இந்திய தேசீயக் காங்கிரஸ் என்கின்ற ஸ்தாபனத்துக்கு 50 வருஷம் ஆயுள் ஆய்விட்டதற்காக என்று பொன்விழா என்பதாக ஒரு கொண்டாட்டம் பாமர மக்கள் இடையில் நடத்தப்பட்டது.
இது மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களில் பட்டதென்றாலும் நம் நாட்டிலும் 50 வருஷத்துக்கு பதிலாக 60 வருஷம் வாய்தா வைத்து மனித வாழ்க்கைக்கு 60 ம் கல்யாணம் என்பதாக ஒரு சடங்கு செய்வதுண்டு.
இது பெரிதும் 60 வருஷகாலம் தாங்கள் பிழைத்து இருந்ததைப் பற்றி மகிழ்ச்சி எய்தி இச்சடங்கு ஆரம்பிக்கப்பட்டாலும் அச்சடங்கின் செலவு முழுவதும் 60 வருஷம் வாழ்ந்தவனைப் பொறுத்தும் அதை அடைவது முழுதும் இந்த 60 வருஷம் வாழ்ந்த வாழ்வுக்கு ஒரு சிறுபயனும் உதவியும் அளிக்காமல் பல காரியங்களின் பேரால் சதா ஏமாற்றிப் பிடுங்கி வயிறு வளர்த்தி வந்தவனுக்கே போய்ச் சேரும்படியாகத்தான் முடியும்.
அன்றியும் இந்த 60 ம் கல்யாண விழாக் கொண்டாடுவதற்குத் தகுந்த அளவாக இந்த 60 வருஷம் வாழ்ந்தவனால் பொது ஜனங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா என்பதைப் பற்றியும் யாரும் கவனிக்க மாட்டார்கள்.
அதுபோலவே காங்கிரஸ் இந்தியாவில் ஏற்பட்டு 50 வருஷமாயிற்று என்றால்,
அது எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
அதனால் யாருக்கு என்ன லாபம்?
அதனால் பொது ஜனங்கள் அடைந்த பயன் என்ன?
என்பனவாகியவைகளை யோசித்துப்பார்த்தால் இந்தக் காங்கிரசின் 50 வருஷ பொன்விழாவுக்கும், தனிப்பட்ட மனிதனின் 60 வருஷ அறுபதாங் கல்யாணத்திற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.
காங்கிரஸ் ஏற்பட்ட நோக்கம்
காங்கிரஸ் ஏற்பட்டதானது இந்தியாவின் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கப்படவேண்டும் என்பதற்கும், அவ்வுத்தியோகங்களுக்கு வெள்ளைக்காரர்களுக்கு உள்ள சலுகை அவ்வளவும் இந்தியர்களுக்கும் காட்டவேண்டும் என்பதற்குமாகவே ஒழிய, மற்றபடி பொதுஜனங்களுக்கு இன்னது செய்ய வேண்டுமென்பதற்கோ, அரசாங்க முறைகளில் பொது ஜனங்களுக்கு இன்ன மாதிரியான சௌகரியம் இருக்க வேண்டும் என்பதற்காகவோ ஏற்பட்டதல்ல.
இதன் பயனாய் இந்திய தேசீயக் காங்கிரசானது இந்திய மக்களின் உழைப்பையும், அவர்களுடைய அறிவையும், சுயமரியாதையையும் சாப்பிட்டே காலம் கழித்துக்கொண்டு இந்த 50 வருஷமாய் வாழ்ந்து வந்திருக்கிறது.
இது ஆரம்பக் காலத்திலிருந்து காங்கிரசில் கலந்து வந்தவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.
காங்கிரஸ் இல்லாதிருந்தால்
இந்த காங்கிரசானது இந்தியாவில் இந்தக் கருத்தோடு ஆரம்பிக்கப் பட்டு இப்படிப்பட்ட வஞ்சகமும் மோசமுமான காரியம் செய்து கொண்டு வந்திருக்காமல் இருந்திருந்தால் இந்திய மக்களின் நிலை இன்று வேறு விதமாய் இருந்திருக்கும். அதாவது உலகத்தில் உள்ள மற்ற எல்லா நாட்டு மக்களுக்கும் சரி சமமான முறையில் கல்வி, செல்வம், மானம், அறிவு, முற்போக்கு ஆகியவைகளில் முன்னணியில் நிற்கக்கூடியதாய் இருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் இவ்வளவு கேவல நிலையில் இருப்பதற்கும், இனி என்றும் முன்னேற்றத்துக்கு மார்க்கமில்லை என்று அவநம்பிக்கை கொள்ளு வதற்கும் இந்த காங்கிரசே முக்கிய சாதனமாய் இருந்து வருகிறது.
உதாரணம் வேண்டுமானால் உலகத்தில் எப்படிப் பட்டவர்களால் ஆளப்பட்ட எவ்வளவு மோசமான நாடும் இந்தியாவைப் போல் இவ்வளவு கேவலமாக பிற்போக்கடைந்திருக்கவே இல்லை.
கல்வி
காங்கிரசால் விளைந்த தீமையை விவரித்து சொல்லுவோமேயானால் கல்வியை எடுத்துக்கொள்ளுவோம்.
50 வருஷத்துக்கு முன் இந்திய மக்கள் கல்வியில் என்ன நிலையில் இருந்தார்களோ அதே நிலையில்தான் இன்றும் இந்திய மக்கள் இருக்கிறார்களே ஒழிய மற்ற நாடுகள் போல் முன்னேறவில்லை. அதாவது 100க்கு 10 பேர்களுக் குள்ளாகத்தான் இன்றும் கையெழுத்துப்போடத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
செல்வம்
செல்வத்தில் பார்த்தாலோ இந்த ஐம்பது வருஷத்துக்கு முன் சராசரி ஒரு இந்திய மனிதனுக்கு என்ன வரும்படி இருந்ததோ அதே வரும்படிதான் இன்றும் இருந்து வருகிறதே ஒழிய மற்ற ஆளப்படும் தேசங்கள் மாதிரி சிறிதும் மேன்மையடையவில்லை.
அதாவது சராசரி ஆள் ஒன்றுக்கு தினம் ஒன்றுக்கு 2 அணாவுக்கு உட்பட்ட வரும்படிதான் வந்துகொண்டு இருக்கிறது.
ஆனால் காங்கிரசின் பேரால் முன்னணியில் இருந்து மக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனர்கள் மாத்திரம் 100 க்கு 100 பேர் படித்து சராசரி ஆள் ஒன்றுக்கு தினம் 1க்கு 3 ரூபாய் வரும்படிக்கு குறையில்லாமல் இருக்கிறார்கள்.
மானம்
இந்தியர்களின் மானம், பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய விஷயங் களிலும் இந்த ஐம்பது வருஷத்துக்கு முன் இந்திய மக்கள் நிலை எப்படி இருந்ததோ அதேபோல்தான் அதைவிட மோசமாகவுந்தான் இன்றும் இருந்து வருகின்றது.
உதாரணமாக இந்தியாவில் 7 கோடி பேர்கள் பறையர், சக்கிலியர், புலையர், நாயாடிகள் என்று சொல்லும்படியான மக்கள் படிப்பின்றி சுகாதாரமின்றி, நல்வாழ்க்கை இன்றி மனித சமூகத்தை விட தாழ்ந்த மிருக சமூக உரிமையுமின்றி நாய், கழுதை, பன்றிகள் போல் மலத்திலும் கேடாக மதிக்கப்படுகிறார்கள். மற்றும், அடிமையிலும் கேவலமாய் அதாவது அடிமைக்கு ஒரு பாதுகாப்பு உண்டு. என்னவென்றால் அடிமையின் உண்டி, உடை, படுக்கை, இடம் ஆகியவைகளுக்கு அவனது எஜமான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான். இந்த தீண்டப்படாத மக்களைப்பற்றியோ அந்த பொறுப்பும் யாருக்கும் கிடையாது. ஆனால் அவர்களிடம் வேலை வாங்க மாத்திரம் எவருக்கும் பாத்தியமுண்டு என்கின்ற முறையில் இருக்கிறார்கள். மற்ற 30 கோடிக்கு மேற்பட்ட பார்ப்பனரல்லாத மக்களும் இழிகுலமாய் சூத்திரர்களாய்த்தான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரசின் பயனாய் பார்ப்பனர்களோ மேல் ஜாதியாய் சுவாமி என்று அழைக்கும்படியானவர் களாய் இன்னமும் இருந்து வருகிறார்கள்.
சுயமரியாதை
இந்திய மக்கள் சுயமரியாதை விஷயத்திலோ கடுகளவும் அவர்கள் முற்போக்கு அடையவில்லை என்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பான் என்பவன் பிச்சை எடுப்பவன், மானம், ஈனம், முறை என்பவை இன்றி எவ்வித இழிதொழிலும் செய்துவருபவன், மனித சமூகத்தின் சித்திரவதைக் கொப்பான கொடுமைகளுக்கும் மனமிரங்காமல் தன் நலத்துக்கே உதவி அளித்துக் கொள்ளுபவனாய் இருக்கிறான் என்று ஒருவனை மக்கள் உணர்ந்திருந்தாலும் அப்படிப்பட்டவனை இன்றும் இந்திய மக்கள் பிறவி காரணமாகவே ராஜாதி ராஜன் முதல் சகலரும் சுவாமி என்றும், மகராஜ் என்றும் பஹுவசனத்தில் மரியாதை வைத்து அழைத்து மேல்நிலையில் இருத்தி பூஜிக்கிறார்கள்.
பகுத்தறிவு
இவர்களது பகுத்தறிவுக்கு மத சம்பந்தமான மற்ற விஷயங்களைப் பார்த்தாலேபோதும். ஆகவே, இந்தியா காங்கிரசினால் இந்த ஐம்பது வருஷ காலமாக எந்த துறையில் பொது ஜனங்களுக்கு எப்படிப்பட்ட நன்மை ஏற்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் காங்கிரசின் போலித்தனமும், மோசமும் விளங்காமல் போகாது.
அரசியலில்
பொதுவாக அரசியல் தன்மையிலாவது ஏதாவது மக்களுக்கு பயன் உண்டாயிருக்கிறதா என்று பார்த்தால் அதிலும் எவ்வளவு கொடுமைகள் ஏற்பட்டு பொதுமக்கள் திண்டாடி மானங்கெட்டு தெருவில் நிற்கவும் சில சோம்பேறிகளும், அயோக்கியர்களும், வஞ்சகர்களும் கொள்ளை கொள்ளவுமான நிலையையே அரசியல் கிளர்ச்சி உற்பத்தி செய்திருக்கிறது.
வரி
முதல் காரியத்தை எடுத்துக் கொண்டால்,
அரசியல் நிர்வாக வரியின் அளவு மக்களுக்கு ஒன்று பத்தாய் பெருகி இருக்கிறது. அதாவது காங்கிரசுக்கு முன் இந்தியாவானது சுமார் 30, 40 கோடி ரூ.வரி வருமானத்தில் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்குமானால் இன்று 300, 400 கோடி ரூபாய் வரி வசூலால் நிர்வாகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சர்க்கார் ரிவினியூவரி, ஸ்தலஸ்தாபனவரி, கோர்ட்டு, பதிவு இலாக்காவரி முதலியவைகளைச் சேர்த்துப் பார்த்தோமேயானால் வருஷம் ஒன்றுக்கு இந்தியர்கள் செலுத்துவது 300, 400 கோடி ரூபாய் வரி என்பது குறைவாகவே தோன்றும்.
நிர்வாக செலவு
உதாரணமாக சென்னை மாகாண நிர்வாகமானது ஒரு கவர்னர் இரண்டு மந்திரிகள் ஆக மூன்று பேர்களால் ஆட்சி நடத்தப்பட்டு வந்ததானது காங்கிரசின் பயனாய் இன்று ஒரு கவர்னர் ஏழு மந்திரிகள் ஆகியவர்களால் இந்த அதிக எண்ணிக்கை விகிதாசாரத்துக்கு ஏற்ற அதிகச் செலவுடன் நிர்வாகம் நடந்து வருகின்றது. இதர உத்தியோகங்களும் 100க்கு 300, 400 வீதம் பெருகியிருப்பதோடு அவர்களது சம்பள விகிதங்களும் 100க்கு 1000 வீதம் மொத்தத்தில் அதிகரித்திருக்கிறது.
நீதி இலாக்கா செலவு
நிர்வாக இலாக்காதான் இப்படி என்றால் நீதி இலாக்காவும் அப்படியே பெருகி அதாவது 5 ஹைக்கோர்டு ஜட்ஜிகள் உள்ள உயர்தர நீதிமன்றம் இன்று 14 ஹைக்கோர்ட்டு ஜட்ஜிகளையும், அதுபோலவே கீழ்தர நீதிமன்றங்களுக்கும் 100க்கு 300, 400 வீதம் முன்சீபு ஜட்ஜிகள் குமாஸ்தாக்கள் ஆகிய உத்தியோகங்கள் பெருகி சம்பளங்களும் 100க்கு 100 வீதம் வரையிலும் கூடப் பெருகி அந்த இலாக்காவும் மொத்தத்தில் 100க்கு 500, 1000 வீதம் செலவு அதிகரித்திருக்கின்றது.
ஸ்தல ஸ்தாபன சுய ஆட்சி
ஸ்தல ஸ்தாபன சுயாட்சித் தன்மைகள் சிரிப்பாய் சிரிக்கும்படியாக மக்கள் வரிப்பணங்கள் பாழாவதோடு உலகிலுள்ள இழி குணங்களுக்கும், மோசடிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகின்றது.
சுதந்திரம் என்பதிலோ அரசாங்கத்தாரால் பரீக்ஷõர்த்தமாய்க் கொடுத்துப் பார்க்கப்பட்ட சுதந்திரங்கள்கூட திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்துக்குக் காங்கிரஸ்கொண்டு வந்துவிட்டுவிட்டது.
மக்கள் ஒற்றுமை
மற்றபடி மக்களின் ஒற்றுமை, நேசம், அன்பு ஆகிவைகளில் எங்கும் ஜாதித் தொல்லை, வகுப்புத் தொல்லை, மதத்தொல்லை என்பவைகளே பெருகி தலைசிறந்து தாண்டவமாடுகின்றதை எவரும் மறுக்க முடியாது என்பதோடு எவரும் வெட்கப்படாமல் இருக்க முடியாது என்கின்ற நிலையில் இருக்கின்றது.
பாம்புக்கு பால் வார்ப்பது போல்
இந்த விதமாக இந்த 50 வருஷத்தில் "முன்னேற்றம்" அடைய உதவியாயிருந்த காங்கிரசுக்குப் பொன்விழா கொண்டாடுவது இந்தியர்கள் மதத்தில் நாகப்பாம்பை வணங்கி அதற்கு பால் வார்த்து ஆடு, கோழி வெட்டிப் பொங்கலிட்டுப் பூசை போடும் முட்டாள் தனத்துக்கு சிறிதும் இளைத்ததல்ல என்றே சொல்லலாம்.
காங்கிரசால் பார்ப்பனர் நிலைமை
ஆனால் இந்த 50 வருஷ காங்கிரசின் பயனாய் மனித சமூகத்துக்கே பிறவி எதிரிகளானவர்களும் நல்வாழ்க்கைக் கொள்கைகளுக்கும் நற்குணம் நற்செய்கைகளுக்கும் நாசகாலர்களானவர்களுமானப் பார்ப்பனர்களுடைய நிலை எப்படி மாற்றமடைந்தது? எவ்வளவு முற்போக்கடைந்தது? என்று பார்ப்போமானால் பார்ப்பனர்கள் ஏன் காங்கிரசை விளம்பரம் செய்கிறார்கள்? ஏன் காங்கிரசுக்காகப் பாடுபடுகிறார்கள் என்பவைகள் விளங்கும்.
50 வருஷத்துக்கு முன்பு பார்ப்பனர்களுக்குப் புரோகிதம், கூட்டிக் கொடுத்தல், பிச்சையேற்றல், கோவில், பூசை ஆகிய காரியங்களே அவர்களது வருணத் தொழிலாகவும், பிரத்தியட்ச அனுபவத் தொழிலாகவும் இருந்து வந்ததோடு இத்தொழில்களின் பயனாய் ஏதோ ஆயிரத்தொருவர் உயர்நிலையில் இருக்கக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
ஆனால் இந்த 50 வருஷ காங்கிரசின் பயனாய் பார்ப்பனர்கள் அடையாத உயர் ஸ்தானமில்லை, அனுபவியாத போக போக்கியமில்லை.
காங்கிரசால் மக்கள் உழைப்பெல்லாம் பார்ப்பனர்களுக்கே
மக்களின் உழைப்பெல்லாம் பார்ப்பன கும்பலுக்கே போய்ச் சேரும் படியான வாய்க்கால் வெட்டப்பட்டு அது நேராய் நிரந்தரமாய் தங்கு தடையின்றி பார்ப்பனர் குண்டிக்கே ஓடிக்கொண்டிருக்கிறது.
எப்படியெனில் முதலாவது பார்ப்பனர்கள் 100க்கு நூறு பேர்களுக்கு படிப்பு ஏற்படும்படி காங்கிரஸ் செய்து கொண்டது.
அரசியல் பெரு உத்தியோகங்களில் 100க்கு 90 அவர்களுக்கே கிடைக்கும்படி செய்துகொண்டது. அவர்களது ஜாதிமத ஆதிக்கம் நிலையாய் இருக்கும்படி சட்டங்கள் செய்து கொண்டது. இனியும் அவர்களே படிக்கும் படியும் அவர்களுக்கே உத்தியோகங்கள் கிடைக்கும்படிக்கும் மார்க்கங்கள் செய்து கொண்டிருக்கிறது. அதாவது, நாட்டில் செல்வாக்கும், மக்கள் செல்வாக்கைப் பெறும்படியானதுமானதும் ஏராள வருவாய் உள்ளதுமான தொழில்கள் உத்தியோகம் வக்கீல், வைத்தியம், நாடகம், சங்கீதம், குலகுருத்தனம் முதலிய காரியங்கள் 100க்கு 90க்கு மேலாகவே பார்ப்பனர்கள் கையில் எப்போதும் இருக்கும்படி காங்கிரஸ் செய்துவிட்டது.
குடியானவர்கள் நிலை
ஆனால் குடியானவர்களுக்கோ விடிந்தெழுந்தால் எழவு சங்கதி கேட்பதுபோல் புதுப்புதுவரி சங்கதிகள் கேள்விப்படவும், தேடிவைத்த பொருள் ஏதாவது மீதி இருந்தால் அரசியல் காரணமாகவோ, மத இயல் காரணமாகவோ, மோட்ச இயல் காரணமாகவோ, விவகார வில்லங்க இயல் காரணமாகவோ எல்லாம் பார்ப்பானுக்கே போய் சேரும்படியாகவும் தான் ஏற்பட்டதே தவிர, அவனவன் வாழ்க்கை நலத்தையோ, பிள்ளை குட்டிகளின் கல்வி அறிவு, சுயமரியாதை நலத்தையோ கவனிக்க முடியாத நேரமில்லாத நிலையை காங்கிரஸ் உண்டாக்கி இருக்கிறது.
இவைகளைத் தவிரவும் மற்றும் இவை போன்றவைகளைத் தவிரவும் காங்கிரஸ் இந்த ஐம்பது வருஷத்தில் மக்களுக்கு ஏதாவது ஒரு உண்மையான நன்மை செய்திருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
பெரும் உத்தியோகம் கிடைத்தால் பயன்?
பெரும் பெரும் உத்தியோகங்கள் இந்தியர்களுக்குக் கிடைத்தது என்று சொல்லலாம்.
லார்ட் சின்னா, சர். மகமது உஸ்மான் கவர்னர் வேலை பார்த்தார்கள்.
சர். சங்கர் நாயர், சி.பி. ராமசாமி அய்யர் வைசிராய் பிரபு நிர்வாகசபை மெம்பர் வேலை பார்த்தார்கள்.
வி.கிருஷ்ணசாமி அய்யர், சர். சிவசாமி அய்யர், கே. சீனிவாசய்யங்கார், கிருஷ்ணன் நாயர், சர். கே.வி. ரெட்டி, பன்னீர் செல்வம் ஆகியவர்கள் கவர்னர் நிர்வாக சபை மெம்பர்கள் வேலை பார்த்தார்கள் பார்க்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆட்டுக் கழுத்தில் தொங்கும் தோல் துண்டுகள் போல் இருந்து கொண்டு பொது ஜனங்கள் வரிப்பணத்தை கொள்ளைபோல் அனுபவித்தார்கள் என்பதல்லாமல், இந்த உத்தியோகங்களின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன நன்மை செய்யக்கூடிய சக்தி, சவுகரியம், புத்தி ஆகியவைகள் இந்த அதிக எண்ணிக்கை இல்லாத காலத்தில் வெள்ளைக் காரர்கள் பார்த்த காலத்தில் இல்லாததை விட அதிகமாய் இருந்தது என்றோ வெள்ளைக்காரர்கள் செய்ததைவிட நன்மையில் அதிகமாகவோ, தீமையில் குறைவாகவோ செய்தார்கள் என்றோ சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.
பெரிய உத்தியோகம் கேட்டதின் பயன்
வெள்ளைக்காரர்கள் பார்க்கும் உத்தியோகங்களைப் பார்ப்பனர்கள் பார்க்கவேண்டுமென்று கூச்சல்போட்டது காங்கிரஸ். ஆனால் வெள்ளைக்காரர்கள் தந்திரமாய் தங்கள் உத்தியோகங்களையும் சம்பளங்களையும் குறைக்காமல் இவர்களுக்கு ஆக பல புது உத்தியோகங்களை அதிகப்படுத்தி அதிகச் சம்பளங்களையும் கொடுத்தார்கள்.
பிறகு இவர்களைப் பார்த்துப் பார்ப்பனர் அல்லாதார்கள் கூப்பாடு போட்டார்கள். அவர்களுக்கு ஆகவும் வெள்ளைக்காரர்கள் தந்திரமாய் தங்கள் உத்தியோகங்களும் பார்ப்பன உத்தியோகங்களும் குறையாமல் மேலும் உத்தியோகங்களை அதிகப்படுத்தி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள்.
பிறகு முஸ்லீம்கள் கூப்பாடு போட்டார்கள், அவர்களுக்கும் அப்படியே செய்தார்கள்.
பிறகு தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் சத்தம் போட்டார்கள், இவர்களுக்கும் அப்படியே செய்யப் போகிறார்கள்.
கூப்பாடுகளின் பயன்
ஒவ்வொரு கூப்பாடுகளும் உத்தியோகங்களையும் சம்பளங்களையும் பெருக்கிக்கொண்டுபோய் அதற்கு ஏற்ற அளவு வரிகளும் உயர்த்திக் கொண்டு போய் இவை எல்லாம் ஏழைக் குடியானவன், தொழிலாளி, சின்ன ஜாதி மக்கள் என்பவர்கள் தலையில் கையை வைத்து அவர்களது நிலைமை நாளுக்கு நாள் கேவலமாகிக்கொண்டு வருவதல்லாமல் மற்றபடி காங்கிரஸ் செய்த நன்மை என்ன என்று யாராவது சொல்லமுடியுமா?
காங்கிரசால்
காங்கிரசினால் காந்தி மகாத்மா ஆனார்.
ராஜகோபாலாச்சாரி ராஜாஜி ஆனார், வல்லபபாய் சர்தார் ஆனார், திலகர் லோகமானியரானார், பெசன்ட் லோகமாதா ஆனார், சத்தியமூர்த்தி பாரதமாதாவின் அருமைப் புதல்வரானார், லக்ஷிமிபதி அம்மாள் தியாக சொரூபி ஆனார்.
இந்தப்படி ஒரு சில ஆட்கள் சர்., கே.சி. ஐ., திவான் பகதூர்கள் ஆவது போல் ஆனார்கள்.
புரட்டிலும், பித்தலாட்டத்திலும் தேர்ச்சி உள்ள வக்கீல்கள் அட்வோகேட் ஜனரல் ஐகோர்ட் ஜட்ஜிகள் ஆவதுபோல் அயோக்கியத் தனங்களிலும், ஈனத்தனங்களிலும் தேர்ச்சி உள்ள பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் காங்கிரஸ் தலைவர்கள், தேசாபிமானிகளாகின்றார்கள். முன் சொன்னவர்களும் வக்கீல் கோஷ்டியில் இருந்து சர்க்காரால் பொறுக்கப்படுகிறார்கள், இவர்களும் வக்கீல் கோஷ்டியிலிருந்தே முட்டாள் மக்களால் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்தமாதிரியான காரியங்கள் அல்லாமல் காங்கிரசினால் இந்த 50 வருஷ காலமாய் இந்தியாவுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதாகவோ, ஏழை விவசாயிகள் கூலிகள் ஆகியவர்களுக்கு அனுகூலம் செய்ததாகவோ சொல்ல முடியுமா?
காங்கிரசே காரணம்
அல்லது இந்திய வரிக்கொடுமைகள் எதற்காவது காங்கிரஸ் காரணமில்லை என்பதாகவோ இந்திய மக்களின் கல்வி, செல்வம், அறிவு, சுயமரியாதை, சுதந்திரம் ஆகியவைகளுக்குக் காங்கிரஸ் முட்டுக்கட்டையா யில்லை என்பதாகவோ, சர்க்கார் அடக்குமுறை, சீர்திருத்தப் பாதுகாப்பு ஆகியவைகளுக்கு காங்கிரஸ் காரணமாக இருக்கவில்லை என்பதாகவோ யாராவது எந்த அறிவாளியாவது சொல்லக்கூடுமா என்றும் கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட பொன்விழா
இப்படிப்பட்ட ஒரு கொடுமையையும் கஷ்டத்தையும் முன்னேற்றத் தடையையும் அடிமைத்தளையையும் விளைவித்த காங்கிரசுக்கு பொன்விழாக் கொண்டாடியதானது, ஒரு சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக அவனது தலையை வெட்டிய கொடியோனும் அயோக்கியனுமாகிய ராமனுக்கு சூத்திரர்கள் என்கின்ற கலத்தின் கீழ்வரும் மக்களே ஸ்ரீராம நவமி கொண்டாடுவது எவ்வளவு யோக்கியப் பொறுப்பும் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உடையதோ அதே போன்றது தான் இன்றைய காங்கிரசின் பொன்விழாப் புரட்டு கொண்டாட்டம் என்பது நமது அபிப்பிராயம்.
(குடி அரசு தலையங்கம் 12.01.1936)