காரைக்குடியில் இம்மாதம் 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கல்லுக்கட்டு என்கின்ற ஒரு ஒதுக்கு இடத்தின் வேலிக்கு உட்புரமாக தோழர் ஜீவானந்தம் அவர்கள் தீண்டாமை என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் சில பார்ப்பனர்களின் ஏவுதலின் பேரில் ஒரு போலீசு சப் இன்ஸ்பெக்டர் கூட்டத்துள் புகுந்து திடீரென்று தோன்றி தோழர் ஜீவனாந்தத்தை யாதொரு முகாந்திரமும் இல்லாமல் கன்னத்தில் அடித்ததாகவும், காரணம் சொல்லி அடித்தால் நலம் என்று தோழர் ஜீவானந்தம் மரியாதையாய்ச் சொல்லியும் மறுபடியும் பலமாக பல தடவை அடித்ததாகவும் உடனே கூட்டம் கலைந்து விட்டதாகவும், அந்த சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை அடித்தது மாத்திரம் போதாமல் தோழர் கணபதி என்பவரையும் தெருவில் வழிமறித்து அடித்ததாகவும், பிறகு மறுபடியும் கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருந்த தோழர் ராமசுப்பையா அவர்களையும் ஓடி வழிமறித்து பல அடிகள் கன்னத்தில் அடித்ததாகவும், ஏனய்யா? என்ன காரணமய்யா? சொல்லிவிட்டு அடியுங்களையா என்று கேட்டும் சிறிதும் லட்சியமில்லாமலும் ஈவு இரக்கமில்லாமலும் கண்டபடி அடித்ததாகவும் பிறகு தோழர் ராம சுப்பையா அவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று தெரிந்தவுடன் அந்த சப் இன்ஸ்பெக்டர் தனக்கு மேலால் ஏதாவது கேள்வி வரக்கூடுமோ என்று பயந்து, மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போய் நியூ சென்சுக்கு சார்ஜ் செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டதாகவும் பத்திரிகைகளில் கண்ட சேதிகளாலும் நேரில் விசாரித்த விசாரனையினாலும் தெரிய வருகிறது.
இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் போட்டு தீர்மானங்கள் செய்திருப்பதாகவும், இனியும் பல இடங்களில் போலீசாரின் இவ்வித அயோக்கியத்தனமான காரியத்தைக் கண்டித்தும் இந்த சப் இன்ஸ்பெக்டர் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவருக்குப் புத்தி கற்பிப்பதுடன் இனி எந்த போலீஸ்காரரும் இவ்வித மடத்தனமும் அயோக்கியத்தனமும் பார்ப்பனர்களுக்கு குலாமாயிருந்து இவ்வித இழிவான காரியமும் செய்யாமல் இருக்க எச்சரிக்கும்படியும் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாக தீர்மானங்கள் பலர் செய்திருப்பதாகவும் செய்யப் போவதாகவும் தெரிய வருகின்றது.
போலீஸ் இலாக்காத் தலைமை அதிகாரிகளும், நிர்வாக இலாக்காத் தலைமை அதிகாரிகளும் இதைப் பற்றி இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம். என்றாலும் அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அந்த “ஜாதியார்” அந்தந்த “ஜாதி” ப்புத்தியைத்தான் காண்பிப்பார்கள். ஒருவர் செய்த அயோக்கியத்தனத்தை அதே உத்தியோகத் தாயிக்குப் பிறந்த மற்றொருவர் அதை மூடிப்பூசி மெழுகும் முறையில் தான் காரியம் செய்வார்கள். 100ல் ஒருவர் 1000ல் ஒருவர் உத்தியோக ஜாதி அபிமானத்தையே பிரதானமாய்க் கருதாமல் ஞாயம் செய்தாலும் செய்வார்கள். ஆதலால் அதைப் பற்றி கவலையில்லை.
ஆனால் சட்டசபைப் பிரதிநிதிகள் என்கின்ற முடத்தெங்குகள் கோழிக் குஞ்சுகள் பொரித்ததுபோல் பொலபொலவென்று நூற்றுக்கணக்கான மக்கள் பொது ஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டும் பட்டம் பரிவட்டங்கள் பெற்றுக் கொண்டும் பொதுஜனங்கள் பேரால் - பொதுஜனங்கள் பணத்தில் படிச் செலவு செய்து கொண்டும் வாழ்கின்ற இந்த ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் இந்த இருபது நாளாய் சட்டசபையில் இதைவிட வேறு என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்பது தான் நமது வேடிக்கைக் கேள்வியாகும்.
தோழர் கே. பாஷ்யம் ஐயங்காரையும் மற்றும் ஏதேதோ அணாமதேய மாம்ச பிண்டங்களையும் பற்றி “அவரை யேன் அடித்தார்கள்” இவருக்கு “ஏன் மோர் கொடுக்கவில்லை” என்பது போன்ற பல கேள்விகள் கேட்டு சர். உஸ்மான் தயவையும் தோழர் கிருஷ்ணய்யர் தயவையும் பெற்ற இந்தப் புலிகள் இந்த மாதிரியான அதாவது பொதுஜன சேவை செய்கின்றவர்களும் ஏழை மக்களுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்துகொண்டு யாதொரு சுயநலமும் எதிர்பாராமல் பாடுபடுகின்ற மரியாதையான வாழ்க்கையுள்ள மக்களை இம்மாதிரி தெருவில் நடக்கும்போது குடிகாரன் வெறிகாரன் போல் ஓடி மரித்து கத்திரிக்காய் பட்டணம்போல் கன்னங்கன்னமாய் பல்லில் ரத்தம் வரும்படி அடிக்கின்றது என்றால், இதைப்பற்றி ஒரு கேள்வியாவது கேட்கவோ ஒரு அவசரத் தீர்மானமாவது கொண்டு வரவோ வேண்டியது அவசியமில்லாமலும், அவசரமில்லாமலும் போனதுதான் நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பவர்களுக்குக்கூட இதைப்பற்றிய உணர்ச்சி இல்லாமல் போனது நமக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றுதான் சொல்ல முடியும். அதாவது அரசாங்கம் என்பதும் ஜனப்பிரதிநிதி என்பதும் ஒரே யோக்கியதை உடையது தான் என்றும் அரசாங்கம் என்பது ஏழை மக்கள் என்னும் பிணத்தைத் தின்னும் குள்ளநரி என்றால் பொதுஜன பிரநிதிகள் என்பவர்கள் அப்பிணத்தைக் கொத்திக் கொத்தி தின்னும் கழுகுக்கு சமானமானவர்களே ஒழிய நரியை விரட்டுகின்றவர்கள் அல்ல என்றுதான் முடிவு செய்கின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.03.1933)