“என்ன சாஸ்திரி! ரொம்ப நாளாய்க் காணோம்? புரோகித வரும்படி எப்படி? உங்களுக்கென்ன யோகம்? ரேஷன் அரிசி ஒரு பக்கம்! திதி கொடுக்கும் முட்டாள்கள் தரும் பச்சரிசி ஒரு பக்கம்! நல்ல வேட்டைதான்!” என்றார், என்னுடன் வந்து கொண்டிருந்த காங்கிரஸ் நண்பர் எதிரே வந்த புரோகிதர் புருஷோத்தம சாஸ்திரியைப் பார்த்து!

kuthoosi gurusamy 300“என்ன வரும்படி அப்பா, இந்தக் காலத்திலே! அந்தப் படுபாவி, (சிவ, சிவா, அவன் பெயரைச் சொன்னாலே ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம்!) பேச்சைக் கேட்டுண்டு எங்களைக் கண்டால் தான் எரிஞ்சு விழறாளே, இந்தச் சூத்திராள்!” என்று சாஸ்திரி கூறி முடிப்பதற்குள் பின்னாலிருந்த ஒருவன், பளார் என்று சாஸ்திரி கன்னத்தில் அறைந்தான்!

“சூத்திரன் என்றால் அர்த்தம் தெரியுமாடா மிலேச்சா?... யார் சூத்திரன்? ஆடுமாடு மேய்த்துப் பிழைக்க வந்த நீ சூத்திரன்! ஏழைகளை ஏமாற்றிப் பிழைக்கும் உன் ஜாதி சூத்திர ஜாதி! இனி அப்படிச் சொல்லாதே! தெரியுமா!” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிக் கொண்டு போய்விட்டான்!

நான் திடுக்கிட்டு விட்டேன்! சாஸ்திரியோ, தலையிலிருந்து நழுவிய திதி வசூல் மூட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, "கட்டாலே போறவனே! உன் தலையிலே தீயை வைக்க! ஒரு பிராம்மணனை இப்படி அடிச்சியே! நீ நன்னா இருப்பையாடா!” என்று சைக்கிள் மறைந்த பிறகு, அந்தத் திக்கை நோக்கிச் சபித்துக் கொண்டிருந்தார்!

காங்கிரஸ் தோழரோ ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். என் நிலையோ கொஞ்சம் சங்கடமாயிருந்தது. சாஸ்திரியாருக்கு ஏதோ சமாதானம் சொன்னேன்.

“இந்தப் பயலை சும்மா விட்டேனா பாருங்கோ! இதென்ன காங்கிரஸ் ராஜ்யமுன்னு நினைச்சுண்டானா? அவனுடைய சொந்த ராஜ்யமுன்னு நினைச்சுண்டானா? இந்தப் பயலுகளாலேதான் மாதம் 400 ரூபாய் சம்பாதிச்சிண்டிருந்த எனக்கு இன்னிக்கு 300 ரூபா கிடைப்பதுக்கே நடையா நடக்க வேண்டியிருக்கு!” என்று தன் கஷ்ட நிலைமையைக் கூறினார்!

“ஐயோ பாவம்! சாஸ்திரிகளே! நீங்கள் படித்த படிப்பென்ன! இந்த வியாபாரத்திற்குப் போட்ட மூலதனம் கொஞ்சமா? உழைக்கும் உழைப்பு என்ன? இவ்வளவுக்கும் 300 ரூபாய்தானா கிடைக்கிறது? என்னமோ! இதாவது இன்னும் கொஞ்ச காலத்துக்காவது கிடைக்கணுமே! அது போகட்டும்! யார் பெயரையோ சொன்னாலே பாவம் என்றீரோ! அது யார் பெயர்?” என்று கேட்டேன்.

“அவன்தான்!... ராமசா... அட பாவமே! சொல்லித் தொலைச்சூட்டேனே! படுபாவி! எங்கள் வயிற்றிலடிச்சேன்! நன்னா இருப்பானா!” என்றார், சாஸ்திரி!

“அந்தப் பெயரை தினம் லட்சம் தடவை சொன்னால் எவ்வளவோ புண்யமென்கிறார்களே! ஆனால் நீங்களோ நினைத்தாலே பாவம் என்கிறீர்களே!” என்று கேட்டேன்.

இதற்குள் காங்கிரஸ் நண்பர் சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு (அந்நிய நாட்டுப் பொருள்களுக்குத் தீ வைப்பதற்காக) தீப்பெட்டியைத் தேடினார்! பாக்கெட்டில் பெட்டி மட்டும் இருந்தது; குச்சியில்லை! கடையை நோக்கிப் போவதற்காகப் புறப்பட்டார்! சாஸ்திரியிடம், இரு கைகூப்பி “நமஸ்தே” என்றார். தலையில் மூட்டை வைத்திருந்த சாஸ்திரி தம் இடது கையை உயர்த்தினார்!

“இவ்வளவு அடிபட்டுங்கூட இன்னும் அந்தப் புத்தி போகவில்லையே! ஏன் வலது கை சுளுக்கியிருக்கோ?” என்று கேட்டேன்.

“இல்லை! பழைய பழக்கம் லகுவிலே போகாது பாருங்கோ! வலது கையில் பிராமணாளுக்கு அக்னி இருக்கோன்னோ! அதைத் தூக்கினால் எதிரில் இருப்பவர் எரிந்து போவர்! அதுக்காகத்தான்!” என்றார், சாஸ்திரி.

“அப்படியானால் தீப்பெட்டிப் பஞ்சத்தைப் பற்றி உமக்குப் பயமில்லை! இந்தாரும், இவரது சிகரேட்டையும் கொஞ்சம் பற்ற வைத்து விடுமே!” என்றேன்!

முறைத்துப் பார்த்தார்! முழங்கால்கள் முட்டிக் கொண்டன! மூட்டையைப் போட்டார்! ஓடினார்! ஓடுகிறார்! இன்னும் ஓடுகிறார்! அதோ ஒடுகிறார்! ஓடிக்கொண்டேதான் இருப்பார்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It