அரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாண திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது.
அரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்கவல்லதல்லவென்றும், சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும், இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும், பலவாறாகப் பழிக்கப்பட்டும், மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா? இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும், லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக்கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன தேசபக்தி, என்ன சகோதர பக்தி என்பதை நாமே சிந்திப்போம்.
ஒரு நாடு முதலில் அது தன் பொருளாதார விஷயத்தில் மேம்பாடடையாவிடில் மற்ற விஷயங்களில் மேம்பாடடையவே முடியாது. நம் நாட்டில் மக்கள் தங்கள் மனசாட்சிப்படி நடக்கமுடியாமல் இருப்பதற்கே தரித்திரம்தான் காரணம். கோடிக்கணக்கான மக்கள் தொழிலில்லாமலும், உணவில்லாமலும் கஷ்டப்படுகிறபடியால் எவ்வகையாயினும் தங்களுக்கு தொழில் கிடைத்தால் போதுமென்றும் உணவு கிடைத்தால் போதுமென்றும் தங்கள் மனசாட்சியை விற்று ஜீவிக்கிறார்கள். கதர், படித்தவர்கள் என்போருக்கும், பணக்காரருக்கும் தொழிலும், உணவும் அளிக்காது என்பது உண்மையே. ஆனால் சுயராஜ்யம் என்பது உண்மையில் அவர்களுக்கு ஆக அல்ல. அவர்கள் இருவரும் உண்மை சுயராஜ்யத்திற்கு விரோதிகளே. படித்தவர்களுக்கு உத்தியோகம் வேண்டும். பணக்காரருக்கு பணமும் பிரபுத்துவமும் வேண்டும். கதரினால் இவ்விரண்டும் சித்திக்காது. ஆனால் நம் நாட்டில் ஏழை மக்களுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டும். அவர்கள் வாழ்வதையே மகாத்மா சுயராஜ்ய மெனக் கருதுகிறார். அவர்களுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் வழங்குகிறார். அத்திட்டங்கள் நிறைவேற்றி வைப்பதையே சுயராஜ்ய சித்தியெனக் கருதுகிறார். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல் படித்தவர்களான அரசியல்வாதிகளோ ஆங்கிலேயனிடமிருந்து அதிகாரமும், பதவியும் பெறுவதே சுயராஜ்யமெனக் கருதி தங்களுக்கு செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள மாத்திரம் மகாத்மாவையும், நிர்மாண திட்டத்தையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். பதவியினாலும், அதிகாரத்தினாலும் நமது நாடு ஒரு நாளும் nக்ஷமமடையாது.
மகாத்மாவின் காங்கிரசுக்கு வருமுன் நாம் கிளர்ச்சி செய்து ஆங்கி லேயரிடமிருந்து இருவகையாக சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் அதிகாரங்களும், பதவிகளும் கிடைக்கப் பெற்றோம். அவைதான் இந்திய மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் மற்றும் சில 1000, 2000, 3000, 5000 ரூ. சம்பளமுள்ள ஸ்தானங்களுமாகும். அவற்றால் நம்நாடு அடைந்த பலன் என்ன? பொறாமைகளும், தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் தன்மை களும், ஒற்றுமையின்மையும், இந்து முஸ்லீம் சச்சரவும், பிராமணர் - பிராமணரல்லாதார் வேற்றுமையுமேதான் மலிந்தன.
இவ்வுத்தியோகங்களும், பதவிகளும் இப்பெரும் சம்பளங்களும் இல்லாவிட்டால் நம்நாட்டில் மிதவாதக்கட்சி ஏது? ஜஸ்டிஸ் கட்சி ஏது? சுயராஜ்யக் கட்சி ஏது? ஒத்துழையாமை இறப்பதேது? பதவிகளும், அதிகாரங்களும் மக்களை எவ்வளவு பிரிவாக்கிவிட்டன, எவ்வளவு துவேஷத்தையும் அவநம்பிக்கையும் உண்டாக்கிவிட்டன?
மகாத்மாவால் முன்னோக்கிச் சென்ற நம் நாட்டின் விடுதலை எவ்வளவு பின்னடைந்துவிட்டது? இவற்றால் பொதுமக்களுக்கும், ஏழைகளுக்கும் என்ன லாபம் உண்டாயிற்று? வரிப்பளுவு குறைந்ததா? உண்மைக் கல்வி அறிவு ஏற்பட்டதா? தேசத்திற்கு அதிக வரியும் அதிக கஷ்டங்களுமே ஏற்பட்டன.
இச்சீர்திருத்தங்கள் என்னும் சுயராஜ்யம் நமக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்படுமுன், நம் நாட்டிற்கு ஏற்பட்டிருந்த வரி சுமார் 30, 40 கோடியிலிருந்து இப்பொழுது ஒன்றுக்கு நான்காய் 150, 160 கோடிக்கு வந்து விட்டது. இந்திய ராணுவச் செலவு சீர்திருத்தம் இல்லாத காலத்தில் சுமார் 20 கோடி ரூ. இருந்தது. சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகோ 60, 70 கோடி ரூபாய் வரையில் உயர்ந்திருக்கிறது. இவ்வளவும் நாம் கொடுக்கும் வரி மூலமாய்த்தான் செலவு செய்யப்படுகிறது. நம் படித்தவர்கள் மேலும் மேலும் இதையே தான் சுயராஜ்யம் என்று சொல்லிக்கொண்டு இதற்காகவே பாடுபடுகிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் இவ்வித அபார செலவிற்கு சர்க்காரால் வசூல் செய்யப்படும் பணங்களெல்லாம் பெரும்பாகம் ஏழைகளிடமிருந்தே அல்லாமல் படித்தவர்களிடமிருந்தல்ல என்பதுதான். அதனால்தான் படித்தவர்கள் தங்கள் சுயநலத்தை கவனிக்கும்போது ஏழைகளை மறந்து விடுகிறார்கள்.
சாதாரணமாய் நம் நாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த காலத்தில் படித்தவர்களும், பணக்காரரும் அத்தேர்தல்களுக்காக எவ்வளவு ரூபாய் செலவழித்தார்கள் என்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். பத்தாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம், சிற்சில தேர்தலுக்கு 50 ஆயிரம் ரூ. கூட செலவழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆறுமாத காலத்தில் இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஓட்டு சம்பாதிப்பதற்கு என்று செலவழிக்காமல் இதில் ஏற்பட்ட செலவையும், சிரமத்தையும், ஊக்கத்தையும் தீண்டாமை விலக்கு, கதர், மதுவிலக்கு ஆகிய இம்மூன்றின் பிரசாரத்திற்கும் செலவழித்திருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கும்? இப்பொழுது சென்னையில் நடக்கும் ஓட்டு வேட்டையை கதர் பிரசாரத்திற்கு நடத்தி வந்தால் எவ்வளவு தூரம் நமது நிர்மாண திட்டங்கள் முற்போக்கடைந்திருக்கும்? இவற்றை அவர்கள் கவனிக்காமல் இவ்விதம் செலவும், சிரமமும் படுவதன் காரணம் ஏழைமக்கள் தங்கள் ஞாபகத்துக்கு வந்ததோ அல்லது சுயநலம் இவற்றைவிட முக்கியமானதாகக் காணப்படுவதோ இவ்விரண்டி லொன்றைத் தான் சொல்லியாக வேண்டும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் மகாத்மாவின் நிர்மாண திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் படித்தவர்களாலும், பிரபுக்களாலும் முடியவே முடியாது. கிராமத்தில் இருக்கும் ஏழைகளும், தொழிலாளிகளும்தான் இவற்றை மேற்கொண்டு நடத்த வேண்டும். கதர் திட்டம் நிறைவேறாமல் தரித்திரம் ஒழியவே ஒழியாது.
தீண்டாமை ஒழிக்கப்பட்டால் அல்லாது ஒற்றுமை உண்டாகவே உண்டாகாது. மதுபானம் விலக்கப்பட்டாலல்லாது ஒழுக்கம் ஏற்படவே ஏற்படாது.
(குடி அரசு - தலையங்கம் - 05.07.1925)