தன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும் தங்களது இயல்பான வாழ்க்கையை இனி தொடரமுடியாத அளவிற்கு இந்த அரசு அவர்களை ஊனப்படுத்தி இருக்கின்றது. திட்டமிட்டு நடத்திய இந்தப் படுகொலை சம்மந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நரவேட்டையை நடத்தியவர்கள் மிக மகிழ்ச்சியாக எந்தவித குற்ற உணர்வும் இன்றி சுதந்திரமாக உலாவந்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியதால்தான் இந்த அரசு பயந்துபோய் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவித்தது. ஆனாலும் வழக்கமாக கிடைத்து வந்த எலும்புத் துண்டுகள் பறிபோன ஆத்திரத்தை அவர்களால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் போராட்டத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி பல தோழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு இந்த அரசு பழி தீர்த்துக் கொண்டு இருக்கின்றது. சொல்லப் போனால் இன்னும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் முடிவடைந்து விடவில்லை.

sterlite copper

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பரப்புரை செய்பவர்கள் அனைவரையும் முடக்குவதன் நோக்கம், தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான கருத்துக்களை உருவாக்கத்தான். கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் இதை மெய்ப்பிக்கின்றன. ஏற்கெனவே மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த அரிராகவன், வாஞ்சிநாதன் என்ற இரண்டு வழக்கறிஞர்கள்தான் இளைஞர்களை மூளைச்சலவை செய்து போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தார்கள் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு செயலாளரிடம் சில கைக்கூலிகளைக் கொண்டு மனு அளிக்க வைத்தனர். இப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சில கைக்கூலிகளைக் கொண்டு, தூத்துக்குடி ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வைத்துள்ளனர். ஒப்பந்தக்காரர்கள், லாரி உரிமையாளர்கள் போன்றோரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதகாவும், எனவே உடனே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிச்சயமாக போராட்டத்தில் பங்கேற்ற ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை எழுப்பி இருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள். ஆலையை மூடினால் வேலைவாய்ப்பு பறி போகும் என்பது தெரிந்தும், வேலையை விட உயிர் முக்கியம் என்று கருதி, துணிந்து போராடியவர்கள். அப்படி என்றால் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தவர்கள் யார்?, யார் எல்லாம் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினார்களோ, யார் எல்லாம் வேதாந்தாவிடம் தேர்தல் நிதி வாங்கினார்களோ, யாரெல்லாம் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினார்களோ, அவர்கள் தான் இன்று வேதாந்தாவின் கைக்கூலிகளாக மாறி, மீண்டும் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் செய்யத் துணிந்திருக்கின்றார்கள்.

வேதாந்தாவின் பணம் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கின்றது. அது மானங்கெட்ட, சூடு சுரணையற்ற பேர்வழிகளை தங்கள் வலையில் வீழ்த்திக்கொண்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நிச்சயமாக பல நூறு பேர் வேலை இழந்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் வேலை இழந்தவர்கள் தங்களுக்கு அரசு மாற்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதன் நியாயத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாகத்தான் தங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும் என்று கேட்பதில் இருந்தே மனுகொடுக்கச் சென்றவர்கள் அனைவரும் வேதாந்தா அனுப்பிய கைக்கூலிகள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

யார் வீட்டில் இழவு விழுந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பொறுக்கித் தின்னுவதை மட்டுமே தங்கள் வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அற்பவாதக் கும்பல்கள்தான் அந்த மக்களிடம் ஊடுருவி, மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான கருங்காலி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவையும் இவர்களுக்குத் துணையாக அரசும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. பார்ப்பன அடிவருடிகளும், முதலாளித்துவ அடிவருடிகளும் ஒன்றாக கைக்கோர்த்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்று அசட்டுத் துணிச்சலில் நாம் இருந்துவிடக்கூடாது.

ஏற்கெனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீடு செய்துள்ளது. தங்களிடம் எலும்புத் துண்டுகளை வாங்கித் தின்றவர்கள் மூலம் அது அனுமதியைப் பெற எல்லா வகையிலும் முயலும். இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் தங்களுடைய கைக்கூலிகளிகளை கொண்டு கருத்தியல் பிரச்சாரத்தையும் அது மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு மத்திய அரசின் ஆதரவு வெளிப்டையாகவே உள்ளது. நம் நாட்டில் அரசு அமைப்புகள் எவ்வளவு கேவலமாக முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட முடியுமோ, அவ்வளவு கேவலமாக செயல்படும் தன்மை கொண்டது என்பதை ஏற்கெனவே ஸ்டெர்லைட் வழக்கிலேயே பார்த்திருக்கின்றோம். அதனால் பார்ப்பனப் பாசிசமும், முதலாளித்துவப் பாசிசமும் அரசு ஆதரவுடன் மீண்டும் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் செய்ய காத்துக் கிடப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பை மீறி சில புல்லுருவிகள் மிகத் தைரியமாக ஆட்சியர் அலுவலகம் சென்று, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றார்கள் என்றால், யார் இவர்களுக்கு இவ்வளவு தைரியத்தைக் கொடுத்தது? இதற்குப் பின்னால் மிகப் பெரிய சதி நடந்து கொண்டிருப்பதை தூத்துக்குடி மக்கள் உணர்ந்து, தங்களுக்குள் ஊடுருவி உள்ள கருங்காலிகளை களை எடுக்க வேண்டும். இது தூத்துக்குடி மக்கள் மட்டும் சம்மந்தப்பட்ட பிரச்சினை கிடையாது. தமிழகம் முழுவதும் பல பேர் தூத்துக்குடி பிரச்சினையில் மக்களோடு மக்களாக நின்று, களப்பணி ஆற்றியதற்காக இன்று சிறையில் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மீது பல பொய் வழக்குகளை இந்த அரசு போட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மக்கள் இதை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு தங்களுக்காக போராடிய, உயிரைக் கொடுத்தவர்களின் தியாகத்தை அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும்.

தங்களுடைய பண பலத்தின் மூலம் மீண்டும் ஆலையை தொடங்க துடித்துக் கொண்டிருக்கும் கொலைகார வேதாந்தாவை தூத்துக்குடியில் இருந்து மட்டும் அல்ல, இந்தியாவில் இருந்தே ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்க வேண்டும். வேதாந்தாவை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் மக்கள் விரோதிகள். அவர்கள்தான் நாட்டின் வளங்களை வேதாந்தாவிற்கு கூட்டிக்கொடுப்பவர்கள். தம் சொந்த நாட்டு மக்களை வேதாந்தாவிற்காக வேட்டையாடுபவர்கள். அவர்கள்தான் இன்று மோடி ஆட்சியில் நாட்டில் தேசபக்தர்கள் என்ற பெயரால் அறியப்படுபவர்கள்.

- செ.கார்கி

Pin It