kuthuoosi gurusamyசெத்த வீட்டில் ஒப்பாரி (பாட்டு சொல்லி அழுவதென்பது தமிழ்நாட்டுப் பெண்களின் தனிக் கலை! இதற்காகவே “ஒப்பாரிக் கண்ணி” என்ற புத்தகங்கள் கூட விற்கின்றன.

கணவன்- மாமனார் - மாமியார் - தந்தை - தாய் - பிள்ளை - அண்ணா - தம்பி எல்லோரும் உயிருடனிருக்கும் போதே, அவர்கள் செத்துப் போனால் என்ன சொல்லி அழுவது என்பதை முன் கூட்டியே மனப்பாடம் செய்வார்கள்! நீண்ட ராகம்! அவிழ்ந்த கூந்தல்! சுற்றிலும் மூக்குநீர்! அமோகமான காட்சி! வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஒருவரை யொருவர் கட்டிக் கொண்டு அழுவது! நின்று கொண்டு புடவை முந்தாணியை வரிந்து கட்டிக் கொண்டு மார்பில் அடித்துக் கொண்டு தாளம் தவறாமல் (பாட்டுடன்) சுற்றி வருவது! இந்த விதமாகப் பலரகங்களுண்டு! படிப்பும், பக்தியும் குறையக் குறைய இந்த லீலைகளை அதிகமாகக் காணலாம்.

படித்தும், பட்டம் பெற்றும், உள்ள பெண்களுக்கு இந்த ஒப்பாரி தெரியாது.(கல்லூரிகளில் கூட இதுவரை இந்தப் பாடம் கற்பிக்கப்பட வில்லை!) தெரியாதது மட்டு மல்ல! ஒப்பாரி சொல்கிறதைக் கண்டாலே, ஓட்டமாக ஓடிவிடுவார்கள்! ஆண்கள் இந்தத் துறையில் சுத்த சுன்னம்! எவ்வளவு தான் மிதமிஞ்சிய துயரமாயிருந்தாலுங் கூட எந்த ஆணும் ஒப்பாரி சொல்லி அழுவதில்லை! அதாவது கவிதா சக்தி இல்லை! வருத்தம் இருக்கும் போது பாட்டு எப்படி வரும் என்று சிலர் கேட்கலாம்! தமிழ் நாடகங்களையும், தமிழ் சினிமாக்களையும் பார்க்காத அதிகப்பிரசங்கிகள் தான் இந்த மாதிரிக் கேட்பார்கள்! அவைகளைப் பார்த்தால் வெறும் பாட்டுமட்டு மல்ல; தாளம் தவறாமலும், பக்க வாத்தியங்களுடனும் கூட, பாட்டு வரும் என்பது விளங்கும்!

பீடிகை போதும்! விஷயத்தைச் சொல்கிறேன்.

நம் மகாண மந்திரிகள் இப்போது ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பணமில்லை, அய்யாவே! பணமில்லை அம்மாவே! என்ன செய்வோம் நாங்கோ? எங்கே போய்த் தொலைப்போம்? அய்யய்யோ முடியலையே! அரைக்காகம் கிடைக்கலையே! ஹொஹ் ஹோ! ஹொஹ் ஹோ!  (தெரிந்தவர்கள் ஒப்பாரி மெட்டில் பாடுக!)

- என்று கனம் மந்திரிகள் ஊர் ஊராக (ஒப்பாரி நிபுணர்கள் சாவு வீடு தேடிச் செல்வது போல!)ச் சென்று ஒப்பாரி வைத்து வருகின்றனர்!

ஒப்பாரி வீட்டில் அதிர்வேட்டுப் போட்டாற் கூடக்கேட்காது! தாய்மார்கள் அவ்வளவு உரத்த குரலில் கண்ணீர்த் துளிகளை வடித்துக் கொண்டிருப்பார்கள்! அந்த நேரம் பார்த்து, “அம்மா பிச்சை போடுங்கோ! பசி காதை யடைக்கிறது! நீங்கள் மகராசியாயிருக்கணும்! உங்க வீட்டில் லட்சுமி குடியிருக்கணும்! இந்த வீட்டுக்காரர் மகாராசராயிருக்கணும்!”

- என்று ஒரு பிச்சைக்காரன் கூச்சல் போட்டால் எப்படியிருக்கும்?

சென்னை! சர்க்கார் செகரடேரியட் குமாஸ்தாக்கள் தங்கள் பஞ்சப் படியை உயர்த்த வேண்டு மென்று தீர்மானித்திருக்கிறார்களாம்!

நிதி மந்திரியையும் நேரில் காணப் போகிறார்களாம்! பணம்! பணம்! என்று பஞ்சப்பாட்டு (ஒப்பாரி!)ப் பாடிவருகிறவர்களிடம் பஞ்சப்படி கேட்கிறார்கள்! செலவினங்களில் கத்திரிகோல் பிரயோகம் செய்த கொண்டிருக்கும் மந்திரிகளிடம் போய், “அம்மா கொஞ்சம் கஞ்சி ஊற்றுங்கள்,” என்று கேட்கிறார்கள்!

ஓங்கிய தொண்டையில் ஒப்பாரி சொல்லி அழுகிறவர்கள் காதில் இந்தக் குரல் எப்படிக் கேட்கும்?

அய்யோ! பாவம்! செக்ரடேரியம் தோழர்கள்! பசிக் கொடுமையினால் சமயந் தெரியாமல் கதறுகிறார்கள்!

குத்தூசி குருசாமி (7-8-50)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It