kuthoosi gurusamy“எங்கள் பாத்திமா ஆண்டவளே! உம்மை வரவேற்கிறோம். எங்கள் பாத்திமா ஆண்டவளே, உம்மிடம் எமது நம்பிக்கையை வைக்கிறோம். பரிசுத்த கன்னி மரியே, உம்மை சிநேகிக்கிறோம்.

 ............................................

 ............................................

நாங்கள் ஒருவரை யொருவர் சிநேகிக்கப் படிப்பித்தருளும்.”...

பரிசுத்த பாத்திமா மாதாவின் திருவிழா 1-ந் தேதியன்று கத்தோலிக்கத் தோழர்களால் கொண்டாடப் பட்டிருக்கிறது. அவர்கள் பாடும் தோத்திரப் பாடலின் சில வரிகளை மேலே தந்திருக்கிறேன்.

நம் நாட்டு கத்தோலிக்கர் உண்டே, ரொம்ப நல்லவர்கள்! வெளிநாட்டு கத்தோலிக்கரைப் போல் பிறருடன் சண்டைக்குப் போக மாட்டார்கள்! தங்கள் படிப்புண்டு, தொழிலுண்டு, வீடுண்டு, மாதா உண்டு என்று இருப்பவர்கள்!

ஆகையால்தான் இவர்களிடத்தில் எனக்கு ஒரு தனி ஆசை! இவர்கள் மத நூல்களைப் படிப்பதிலும் எனக்குத் தனி ஆசை! நல்ல நாவல் மாதிரி வெகு ருசியாயிருக்கும்! பல புது விஷயங்களுமிருக்கும்!

உதாரணமாக, பரிசுத்த பாத்திமா மாதாவையே எடுத்துக் கொள்வோம். இந்தத் தாயாரைப் பற்றி இவ்வளவு விவரமாக இதுவரையில் எனக்குத் தெரியவே தெரியாது!

1858 -ம் ஆண்டில் பெர்னதத்துக்கு லூர்து கெபியில் காட்சியளித்து, “நாமே அமலோற்பவம்” என்று சொல்லியிருக்கிறாள்!

அதுமட்டுமா? 1917-ம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டில் காட்சியளித்திருக்கிறாள்! அதுவும் மூன்று சிறுவர்களுக்கு முன்பு! உண்மைதானா, என்று சிலர் சந்தேகப்படலாம். கத்தோலிக்க நண்பர்கள் எதையும் நல்ல ஆதாரத்துடன் தான் சொல்வார்கள்! வீண் “கப்ஸா” அடிக்கிற பழக்கம் (நம் புரோகிதர்களைப்போல்) அவர்களிடம் கிடையாது. இந்த மூன்று சிறுவர் முன்பு தோன்றிய நாளைக் கூடச் சொல்ல முடியும்! 1917, அக்டோபர் 13-ந் தேதி! போதுமா? இதைவிட இன்னும் என்ன ருசு வேண்டும்?

கன்னி மேரியின் உருவமாகிய தாயார் ஏன் இப்படி அவதரித்துத் தொல்லைப்படுகிறாள் என்று சிலர் கேட்கலாம்!

“நாஸ்திகப் பேய்களிடமிருந்து உலகைக் காக்க,” - என்று எழுதியிருக்கிறார்கள், என் அன்பிற்குரிய கத்தோலிக்கு நண்பர்கள்!

“நாஸ்திகப் பேய்” எங்கேயிருக்கிறது. பேய் என்பதே வெறும் கற்பனை தானே, என்று சிலர் கேட்கலாம். ‘பேய்’ என்பது வேறு எதையுமல்ல! மனிதர்களைத்தான்! அதாவது நாஸ்திகம் பேசும் மனிதர்களைப் பேய்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்கள்!

ஒரே ஒரு அற்பக் கொள்கை மாறுபாட்டுக்காக மற்ற மனிதர்களை இப்படித் திட்டலாமா என்று கேட்டால், இதற்காகத்தான் தோத்திரமும் செய்கிறார்கள் அதை மேலே தந்திருக்கிறேன்!

“நாங்கள் ஒருவரை யொருவர் சிநேகிக்கப் படிப்பித்தருளும்” என்று தோத்திரம் செய்வதே இதற்காகத்தான்!

அதாவது, நாங்கள் ஆபாச மதத்தைவிட்டு விலகியுங்கூட எங்களுக்குள்ளே சிலை வணக்கமும், நெற்றியில் சித்திரமும், ஜாதிப்பட்டமும், மாதா கோவிலில் குறுக்குவேலியும், ஊசி மிளகாய் போன்ற காரமான ஜாதிக் கட்டுப்பாடம் அழுக்குப் பிடித்த இந்து மதக் குருட்டு நம்பிக்கைகளில் பாதியும் - இருப்பதை யெல்லாம் விலக்கி, “ஒருவரையொருவர் சிநேகிக்கப் படிப்பித்தருளும்,” என்று பரிசுத்த பாத்திமா மாதவை வேண்டுகிறார்கள்!

“ஆமென்!” என்கிறேன், நான் நீங்களும் சொல்லுங்கள்!

இனி, இந்த மாதா இவ்வளவு சமீப காலத்தில் காட்சியளித்ததற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருப்பதாகத் தெரிகிறது!

“பொதுவுடைமை போன்ற லோகாயதக் கொள்கைகள் புயல் வேகத்தில் பரவி வரும் நாட்களில், பாவம் அதிகரிக்கும்போது உலகை ஈடேற்றுவதற்காக,” -காட்சியளிக்கிறாளாம்!

அடபாவமே! கத்தோலிக்கரின் மூல nக்ஷத்திரமான இத்தாலியில் அல்லவோ நமது புனிதத் தாயார் காட்சியளித்து நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்? அங்கு தானே பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் போன மாதம் ஆட்சியையே கவிழ்த்து விட்டார்கள்? அங்கு ஒரே தடபுடலாயிருக்கிறதே! போப்பாண்டவர் அடிக்கடி அபாயச் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறாரே!

பாத்திமா தாயே! இந்தியாவும் போர்ச்சுகலும் எப்படியோ தொலையட்டும்! தங்கள் தலைமை நிலையத்தைக் கவனியுங்கள்! 33 ஆண்டுகளாக இப்படி மறைமுகமாக இருப்பது தகாது! உடனே காட்சியளியுங்கள்! உலகத்தின் ராக்கினியே! உடனே காட்சியளியுங்கள்! உடனே வந்தருளுங்கள்! இத்தாலிக்குச் சென்றருளுங்கள்! வசதியிருந்தால் அப்படியே ரஷ்யாவுக்கும் போய் அருளுங்கள்! பக்தர்கள் மிகுந்து கிடக்கும் நாடுகளுக்குள்ளேயே நடமாடிக் கொண்டிருந்தால் பயனுண்டா? “நாஸ்திகப் பேய்கள்” இருக்கின்ற நாடுகளை முதலில் கவனியுங்கள்! ஆஸ்திக ஆவிகள் இருக்கும் நாட்டில் அவசரமில்லை! ஆகவே, ஆமென்!

- குத்தூசி குருசாமி (22-02-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It