சில கிராமங்களில் நமது திராவிட கழகத் தோழர்கள் புது அங்கத்தினர் சேர்க்கும் முறை விநோதமாயிருக்கிறது.

kuthoosi gurusamy“ஏனப்பா வெங்கிடுசாமி, திராவிட கட்சி யென்றால் ஜாதி வித்தியாசம் கூடாது என்கிறாயே! நீ பள்ளன் வீட்டில் சாப்பிடுவாயா?” என்று கேட்கிறார், வைதீக வைத்தியலிங்க முதலியார்.

“ஆஹ! யார் வீடானால் என்ன? அவனும் மனிதப் பிறவிதானே! நான் மட்டுமா? என் இயக்கத் தோழர்களில் யார் வேண்டுமானலும் சாப்பிடுவார்களே!”

உடனே சேரிக்குள் நுழைகிறார்கள். வைத்திலிங்க முதலியார் வெளியே நின்றபடியே குடிசைக்குள் எட்டிப் பார்க்கிறார்! திராவிட கழகத் தோழர்கள் சாப்பிட்டு விட்டு வருவதைக் கவனிக்கிறார்! ஆச்சரியம்! ஆமாம்! இந்த நாட்டில் ஒரு அதிசயக் காட்சி தானே, இது? மனிதன் வீட்டில் மனிதன் சாப்பிடுவது எவ்வளவு பெரிய புரட்சி? முதலியார் கழகத் தோழர்கள் வீட்டில் கூறி விஷமஞ் செய்கிறார். ஜாதிக் கட்டுப்பாடு செய்யச் சொல்கிறார்! பலிக்கவில்லை.

“அது கிடக்கட்டுமய்யா! பந்தயம் என்ன ஆச்சு?” என்று கேட்கிறார்கள், கழகத் தோழர்கள். பேந்தப் பேந்த விழிக்கிறார், ஆந்தையைப் போல! பந்தயப்படியே திராவிட கழகத்தில் உறுப்பினராகச் சேர்கிறார். அடுத்த வாரம் அவர் தலைமையில் கழகப் பொதுக் கூட்டம் நடக்கிறது.

இன்னும் சில ஊர்களில்:-

“ஏனப்பா, கருப்புச் சட்டை! நீ எதற்கெடுத்தாலும்! மூட நம்பிக்கை, பித்தலாட்டம் என்றெல்லாம் பேசுகிறாயே? இதோ, இந்தக் தீக்குழியில் இறங்கி வர முடியுமா? இறங்கி வந்து தீ உன்னைச் சுடாமலிருந்தால், நீ சொன்னபடி கேட்கிறேன்”, என்கிறார் ஒரு கிராமவாசி.

துரௌபதையம்மன் சந்நிதியில் தீக்குழி. “பரம பக்தர்கள்” தலை முழுகிவந்து, உண்ணாவிரதத்துடன், ஈஸ்வரி! ஈஸ்வரி!” என்று கதறிக் கொண்டே தீயில் நடந்து செல்கிறார்கள்! அவர்களுக்குப் பின்னால் கருஞ்சட்டை போட்டபடியே கிண்டலாகச் சிரித்துக் கொண்டே கழகத் தோழர்களும் தீமிதிக்கிறார்கள்! பொது மக்கள் ஆச்சரியத்தால் திகைக்கிறார்கள்! துரௌபதையம்மன் மகாபதிவிரதையாகையால் (சந்தேகமிருந்தால் அவளுடைய ஐந்து கணவர்களையும் கேட்டுப் பாருங்கள்!) எவர் காலிலும் சுடவில்லை! ஆனால் ஒன்று! இதுதான் சமயமென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குச்சியைக் கிழித்து வைத்துப் பக்திப் பரீட்சை பார்த்து விடாதீர்கள்! யாராயிருந்தாலும்! (ரமணரிஷி, மெய்வழி ஆண்டகை, சாயிபாபா உட்பட) அக்கினி பகவானின் திருவடி நிழலில் (நெருப்பில்) சேர வேண்டியதுதான்! தீ மிதிப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டுத்தானே! பக்திக்குப் பரீட்சையா என்ன? எந்தப் பார்ப்பானாவது தீ மிதிக்கிறானா?

தீமிதிப் பந்தயம் முடிகிறது! கழகத் தோழர்கள் “பக்தர்களாக” வெளி வருகிறார்கள்! சவால் கூறியவர்கள் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்கிறார்கள்! அதாவது அக்கினி சாட்சியாக! பார்ப்பனப் புரோகிதன் திருமணம் செய்து வைப்பது போல அக்கினி சாட்சியாக கழகத்தில் அங்கத்தினராக்கப்படுகிறார்கள்!

ஆனால் ஒரு எச்சரிக்கை, என் தோழர்களுக்கு! எந்தப் பரீட்சை யானாலும் முதலில் எதிரிகளைச் செய்து காட்டச் சொல்லுங்கள். ஏமாந்து விடாதீர்கள். இது உறுப்பினர் சேர்க்கும் ஒரு புதிய முறை. இதைப்போல வேறு பல முறைகளைக் கூடக் கையாளலாம், வேறு துறைகளில் கூட
“சுவாமியை நான் தொட்டால் கண் அவியாது; என்ன பந்தயம்? நீ கோயிலை விட்டே வெளியேறி விடுகிறாயா?,” என்று அர்ச்சகனோடு பந்தயம் போடலாம்.

“நான் மடப்பள்ளிக்குள் புகுந்து சமையல் செய்தால் சாமி ஒண்ணுஞ் சொல்ல மாட்டார். சோற்றிலும் புழு வராது! பந்தயம் என்ன? மடப்பப்பள்ளி விட்டுப் போய் விடுகிறாயா?” என்று மடப்பள்ளிப் பெருச்சாளியுடன் பந்தயங் கட்டலாம்.

“இந்த அரிசியும் காய்கறியும் பிதிர் உலகத்துக்குப் போகவில்லை, நீ தான் சாப்பிடுகிறாய், என்று சொல்கிறேன். எனக்கு எதிரிலேயே அனுப்பிப் பார்; நிச்சயம் போகாது. அப்படி போய்விட்டால் நான் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறேன். பிதிர்க்கள் சாப்பிடாவிட்டால் நீ இந்த நாட்டைவிட்டே ஓடி விடவேண்டும்; சரிதானா?” என்ற தர்ப்பாயுத பஞ்சாங்கப் பார்ப்பானைக் கேட்கலாம்.

“இதோ! நான்கு ஜாதகங்கள் வைத்திருக்கிறேன். இவைகளில் எது கழுதை ஜாதகம்? எது ஆண் ஜாதாகம்? எது பெண் ஜாதகம்? எது எருமை ஜாதகம்? இவைகளில் சரியான இரண்டைப் பொறுக்கி எடுத்து பொருத்தம் பார்த்துக் கூற முடியுமா? சரியாகக் கூறிவிட்டால் நான் எந்தத் தண்டனையை வேண்டுமானாலும் ஏற்கிறேன். தவறிவிட்டால் நீ இந்தத் தொழிலை விட்டுவிட்டு நிலம் உழுவதற்குப் போக வேண்டும்; சரிதானா?” என்று கேட்கலாம். (நான்கு ஜாதகங்களில் ஒன்று கூட ஆணின் ஜாதகமாக இருக்கக் கூடாது.)

இந்த மாதிரி ஊருக்கு ஊர் செய்ய ஆரம்பித்து விட்டால் மந்திரவாதி, பூசாரி, புரோகிதன், சோதிடன், அர்ச்சகன் சாமியார், போன்ற பித்தலாட்டக்காரர்களெல்லாம், வேறு நாணயமான தொழில்களில் ஈடுபட்டு விடுவார்கள்.

நமக்கு வேலையா இல்லை? நிமிஷத்துக்கு நிமிஷம், வேலையிருக்கிறது, சோம்பல் மட்டும் இல்லாதிருந்தால்.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It