கடந்தகால வரலாறு நிகழ்காலத்தில் திரும்பி வருவதில்லைதான். ஆனால் நிகழ்காலம், கடந்தகால வரலாற்றில் நடந்த பிழைகளை வருங்காலத்திலாவது திருத்திக்கொள்வதற்கு சில வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அந்தப் பிழைகள் என்ன என்று அறிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் அப்படித் திருத்திக்கொள்வதற்கான ஒரு முன்தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றுகிற ஒரு கலைத் தொண்டாக வந்திருக்கிற திரைப்படம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். இந்தியாவின் வரலாற்றில் நடந்தது சாதாரணமான பிழை அல்ல எளிதில் அழித்துவிட்டு மாற்றி எழுதுவதற்கு. மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிற மானுடப் பகைக் குற்றம் அது. உலகில் வேறெங்குமே இல்லாத வகையில் நுட்பமான முறையில் உழைப்புச் சுரண்டலை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிற தனித்துவமான சாதியக் கட்டமைப்புதான் அந்தக் குற்றம். அது கடவுளின் சித்தப்படியானது என்று மண்டைகளில் உருவேற்றுகிற இந்து மத ஏற்பாடாகிய வர்ணாசிரமம், அதன் தத்துவத் தளமாகிய மனு(அ)தர்மம், அதையே அரசியல் சட்டமாக்கிய அர்த்த சாத்திரம்... இவையெல்லாம் அந்தக் கொடூரமான குற்றத்தின் தாங்கு சுவர்கள்.

பல்வேறு அரசியல் சமூக இயக்கங்கள் அந்தக் குற்றத்தைக் காணத் தவறியது கூட ஒரு பெரும் பிழைதான்.

இந்தியாவில் சமத்துவத்திற்கும் சமுதாய மாற்றத்திற்குமான போராட்டங்களின் முழு வெற்றி இந்த வரலாற்றுச் சங்கிலியைப் பிடித்துக்கொள்வதையும் முக்கியமாகச் சார்ந்திருக்கிறது. பிடித்துக்கொள்வதற்குத் துணையாக வந்துள்ள படைப்புதான் இது. அறிவு சார்ந்த வன்முறை, உடல் சார்ந்த வன்முறை இரண்டு வகையாலும் சாதி அடுக்கின் மேல் தட்டுகளில் அமர்ந்துகொண்டவர்கள், அவர்களுக்குக் கீழேதான் மிதிபட வேண்டும் என்றாலும் தங்களிடமும் மிதிபடுவதற்கு என சில பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவர்கள், இந்த மேல்தட்டினர் அனைவரிடமும் மிதிபடுவதற்கென்றே அடித்தட்டிற்குத் தள்ளப்பட்டவர்கள்... என்ற உண்மையான இந்திய சமுதாய அமைப்பை உலகமறியக் கூறியவர் அம்பேத்கர். சாதிவர்க்க பேதம் ஒழிப்பதற்கான அரசியல் இயக்கத்தை வழிநடத்தி அதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் அம்பேத்கர். அவரது வாழ்க்கையையும் போராட்டத்தையும் உலகமறியக் கூறுகிற இந்தத் திரைப்படம் 2000வது ஆண்டிலேயே வெளிவந்துவிட்டது. சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்ற இந்தப் படம் மற்ற பல இந்திய மொழிகளில் அந்த மாநிலங்களின் மக்களையும் சென்றடைந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யபட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் தமிழில் உரிமம் வாங்கியவருக்குமிடையேயான வழக்கில் தமிழ்ப்படம் திரையரங்கைக் காணாமலே இருந்தது. வழக்கு முடிவுக்கு வந்தபிறகும் படம் நகராமலே இருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்முயற்சியால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்போடு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நேரடி விநியோகத்தில் தமிழக மக்களிடம் படம் வந்திருக்கிறது.

மழைக்காகக் கோவில் மண்டபத்தில் ஒதுங்குகிற தலித் இளைஞனை ஒரு ஆதிக்க சாதிக் கும்பல் அடித்து நொறுக்குகிற காட்சியிலிருந்து படம் விரிகிறது. இன்றைக்கும் தலித் மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிற உண்மை நெஞ்சில் தைக்கிறது. உன் மனசில் என்ன அம்பேத்கர்னு நினைப்பா, என்று அந்தக் கும்பல் கேட்பது அன்றைக்கு அம்பேத்கர் ஒரு பேரியக்கமாக அடையாளம் பெற்றுவிட்டதை உணர்த்துகிறது. ரத்தச்சேற்றில் அந்த இளைஞனின் உடல் கோயில் வாசலில் நந்தி சிலையருகே கிடப்பது ஆழ்ந்த அர்த்தமுள்ள சித்தரிப்பு. எத்தனை நந்தன்களை ஆதிக்க சாதி நந்திகள் வழிமறித்துக்கொண்டிருக்கின்றன!

மராத்திய மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹர் சாதிக் குடும்பத்தில் பிறந்த பீம் ராவ், தன் கல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரான பிராமண ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன் பெயரோடு அவருடைய பெயரையும் இணைத்து பீம் ராவ் அம்பேத்கர் என்றானவர். நாட்டின் விடுதலைப் போராட்டத் தீ உச்சமாகப் பரவிக்கொண்டிருந்தபோது பரோடா மன்னரின் நிதியுதவியோடு, படிப்பு முடிந்து வந்தபின் அரண்மனையில் நிதி அலுவலாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்கிறார் அம்பேத்கர். அவருடைய நோக்கம் அரண்மனை வேலைக்காகப் பட்டம் பெறுவதல்ல, பிறந்தது முதல் அனுபவித்து வந்த சாதிக் கொடுமைகளுக்கான வரலாற்று ஊற்றுகளைக் கண்டறிகிற ஆராய்ச்சியே நோக்கம். சிறுவயதில் அவர் தன் சகோதரரோடு ஒரு குதிரை வண்டியில் செல்கிறபோது, வேண்டிய பணம் கொடுக்கத் தயாராக இருந்தும், அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்பதையறிந்த அந்த ஆதிக்க சாதி வண்டிக்காரன் அவர்களைக் கீழே தள்ளிவிடுகிறான். இது போன்ற காட்சிகள் அவர் மனதில் எத்தகைய அழுத்தம் ஏற்பட்டிருக்கும் என்பதைக் காட்டுகின்றன

ஆராய்ச்சியில் அவர் கண்டுபிடித்த உண்மைகள், சமுதாய விடுதலையை இணைக்காமல் இந்தியாவின் அரசியல் விடுதலை முழுமையடையாது என்ற உறுதியான சிந்தனையை அவருக்குள் விதைக்கிறது. அந்தச் சிந்தனையின் தாக்கத்தில்தான் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்துக் களமிறங்கிய போராளியாக அவர் பரிணமிக்கிறார்.

விடுதலைப் போராட்டம் முடிவை நோக்கி நகர்கிறபோது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட உள்நாட்டு நிர்வாகமும் அதற்கான தேர்தலும் நடைமுறைக்கு வருகின்றன. அப்போது அம்பேத்கர் கையிலெடுத்ததுதான், சொந்த நாட்டின் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை போன்ற கோரிக்கைகள். விடுதலை இயக்கப் பயணத்தில் நாடு முழுவதும் பெருந்திரள் மக்களைத் திரட்டிய மகத்தான வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றியவரான காந்தி, இக்கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார். அவரோடு அம்பேத்கர் மோதவேண்டியவராகிறார். எரவாடா சிறையில், தமது வலிமையான ஆயுதமாகிய காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை காந்தி மேற்கொள்ள, அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், எத்தனை ஆண்டுகளுக்கு தனித்தொகுதி ஏற்பாடு என்பதில் அம்பேத்கர் விட்டுக்கொடுக்க வேண்டியதாகிறது.

காந்தி நினைத்தது போல், உயர்சாதியாகத் தங்களை வைத்துக்கொண்ட சமூகங்களில் எந்த மனமாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. நாடு அரசியல் விடுதலை பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னும் தனி இட ஒதுக்கீடு தொடர்கிற நிலைமை, அம்பேத்கரின் தெளிவான தொலை நோக்குப் பார்வையைப் புரிய வைக்கிறது அல்லவா? சாதிப்பாகுபாடு ஒழிய வேண்டும் என்ற நல்ல எண்ணங்களால் மட்டும் மாற்றம் வந்துவிடாது, அரசியல்பொருளாதாரசமுதாய சம நிலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிற அடிப்படை மாற்றங்களுக்காகப் போராடியாக வேண்டும் என்பதையும் உணர முடிகிறது அல்லவா? பார்வையாளர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனைகளை ஏற்படுத்துவது படத்தின் முக்கியமான வெற்றி. காந்தியிடம் அம்பேத்கர், உண்ணாவிரத ஆயுதத்தை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள், என்று கூறுகிற காட்சியில் ஒரு நுட்பமான அரசியல் புரிதல் வெளிப்படுகிறது.

ஆலய நுழைவு உரிமைக்காக, பொதுக் குளத்தில் நீர் பருகும் உரிமைக்காக என அடுத்தடுத்த போராட்டங்கள் அன்றைய உண்மைச் சூழலைக் கண் முன் காட்டுகின்றன. திரைப்படம் பார்க்கிற உணர்வு முற்றிலுமாக மறைந்து அந்தப் போராட்டங்களில் பங்கேற்று அந்தக் குளத்தில் அம்பேத்கரோடு இறங்கிக் கை நனைக்கிற உணர்ச்சியே ஏற்படுகிறது.

விடுதலை பெற்ற இந்தியாவின் சட்டங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்த அரசமைப்பு சாசன நிர்ணயக் குழுவின் தலைவர் என்ற பெரும் பொறுப்பு அம்பேத்கரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குழுவின் மற்ற உறுப்பினர்களில் பலர் ஒத்துழைக்காத பின்னணியில் மற்ற பல நாடுகளில் இருந்து மாறுபட்ட, பெருமைக்குரிய ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த தலைமகனாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர்தான் என்ற உண்மையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிற இடம், படத் தைப் பார்ப்பவர்களுக்கும் அதனைத் தெளிவு படுத்துகிறது.

அவர் உருவாக்கிய சட்டங்கள் அனைத்து சமூகங்களின் மக்களுக்குமான உரிமைகளை உறுதிப்படுத்துபவை. சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பை அம்பேத்கரிடம் ஒப்படைக்க காந்தியும் முதல் பிரதமர் நேருவும் முடிவு செய்கிற இடம், அன்றைய அரசியல் பண்பையும், அம்பேத்கரின் தனிப்பெரும் தகுதியையும் சுட்டுகிறது. அமைச்சரான பின், பெண்களின் சம உரிமைக்கான சட்டத்தைக் கொண்டுவர அவர் முயல்கிறார். அதற்கு ஆணாதிக்கத்தில் ஊறிப்போனவர்களான ஆதிக்கசாதி ஆண்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அடங்கிப்போவதே பெண்ணுக்குப் பெருமை என்ற பண்பாட்டுச் சிறைக்குள் தங்களை அடக்கிக்கொண்ட பெண்களும் கூட அதை எதிர்க்கிறார்கள். முற்போக்காளரான நேரு அந்த எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கி, சட்ட முன்வரைவை விலக்கிக்கொள்கிறார். அம்பேத்கர் பதவி விலகுகிறார்.

சாதி ஒடுக்குமுறை, பெண் அடக்குமுறை இரண்டும் இந்த நாட்டின் சமூகக் கட்டுமானத் தூண்களாக இருப்பவை. அடித்தளமான உழைப்புச் சுரண்டலை ஒழிக்கும் வர்க்கப் போர் சாதியத்தைத் தகர்ப்பதோடும், பெண்விடுதலையை நிலை நாட்டுவதோடும் ரத்தமும் சதையுமாய் இணைந்திருக்கிறது. சமுதாய மாற்றத்திற்காக இன்று களமிறங்கியுள்ள போராளிகளின் பாதை பற்றிய செய்தி படத்தின் இந்தக் காட்சிகளில் நேரடியாகச் சொல்லாமலே புலப்படுகிறது.

சாதி, பாலின பாகுபாட்டு இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை இந்து மதக் கோட்பாடுதான் என்ற முடிவுக்கு வருகிற அம்பேத்கர், இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன், என்று அறிவிக்கிறார். மற்ற மதங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வருகிறபோது, அந்த மதங்களிலும் இந்துத்துவ சாதியச் சாக்கடை கலந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மதம் மாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள வருகிற இந்து மதத் தலைவர்களிடம், தாழ்த்தப்பட்ட ஒருவரை உங்களால் சங்கர மடத்தின் தலைமை பீடத்தில் அமரவைக்க முடியுமா என்று அம்பேத்கர் கேட்கிற இடம் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியது. இறுதியில் அவர் தம் ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவுவதில் இருந்த அறச்சீற்றத்தை இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லாத பகுத்தறிவாளர்களும் அங்கீகரிப்பார்கள்.

பொதுவுடைமை ஹிம்சை, புத்தம்தான் அமைதி வழி, என்று அவர் கூறுவதாக வரும் காட்சியில் முரண்பட வேண்டியிருக்கிறது என்றாலும், அவரது காலகட்டத்தில் அவருடைய ஒரு புரிதல் அது என்று எடுத்துக்கொள்ள முடிகிறது. உண்மையான உறுதியான முழுமையான சமுதாய விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் போராடுகிற பொதுவுடைமை இயக்கத்தினர் அம்பேத்கரியம் பற்றிய சரியான புரிதலோடு, தோழமைச் சக்திகளுக்குத் தோள்கொடுத்துத் தொடர்ந்து நடைபோடுவார்கள். தன் மக்களின் காயங்களையும் வலிகளையும் துடைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரது உடலில் நோய்களும் வலிகளும் குடியேறுகின்றன. தன் உடலை மட்டுமல்ல குடும்பத்தையும் கூட கவனிக்க இயலாதவராகவே அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்வதை, அவரது குழந்தையும் மனைவியும் இறக்கிற காட்சிகள் தெரிவிக்கின்றன. மக்களுக்காகப் போராடுகிறவர்களின் தன்னலம் கருதாத மனநிலையை இக்காட்சிகள் மேலும் வலுப்படுத்துகின்றன.

மூன்று மணிநேரப் படத்தில் ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் நடந்து வந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் ஜப்பார் பட்டேல். தன் நெடுங்கால லட்சியமாக இந்தப் படத்தை உருவாக்கியதை அவர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். அதற்கான உழைப்பும், கலை நேர்மையும் படத்தின் ஒவ்வொரு மில்லிமீட்டரிலும் தெரிகின்றன. நேருக்கு நேர் அன்றைய நிகழ்வுகளில் பங்கேற்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா. உணர்வுகளை மீட்டுகிறது ஆனந்த் மோடக் இசை.

இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தன் உடல் அமைப்பை மாற்றிக்கொள்ள சம்மதித்தது, பல முக்கியமான திரைப்படங்களுக்கான வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தவர் மம்முட்டி. தொடக்கக் காட்சிகளுக்குப் பின் திரையில் நாம் காண்பது மம்முட்டி அல்ல, அம்பேத்கர்தான். மோகன் கோகலே, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோரும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை; அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது வலுவாக. அந்தச் செய்தி நம்மை மேலும் மேலும் செயல்பட வைப்பதாக இருக்கிறது உறுதியாக. இது பொழுதுபோக்குப் படம் அல்ல, பொழுதை மாற்றியமைக்கத் தூண்டுகிற படைப்பு. இதைப் பார்ப்பதும், மக்களைப் பார்க்க வைப்பதும் ஒரு இயக்கக்கடமை.

Pin It