காங்கிரஸ்காரர் என்பவர்கள் 100க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேரும் பொய், புரட்டு, சூட்சி, தந்திரம், சமயத்துக்குத் தகுந்தபடி சரணம் போட்டுக் கொள்வது ஆகிய குணங்களையே கொள்கையாகவும், திட்டமாகவும் வைத்து அதற்கு நீதியும், சத்தியமும் என்று பெயர்கொடுத்து காங்கிரஸ் காரியத்தை அதாவது தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என்கின்ற அபிப்பிராயமானது நமக்கு நாளுக்கு நாள் பலப்படுவதுடன் வளர்ந்து கொண்டே வருகிறது.
பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்று செய்யப்படும் சூட்சிகளை இன்றைய காங்கிரஸ் பிரசாரத்தின் பயனாய் மக்கள் அறிய முடியாமல் இருந்தாலும் கூட அதற்கும் ஒரு அளவோ, மானம் வெட்கமோ, மனிதத் தன்மையோ இல்லாமல் போய் விட்டதை வெளியாக்காமல் இருக்க முடியவில்லை.இந்த 5, 6 மாத காலத்தில் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாபனங் களுக்குப் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அவற்றிற்காக ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்றும், காங்கிரஸ்காரர் காங்கிரசுக்காரரல்லாதார் என்றும் சொல்லப்பட்ட பிரிவுகளின் பேரால் தேர்தல்கள் நடந்தன. அவற்றுள் ஜெயித்தால் "காங்கிரசுக்கு ஜெயம்" என்ற கொட்டை எழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், "தோற்றால் உப்புக் கண்டம் (காய்ந்த மாமிசத் துண்டு) பறி கொடுத்த பார்ப்பனத்தி" போல் வாயடைத்துக் கொள்ளுவதுமான காரியங்களைச் செய்து வந்தது யாவரும் அறிந்ததாகும்.
உதாரணமாக சிறிது நாட்களுக்கு முன் சென்னையில் தோழர்கள் ஒரு கோயங்கா அவர்களுக்கும், ஒரு நாயுடு அவர்களுக்கும் நடந்த தேர்தலில் கோயங்காவை காங்கிரஸ்காரராக்கி நாயுடுவை ஐஸ்டிஸ் கட்சியாராக்கி காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், பாஷியம் அய்யங்கார், கிருஷ்ணசாமி சாஸ்திரியார் என்பவர்கள் உள்பட, "இந்து", "சுதேசமித்திரன்" உள்பட எல்லா பார்ப்பனர்களும் தோழர் கோயங்கா காங்கிரஸ் அபேட்சகர் என்று ஜனங்களை நம்பும்படி செய்து பிரசாரம் செய்தார்கள்.
கடைசியில் கோயங்கா அவர்கள் பதினாயிரக்கணக்கான ரூபாய் நஷ்டப்பட்டும் தோல்வி அடைந்ததும் தோழர் கோயங்கா காங்கிரஸ்காரர் அல்ல என்று சொல்லி விட்டார்கள். இது போல் பல காரியங்கள் செய்து வந்தும் சமீபத்தில் இந்த வாரத்தில் நவம்பர் 9ந் தேதி சேலத்தில் நடந்த முனிசிபல் எலக்ஷனில் தோழர் வெங்கிடப்ப செட்டியார் அபேட்சகர் ஸ்தானமானது காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்டு தோழர் அய்யாசாமி செட்டியார் பார்ப்பனர் அல்லாதார் சார்பாய் (ஜஸ்டிஸ் கட்சி சார்பாய்) நிறுத்தப்பட்டு காங்கிரஸ்காரர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட அன்று சேலத்துக்கு வந்து வெங்கிடப்ப செட்டியாருக்காக எவ்வளவோ பாடுபட்டும் வெங்கிடப்ப செட்டியாருக்கு 8 ஓட்டும், அய்யாசாமி செட்டியாருக்கு 25 ஓட்டும் கிடைத்து பாதாள தோல்வி அடைந்து விட்டார் என்கின்ற சேதி தெரிந்ததும் "வெங்கிடப்ப செட்டியார் காங்கிரஸ் அபேட்சகரல்ல" என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் முதல் கொண்டு எல்லா பார்ப்பனப் பத்திரிக்கைக்காரர்களும் சொல்லிவிட்டார்கள் என்றால் இவர்களது பல்ட்டிக்கும், சமயத்துக்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுவதற்கும் வேறு என்ன சாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்.
தோழர்கள் வெங்கிடப்ப செட்டியார், சடகோப முதலியார் ஆகிய இரு அபேட்சகர்களை காங்கிரஸ் அபேட்சகர்களாக வைத்து காங்கிரஸ்காரர்கள் "அது அல்லாத" பார்ப்பனர்கள் என்பவர்களுள்பட பெரிய கூட்டம் கூடி ரகசிய ஓட்டெடுத்து காங்கிரசு சார்பாகவும், பார்ப்பனர்கள் சார்பாகவும் தோழர் வெங்கிடப்ப செட்டியாரை நிறுத்தி காங்கிரசின் பேரால், காந்தியின் பேரால், கவுன்சிலர்களிடம் முழங்கால் முறிய நடந்து கடைசியில் பாதாள தோல்வி ஏற்பட்டதும் வெங்கிடப்ப செட்டியார் காங்கிரசுக்காரர் அல்ல என்று சொல்லிவிட்டால் காங்கிரசுக்கு இருக்கும் நேர்மை, சத்தியம், நீதி ஆகிய குணங்களுக்கு வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை. தோழர் வெங்கிடப்ப செட்டியார் அவர்கள் காங்கிரசில் 15 வருஷ காலமாய் இருந்து வருபவர். அவர் கதர் உடுத்தி வருபவர். பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்பதை ஒப்புக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் ஜஸ்டிஸ் கட்சியாரையும் இணையில்லாக் கேவலமாய் பேசி வந்தவர் வருகிறவர். பார்ப்பன நாகரீகம், ஆச்சார அனுஷ்டானங்கள், கோயில், குளம், பக்தி பிராமண விஸ்வாசம் ஆகியவைகளில் இணையற்றவர். இப்படி இருந்தும் அவருக்குத் தோல்வி ஏற்பட்டவுடன் அடியோடு அவரை ஜனங்கள் கேவலமாய் நினைக்கும்படியும் அவர் தோல்விக்கு சிலராவது பரிதாபப்படாமல் இருக்கும்படிக்கும் "காங்கிரசுக்காரர் அல்லாததால் அவர் தோல்வி அடைந்தது சரிதான்" என்று நினைக்கும்படிக்கும் சொல்லும்படிக்கும் செய்து விட்டார்கள் என்றால் இந்தப் பார்ப்பனரை நம்புவோர்கள் சமயத்தில் கைவிடப்பட்டு விடுவார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாக்ஷி வேண்டும் என்று கேட்கின்றோம்.
வெற்றி தோல்வி இயற்கை. பணச்செலவும் சூட்சியும் நேர்மையற்ற காரியங்களும் காலித்தனமும் செய்தவர்களுக்கே பெரிதும் வெற்றி ஏற்படுவது என்பது சகஜம்.
வெற்றி தோல்வியில் மனிதனுடையவோ, கட்சியுடையவோ, மேன்மையோ, நாணையமோ பாதிக்கப்பட்டு விடுவதில்லை.
இதுவரை பல கட்சி தோல்வியடைந்தும், பல கட்சி வெற்றியடைந்தும் வந்திருக்கின்றது என்றாலும் அதனாலேயே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு விடவும் இல்லை. எந்தக் கட்சியும் முழுகிப் போய் விடவுமில்லை.
ஆனால் கண்ணியமாய் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இந்தப்படி உடனுக்குடன் அந்தர் அடிப்பதென்றால் இவர்களுள் நாணையமும் சுயமரியாதையும் உள்ள மக்கள் எப்படி நெருங்குகிறார்கள் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இனியாவது தோழர் வெங்கிடப்ப செட்டியார் அவர்கள் பார்ப்பனர்களுடையவும், காங்கிரசுக்காரர்கள் என்பவர்களுடையவும் யோக்கியதையை உணர வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 11.11.1934)