ருஷ்ய (பொது உடமை)க் கொள்கைளைப் பற்றி பேசுவதோ, பிரசாரம் செய்வதோ குற்றமானதென்பதாகப் பல நண்பர்கள் பயந்து அடிக்கடி புத்தி கூறி வருகின்றார்கள். பலர் இதை எடுத்துக் காட்டி பாமர ஜனங்களை மிரட்டி வருகின்றார்கள்.

ஆனால் இவர்களை யெல்லாம் பைத்தியக்காரர்களாக்கத் தக்க வண்ணமும், வீண் பூச்சாண்டி காட்டி. பயப்படுத்துகின்றவர்களாக்கும் வண்ணமும், சென்னை மாகாண சட்ட நிபுணரும், அட்வொகேட் ஜெனரலும் (சர்க்காருக்கு சட்ட சம்பந்தமான யோசனை சொல்லுபவரும்) ஆன தோழர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் சென்னை ஓரியண்டல் யூனிவர்சிடி சங்கத்தின் ஆண்டு விழாவில் மாணவர்களிடையும் மற்றும் பண்டிதர்களிடையும் பேசும் போது நன்றாய் விளக்கிக் காட்டி இருக்கிறார்.

periyar 250அதாவது, “ருஷியாவில் ஒரு திட்டம் ஏற்படுத்தி இருக்கிறார்கள், அதில் சில கெடுதல்கள் இருந்தாலும் மேலான நன்மைகளும் இருக்கின்றன. ருஷிய திட்டம் உலக முழுதுக்குமே நல்ல பாடம் கற்பிக்கக் கூடியதாய் இருக்கின்றது. கைத்தொழில் அபிவிர்த்தி விஷயத்தில் ருஷியா இப்போது உலகத்திலேயே தலை சிநத்து விளங்குகின்றது” என்றும், “முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள சம்பந்தம் நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்றும் பேசி இருக்கிறார்.

ரஷிய திட்டம் என்றால் என்ன? அது எப்படி ஏற்பட்டது? என்பதை யோசித்தால், பொது உடமைப் பிரசாரம் செய்வதோ “மக்களுக்கு அதை எடுத்துக் காட்டுவதே தப்பு” என்கின்ற விஷமப் பிரசாரம், சோம்பேரிகளின் சுயநலப் பிரசாரம் என்பது யாவருக்கும் வெளியாகி விடும். திருச்சியிலும், புதுச்சேரியிலும், சென்னையிலும் இருந்து வெளியாகும் சில மதப் பிரசார பத்திரிகைகள் ரஷியா என்றால் மிரண்டு மிரண்டு பாராங்கல்லில் முட்டி மண்டையை உடைத்துக் கொள்ளுகின்றன. ஆனால் இன்று அவர்கள் காப்பாற்றப் போவதாய் வேஷமிடும் மதங்களுக்கு ஆதாரபீடமாக இருக்கும் மேல் நாடுகளிலும் மற்றும் பல நாடுகளிலும் இருக்கும் நிலைமைகளைப் பார்ப்பார்களேயானால் இந்த பகல் வேஷங்கள் பரிகசிக்கத்தக்க வேஷம் என்பதை உணர்ந்து வெட்கப்படுவார்கள்.

அதுமாத்திரமல்லாமல் அந்தந்த மதங்களில் கட்டுப்பட்ட வாலிபர்களும் இவர்களை முன்னே விட்டுப் பின்னே பரிகசிப்பார்கள். ஆதலால் பொதுவுடமை, சமதர்மம் என்கின்ற கொள்கைகளுக்கும், வார்த்தைகளுக்கும் விரோதமாக மதப்பிரசாரப் பிழைப்புக்காரர்களும், சோம்பேரிக் கூட்டங்களும் செய்யும் விஷமப் பிரசாரத்தையும், சூழ்ச்சிப் பிரசாரத்தையும், வயிற்றுப் பிழைப்புப் பிரசாரத்தையும் கண்டு சிறிதும் கவலையோ லட்சியமோ கொள்ளாமல், கொள்கைகளின் தத்துவங்களும், பயன்களும், ஏழை மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் நன்மையா தீமையா என்பதை மாத்திரம் கவனித்து அதன்படி நடக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.02.1933)

Pin It