திருநெல்வேலியில் நடந்த தீண்டாமை மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழாசிரியர் தோழர் எஸ்.சோமசுந்திர பாரதியார் M.A., B.L.,, அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அம்மகாநாட்டிற்கு வரவேற்பு கழகத் தலைவராக இருக்க திருநெல்வேலி தோழர் சாவடி கூத்தநயினார் பிள்ளை அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். இவ்வேண்டுகோளுக்கிணங்க இரு தோழர்களும் தங்கள் கடமைகளை ஆற்ற மகாநாட்டிற்கு வந்திருந்தார்கள். இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டியதாகும்.

அதாவது அவர்கள் இருவரும் காங்கிரஸ் கொள்கையில் பற்றுள்ளவர்கள், ஆஸ்திகர்கள், காங்கிரஸ் தீண்டாமை விலக்கு (“ஹரிஜன முன்னேற்ற”) வேலை கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் ஆவார்கள். இவற்றை யெல்லாம் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டிய தோழர்கள் அறிந்தே அவர்களை தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.

periyar 306அன்றியும் மகாநாட்டில் தோழர் சோமசுந்திர பாரதியாரைத் தலைமைப் பதவிக்கு நான் பிரேரேபிக்கும் போதே தோழர் பாரதியாருக்கும் நமக்கும் விசேஷ அபிப்பிராய பேதங்கள் உண்டு என்றும், அப்படியிருந்தும் இம் மகாநாட்டிற்கு நாம் அவர்களை தலைமை வகிக்க அழைத்திருப்பதும், அவர்கள் இணங்கி வந்திருப்பதும், ஆகிய இரண்டு காரியத்தையும் பார்ப்போமேயானால் நாம் அழைத்ததைவிட அவர் ஒப்புக்கொண்டு வந்திருப்பதே போற்றக் கூடியதென்றம், இதுவே அவரது உதாரத் தன்மையைக் காட்டுகின்றதென்றும் சொன்னதோடு, நமக்கும் அவருக்கும் உள்ள முக்கிய அபிப்பிராய பேதமென்னவெனில் தோழர் பாரதியார் ஒரு சீர்திருத்த நோக்கமுடையவர் என்றும், அதாவது எதையும் அழித்து விடாமல் அப்படியே வைத்துச் சீர்திருத்தம் செய்வதன் மூலம் மனித சமூகத்திற்கு விடுதலையையும், மேன்மையையும் உண்டாக்கக் கருதி இருக்கிறவர் என்றும், நாம் அப்படிக்கில்லாமல் சீர்திருத்தத்தில் நம்பிக்கை வைத்து அதற்குக் கொடுக்க வேண்டிய சலுகையெல்லாம் கொடுத்துப் பார்த்து அதற்காகக் காத்திருக்க வேண்டிய காலமெல்லாம் காத்துப் பார்த்து அந்த அனுபவத்தின் மீது இப்போது நாம் பல விஷயங்களில் தலைகீழ் புரட்சி வேலையிலும், பல விஷயங்களில் பெரியதொரு அழிவு வேலையிலும் ஈடுபட்டிருக்கிறவர்கள் என்றும், ஆனபோதிலும் அவரவர்கள் அபிப்பிராயத்துக்கு பங்கமில்லாமல் ஏதாவது ஒரு பொது லட்சியத்துக்கு இருவரும் கூடி உழைக்கக் கூடுமானால் அதனால் பயன் உண்டு என்று தோன்றுமானால் யாரும் பின்வாங்க வேண்டியதில்லை என்றும், அதனால் காரியம் கெட்டு விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், பேசி கடைசியாக மற்ற வைதீகர்கள், சைவர்கள் ஆகியவர்களைப் போல் அதாவது “சுயமரியாதைக்காரர்களைப் பார்ப்பதே பெரிய பாவம்” என்று கருதாமல் நமது வேண்டுகோளுக்கு இணங்கி இங்கு வந்திருப்பதற்கு பாராட்டுவதாகவும் சொல்லி பிரேரேபித்தேன். இந்தப்படி சொல்ல வேண்டியதும் பிரேரேபணை செய்ய வேண்டியதும் மரியாதையும் பத்ததியும் நியாயமும் என்றே நான் நினைத்து அந்தப்படி செய்தேன்.

தோழர் பாரதியவர்கள் தலைமை வகித்து தலைமைப் பிரசங்கம் செய்யும்போது முதலில் தன்னை நான் விலக்கிப் பேசி இருக்க வேண்டியதில்லை என்றும் தான் இம்மகாநாட்டுக்கு வந்ததில் அதிசயமொன்றுமில்லை யென்றும், மகாநாட்டார் தன்னைத் தேடி அழைத்ததே பெரிதென்றும், சுய மரியாதைக்காரர்களுக்கு உள்ள மனித சமூகத்திற்கு விடுதலை ஏற்பட வேண்டும் என்கிற ஆசையிலும் மனித சமூகம் மேன்மையடைய வேண்டும் என்கின்ற ஆசையிலும் தான் ஒரு சிறிதும் குறைந்தவரல்லவென்றும் சொல்லிவிட்டு தீண்டாமையைப் பற்றி பேசும்போது தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம் என்றும் அதற்கு உலகில் எந்த சமயமும் விரோதமாய் இருப்பதாக யாரும் கருத வேண்டியதில்லை என்றும், சைவர்கள் தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் தீண்டாமை பாராட்டக் கூடாதென்றும் சொல்லி அதற்கு ஆதாரமாக இரண்டொரு சைவ மேற்கோள்களை எடுத்துக் காட்டினார்.

அதுபோலவே வைணவர்களும் தீண்டாமையை பாராட்ட நியாயமில்லை என்றும், தீண்டாமை பாராட்டுகின்றவர் வைணவராக இருக்க முடியாதென்றும் சொல்லி அதற்கு ஆதாரமாக ராமானுஜருடைய விஷயத்தை எடுத்துச் சொன்னார். இந்த சந்தர்ப்பத்தில் தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் எழுந்து ராமானுஜர் தனது பெண்ஜாதியை தன் இஷ்டப்படி நடவாததற்காக விலக்கி விட்டாரல்லவா என்ற ஒரு கேள்வி கேட்டார். அந்த சமயம் சிலர் சிரித்தார்கள். இந்தக் கேள்வி அந்தச் சமயத்துக்கு அவசியமற்றது என்பது எனதபிப்பிராயம். ஆனபோதிலும் அதற்குத் தலைவர் இப்படிப்பட்ட கேள்விகளை மற்றொரு சமயம் கேட்டால் எனக்குத் தெரிந்த பதிலை நான் சொல்ல எப்பொழுதும் தயாராய் இருக்கிறேன். ஆனால் இது சமயமல்ல என்பதாக சொல்லிவிட்டு, ஆனபோதிலும் இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுவதாகச் சொல்லி ராமானுஜர் சுயமரியாதைக் கொள்கைப்படிதான் நடந்தாரென்றும், தனது மனைவியார் நடத்தை பிடிக்கா விட்டால் அவர் என்ன செய்வது என்று யோசித்துத்தானே தனது மனைவியை விட்டு நீங்கிக் கொண்டாரே ஒழிய தனது மனைவியை நீக்கிவிடவில்லை என்றும் சொன்னார்.

இதற்கும் பலர் சிரித்தார்கள். சிலர் கையும் தட்டினார்கள். அப்போது பாரதியார் “பரிகாசம் செய்பவர்கள் பரிகசிக்கப்படுவார்கள்” என்பதாக ஒரு பழமொழி உண்டு என்பதாகச் சொல்லிவிட்டு மேலால் பேசும்போது தோழர்கள் ஜீவானந்தம், குப்தா முதலிய 2, 3 பேர்கள் தலைவர் பேசும்போது அடிக்கடி மத்தியில் பிரவேசித்து தலைவரை கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். இந்த சமயத்தில் நான் தலைவர் அனுமதியின் பேரில் எழுந்து இந்த தோழர்களை கேட்டுக் கொண்டு, தலைவர் பேசும்போது மத்தியில் மத்தியில் பேசுவது அழகல்ல என்று சொன்னேன். அதற்கு தோழர் வல்லத்தரசு அவர்கள் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது என்றார். தோழர் குப்தா அவர்கள் எங்கள் உணர்ச்சியை இப்படி ஒடுக்கக்கூடாது என்றும் சந்தேகங்களை கேட்டுத்தான் ஆகவேண்டும் என்றும் சொன்னார். தோழர் ஜீவானந்தம் அவர்களும் வாயில் ஏதேதோ சத்தம் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தலைவர் நீங்கள் எல்லோரும் ஏககாலத்தில் உபன்யாசம் செய்வதாய் இருந்தால் என் உபன்யாசத்தை நிறுத்திக் கொள்ளுகிறேன் என்று சொல்லிய பிறகு அவர்கள் உட்கார்ந்தார்கள். பிறகு தலைவர் பாரதியார் அவர்கள் எழுந்து மறுபடியும் பேசும்போது தான் சமய ஆதாரங்களைப் பற்றி பேசுவதானது சுயமரியாதைக்காரர்களை திருப்புவதற்காக அல்லவென்றும் தீண்டாமை விலக்குக்கு சமயம் இடம் கொடுக்கவில்லை என்று கருதி இருக்கிறவர்களுக்கும், சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், ஆகவே இதை பேசியதாகவும் இனி மற்ற விஷயங்களைப்பற்றி பேசுவதாகவும் சொன்னார். இந்தப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போது தோழர் வல்லத்தரசோ, அல்லது தோழர் குப்தாவோ அப்படிப்பட்டவர்கள் அதாவது சமய நம்பிக்கைக்காரர்கள் இங்கு யாரும் இல்லை என்று சொன்னார்.

அப்பொழுது தோழர் கூத்தநயனார் பிள்ளை அவர்கள் நாமம் போட்ட சிலரும் விபூதி பூசிய சிலரும் உருத்திராட்சம் கட்டிய சிலரும் வந்திருப்பதாகக் காட்டினார். இந்நிலையில் தலைவர் உபந்யாசம் முடிந்ததும் முதல் தீர்மானம் என்னால் பிரேரேபிக்கப்பட்டது. அதில் அது சம்பந்தமான பல விஷயங்களைச் சொல்லி பிரேரேபித்த பிறகு அதை ஆமோதிக்க தோழர் ஜீவாநந்தம் அவர்கள் வெகு ஆத்திரத்துடன் எழுந்தார். அது சமயம் நான் தோழர் ஜீவாநந்தம் அவர்களை நீங்கள் ஆமோதிக்க வேண்டாம், வேறு யாராவது ஆமோதிக்கட்டும் என்று பலவிதத்திலும் வணக்கமாகக் கேட்டுக் கொண்டும், எனது வேண்டுகோள் பயன்படாமல் அவர் தான் ஆமோதித்துத்தான் தீருவேன் என்றதின்பேரில் அவர் அனுமதிக்கப்பட்டு எழுந்து, தலைவரையே சுட்டிச் சுட்டி தீர்மானத்துக்குச் சம்பந்தமில்லாத பல விஷயங்களைப் பேசி தீர்மானத்தை ஆதரித்தார். பிறகு தோழர் வல்லத்தரசு அவர்கள் பேச வேண்டுமென்று எழுந்து தீர்மானத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் கடைசி வரை தலைவரையே பலவித கடினமான வார்த்தைகளால் கண்டபடி வைதுவிட்டு உட்கார்ந்தார். (அந்த வார்த்தைகள் எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனாலும் இதுசமயம் வெளியிட விரும்பவில்லை)

பிறகு இரண்டொரு தீர்மானங்கள் நிறைவேறி தலைவர் முடிவுரை நடந்தபிறகு என்னை தலைவருக்கு நன்றி செலுத்தும்படி தோழர் குற்றாலலிங்கம் அவர்கள் கட்டளையிட்டதற்கிணங்க நான் எழுந்து நடந்த சம்பவத்திற்கு வருந்தி தலைவருக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ளும் முறையில் மகாநாட்டில் ஒழுக்கமுறை தவறி நடந்து கொண்ட தோழர்கள் செய்கையை கண்டித்து பேசுகையில் குறிப்பிட்டதாவது: சுயமரியாதைக்காரர்களைப் பற்றி பலர் கண்டபடி பழி கூறித் திரியும் காரியங்களை மெய்ப்பிக்க அனுகூலமாகும்படி இன்று இங்கு சில தோழர்கள் வேண்டுமென்றே ஒழுங்குமுறைகளை அலக்ஷியம் செய்து நடந்து காட்டி விட்டார்கள். தலைவரைப் பற்றி நான் பிரேரேபிக்கும்போதே எல்லா விபரங்களையும் தெரிவித்திருக்கின்றேன். இம்மாதிரி மனப்பான்மையுள்ள தோழர்களுடன் இனி ஒத்துழைப்பதினால் நன்மையைவிட கெடுதியே அதிகமாக ஏற்படும் என்று தோன்றுகிறது.

இதுவரை நமது இயக்கத் தோழர்கள் பலரின் நடத்தையால் நான் அதிகக் கஷ்டமடைந்திருக்கிறேன். எனக்கு சொந்தத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், பழிகள், நஷ்டங்கள் ஆகியவைகளைப் பற்றி நான் எப்போதும் கவலைப்படவில்லை. அதைப் போக்கிக் கொள்ள நான் முயற்சிக்கவும் இல்லை. ஆனால் இம்மாதிரி நடவடிக்கைகளால் இயக்கத்தின் யோக்கியதை கெட்டுப் போகின்றதென்றே நான் வருந்துகிறேன். இன்றைய மாதிரியை நான் வன்மையாய்க் கண்டிக்கிறேன். இதனால் இப்படிப்பட்ட தோழர்கள் கோபித்துக் கொண்டுபோய், இதற்குமுன் கோபித்துக் கொண்டு போனவர்கள் செய்கின்ற மாதிரி எவ்வளவு இடையூறு செய்தாலும் அதற்குத் தலை கொடுக்கத் தயாராயிருக்கிறேன். அதை எல்லாம் எதிர்பார்த்தே நான் இப்படி பேசுகிறேன். இதற்கு முன்னும் நான் இப்படி கண்டிப்பதாய் இருந்ததாலேயே இயக்கம் ஓரளவுக்காவது உயிருடன் இருக்கிறது.

இதுபோல் அநேகரின் இடையூறுகளையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டுதான் இயக்கத்தை ஒரு அளவுக்கு நிலை நிறுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தத் தோழர்கள் தங்களது இப்படிப்பட்ட மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இவர்களுடன் ஒத்து உழைப்பது சாத்தியமற்றதாகி விடும். ஜஸ்டிஸ் கட்சியுடனும் சில பணக்காரர்களுடனும் நான் கலந்திருந்தது வாஸ்தவமே. ஆனால் அது எனது சுயநலத்துக்கு அல்ல. அவர்களை இயக்கத்துக்கு எவ்வளவு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுடன் கலந்து வந்திருக்கிறேன்.

நமது சொந்த விஷயத்தில் ஒருவர் நடந்து கொண்டதற்காக ஒருவரை இகழ்வதும், வைவதும், பொதுக் கூட்டங்களில் பேசுவதென்பதும் சிறிதும் ஒழுங்காகாது. இந்தக் கூட்ட நடவடிக்கையைப் பார்த்த பிறகு இனியும் நமக்கு மகாநாடுகள் வேண்டுமா என்றும் மகாநாடுகள் நடத்த நமக்குத் தகுதி உண்டா என்றும் பயப்படும்படியாக ஆகி விட்டது. மத்தியான மகாநாட்டுக்கு வரலாமா வரக்கூடாதா என்றுகூட யோசிக்கிறேன். ஏதோ என் சக்தி அனுசாரம் எனக்குள்ள ஊக்கத்தைக் கொண்டு என் அபிப்பிராயத்தை தெருவில் நின்று பேசி விட்டுப் போவதே மேல் என்றுகூட யோசிக்கிறேன். நான் ஏன் இவ்வளவு வருத்தமாய் பேசுகிறேன் என்றால், தப்பாகவோ சரியாகவோ இதன்பழியும் பொறுப்பும் என் தலைமீது இருக்கிறது என்று கருதியும் மற்ற தோழர்களுக்கு சிறுவயது வாலிப ரத்தம் என்கின்ற சாக்குகள் இருக்கின்ற மாதிரி எனக்கு சாக்கு இல்லை என்றும் கருதுவதாலேயேயாகும்.

ஒவ்வொருவருடைய அபிப்பிராயமும் உணர்ச்சியும் தனித்தனியே தாண்டவமாட வேண்டுமென்றால் ஒழுங்குமுறை என்பதற்கு அர்த்தமே இல்லை. தனித்தனி அபிப்பிராய சுதந்திரம் என்பது அனேக பரீட்சைக்கும் அனுபவத்திற்கும் பிறகு மாறி இப்போது ஒரு தனி அபிப்பிராயத்தின்கீழ் நடந்தாக வேண்டியதாய் இருந்து வருகிறது. இப்படியெல்லாம் இருக்க ஒவ்வொருவரும் எழுந்து தங்கள் தங்கள் உணர்ச்சிப்படி சபையில் நடப்பது என்றால் சபைக்குத் தலைவர் எதற்கு? ஆகவே இங்கு இந்த மகாநாட்டுத் தலைவரிடம் நடந்த மாதிரிக்கும் அவரை அனாவசியமாய் வைத மாதிரிக்கும் நான் இன்று வருந்தாமல் இருக்க முடியவில்லை என்பதோடு, தலைவரை வணக்கத்துடன் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். முக்காலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதோடு இந்த மாதிரி தோழர்கள் மத்தியில்தான் இந்த 7, 8 வருஷங்களாக இந்த பிரச்சாரமும் செய்து வருகிறேன். இன்னும் பல தோழர்களின் கதை கேட்டால் தலைவரவர்களே அதிசயப்படுவார்கள். அதையெல்லாம் இங்கு விரிக்க நான் ஆசைப்படவில்லை. ஆதலால் தலைவரவர்கள் எனது கஷ்டமான பரிதாபகரமான நிலையைக் கண்டாவது இன்றைய சம்பவங்களை மறந்துவிட வேணுமாய் மறுபடியும் மறுபடியும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

முற்பகல் மகாநாடு முடிந்தபிறகு பிற்பகல் தோழர்கள் பாரதியாரவர்கள் சாவடி கூத்த நயினார் பிள்ளை அவர்கள் ஜாகைக்குச் சென்று தனிப்படவும் இருவருக்கும் சமாதானம் சொல்லிவிட்டு பிறகு பிற்பகல் தொழிலாளர் மகாநாட்டுக்கும் வந்து எனது கடமைகளைச் செய்தேன்.

மகாநாடு முடிந்தபிறகும் கடைசியாக தோழர் வல்லத்தரசு அவர்கள் மறுபடியும் பேச எழுந்து அப்பொழுதும் ஒரு முறை சில கடின பதங்களை உபயோகித்து விட்டு கடைசியாக இம்மாதிரி மகாநாடுகளில் சுயமரியாதை இயக்கக்காரர்கள் அல்லாதவர்களை உள்ளே புகவிடக்கூடாதென்றும், அவர்களை சேர்க்கவே கூடாதென்றும், சேர்த்ததால்தான் இப்படி நடந்ததென்றும் ஆதலால் தான் நடந்து கொண்ட மாதிரி சரி எனப் பொருள்படவும் பேசி முடித்தார்.

ஆகவே இந்த மாதிரி நடவடிக்கையால் எனது மனம் சற்று புண்பட்டு விட்டதுடன் எனது நம்பிக்கையும் சற்று ஆட்டம் கொடுத்து விட்டது. இது ஒரு புறமிருக்க நல்ல சமயத்தில் அதாவது நமது இயக்க கொள்கைகள் நம் எதிரிகளாலும் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிக்காரர்களாலும் ஒப்புக் கொள்ளத்தக்க சமயமாகவும் எல்லா இந்திய ஸ்தாபனம் என்னும் காங்கிரசுக்காரர்களாலும் ஒப்புக் கொள்ளக்கூடிய சமயமாய் இருக்கும் போதும், சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும் உள்ளே விட்டால் இப்படித்தான் நடக்கும் என்கின்ற பொருளிலும் பேசினால் நலம் விளையுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.

உண்மையைப் பேசப் போனால் சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லி, கூடவே அளவளாவிக் கொண்டிருக்கிறவர்களைவிட காரியத்திலும் கொள்கையிலும் ஒழுங்கிலும் எவ்வளவோ சரியாய் நடந்து கொண்டு சுயமரியாதைக்காரர்கள் என்பவர்களில் சிலருடைய நடத்தைக்காகவும் வசவுக்காகவும் பயந்து கொண்டு கலந்து கொள்ள முடியாமல் இருக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்கள் உள்ளே வந்தால் இப்படித்தான் நடக்கும் என்று நாம் எப்படி சொல்ல முடியும். இதுவரை நடந்த நமது மகாநாடுகளில் நமது சங்கங்களில் நமது கூட்டங்களில் எத்தனையோ வித அபிப்பிராயமுள்ளவர்களை கலக்கிக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களால் எல்லாம் இயக்கத்திற்கு பலன் பெற்றிருக்கிறோமேயொழிய அவர்களால் அல்லது அவர்களுக்காக நமது கொள்கைகள் எதையும் விட்டுக் கொடுத்துவிடவில்லை. ஆதலால் இனியாவது இயக்க தோழர்கள் என்பவர்கள் தங்கள் செய்கை சரியா தப்பா என்று யோசித்துப் பார்த்து தக்கபடி நடந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கையின் மீது எழுதுகிறேன்.

தோழர் பாரதியாரவர்களையும் மகாநாட்டில் தெரிவித்துக் கொண்டது போலவும் தனியே தெரிவித்துக் கொண்டது போலவும் பத்திரிகை மூலமும் மேல்படி சம்பவத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து மற்றுமொரு முறை இச்சம்பவத்தை மறந்து விடும்படியாக வேண்டிக் கொள்ளுகிறேன்.

(குடி அரசு - தலையங்கம் - 01.10.1933)

Pin It