மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம். இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை “தெய்வத் தன்மை உள்ளவள்” என்றும், தான் “மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்யதை இல்லை” என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

periyar cadre family 640அப்பெண் இறந்ததற்கு ‘தெய்வத்தன்மை’ கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வலமாக தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தை புதைத்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.

நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டுவதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கௌரவமாக ஜீவனம் பண்ணியவர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. மணமகன் பிடிக்காத காரணத்தால் மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற்கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடைபெற்றும் இருக்கின்றது. ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத் தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.

மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷயமும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம்.

அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் கூற முடியாது. இவ்வாறு உண்மையைச் சிந்தித்துப் பார்க்கும் அறிவில்லாமல் ‘தெய்வீகத் தன்மையை’ நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பயித்தியக்காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா?

இந்த மாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூட நம்பிக்கைகள் காரணமாகத்தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன. கிராமங்களில் உள்ள பலவகைப்பட்ட கோயில் களெல்லாம் செத்துப் போன மனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ளவர்கள் அந்தக் கோயில் ‘சாமி’களைப் பற்றிச் சொல்லும் கதைகளால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த சம்பவமும் இதற்கு தகுந்த உதாரணமாகும்.

பொது ஜனங்களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் ‘தெய்வத்தன்மை’ என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரையிலும் அவர்கள் முன்னேற்றமடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும்படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.

('தேசியத்துரோகி' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 05.06.1932)

Pin It