இன்று இந்தியாவில் சுய ஆட்சியின் பேரால் நடைபெறும் அக்கிரமங்கள் - அயோக்கியத்தனங்கள் - ஒழுக்க ஈனங்கள் - நாணையக் குறைவுகள் ஆகியவைகளில் எல்லாம் தலைசிறந்து விளங்குவது ஸ்தல சுயாட்சியென்று சொல்லப்படும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களேயாகும் என்று வெற்றி முரசுடன் கூறலாம்.

நம் நாட்டு ஸ்தல ஸ்தாபன உலகத்தை எடுத்துக் கொண்டோமே யானால் அதன் தலைப்பு முதல் கடைசி வரையில் உள்ள ஒவ்வொரு நிலைமையும் தீவத்திக் கொள்ளை போலவே நடந்து வருகின்றனவே அல்லாமல் மற்றபடி அவை யாருக்காக - யாது காரணத்திற்காக ஏற்பட்டதோ அந்த தத்துவம் சிறிதும் இல்லாததை ஸ்தல ஸ்தாபன வாழ்வில் கலந்துள்ள அனுபவமுள்ள எவரும் சுலபத்தில் அறியலாம்.

மற்றும் இந்தியாவுக்காக கேட்கப்படும் சுயாட்சியும் இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத்து பணக்காரரும், சோம்பேரிகளும், காலிகளும் வாழ்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்பதும் நன்றாய் விளங்கும்.

Periyar 370இன்றைய ஸ்தல சுயாட்சியின் தன்மைகளை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஒருவன் எப்படிப் பட்டவனானாலும் அவன் பணம் செலவு செய்தால் - காலிகளைக் கைவசப்படுத்தி காலித்தனம் செய்தால் யாரும் எப்படிப்பட்டவர்களும் ஸ்தல ஸ்தாபனங்கள் கைவசப்படுத்திக் கொண்டு, தான் செலவிட்ட பணத்தையும் வட்டியுடன் எடுத்துக் கொண்டு தனக்கு உதவி செய்த காலிகளுக்கும் தாராளமாக அனுகூலம் செய்து விட்டு மேல் கொண்டும் புதையல் எடுப்பது போல் பணமும் செல்வாக்கும் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு ஏற்ற ஆட்சி அல்லது ஸ்தாபனம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்தல சுயாட்சியின் நிர்வாகம் என்பதற்கு கொள்ளை அல்லது காலித் தனம் என்றுதான் இனி பதிப்பிக்கப்படும் அகராதியில் அருத்தம் எழுத வேண்டியதுமாகும்,

நிற்க, அரசாங்கத்தாரே இந்த இலாக்கா முழுவதையும் தங்கள் கையில் வைத்தும் ஸ்தல ஸ்தாபனங்கள் முழுவதும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர் களுடைய ஆதிக்கமே இல்லாமல் தாங்களே ஏகபோகமாய் நடத்தி வந்தது மான ஒரு காலத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கால நிர்வாகத்தையும் இன்றைய நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போமே யானால் இனி வரப் போகும் சுயராஜ்ய போக்கு எப்படியிருக்கு மென்பதையும் ஒருவாறு இப்போதே நிர்ணயம் செய்து விடலாம்.

முதலாவது ஒற்றுமையாய் சகோதர பாவமாய், கட்டுப்பாடாயிருக் கின்ற ஒரு ஊருக்குள் ஸ்தல சுயாட்சி என்கின்ற “பிசாசு” போய் புகுந்த மாத்திரத்தில் வேற்றுமை, கட்சிப் பிரதிகட்சி, கலகம், காலித்தனம், அடிதடி, கொலை வரையில் நடைபெற வழி திறக்கப்பட்டுவிடுகின்றது. பிறகு எவ்வளவு யோக்கியனானாலும் அதில் பிரவேசித்தால் அயோக்கியன் ஆய்த் தீர வேண்டிய நிலையை ஏற்பட்டுவிடுகின்றதுடன் அனாவசியமாய் ஒருவருக்கொருவர் வர்மம் ஏற்பட இடமுண்டாகின்றது.

மேல்கண்ட இந்தக் காரியங்கள் எல்லாம் நாணையமாய் நடைபெறும் ஸ்தல ஸ்தாபன சுயாட்சிகளிலேயே காணக் கூடியதாய் இருக்கின்றன என்றால் இனி நாணையக் குறைவாய் நடைபெறும் ஸ்தல ஸ்தாபன சுயாட்சிகள் என்பவைகளில் என்ன நடைபெறும் என்பதை எடுத்துக் காட்ட வேண்டுமா என்று கேள்கிறோம்.

தேர்தல்கள் என்னும் தலைப்பை எடுத்துக் கொண்டால் ஒரு முனிசிபல் ஓட்டருடைய ஓட்டு 100ரூ. வீதமும், ஒரு தாலூகா போர்டு மெம்பருடைய ஓட்டு 5000ரூ. வீதமும், ஒரு ஜில்லா போர்டு மெம்பருடைய ஓட்டு 10000 பத்தாயிரம் ரூபாய் வீதமும் வாங்கி தேர்தல்களில் வெற்றி பெரும் விஷயங் கள் நமக்கே நன்றாய் தெரியும்.

ஒரு முனிசிபல் கவுன்சிலர் எலக்ஷனுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஒரு தாலூகா போர்டு வைஸ்சேர்மன் எலக்ஷனுக்கு 20000 இருபது ஆயிரம் ரூபாயும், ஒரு ஜில்லாபோர்டு மெம்பர் எலக்ஷனுக்கு இருபது ஆயிரம் 20000 ரூபாயும் ஒரு ஜில்லாபோர்டு பிரசிடெண்ட் எலக்ஷனுக்கு ஒரு லட்சத்தி பதினாலு 114000 ஆயிரம் ரூபாயும், செலவு செய்து வெற்றி பெற்ற தேர்தல்களும் நமக்குத்தெரியும். நமக்குமாத்திரமல்லாமல் சர்க்காருக்கும் இந்த விஷயங்கள் தெரியும் என்று கூடச் சொல்லலாம். சில இடங்களின் தேர்தல்களில் எதிர் அபேட்சகர்கள் கொலை செய்யப்பட்டதும் ஓட்டர்கள் கொலை செய்யப்பட்டதும், கட்சி உதவியாளர் கொலை செய்யப்பட்டதும் நமக்குத் தெரியும். தேர்தலில் நின்று விட்டால் அபேட்சகர்கள் எதிர் அபேட்சகர்களுக்கு பயந்து ரிவால்வரும் கையுமாய் தூக்கமில்லாமல் திரிவதும் நமக்குத் தெரியும்.

தேர்தல் தலைப்பை விட்டுவிட்டு தேர்தல் முடிவு தலைப்பை எடுத்துக் கொண்டால் அது ஒரு பெரிய அத்தியாயமாகவே காணப்படும். எலக்ஷன் முடிவைப்பற்றிய விவகாரங்கள் பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு கலக்டர்களுக்கு இருந்தபோது அவை ஒழுங்காய் நடைபெறவில்லை என்று புகார்கள் ஏற்பட்டு கோர்ட்டுகளின் அதிகாரத்துக்கு விட்டதில் அது வக்கீல் களுக்கு ஒரு புதிய லாபமாய் ஏற்பட்டதோடு கட்சிக்காரர்களுக்கு 15 நாளில் முடிவு பெறும் விஷயம் மூன்று வருஷம் இழுக்கப்பட்டு முன்னிலும் அதிக மான கஷ்டமும் செலவும் ஏற்பட்டதல்லாமல் ஒரு வழியிலாவது அனுகூலம் ஏற்பட்டதென்று சொல்லுவதற்கில்லாமல் போய் விட்டது. எலக்ஷன்கள், ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் நடத்துவதில் ஏற்பட்ட அக்கிரமங்களை தடுப்பதற்காக எலக்ஷன் நடத்தும் வேலைகளை தனி அதிகாரிகளிடமும் ரிவினியு அதிகாரிகளிடமும் விட்ட பிறகு அவர்களுக்கு இது ஒரு புதிய வரும்படிக்கு இடமாக ஏற்பட்டதே ஒழிய அது சம்பந்தமான குற்றங்கள் குறைந்ததாக சொல்லுவதற்கில்லை. ஏனெனில் கணக்கு வழக்கில்லாத எலக்ஷன் தகராறு விவகாரங்கள் கோர்ட்டுகளில் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. கோர்ட்டு முடிவுகளோ பெரும்பாலும் பிராதுக்காரனுக்கு பயன்படாமல் அபேட்சகரின் உத்தேசம் நிறைவேராமல் போனபின்பே முடிவு செய்யப் படுகின்றன.

வியாபார முறையிலும், அதிகார தாட்சண்ணிய முறையிலுமே ஓட்டுகள் உபயோகப்படுத்த சௌகரியமேற்பட்டு விட்டபடியால் ஓட்டுகள் வெளிப்படையாகவே பதிவாகவும், எலக்ஷன் ஸ்தலத்திலேயே ரொக்கவிலைக்கே விற்கவுமான அவசியமும், சௌகரியமும் ஏற்பட்டு விட்டது.

இனி நிர்வாக முறையை எடுத்துக்கொண்டோமேயானால் அது இவை எதற்கும் இளைத்ததல்ல என்றுதான் சொல்லவேண்டும். நிர்வாகங்கள் பெரிதும் ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும், அங்கத்தவர்களுக்கும் சொந்த குடும்பச் சொத்துக்கள் போலவே பாவிக்கப்பட்டு சகோதரர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது போலவே அதன் சொத்துக்களை பங்கிட்டுக்கொள்வது வெளிப்படையான-எல்லோராலும் ஒப்புக்கொள்ளத் தக்கதான காரியமாய் இருந்து வருகின்றது. ஏனெனில் அந்த ஸ்தானங்களை அடைய அவரவர்கள் பட்ட பாடுகளையும், பணங்கள் செலவழித்ததையும் தெரிந்தவர்களுக்கு இது சரியென்றே தோன்றி விடுகிறது. ஓட்டர்களும் இந்த மாதிரியான காரியங்களைப் பற்றி குற்றம் சொல்லவோ, நினைக்கவோ அருகதையற்றவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் ஒருவன் முனிசிபாலிடியில் 10 அணா கொடுத்து தன்னை ஒரு ஓட்டராக பதிவு செய்து கொண்டால் 2-ரூபாய் முதல் 5-ரூபாய் 10-ரூபாய் வீதம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடலாம் என்கின்ற தைரியம் ஒவ்வொரு ஓட்டருக்கும் ஏற்பட்டு விட்டது. 500, 1000, 2000ரூ. செலவு செய்து கௌன்சிலராகவோ, மெம்பராகவோ ஆகிவிட்டால் சேர்மென், பிரசிடெண்ட் எலக்ஷன்களில் ஓட்டு செய்வதில் அசலுக்கு மேல் 500, 1000 லாபம் சம்பாதித்து விடலாம் என்கின்ற தைரியம் ஏற்பட்டு விட்டது. இது மாத்திரமல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உத்தியோகம் சம்பாதித்து கொடுக்கலாம் என்றும் கன்றாக்ட்டுகள் எடுத்து லாபம் சம்பாதித் துக் கொள்ளலாம் என்றும் ஆசை ஏற்பட்டு விடுகின்றது.

சில போர்டுகளிலும், கௌன்சில்களிலும் பகுதி கன்றாக்ட்டு தலைவருக் கும், பகுதியில் மூன்றில் ஒருபாகம் வைஸ்பிரசிடெண்டுக்கும், மீதி மூன்றில் இரண்டு பாகம் மெம்பர், கௌன்சிலர்களுக்கும் என்று பங்கு பிரித்துக் கொள்ளப்படுகின்றது.

சில போர்டுகளில் மோட்டார் பஸ் போக்குவரத்து பூராவும் பிரசிடெண்டுக்கும், கன்றாக்டுகள் முழுவதும், வைஸ் பிரசிடெண்டுக்கும் மெம்பர்களுக்கும் என்று பாகம் பிரித்துக் கொள்ளப்படுகின்றது.

இவ்வளவும் தவிர பொய் கணக்கு, பொய் பில், சாமான்களில் கமிஷன் முதலியவைகளிலும் ஏராளமாகக் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

இவை ஒருபுறமிருக்க நிர்வாகச் செலவுகள் என்பதில் தலைவர் களுக்கும், அங்கத்தினர்களுக்கும் சிறிதும் பொறுப்பு கிடையாது. சிப்பந்திகளுக்கு கொடுக்கப்படும் சம்பளமோ, “குருட்டுக் கோமுட்டிக்கடையில் அள்ளாதவன் பாவி” என்றொரு பழமொழி உண்டு. அதுபோல் உலகத் தில் உபயோகமற்ற பிராணிகளுக்கும் வேறு எந்த வழியிலும் பிழைக்க முடியா ஜீவன்களுக்கும் முனிசிபாலிட்டியும், தாலூக்கா ஜில்லா போர்டுகளும் தான தர்ம சத்திரங்கள் போலும் பஞ்சராப்போல் போலும் இருந்து வருகின்றன. பி.ஏ., எம்,ஏ., படித்து பாஸ் செய்து விட்டு 25ரூ. சம்பளத்துக்கு ஆயிரக் கணக்கான மக்கள் திண்டாடுகின்ற இந்தக்காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் ரூபாய் ஒன்றுக்கு பட்டணம் படியால் 8 படி அரிசி விற்கின்ற இத்தக்காலத்தில் ஸ்தல ஸ்தாபனங்களிலுள்ள சம்பளக்கொள்ளைகள் நினைத்தால் உண்மை யான உள்ளமுள்ளவர்களுக்கு நெஞ்சம் பதராமல் இருக்கவே முடியாது. இதைப்பற்றி மற்றொரு சமயம் குறிப்பிடுவோம்.

சம்பளக்கொள்ளை ஒரு புறமிருக்க ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் அங்கத்தினர்களுக்கு வேண்டியவர்களுக்கும் தங்கள் தேர்தல்களில் உதவி செய்தவர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய வர்களுக்கும் உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமே என்பதற்காக பழைய உத்தியோகஸ்தர்களை வெளியே அனுப்புவதும் புதிய புதிய உத்தியோகங்களை அனாவசியமாய் உற்பத்தி செய்வதும் அவர்களுக்கு அளவுக்கும் தகுதிக்கும் மீறின சம்பளங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருவதுமான அக்கிரமமும் கொள்ளையும் இன்று எந்த ஸ்தல ஸ்தாபனத்திலாவது இல்லை என்று சொல்லமுடியாது.

ஆகவே இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களில் எந்தவிதமான கொள்ளை, நாணையக்குறைவு, அயோக்கியத்தனம் பொறுப்பற்ற தன்மை முதலிய கொடுமைகள் இல்லை என்று சொல்லக்கூடுமா?

இந்தக் காரணங்களாலேயே ஸ்தல ஸ்தாபனங்களுக்கு புதிய புதிய உரிமைகள் கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுவது ஒருபுறமிருந்தாலும் ஸ்தல ஸ்தாபனத் தலைவருக்கும் அங்கத்தினர்களுக்கும் இருந்த அதிகாரங் கள் இந்த 15 வருஷ காலமாக சிறிது சிறிதாக பறிமுதல் செய்து கொண்டே வரப்படுகிறது என்பதையும் அந்தப்படி இன்னும் பறிமுதல் செய்யவே பொது ஜனங்கள் விரும்புகின்றார்கள் என்பதையும் யாவரும் மறுக்க முடியாது, இப்பொழுது சமீபத்தில் சென்னை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜில்லா முனிசிபாலிட்டி திருத்த சட்டப்படி முனிசிபாலிட்டிகளுக்கு ஸ்பெஷல் ஆபீசர் அல்லது நிர்வாக உத்தியோகஸ்தர்களை நியமித்து அவர் வசம் சிப்பந்திகள் நியமனம் கன்றாக்ட்டு வினியோகம் முதலிய நிர்வாக காரியங்களை ஒப்புவித்து விடுவது என்பதாக ஏற்பாடாயிருக்கின்றது. அந்த ஏற் பாட்டை ஒரு முனிசிபாலிட்டி கூட பாக்கியில்லாமல் சீக்கிரம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு விடுமானால் ஒரு அளவுக்கு முனிசிபல் நிருவாகம் யோக்கியமுடையதாகலாம் என்பதே நமதபிப்பிராயம். சில முனிசிபாலிட்டியின் தலைவர்களும் அங்கத்தினர்களும் பணம் காசு விஷயத்தில் நாணைய மாயிருக்கலாம் என்றாலும் அவர்களும் உத்தியோக வினியோகம், கன்றாக்ட்டு வினியோகம் ஆகிய காரியங்களில் சொந்தத்தில் பயனடையா விட்டாலும் முனிசிபாலிடிக்கு நஷ்டமில்லாமல் செய்ய முடிகின்றதா என்பதும் இதன் பயனாய் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்கும் அபிப்பிராய பேதமோ அதிருப்தியோ கட்சியோ ஏற்படுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றதா என்பது சந்தேகமேயாகும்.

ஆதலால் நல்ல நிர்வாகம் என்று வெகு ஜனங்களாலும் சர்க்காராலும் பெயர் வாங்கினதும் தலைவர்கள் அங்கத்தினர்கள் ஆகியவர்களின் மீது நாணைய விஷயத்தில் சிறிதும் சந்தேகப்படுவதற்கு இடமில்லாமலிருக் கிறதென்று சொல்லிக்கொள்ளப்படுவதுமான ஈரோடு, கோயமுத்தூர் முதலிய முனிசிபாலிடிகளுக்கு அந்த முனிசிபாலிடியின் வேண்டுகோளின் மீதே ஸ்பெஷல் ஆபீசர் அல்லது எக்சி கூட்டிவ் ஆபீசர் என்பவர் நியமிக்கப்படுமானால் அது மற்ற முனிசிபாலிடிகளுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதோடு ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் ஒரு அளவுக்காவது யோக்கியமுடையதாகச் செய்ய கூடியதாகவும் இருக்கும்.

இனி இதுபோலவே லோகல் போர்டு, ஜில்லா போர்டுகளுக்கும் இம்மாதிரியாக ஸ்பெஷல் ஆபீசர் நியமிக்க சென்னை ஸ்தல ஸ்தாபன மந்திரி உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம்.

ஏனெனில் 10 முனிசிபாலிடிகளில் நடக்கும் அக்கிரமங்களும், நஷ்டங் களும், மற்ற ஒழுக்கமற்ற காரியங்களும் ஒரு ஜில்லா போர்டில் நடப்பதற்கு சமானமாகும்படி ஜில்லா போர்டுகளில் அவ்வளவு பெரிது கைகள் கையாளப் படுகின்றன. முனிசிபாலிட்டியில் ஆயிரக்கணக்காக பணங்கள் கொள்ளை போகும் என்றால் ஜில்லா போர்டில் பதினாயிரக்கணக்காக லக்ஷக்கணக்காக கொள்ளை போக இடமிருக்கிறது. சிலதுகளில் போய்க் கொண்டு இருக்கின்றன.

இன்றைய ஜில்லா போர்டு தலைமை ஸ்தானங்களும், அங்கத்தினர்கள் ஸ்தானங்களும் 100-க்கு 90-ஸ்தானங்கள் ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரிய பெரிய நிலச்சுவான்தாரர்கள் பெருத்த வியாபாரிகள் என்று சொல்லத் தகுந்த வன்னெஞ்சக் கொடுமையாளர்கள் கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் என்கின்றவர்கள் கையிலேயே சிக்குண்டு கிடக்கின்றன. அவர்கள் அந்த ஸ்தானங்களை அடைய நாம் முன்கூறியபடி 10000, 20000, 50000, 100000 ரூபாய்கள் வீதம் செலவு செய்து அடைந்திருக்கிறார்கள். அந்த செலவை வட்டியுடன் அடைய எதிர்பார்க்காதவர்கள் மிகச்சிலர் தான் இருக்க முடியும். இவர்கள் இப்படிக்கொள்ளை அடிக்க ஆரம்பித்து மற்றும் மேற்சொல்லப் பட்ட காரியங்களும் நடைபெறுமானால் கஷ்டப்பட்டு பாடுபடும் பொது மக்களுக்குத் தான் நஷ்டமும், கஷ்டமும் வசதிக் குறைவும் ஏற்படும். ஆதலால் இன்றைய அரசாங்கம் உண்மையாகவே பொது ஜனங்களுடைய பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்று சொல்லிக் கொள்ள ஆசையிருக்குமானால் அது உடனே இந்தக் காரியத்தை அதாவது எல்லா முனிசிபாலிட்டிகளுக்கும் எல்லா தாலூகா ஜில்லா போர்டுகளுக்கும் ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க ஏற்பாடு செய்து அந்தப்படி நியமித்துவிட்டு வேறுகாரியம் பார்க்க வேண்டுமென்று விரும்புகின்றோம். மற்றபடி மாதிரிகளைப் பற்றியும் சட்டசபை அங்கத்தினர்களைப் பற்றியும் அந்த நிர்வாகம் தேர்தல் ஆகியவைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 12.03.1933)

Pin It