார்த்போது அந்தக் “காமிரா” அங்கிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதைப் பெற்றுக் கொண்டாராம்! இதை நாயுடுவே என்னிடம் கூறினார்.

ஏழை இங்கிலீஸ்காரனொருவன் கிழிந்த உடையுடன் லண்டனில் இருந்த ஒரு இந்திய மாணவனைத் தொடர்ந்து கொண்டே வந்தானாம். வீட்டுக்குள் நுழைந்தபோது, அம்மாணவன், “உனக்கு என்ன வேண்டும்?”, என்று கேட்டானாம்.

“பழைய கால்சட்டை வேண்டும்,” என்று அந்த இங்கிலீஷ் பிச்சைக்காரன் தெரிவித்தானாம். இந்திய மாணவன் தன்னிடமிருந்த ஒரு பழைய கால்சட்டையைக் கொடுத்துப் போகச் சொன்னானாம்.

பிறகு மறுநாள் என்ன நடந்தது தெரியுமா? அந்த இந்திய மாணவன் குடியிருந்த வீட்டுக்காரர் அய்ந்து ஷில்லிங் கரன்சி நோட் ஒன்றை அம்மாணவனிடம் கொடுத்தாராம்!

“இது ஏது?” என்று மாணவன் கேட்டதற்கு, “நேற்று யாரோ ஒரு பிச்சைக்காரனுக்குப் பழைய கால் சட்டை யொன்று கொடுத்தீர்களாமே! அந்தச் சட்டையின் பைக்குள்ளே இந்த நோட் இருந்ததாம்! இதை உங்களிடம் திருப்பிக் கொடுப்பதற்காக வந்தான், நீங்கள் வீட்டிலில்லை; என்னிடம் கொடுத்து உங்களிடம் கொடுக்கச் சொன்னான்,” என்று வீட்டுக்காரர் கூறினாராம்!

இந்த நிகழ்ச்சியை நண்பர் என். வி. நாயுடு அவர்கள் என்னிடம் கூறினார்.

கடந்த இரண்டாவது உலகப் போரின்போது ஒரு நாள் திடீரென்று லண்டனில் சர்க்கரைப் பஞ்சம் வந்த விட்டதாம். மறுநாள் சர்க்கரை ரேஷன் கொடுக்க வேண்டிய நாளாம், ஆனால் ரேஷன் கடைகளிலோ சர்க்கரை கையிருப்பில் கிடையாது. ஒரு வாரம் கழித்துத்தான் வரும். உடனே சர்க்கார் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியிட்டார்களாம்.

“வீட்டில் சர்க்கரை மீதியாக வைத்திருப்பவர்கள் அதைக் கடையில் கொண்டு வந்து தந்தால் அதற்குரிய விலையைப் பெற்றுக் கொள்ளலாம், சர்க்கரையே இல்லாதவர்களுக்கு ரேஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது தயவு கூர்ந்து உதவி செய்க,!”- என்று தெரிவித்தார்களாம்!

மறு நாள் ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் நீளமான க்யூ வரிசையில், சர்க்கரைப் பைகளுடன் ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்களாம்!

2 நாட்களுக்கு முன்பு ஒரு லண்டன் செய்தியைப் படித்தேன்.

பிரிட்டிஷ் வியாபாரி யொருவர் தாம் அளவுக்கு மீறிய லாபம் பெற்று விட்டபடியால், 5,33,000 ரூபாய் (40,000 பவுன்) பணத்தைத் தம் வாடிக்கைக்காரர்களுக்குப் பங்கு போட்டுத் திருப்பித் தந்து விட்டதாக அறிவித்திருக்கிறாராம்!

இந்த வியாபாரி அட்டைப் பெட்டி செய்கிறவராம்! ஒவ்வொரு பவனுக்கும் இரண்டு ஷில்லிங் வீதம் வாடிக்கைக்காரருக்குத் திருப்பித் தந்து விட்டாராம்! அட்டை விலை அதிகமாகும் என்று எதிர்பார்த்து பெட்டியின் விலையை அதிகமாக்கியிருந்ததாகவும், அந்த அளவுக்கு அட்டை விலை ஏறாதபடியால், அதிகமாகப் பெற்ற லாபத்தைத் திருப்பித் தந்து விடவேண்டியது தான் நியாயம் என்றும் அந்த வியாபாரி கூறுகிறாராம்!

என்ன பைத்தியக்காரத்தனம், பார்த்தீர்களா?

லாபத்தைத் திருப்பித் தருவதாம்! அதுவும் ஒரு வியாபாரி! சுத்த கீழ்ப்பாக்கம்!

இங்கே, நம் பாரதமாதா புத்திரர்களைப் பாருங்கள்! தமிழ்த் தாயின் தவப் புதல்வர்களைப் பாருங்கள்! ஹிந்தித் தாயின் ஸ்வீகார புத்திரர்களைப் பாருங்கள்!

ஏழையின் குடலைப் பிடுங்கி அதில் பிரியாணி (“குடல் பிரியாணி”) செய்து சாப்பிடுகிறார்களே!

ஆமாம்! பணக்காரன் பணம் முழுவதும் ஏழையின் குடல் பிரியாணி தான்!

பெரிய வியாபாரிகளைப் பாருங்கள்! அவர்கள் உடலிலிருக்கின்ற ஒவ்வொரு சொட்டு இரத்தமும் சொந்த இரத்தமே யல்ல! ஏழை மக்களின் இரத்தம்! தெரியாமலே உறிஞ்சிய இரத்தம்!

பெரிய தொழில் முதலாளிகள், நிலச்சுவான்தாரர்கள் ஆகியோரைப் பாருங்கள்! ஆஹா அசல் முதலைகள்! பல பாட்டாளிகளை அப்படியே விழுங்கியிருக்கின்ற முதலைகள்!

ஆனால் இவர்களெல்லோரும் ஒழுக்கத்தைப் பற்றியோ, நேர்மையைப் பற்றியோ, பேச வேண்டுமா? வண்டி வண்டியாகப் பேசுவார்கள்! திருக்குறள் முதல் உபநிஷத் வரையில்! அடாடா எல்லாம் தண்ணீர்ப் பாடந்தான்! கடவுள் பக்தியோ, சொல்ல வேண்டியதில்லை!

லாபத்தையாவது திருப்பித் தருவதாவது!

பாரத மாதா முதலாளிகளுக்கு முழுப்பைத்தியமே பிடித்தால் கூட அப்போதும் இந்தச் சங்கதி மட்டும் நடக்காது!

ஆதலால்,

ஜேய் ஹிந்த்!

வந்து-ஏமாத்-றோம்!!

சத்திய மேவ ஜெயதி!!!

- குத்தூசி குருசாமி (22-2-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It