kuthoosi gurusamy 263கண்ட கண்ட இடங்களிலெல்லாம் எச்சில் துப்பக்கூடாது என்பது பற்றியும், அதனால் பல நோய்கள் பரவுகின்றன என்பது பற்றியும் “மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு”வில் (“ஹிந்து”) பல கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மகாவிஷ்ணு தம் சங்கையும் எடுத்து ஊதி விட்டார்!

கண்ட இடங்களில் எச்சில் துப்புகிற பழக்கம் சுத்த தேசீயமாயிருந்தாலுஞ் சரி, வெளி நாட்டிலிருந்து இறக்குமதியான சரக்காயிருப்பினுஞ் சரி, அதை முதலில் வெளியேற்றியே ஆக வேண்டும்! டிக்கெட் வாங்குமிடங்களிலும் சாமான் வாங்குமிடங்களிலும் கும்பல் கூடி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ளும் சுதேசிப் பழக்கத்தை எப்படி வெளியேற்றிவிட்டு, ‘க்யூ’ வரிசையில் நிற்பது என்ற அன்னிய நாட்டுச் சரக்கைப் பெற்று ஆதரித்து வருகிறோமோ, அதுபோல் எச்சில் துப்புவதையும் அவசியம் வெளியேற்ற வேண்டியதுதான். ராயில்வே நிலையங்கள் போன்ற பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்களை அங்கேயே கைப்பிடியாகப் பிடித்து அபராதம் விதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள்!

“அது கூடாது! ஏழைகளுக்குக் கஷ்டமாயிருக்கும், எச்சில் துப்புகிறவர் கையில் துடைப்பத்தையும் ஒரு வாளித் தண்ணீரையும் கொடுத்து எச்சில் துப்பிய இடத்தை அவர்களை விட்டே கழுவச் செய்கிற மாதிரி இதற்காக ஆட்களை நியமிக்க வேண்டும்,” என்று ஒருவர் கூறுகிறார்!

எனக்கும் இது ரொம்பப் பிடித்திருக்கிறது!

கோவை ஜி.டி. நாயுடு இதே காரியத்தைச் செய்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி பெற்றிருக்கிறார்! அவரால் நடத்தப்படும் மாணவர் உணவு விடுதியிலும், பஸ் சர்விஸ் நிலையத்திலும் இன்றைக்கும் இந்தத் தண்டனை நடைமுறையிலிருந்து வருகிறது! இதுபற்றி எச்சரிக்கைப் பலகையே தொங்குகிறது! யாராவது கண்ட இடத்தில் எச்சில் துப்பி விட்டால் அடுத்த நிமிஷமே ஒரு “பக்கெட்” தண்ணீரும் ஒரு துடைப்பமும் எடுத்துக் கொண்டு காவற்காரன் வந்து முன்னே நிற்பான். இரண்டையும் கையில் கொடுத்துத் தேய்த்துக் கழுவச் சொல்வான்! மந்திரியாயிருந்தாலுஞ் சரி, மகுட மந்தாரியாயிருந்தாலுஞ் சரி, கழுவியே தீர வேண்டும்!

இதன் பயன் என்ன தெரியுமா? நூற்றுக் கணக்கானவர் நடமாடிக் கொண்டிருக்கும் அவரது பஸ் நிலையம் சாப்பாட்டு அறையைவிடச் சுத்தமாயிருப்பதை இன்றைக்கும் காணலாம்! பெரிய மூளைதான்! சந்தேகமில்லை! முள்ளை முள்ளால் எடுக்கும் இரகசியத்தைக் கண்டுபிடித்துள்ள விசித்திர மனிதர்!

எச்சில் துப்புவதில் இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் சிற்றுண்டி ஹோட்டல்களைப் பற்றியும் கவனிக்க வேண்டும். அங்கேதான் “சர்வ எச்சில் கலப்பு” வேலை நடந்து கொண்டேயிருக்கிறது! எச்சில் பாத்திரங்களைக் கழுவுகின்ற நடிப்பை (சினிமா நட்சத்திரங்களாற்கூட முடியாது!) எந்த ஹோட்டலில் நேரிற் பார்த்தாலும் அன்று முதல் அந்த ஹோட்டலுக்கு யாருமே செல்ல மாட்டார்கள்.

கொதிக்கின்ற தண்ணீரில் எச்சில் பாத்திரங்களை ஊறப்போட்டு எடுக்கும் பழக்கம் ஒரு ஹோட்டலி கூடக் கிடையாது. பாத்திரங்களை நன்றாகத் தேய்ப்பதும் கிடையாது. “சும்மா சாஸ்திரத்துக்குத்தான்” முழுக்கி எடுப்பார்கள்!

இந்த மகா மக முழுக்கு இரகசியத்தை அறியாத சுகாதார ஆஃபீசரே கிடையாது! ஆனால், பாவம்! இவர்கள் அல்வாத் துண்டினால் அடிபட்டு மூர்ச்சியாகி விடுகிறார்கள்!

இதை எப்படித் தடுப்பது? இதற்கும் ஜி.டி. நாயுடு மாத்திரைதான் நல்லது!

பெரிய சுகாதரா உத்யோகஸ்தர்கள் திடீர் திடீரென ஹோட்டல்களுக்குள் நுழைய வேண்டும். எச்சில் பாத்திரம் கழுவுகின்ற இடத்திற்கு மடமட வென்று செல்ல வேண்டும். சுகாதார விதிப்படி கழுவவில்லை யென்பதைக் கண்டதும், அப்பாத்திரங்களைத் தெருப் பக்கத்துக்குக் கொண்டு வரச் செய்து, ஹோட்டல் சொந்தக்காரர் கையில் கொடுத்து முறைப்படி கழுவுமாறு செய்ய வேண்டும்! பலபேர் இந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க வேண்டும்!

இந்த மாதிரி ஊருக்கு இரண்டு ஹோட்டல்களில் செய்தாலே போதும்! எல்லாம் உடனே சீர்ப்பட்டுவிடும்!

இதேபோல் தெருவில் குழந்தைகளை உட்கார வைத்து மலம் கழிக்குமாறு செய்வதையும் (இந்தக் காட்சி அக்கிரகாரத்தில் சர்வ சாதாரணம்!) ஒழிக்க வேண்டும். இதற்கும் ஜி.டி. நாயுடு முறைதான் நல்லது!

சுகாதார உயர்தர உத்யோகஸ்தர் அந்த வீட்டுக்காரர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, மலத்தை எடுத்துத் தன் வீட்டுக் கக்கூசில் கொண்டு போய்ப் போடுமாறு செய்ய வேண்டும்! இதற்கான சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டால் தெருக்கள் வெகு சுத்தமாயிருக்கும்.

சற்றுக் கடுமையான முறைதான்! ஆனால் நோயும் கடுமையாகத் தானே இருக்கிறது?

குத்தூசி குருசாமி (16-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It